செய்தித் திரிபு – கடிதங்கள்

War and Peace in Junglemahal People, State and Maoists

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

அன்புள்ள ஜெ,

செய்தி பற்றி கேட்டிருந்தீர்கள். டால்ஸ்டாய் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு உயர்நீதிநீதிபதி நீதிமன்றத்தில் கேட்டார் என்பது உண்மையா என்று கேட்டிருந்தீர்கள். அதன்பின் நாம் பேசினோம். நான் சொல்வதை எழுதி அளிக்கும்படிச் சொன்னீர்கள். எழுதுவதற்குள் முழுச்செய்தியும் வந்துவிட்டது. இருந்தாலும் நான் சில அடிப்படைகளைச் சொல்ல விரும்புகிறேன்

உண்மையில் அது டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலாகவே இருந்தாலும்கூட நீதிமன்றத்தில் அப்படி நிகழ வாய்ப்பு உண்டு. பிராஸிக்யூஷன் தரப்பு அந்நூலை ஓர் ஆதாரமாக நீதிமன்றத்தில் முன்வைக்கும் என்றால் அதை சிரித்து புறம்தள்ளும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்தாலும்கூட. வன்முறைநோக்கத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர் அதை வீட்டில் வைத்திருக்கிறார் என்று பிராஸிக்யூஷன் சொல்லும் என்றால் அதைப் பதிவுசெய்தபின் ‘நீங்கள் இதை ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டு அக்யூஸ்ட் சொல்லும் பதிலையும் பதிவுசெய்தே ஆகவேண்டும். அந்த நூலை எப்படி பிராஸிக்யூஷன் ஒரு குற்றத்தைத் தூண்டும் நூல் என நிரூபிக்கப்போகிறது என்பது நீதிபதிக்கு தெரியாது அல்லவா? அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கொடுக்கவேண்டும். அந்நூலை வாசித்து அதன்பின் உண்மையில் அது அப்படி அல்ல என்று நிராகரிக்கலாம். தீர்ப்பில் அதை கடுமையாக கண்டிக்கலாம். அது மட்டுமே அவருடைய உரிமை.

உங்கள் வீட்டில் இருந்து விஷ்ணுபுரம் நாவலை எடுத்து அது மதவெறியைத் தூண்டும் நூல் என்று பிராஸிக்யூஷன் நீதிமன்றத்தில் சொல்லலாம். நீதிபதி ‘அதைப்பற்றி உங்கள் தரப்பு என்ன?’ என்று கேட்டே ஆகவேண்டும். ரேசர் பிளேடு வைத்திருந்தார், கொடூரமான கொலை ஆயுதம் அது என்று பிராஸிக்யூஷன் சொல்லுமானால்கூட நீதிபதி அக்யூஸ்ட்டிடம் ‘ஏன் இதை வைத்திருந்தீர்கள்? கொலைசெய்யும் நோக்கம் இருந்ததா?’ என்று கேட்டே ஆகவேண்டும். சென்றகாலங்களில் பல நூல்களை இப்படி நீதிமன்றங்களில் சாட்சியமாகச் சேர்த்திருக்கிறார்கள். மதநூல்கள், அரசியல்நூல்கள், இலக்கியநூல்கள்.

ஏன் இது தேவையாகிறது? நீங்கள் குறிப்பிட்ட War and Peace in Junglemahal: People, State and Maoists என்னும் நூல் அச்சிடப்பட்டு சட்டபூர்வமாக வெளியிடப்பட்ட ஒன்று. ஆகவே அதை வைத்திருப்பது குற்றம் அல்ல என்று போலீஸுக்கு தெரியாதா என்ன? அவர்கள் என்ன வெண்ணைகளா? இல்லை. சட்டப்படி ஒரு குற்றத்தை நிரூபித்தால்மட்டும் போதாது. குற்றம் செய்யும் நோக்கமும் நிரூபிக்கப்படவேண்டும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் குற்றப்பத்திரிக்கைகளில் குற்றத்தின் நோக்கமே முக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கும். ’கொல்லும்நோக்கத்துடன் தாக்கி கொலைசெய்தார்’ என்றுதான் அதில் இருக்கும். ஏனென்றால் செயலை குற்றமாக ஆக்குவது நோக்கம்தான்.

ஆகவே குற்றம்சாட்டப்பட்டவரின் நோக்கம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டும். அதற்கு அவருடைய அடிப்படையான மனநிலையை அங்கே நிறுவ வேண்டும். அதற்குத்தான் இப்படி நூல்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருகிறார்கள். நாளை நீங்கள் ஒரு மதக்கலவரத்தில் கைதுசெய்யப்பட்டால் விஷ்ணுபுரம் ஒரு சாட்சியம்தான். நீங்கள் இந்துமனநிலை கொண்டவர் என்பதற்கு அதுதான் ஆதாரம். இல்லை என நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.

ஆனால் இந்திய நீதிமன்றங்களில் குறிப்பிட்ட கோணத்தில் சிந்தனைசெய்தார், குறிப்பிட்ட நூலை வாசித்தார் என்பதெல்லாம் குற்றமாக மட்டும் அல்ல குற்றத்திற்கான மனநிலையை உருவாக்கும் சாட்சியமாகக்கூட ஏற்கப்பட்டதில்லை. அரசு தடைசெய்த நூல்களை வாசித்ததைக்கூட நீதிமன்றங்கள் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இந்திய நீதிமன்றங்கள் அளவுக்கு வாசிப்பை, சிந்தனையை சாதகமாக காணும் நீதிமன்றங்களே உலகில் கிடையாது என நான் உறுதியாகவே சொல்லமுடியும். பெரும்பாலும் ஒரு புத்தகத்தை சாட்சியமாக்கினால் சம்பந்தப்பட்டவர் வன்முறைஅற்றவர் என்ற முடிவுக்கே நீதிமன்றம் செல்லும். ஆனால் போலீஸுக்கும் வேறுவழி இல்லை

நீங்கள் சொன்னதுபோல எதையுமே தெரிந்துகொள்ளாமல் எழுதும் செய்தி ஊடகங்களும் எதை வாசித்தாலும் தங்கள் அரசியலுக்கேற்ப அதை வளைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் சமூகஊடக மக்களும் சேர்ந்து நம்மை முழுமையான அறியாமைக்குள் கொண்டுசென்றுவிட்டார்கள்

எம்.மகாதேவன்

 

அன்புள்ள மகாதேவன் அவர்களுக்கு,

 

நன்றி. எனக்கே இந்த விந்தையான அனுபவம் இருந்தது. ஒருவழக்கில், அத்தனை ஆவணங்களும் தாக்கல்செய்யப்பட்டு விசாரணை தொடங்கியபோது என்னிடம் நீதிபதி கேட்டார். உங்கள் பெயர் என்ன? நான் சொன்னேன். அவர் தாளில் சரிபார்த்துக்கொண்டிருந்தார். தொழில்?. சினிமாக்கதை எழுதுவது. அப்பா பெயர்? பிறந்த தேதி? சரிபார்த்தபின் சரி செல்லலாம் என்றார். இதை அவர்தான் சரிபார்க்கவேண்டுமா என்று வழக்கறிஞரிடம் கேட்டேன். அவரேதான் சரிபார்க்கவேண்டும். நீங்கள் நேரில் வந்து அவரிடம்  முகம்பார்த்து நீங்கள்தான் நீங்கள் என்று சொல்லியாகவேண்டும் என்றார்..  நீதிமன்றத்திற்கு நரேந்திர மோடி சென்றால்கூட நீங்கள்தான் நரேந்திரமோடியா, என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதுதான் சட்டம்.

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ..

தடம் இதழ் நின்றதன் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்..  உங்கள் வருத்தம் புரிகிறது..  ஆனால் ஒரு கடைக்கோடி வாசகனிடம் எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை..  உயிரெழுத்து நிற்கவிருக்கிறது என அறிந்தபோது பதறியவர்கள் உண்டு , சில இதழ்களின் நிறுத்தல் செய்தியை படித்துவிட்டு அவர்களை தொடர்பு கொண்டு நாங்கள் முடிந்த அளவு உதவுகிறோம்” . நிறுத்தாதீர்கள் என இறைஞ்சியவர்கள் உண்டு.. அந்த இதழ்களெல்லாம் வாசகனுடன் நேரடியாக உறவில் இருந்தவை..  தடம் இதழ் எத்தனை புது வாசகனை புது எழுத்தாளனை தமிழுக்கு கொணர்ந்தது..  எத்தனை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியது என்பவையெல்லாம் கேள்விக்குரியன…  சிறிய அளவில் நடத்துபவர்கள்கூட இவற்றை செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்..  தடம் நினைத்திருந்தால் உங்களைப் போன்றோர் செய்தவற்றை விட பெரிய அளவில் செய்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் அந்த எண்ணமே இல்லை..  ஏற்கனவே உருவாகியிருந்த ஓர் அமைப்பை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர புதிதாக எதையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை..   ஞாநி நடத்த முயன்ற கசடதபற இதழ் போதிய ஆதரவின்றி முடங்கியதன் வருத்தமும் குற்றவுணர்வும் இன்றும் நீடிக்கிறது..  ஞாநி , சுரா , சுதீர் செந்தில் போன்றோருக்கு ஒரு விஷன் இருந்தது..  ஆகவே அவர்கள் முயற்சிகளின் தோல்வி வருத்தமளித்தது.. பழைய கணையாழி , காலச்சுவடு , சொல்புதிது , முன்றில் இதழ்கள் தேடிப்பிடித்து படிக்கப்படுவது போல தடம் தேடப்படுமா என்பது ஐயமே…

போரும் அமைதியும் குறித்து நீதிமன்றம் ஏதோ சொல்லி விட்டது என வாட்சப்பில் பார்த்துவிட்டு டால்ஸ்டாயை நக்சலைட் என நீதி மன்றம் சொல்கிறது , கிறிஸ்தவர் என்பதால் அவர் மீது கோபம் என கவிதை எழுதுகிறார் ஒரு  இலக்கியவாதி.. கவிதை அருமை தோழர் என பலர் அதை ஷேர் செய்கிறார்கள்.. நீதிமன்றம் கேட்பது வேறொரு நூல் குறித்து என்ற அடிப்படை விபரம்கூட தெரியாமல் சமூக சீர்திருத்த கவிதைகள் எழுதும் இவர்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு எவ்விதத்திலும் பயன்பட மாட்டார்கள்.. இவர்கள்தான் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதிகள் என்று ஒப்புக்கொண்டால் தமிழ் வாசிப்பு அழிவதை யாரும் தடுக்க முடியாது

காசை நினைத்து நூல்கள் வாங்க தயங்குகிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.. உங்கள் வெண்முரசு நூலை அது பதிவேற்றப்பட்ட சில நொடிகளில் படித்துவிடும் பலர் அதன் அச்சு வடிவத்தையும் வாங்குகிறார்கள்.. சிற்றிதழ்கள் பரவலாக கடைகளில் கிடைக்காது என்றாலும் தேடிப்பிடித்து வாங்குபவர்கள் ஏராளம்.

நீங்கள் குறை சொல்ல வேண்டியது வாசகர்களை அல்ல… வாட்சப் மெசேஜ்களுக்கு எதிர்வினை ஆற்றுபவர்களையும் அல்ல. ஆனால் இலக்கியவாதிகள் என்ற முகமூடியில் செயல்படும் வாட்சப் மொண்ணைகளையே நீங்கள் கண்டிக்க வேண்டும்

அன்புடன்;
பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

பலசமயம் இது எனக்கும் நடந்திருக்கிறது. நாம் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது. சட்டென்று ஒரு செய்தி நம்மை கொந்தளிக்கச் செய்துவிடுகிறது. எனக்கே சமீபத்தில் இந்த இதழ்கள் செய்தி வெளியிடுவது, உண்மையறியும் குழுக்கள் உண்மையை அறிவது என்பதெல்லாம் மிகப்பெரிய மோசடி என்ற நேரடி அனுபவம் அமைந்ததனால்தான் சுதாரித்தேன். இல்லாவிட்டால் அறச்சீற்றம் வந்துவிடும். ஏனென்றால் இலக்கியவாதிக்குச் செய்தி என்பது ஒரு குறியீடு, அடையாளம் மட்டும்தானே? அதன் மெய்யான பொருள் அவனுக்கு முக்கியமல்ல, அவன் அதற்கு அளிக்கும் பொருளே முக்கியமானது.

 

ஜெ.

அன்புள்ள ஜெ

போரும் அமைதியும் பூசல் சட்டென்று முடிந்துவிட்டது. ஒரு பதினைந்துநாள் போயிருந்தால் நூறுபேராவது அந்நூலை வாங்கியிருப்பார்கள். போட்டோ எடுத்து முகநூலில் போட்டுவிட்டு புரட்சியாளர் ஆகியிருப்பார்கள். இரண்டுபேர் புரட்டிப்படித்திருக்கும் வாய்ப்புகூட இருந்தது. பாவம் டால்ஸ்டாய்

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெயராமன்

 

எப்படியோ கிழவர் பேசப்படுகிறார். அதுவரை நல்லது.

 

ஜெ

முந்தைய கட்டுரைதடம் இதழ்
அடுத்த கட்டுரை’மொக்கை’ – செல்வேந்திரன்