காந்தி – வைகுண்டம் – பாலா

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி

வைகுண்டம் அவர்களுக்கு பதில்

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

திரு.வைகுண்டம் அவர்களின் கடிதத்துக்கு நன்றி.

”நுகர்வோர் சமூகம் இல்லாமல் காந்திய பொருளாதாரம் தனித்து தழைப்பது சாத்தியமல்ல என்பது என் கருத்து“ – இது அவர் கடிதத்தின் முதல் வரி.

எனது பதில் சரியாகப்புரிந்து கொள்ளப்பட்டதா எனப் புரியவில்லை. மீண்டும் உருளைக்கிழங்கு உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். 5 கோடி டன் உற்பத்தியில், 4.6 (92%) கோடி டன் உருளைக்கிழங்கு உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அது நுகர்வு இல்லையா? 0.40 கோடி டன் மட்டுமே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டும்தான் நுகர்வா என யோசித்தால் நான் சொல்வது புரியும்.

சிப்ஸ் போன்ற நுகர்வுப் பொருட்கள் இல்லாத, பணமே இல்லாத அல்லது குறைவாக இருந்த பண்ட மாற்றுக் காலத்தில் பொருளாதாரம் என்பதே இல்லையா என்ன?

நுகர்வோர் இல்லாமல் போனால் கூடப் பரவாயில்லை, ஆனால் உற்பத்தி மட்டுமே முக்கியம் என எங்கேனும் காந்தி சொல்லியிருக்கிறாரா?

உருளைக்கிழங்கு உற்பத்திப் பொருளாதாரத்தின் கீழ்க்கோடியில் இருக்கும் மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை முதல் நோக்கமாக வைத்துக் கொண்டு, இந்தப் பொருளாதாரம் இயங்கவேண்டும் என்பது காந்தியத்தின் நோக்கம். இந்தப் பொருளாதாரச் சங்கிலியின் உச்சத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் உண்ணும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளும் வசதி பெற்றவர்கள். ஆனால், கீழ்க் கோடியில் இருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும அடிப்படைத் தேவைகள் உள்ளன. இன்றைய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில், அவர்களால் தங்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு சூழலில் வாழ்கிறார்கள். ஒரு சமூகமோ அல்லது அரசோ, இந்த இரண்டு தேவைகளில், கீழ்க்கோடியில் இருக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ வேண்டும் என்பதுதான் முன்வைக்கப்படும் வாதம். அதற்கான குறுகிய, நீண்ட காலத் தீர்வுகள் காணப்பட வேண்டும். அப்படி இந்தியாவில் 60 கோடி மக்கள் இருக்கிறார்கள்.

அந்த மக்களுக்காகச் செய்யும் சிறு பொருளாதார உதவியைக் கூட, அந்த மக்கள் திரள், பல மடங்கு அதிகமாக பொருளாதாரத்துக்கு திருப்பித் தருகிறார்கள் என்பது என் அனுபவத்தில் நான் கண்டது.இலவச அரிசி பெறும் ஏழைமக்கள், சாப்பிட்டு விட்டுப் படுத்து தூங்குவதில்லை. வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு உயர்ந்து செல்ல முயல்கிறார்கள். அதற்காக உழைக்கிறார்கள் என்பதே கள உண்மை.  பல பொருளியல் அறிஞர்கள் அதைத் தரவுகளுடன் எழுதியுள்ளார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இலவச திட்டங்கள் அதிகம்.ஆனால், அதை விட மூன்று மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட உத்திரப்பிரதேசம் அளவுக்கு வரி வசூல். இலவசங்களைத் தருவது பொருளியல் ரீதியாகத் தவறான கொள்கையாக இருந்தால், இது எப்படி சாத்தியம்?

இங்கே இலவசக் கல்வி இருந்தது. மென்பொருள் தொழிலும், தானியங்கித் தொழிலும் வந்த போது, அதற்கான தகுதி கொண்ட பல லட்சம் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வேலை கிடைத்தது. அந்தத் தொழில்களை நம்பிப் பல உபதொழில்கள் ஏற்படுத்தப்பட்டன. இன்று அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறார்கள். உலக நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் வருடம் 3.5 லட்சம் கோடி செல்வத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். தரமான இலவசக் கல்வியும், மருத்துவமும், நமது நாட்டின் குடிமகன்கள் அனைவரையும் அறிவிலும், வாழ்க்கைத் தரத்திலும் உயர்த்துகிறது.  நாடு வலிமை பெறுகிறது. அதைச் செய்யாத மத்திய வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியுள்ளன. அங்கே மக்கள் தொகையும் ஏழ்மையும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

ஆனால், திட்டங்களைத் தீட்டும், ஊடகங்களின் உயர்வரிசையில் அமர்ந்திருக்கும் உயர்தட்டு மக்களின் பொதுப்புத்தி, மக்கள்நலத் திட்டங்களை மானியம் எனவும், இலவசம் எனவும் பிச்சை எனவும் என அருவருப்பாகப் பார்க்கிறது.  இந்த மனச்சாய்வைத்தான் நான் எழுதியிருந்தேன்.

”தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்நாளில் தினம் திருவிழா பார்க்கும் குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியாது” – வைகுண்டத்தின் இந்த வரிகள், அந்த மனச்சாய்வின் வெளிப்பாடு எனப் புரிந்து கொள்கிறேன். ஆனால், நான் சொல்லும் 60 கோடி மக்கள் திரள், அவர் சொல்வது போல் தினம் திருவிழா (முகநூல்/வாட்ஸப்) பார்ப்பதில்லை – அதைவிடக் கீழ் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும், வடக்கு, மத்திய மாநிலங்களில் இருக்கிறார்கள்.

” இருந்தும், பொது நிதி (பப்ளிக் பைனான்ஸ்) பற்றிய ஐயம் இன்னும் தொடர்கிறது. ஓய்வூதியம், அனைவருக்கும் உயர் படிப்பு வரை இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்றவை தொழில் மயமான சமூகத்தில் தோன்றின. Rights based/ Entitlements based governance பெரும் வரி விதிக்கும் அரசு கொண்ட சமூகத்திலேயே சாத்தியம். காந்தியம் அத்தகைய அரசுக்கு எதிரானது அல்லவா?” –  வைகுண்டம் அவர்களின் வரிகள்.

காந்தி உப்பு வரியை எதிர்த்துப் போராடினார். பர்தோலியில் வரிகொடா இயக்கம் நடத்தினார், ஆகவே அவர் விதிப்பை எதிர்த்தார் எனப் புரிந்து கொள்வதா? உப்பின் மீதான வரியும், கட்டுப்பாடும் மிக அநீதியான அளவுக்கு இருந்தன. எனவே எதிர்த்தார். குஜராத்தில் இயற்கைச் சீற்றத்தினால், வேளாண்மை அழிந்து விட, உழவர்கள் வரி செலுத்த முடியாமல் திணறினர். குடிமக்கள் நலன் நாடும் அரசாக இருந்திருந்தால், பஞ்ச காலத்தில் வரி விலக்கு அளித்திருக்கும். ஆனால், பிரிட்டிஷ் அரசோ அந்த வருடம் வரியை 30% உயர்த்தியது. எனவேதான் அந்த அநீதியை எதிர்த்துப் பர்தோலி வரிகொடா சத்தியாக்கிரம் நடத்தினார். காந்தியம் வரிவிதிப்பை எதிர்ப்பதல்ல. அநியாய வரிவிதிப்பை எதிர்ப்பது.

இப்போது இலவசங்களுக்கும் வருவோம். ஏன் இலவசங்கள் தேவைப்படுகின்றன? உணவு உற்பத்தி போன்ற அடிப்படைத் தொழில்களில் இருப்பவர்களின் உழைப்புக்கான சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அவர்களின் பொருளாதார பலமின்மை காரணமாக, அறுவ்டை காலங்களில், தங்கள் பொருட்களை மிகக் குறைவான விலைக்கு விற்க நேரிடுகிறது. எனவே அவர்களின் வாழ்க்கைத்தரம் மோசமாக இருக்கிறது. இதை மிக அறிவியற்பூர்வமாக ஆராய்ந்து, வேளாண்மையின் லாப நட்டத்தை முன் வைத்தார் ஜே.சி குமரப்பா.  His study clearly explains how the terms of trade due to government policies is against the farmers. He questions the economic wisdom of paying a tax collector 400 times the money as salary  than a farmer who actually produces the food grains and makes a positive contribution

இதை எதிர்க்கும் தரப்பு, அவர்கள் ஏன் நஷ்டமாகும் தொழிலைச் செய்ய வேண்டும்? அவர்கள் சுதந்திரச் சந்தையில் போட்டியிட்டு வெல்லட்டும் என்கிறது. இதைத்தான் Marie Antoinette என்ற ஃபிரெஞ்ச் பொருளாதார அறிஞரும் சொன்னார்.

மக்கள் நலன் நாடும் அரசு என்ன செய்கிறது – வேளாண்மை ஒரு லாபம் தரும் தொழிலல்ல. எனவே, மக்களுக்குக் கல்வியும் மருத்துவமும் தந்து, அவர்களை வேளாண்மையில் இருந்து வேறு துறைகளுக்கு மடைமாற்றுவோம் என முயல்கிறது. எந்தப் பொறுப்புள்ள அரசும், 60 கோடி மக்களை விவசாயத்தை விட்டுவிட்டு ஒரு நாளில் வெளியேறும்படிச் சொல்ல முடியாது. எனவே மடை மாற்றும் திட்டங்களை வகுக்கிறது. இலவசக் கல்வியும், மருத்துவமும் அதன் வழிகள். இலவசக் கல்வியும் மருத்துவமும் பெறும் மக்கள் கூட எரிபொருள் வாங்குகிறார்கள். தீப்பெட்டி வாங்குகிறார்கள். அவற்றின் வழியாக மறைமுக வரிகளைச் செலுத்துகிறார்கள். படித்து முடித்து நல்ல வேலையில் அமர்கிறார்கள். அவர்கள் செலுத்தும் வரி அதிகரிக்கிறது.

”பசுமை சமுதாயம் வேண்டுவோரிடமும் எனக்கு இதே கேள்விதான். அந்த சமூகத்தை நோக்கி பயணம் செய்தால், அரசு உத்திரவாதத்துடன், அரசு செலவில், தனி மனிதனின் அவசிய தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முரணாகவே இருக்கும். க்ரீன் பீசுக்கும், பெர்னீ சாண்டர்ஸுக்கும் அடிப்படை முரணா? மேதா பாட்கருக்கும், ழான் ட்ரீஸுக்கும் அடிப்படை முரணா?” – இவை வைகுண்டம் அவர்களின் வரிகள்.

பசுமை சமுதாயம் வேண்டுபவர்கள், சூழலை மாசுபடுத்தும் வழிகளை விலக்கி, சூழலை மாசுபடுத்தாத அல்லது குறைவாகப் படுத்தும் வாழ்க்கை முறையை முன்வைக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இலவசங்களைப் பரிந்துரைக்கிறார்களா என்ன? சொல்லப் போனால், மற்ற மனிதர்களை விடக் கடினமான வாழ்க்கை முறைகளை முன்னெடுக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் திருமூர்த்தி என்னும் இயற்கை உழவர் இருக்கிறார். பூச்சி மருந்துகள் தெளிக்காமல், உரம் இடாமல் பயிர் செய்து, அதற்கான விலையைச் சொல்லி, அதை வாங்கும் நுகர்வோரை நேரில் சென்றடைய முயல்கிறார். அவர் நிலத்தை விற்று, பணத்தை வங்கியில் போட்டால், இப்போது அவர் ஈட்டுவதை விட அதிகம் ஈட்டுவார். எனினும், நிலத்தில் உழல்கிறார்.

மேதா பட்கர், நர்மதா அணையினால், மூழ்கடிக்கப்படும் காடுகளின் அழிவையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சரியான இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பதையும் எதிர்த்துப் போராடுகிறார். ஒரு காலத்தில், பெரும் அணைக்கட்டுகளே நவீன வழி எனக் கருதப்பட்டன. ஆனால், இன்று அவற்றின் சூழல் பாதிப்புகள், நன்மைகளை விட அதிகம் என நிறுவப்பட்டு விட்டன. இன்று மழைநீர் சேகரிப்பும், சூரிய ஒளியில் இயங்குதலுமே சூழல்ச் சேதம் குறைவான நவீன, செயல்திறன் மிக்க வழிகளாகும். எனவே மேதா பட்கர் வைக்கும் நீடித்து நிற்கும் முன்னேற்றத்தை, நவீன முறைகள் மூலம் அடையும் அறிவியற்பூர்வமான வழி.

ழான் ட்ரெஸ் தனது கொள்கைக்காக வாழ்கிறார். உணவுப் பாதுகாப்புச் சட்ட்த்தை உருவாக்கி, ஏழைகளின் பட்டினிச் சாவைத் தவிர்க்கிறார். மாணவர்களுக்கு இலவசமாக வளர்ச்சிப் பொருளியல் போதிக்கிறார். தன் கொள்கையின் படி, எளிமையாகவே வாழ்கிறார். மேதா பட்கரும் அவ்வாறே. இதில் என்ன பிரச்சினை எனப் புரியவில்லை.

பல மாற்றங்கள் வந்து விட்டன. 1950 ல் ஜனத்தொகை 50 கோடி. இப்போது 135 கோடி. 150 கோடிக்கு திட்டம் இட வேண்டும். டிராக்டர் சாணி போடாதே என்று குமரப்பா சொன்னார். சாணி போடும் கால்நடைகள் மீத்தேன் வெளியிட்டு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகின்றன என்ற புரிதல் அப்போது இருந்ததா? – இவை வைகுண்டம் அவர்களின் வரிகள்.

குமரப்பா சொன்ன போது, மாவட்டத்துக்கு ஒரு ட்ராக்டர் கூட இல்லை.  நில அலகுகளும் சிறியவை. மாடு என்பது உழைப்பையும் உரத்தையும் தரும் ஒரு அங்கம். எனவே அன்றைய சூழலுக்கான ஒரு முழுமையான தீர்வாக முன் வைத்தார். ஆனால், நாம் கேட்கவில்லை. டீஸல் எஞ்சினையும், மின்சார மோட்டாரையும் வைத்து நீரை இறைத்தோம். நீர் ஊறும் அளவை விட அதிகமாக இறைத்தோம்.. நீரின் அளவு குறையத் தொடங்கியது. போர்வெல் போட்டோம். 100 அடியில் இருந்து 1000 அடி வரை இருக்கும் நீராதாரங்களை உறிஞ்சிக் குடித்து விட்டோம். மழைநீர், நிலத்தடி நீரளவைச் சமன்படுத்தும் வழிகளை அடைத்துவிட்டோம்.  ஆறுகளில் மணல் வாரி ஆழப்படுத்தி விட்டோம். கால்வாய்களைத் தூர்வார மறந்து விட்டோம் – சென்ற ஆண்டு மட்டுமே 90 டி.எம் சி நீர் காவிரியின் கடைமடைப் பகுதிகளை அடையாமல் கடலுக்குச் சென்று விட்டது.(சென்னையில் இந்தக் கோடையில் தண்னீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம்).

ஆனால், ராஜேந்திர சிங் என்ன செய்திருக்கிறார்? ஆர்வரி மலைப்பகுதிகளில், சலவைக்கல் தோண்டுவதைக் கோர்ட் மூலம் தடை செய்திருக்கிறார். ஆர்வரி நதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தடுப்பணைகளைக் கட்டி, நீரைத் தேக்கி, மெல்ல மெல்லக் கசியவிட்டு, ஆர்வரி நதிக்கு வருடம் முழுதும் நீர் வரத்து இருக்குமாறு செய்திருக்கிறார். 600 மில்லிமீட்டர் மழை பெய்யும் அந்த ஊரில், வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நீர் இருக்கிறது. 1100 மி,மி மழைபெறும் சென்னை நகரம், இலவசமாகக் கிடைக்கும் மழை நீரைக் கடலில் கலக்க விட்டுவிட்டு, பல மடங்கு செலவு செய்து கடல்நீரைச் சுத்திகரித்து உபயோகித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மிக அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே.

இன்று ஜேசி குமரப்பா இருந்திருந்தால், இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒரு முழுமையான தீர்வைப் பேசியிருப்பார். ராஜேந்திர சிங்கின் குரல் அவர் குரலே.

நாட்டின் பாதுகாப்பும் புரியவில்லை. சீனாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கும்போது பாதுகாப்புக்கு செலவிடும் தொகை எவ்வளவு இருக்க வேண்டும், அதற்கான வரி வசூல் எவ்வளவு இருக்க வேண்டும்? ஆடு சாத்வீகமாக இருக்க விரும்பலாம். ஓநாயின் சித்தாந்தம் வேறாக இருக்கிறதே? – இது வைகுண்டம்  அவரின் வரிகள்.

இந்தியத் தலைவர்களில், இரண்டு போர்களில் கலந்து கொண்ட (ஆம்புலன்ஸ் ஊழியராக) ஒரே தலைவர் காந்திதான். மரபான போர் வன்முறையின் அபத்தத்தை உணர்ந்த அவர், ஒரு தளபதியாக, தேர்ந்தெடுத்த நவீனப் போர் முறை சத்தியாக்கிரகம். மிகக் குறைந்த மனித உயிர்ப்பலியில், விடுதலையை வென்றெடுத்தது. ஆனால், அவர் ஒரு போதும், நாட்டுக்கு படைபலம் தேவையில்லை எனச் சொன்னதாக நான் அறிந்ததில்லை. இருந்தால் சொல்ல வேண்டுகிறேன்.

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான வரிவசூலை ஏற்கனவே இந்தியா செய்து கொண்டுதான் இருக்கிறது – கிட்டத்தட்ட பொருளாதாரத்தில் 3% அளவுக்குச் செலவிடப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாகச் செலவிட்டு வருகிறோம். ஏழைகளுக்கான அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுவதால், அதற்கான பணம் இல்லாமல் போய்விடாது என அர்த்தமில்லை. இதுவும் ஒருவகை மேட்டிமை வாதமே.

பாலா

***

முந்தைய கட்டுரைஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்
அடுத்த கட்டுரைசிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்