வெ.நாராயணன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

காஞ்சீபுரம் நாராயணன் என்ற கெத்தேல் சாகிபைப்பற்றி வாசித்தேன். கெத்தேல் சாகிப்பை வாசிக்கும்போது இந்தமாதிரி மனிதர்கள் எல்லாம் பழையகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப்பிறகு நீங்கள் வெளியிட்ட கடிதங்கள் வழியாக தெரியவந்த மனிதர்கள் என்னை கூச்சப்பட வைத்துவிட்டார்கள். மனிதனை அறம் வழிநடத்தமுடியும் என்பதை நம்பமுடியாதவனாக என்னை இந்த வாழ்க்கை மாற்றிவிட்டதே என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த மனநிலை எனக்கு இருக்கும்போது நான் உண்மையிலேயே அத்தகைய மனிதர்களைச் சந்தித்தால்கூட அவர்களை நம்பியிருக்கமாட்டேன். ஏதோ லாபநோக்கத்துட்ன் அதைச் செய்கிறார் என்றுதான் நினைப்பேன் இல்லையா? என் வாழ்க்கைவழியாகவும் எத்தனையோ கெத்தேல்சாகிப்புகளும் நாராயணன்களும் கடந்துசென்றிருப்பார்கள்

யோசித்துப்பார்த்தால் ஒன்று சொல்லலாம். அதாவது, சின்ன வயதில் எந்தவகையான அனுபவங்கள் வழியாக மனிதர்கள் கடந்து செல்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். என் அப்பா ஒரு எண்ணைவியாபாரம் செய்து நொடித்துப்போயிருந்தார். ஆகவே டேய் பத்திரம்டா பாத்துடா அவனை நம்பாதடா என்று சொல்லிச் சொல்லித்தான் என்னை அவர் வளர்த்தார். அது எனக்கு மனசிலே ஆழமாக பதிந்து விட்டது. ஆகவே எனக்கு வாழ்க்கையிலே பல விஷயங்களீல் வெற்றி கிடைத்தது. நான் ஏமாளி ஆகவில்லை

ஆனால் முக்கியமான வேறு சில விஷயங்களை இழந்துவிட்டேன் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தக் கதையும் இந்த கடிதங்களும் மனசிலே பெரிய சுமையாக ஆகியது. எனன் இருந்தாலும் பெரிய விஷயங்களில் இருக்கும் சந்தோஷம் பெரியதுதான். அது நிலையாக இருக்கும். சின்னவிஷயங்களில் உள்ள சந்தோஷம் எல்லாமே ரத்தம் துடிப்பாக இருக்கும் வரைக்கும்தான் . மனுஷன் தின்பதற்கும் குடிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது இல்லையா?

[தமிழாக்கம்]

கருணாகரன்

அன்புள்ள கருணாகரன்

நீங்கள் nhm என்று கூகிளில் தேடினால் ஒரு தமிழ் எழுத்து உதவி மென்பொருளை கண்டுபிடிக்கலாம். அதை இறக்கு செய்தால் எளிதில் தமிழில் எழுதலாம். உங்கள் தமிங்கிலம் படிப்பதற்கு மிகவும் கடினம்.

ராமகிருஷ்ணர் சொன்ன வரி. ஒரு பெரும்செல்வந்த கருமியைப்பற்றி. எவ்வளவோ இன்பங்களை அவன் அனுபவித்திருக்கலாம், கொடுப்பதன் இன்பத்தை அனுபவிக்க அதிருஷ்டமில்லையே

உண்மைதான், சிறுவயதிலேயே சில விஷயங்கள் மனதில் பதிகின்றன. தன்னலமற்ற சேவை என்பது சரியல்ல. அந்த சேவைகளில் ஒரு இன்பம் உள்ளது. அந்த இன்பத்துக்குச் சிலபேர் சிறு வயதிலேயே பழகிவிட்டிருக்கிறார்கள்

கெத்தேல்சாகிப் போன்ற பலர் இருக்கிறார்கள் இலக்கியத்தில்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வெ.நாராயணன் கடிதம் படித்து மகிழ்ந்தேன். நான் சில நாட்களாக மிகவும் யோசித்தேன். இலக்கியத்தில் இன்றைய கட்டத்தில் ஆளுமைகளாய் இருப்பவர்கள் கடந்த காலத்தில் மதிப்புக்குரிய வெ.நாராயணன் நடத்திய கூட்டங்களுக்கு வந்தவர்கள்தான் என்கிறார்களே. அவர்களுடைய வலைதளங்களில் இதுவரை நான் பார்த்த அளவில் யாருமே அவரைப்பற்றி எழுதவில்லையே. ஏன் இப்படி மறந்துவிடுகிறார்கள். என்று வருத்தப்பட்டதுண்டு. தன் வாழ்வுநிலையை தனக்காக மட்டும் கடக்காதவன் மறைந்து போவதில்லை. என்பதை நீங்கள் மீண்டும் நிருபித்து உள்ளீர்கள்.காஞ்சிபுரத்தின் இலக்கிய நண்பர்கள் சார்பாக நன்றி.

டேனியல் ஜேம்ஸ்

www.nampuzhuthi.blogspot.com

அன்புள்ள டேனியல்

உண்மை. அதை நானும் நினைத்தேன், கொஞ்சநாள் முன்னர்.

இலக்கியத்தில் பல வகையிலும் பங்களிப்பாற்றி மௌனமாக மறைந்த பலர் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி எழுதினாலென்ன என்று. சிறந்த உதாரணம் சதங்கை வனமாலிகை. அவரைப்பற்றி ஒருவர் கேட்டபோது இந்த எண்ணம் வந்தது

இலக்கியமனிதர்கள் என ஒரு தொடர்கட்டுரை [பின்னால் நூலாக வரும்படியாக] எழுத எண்ணி பி கெ பாலகிருஷ்ணனைப்பற்றி மட்டும் எழுதினேன். மிச்சம் எழுத வேண்டும்

வெ.நாராயணனைப்பற்றி நா.முத்துக்குமார் உட்பட பலரும் கூப்பிட்டுப் பேசினார்கள்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

காஞ்சீபுரத்தில் வெ.நாராயணன் உங்களுடைய மண் சிறுகதைத்தொகுப்பைப்பற்றி ஒரு விமர்சன ஆய்வரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு நீங்கள் உங்கள் மனைவியுடன் வந்திருந்தீர்கள். 1996 டிசம்பரில். அப்போதுதான் கோமல் இறந்து போன செய்தி வந்தது. ஆகவே கூட்டத்தை கோமல் நினைவுக்க்கூட்டமாக ஆக்கினோம். நீங்கள் கோமலைப்பற்றி பேசினீர்கள் . அதை நினைவுபடுத்த விரும்புகிறேன்

ராஜ் சுந்தர்

அன்புள்ள ராஜ்

நினைவிருக்கிறது

கோமல், நாராயணன் பற்றி எழுதும்போது விரிவாக எழுதுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைசாமியாரின் கதை
அடுத்த கட்டுரையானைடாக்டர், கடிதங்கள்