இலக்கியம்- இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

சாதரண வாசிப்பிலிருந்து சற்று தீவிர இலக்கிய வாசிப்புக்கு வந்து இருக்கிறேன் என நம்ப ஆரம்பித்த நாட்களிலிருந்து எழுத வேண்டுமெனும் வீபரித ஆசை உண்டாயிற்று.அதன் விளைவாய் ஒரு சிறுகதையும் ஒரு ஒரு அரைகுறை கதை ஒன்றையும் கைபட எழுதி அது பிடிக்காமல் கிழித்து எறிந்தேன்.

எழுதுவதில் எனக்கான சிக்கல் என நான் நினைப்பது ஒரு நிகழ்வை விவரித்து செல்லாத கற்பனை பஞ்சமும் சொற் பஞ்சமும் என எண்ணுகிறேன்.இவற்றை களைய தங்களது ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்.

இப்படிக்கு

மணிபாபு

***

அன்புள்ள மணிபாபு

எழுதுவதிலுள்ள எல்லா சிக்கல்களுக்கும் இரண்டே வழிதான். வாசிப்பு, எழுத்து.

உங்கள் சிக்கல்களை எதிர்கொண்டு வென்ற மற்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசியுங்கள். சொற்பஞ்சம் என ஒன்று இல்லை. எழுதுவதற்கு இருந்தால் சொற்களை தேடி மனம் தவிக்கும். கண்டடைவீர்கள்.

ஒரு நிகழ்வை விரித்துரைக்கும்போது அது கொஞ்சம்கூட தெரியாத ஒருவரிடம் சொல்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டால்போதும் என்று சுஜாதா ஒருமுறை எழுதியிருக்கிறார்.

எழுதிக்கொண்டே இருங்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் கடிதம் கிடைத்தது. நலமுடன் இருக்கிறேன். தாங்கள் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி.

தாங்கள் கூறியபடி ஒரு படைப்பு தரும் அனுபவத்தை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்.

நான் திருச்சியில் வசிப்பவன். இங்கு இலக்கிய, வாசிப்பு குழுக்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும். ஏனென்றால் இலக்கியம் சார்ந்து உரையாட எனக்கு யாரும் இல்லை. கடிதம் மூலம் தங்களுக்கு எழுதுவதோடு சரி.

நன்றி.

தங்கள்,

கிஷோர் குமார்

***

அன்புள்ள கிஷோர்குமார்

திருச்சியில் வாசகசாலை போன்ற அமைப்புக்கள் கூட்டங்கள் நடத்துகின்றன என நினைக்கிறேன். திருச்சியில் நடக்கும் கூட்டங்களை சில அரைவேக்காட்டு ஆசாமிகள் நடக்கவிடாமல் பேசிக்குலைக்கும் செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய அங்கே உருப்படியாக ஒரு கூட்டம் நடந்ததாக நான் சென்ற பல ஆண்டுகளில் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை அதனாலேயே பலரும் சோர்ந்து ஒதுங்கிக்கொண்டிருக்கலாம்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டி
அடுத்த கட்டுரைபோலிக்குரல்- சேதன் சஷிதல்