முகில்செய்தி
அன்புள்ள ஜெ
மேகசந்தேசம் பாடல்களைக் கேட்டேன். என் பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச்செய்தது அது. அந்தப்படம் நான் ஹைதராபாதிலிருந்த போது வெளிவந்தது. பெரிய ஹிட். பாடல்கள் இரண்டு ஆண்டுகள் மக்களை பித்துப்பிடிக்க வைத்திருந்தன. அதில் ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு வகை. அஷ்டபதிப் பாட்டு இரண்டு. கர்நாடக சங்கீதப்பாட்டு இரண்டு. எனக்குப் பிடித்த பாடல் நவரச சும மாலிகா. நான் நான்கு வருடங்கள் அதைத்தான் ரிங்டோனாகவே வைத்திருந்தேன். நீங்கள் கொடுத்திருந்த இணைப்பிலேயே முண்டு தெலிசேனா பிரபு என்னும் அற்புதமான பாடல் இல்லை
ராஜ்குமார்
அன்புள்ள ஜெ
மேக்சந்தேசம் படம் நான் 1990ல் பார்த்தது. அப்போது ஓர் ஆச்சரியமான விஷயம் தெரியவந்தது. அந்தப்படத்தின் அதே கதைதான் எம்.டி.எழுதி ஐ.வி.சசி இயக்கி 1994ல் வெளிவந்த அக்ஷரங்ஙள் என்னும் படம். ஆனால் அக்ஷரங்ஙள் ஏறத்தாழ எம்.டியின் சுயசரிதை. அவருடைய வாசகியை அவர் முதல் திருமணம் செய்துகொண்டார். அவர் பெயர் பிரமீளா.ஒரு பெண்குழந்தை. அவர்களுக்கிடையே பிரிவு. அவர் ஒரு நடனமங்கையை மணம்புரிந்துகொண்டார். கலாமண்டலம் சரஸ்வதி . அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை. அதேதான் அந்தப்படம். அதில் ஒரு பாடல் கறுத்த தோணிக்காரா. அற்புதமான பாடல் அது. ஆனால் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்காது
விஷயத்துக்கு வருகிறேன். மேகசந்தேசமும் உண்மையான ஒரு கவிஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது. அவனுடைய வாழ்க்கையும் அதேபோலத்தான் அமைந்திருந்தது. அதாவது இரு படங்களுக்கும் ஆதாரமாக அமைந்த வாழ்க்கையில்தான் ஒற்றுமை.
சுரேஷ்குமார்
கறுத்த தோணிக்காரா கடத்து தோணிக்காரா
மானமிருண்டு மனசிருண்டு மறுகரை ஆரு கண்டு?
விடர்ந்ந பூவிது கொழியும் மும்பே
தினாந்தம் அணையும் மும்பே
இனியொரு ஈரடி கூடி
பாடான் கொதிப்பு ஹ்ருதய தலங்கள்
இதாணு இதாணு என் யாத்ரா கானம்
இதினு இனி இல்ல ஒரு அவசானம்
விராம திலகம் சார்த்தருது ஆரும்
வரும் ஈ வழி ஞான் எந்நும்
[கரிய தோணிக்காரனே கொண்டுசெல்லும் தோணிக்காரனே
வானம் இருண்டுவிட்டது மனம் இருண்டுவிட்டது
மறுகரை யார் கண்டது?
மலர்ந்த பூ இது உதிர்வதற்கு முன்
நாள்முடிவு வந்து சேர்வதற்கு முன்
மேலும் ஒரு இரண்டடிப்பாடலை
பாட விரும்புகின்றன இதயத்தின் இதழ்கள்
இதுதான் இதுதான் என் விடைபெறும் பாடல்
இதற்கு இல்லை ஒரு முடிவு
முடிவு சொல்லி எவரும் பொட்டு இட்டுவிடவேண்டாம்
நான் இவ்வழியே மீண்டும் வருவேன்]