தாயார்பாதம் முதலிய கதைகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

வணங்கான், சோற்றுகணக்கு கதைகள் எம்மை உலுக்கி விட்டன. கதைகளை
படிக்கும் போது எம்மை அறியாமல், கண்ணீர் பெருகெடுத்தது..
70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இத்தணை வறுமை, பசி மற்றும் அடக்குமுறைகள்
இருந்த விசியம் எம்மை போன்றவர்களுகு இதுவரை தெளிவாக புரிந்ததில்லை.
Bonded labour மற்றும் சாதிய கொடுமைகள் இத்தனை மோசமாக இருந்ததா ?
அடிமைகளை போல் ஏழை தொழிலாளர்கள் அன்று நடத்தப்பட்ட கொடுமைகளை
பற்றி அறியும் போது மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. சங்க காலத்தில்,
பிற்கால சோழர் காலத்திலும் நிலைமை இதே போல் தான் இருந்ததா ?

அன்புடன்
K.R.அதியமான்

அன்புள்ள அதியமான்

சங்க காலத்தைய அடிமை முறை பற்றி நேரடியான சித்தரிப்புகள் இலக்கியங்களில் இல்லை. ஆனால் அது நிலப்பிரபுத்துவ காலம், ஆகவே நிலஅடிமை முறை இருந்தாகவேண்டும். உரிமைமாக்கள், தொழும்பர் போன்ற சொற்கள் இலக்கியங்களில் உள்ளன. விலைக்கு வாங்கப்பட்டவர்கள், பிறப்பால் அடிமைகள் என்று பொருள். சோழர்காலத்தில் அடிமைகள் அடிமைஓலை மூலம் விற்று வாங்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. பிற்காலத்தில் இங்கே நில அடிமைமுறை இருந்தமைக்கு பலநூறு ஆதாரங்களை எடுத்திருக்கிறார்கள்.

ஜெ

அன்புள்ள ஜெ,

‘தாயார் பாதம்’ வாசித்தேன். என் வாசிப்பை இவ்வாறு தொகுத்து கொண்டேன்.

மனிதன் எத்தனை உயர்ந்த கலை படைத்தாலும் ‘ஜென்டில்மேனாக’ இருந்தாலும் தன்னுள் ஒரு வீரிய விஷக்கருந்தேள் கொண்டுள்ளான். அத்தேளின் விஷம் ‘சாட்சாத் சரஸ்வதி தேவியே’ வீட்டுக்கு வந்தாலும் ஒரு சொல்லிலோ செயலிலோ அவளை தீண்டி புத்திபேதலிக்க செய்கிற விஷம். உயிரை
காவு வாங்குகிற விஷம். எத்தனை கழுவி துடைத்தாலும் சுத்தம் செய்ய முடியாத விஷம்.

அந்த வீட்டிலிருந்து கதை மேலும் விரிகிறது. அந்த கருந்தேள் ஒவ்வெரு வீட்டிலும் உள்ள சிறு சிறு
கருந்தேள்களுடன் இணைந்து ஒன்றாகி யுகயுகங்களாக வாழ்ந்த அனைத்து தேள்களையும் சுருட்டி
கொண்டு பின்னோக்கி ஓடி ஒரு மாபெரும் ராஜநாகமாய் விஸ்வரூபம் கொள்கிறது. அந்த விஷம் நாக ராஜத்தின் விஷம். அண்டசராசரங்களையும் அழிக்கும் விஷம்.

ஆதிதேவியும் அதே வீரியத்துடன் தன் பொற்பாதத்தை தூக்கி நிற்கிறாள். அவள் பாதம் ஆதிவிஷத்திடம் இருந்து பிள்ளைகளை காக்கும் பாதம். தாயார் பாதம். அப்பாதத்தில் இருந்து தன் மேல் எச்சில் சோற்றையோ மலத்தையோ கழுநீரையோ தாங்கி கொள்ளும் சிறு சிறு தேவிகளும்
ஞானிகளும் கேத்தேல் சாஹிப்களும் பாறையிலோ கல்லிலோ சொல்லிலோ எழுத்திலோ பிள்ளைகளுக்கு சொல்பவர்களும் யுக யுகங்களாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அந்த விஷம் தீண்டி பின் அதை உணரும் ராமனின் மனம் பரிசுத்த கலையில் மட்டும் ஈடுபடபிறந்தது
அல்ல. அது அந்த கலையின் அதை படைக்கும் மனிதனின் உன்னதத்தை அவன் விஷத்துடன்
சேர்த்து கலையாக்கி பிள்ளைகளுக்கு சொல்ல பிறந்தது.

அன்புடன்
ராஜா.

அன்புள்ள இளையராஜா

இசை மனிதனை தூயமிருகமாக ஆக்குகிறது. இலக்கியம் எல்லா தத்தளிப்புகளுடனும் அவனை மனிதனாக வைத்திருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ

மிகவும் நுணுக்கமான கதை தாயார் பாதம்.தொழில் ரீதியில் எனக்குச் சட்டென்று பட்டது பாட்டியின் obsessive compulsive disorder உருவான முறை.மலம்கழிக்கும் செயலை முன்னிறுத்தும் Anal Stage இல் பாதிக்கப் பட்டவர்களே OCD யால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற ஃப்ராய்டியக் கருத்தாக்கம் வெளிப்பட்டிருந்தது.

ராமன் தி.ஜானகி ராமன் என்பது அந்த முதலிரவு சமாச்சாரத்திலேயே தெரிந்துவிட்டது.சு.ரா நினைவின் நதியில் நூலில் தாங்கள் கூறியுள்ள சம்பவம் தானே அது?

பாலு பாத்திரம் சுந்தர.ராமசாமியை நினைவூட்டுகிறது.கன்னியாக்குமரியில் அறுபதுகளில் இருவரும் ஒரு மாலை வேளை பேசிக்கொண்டிருக்கும் காட்சியை நினைவூட்டுகிறது

கொற்றவையின் நவீன வடிவம் போலும் பாட்டி.கோபத்தை ஏமாற்றத்தை உள்முகமாகத் திருப்பிக்கொண்டாள்.யாரையும் பார்க்கப் பிடிக்காமல் சுவற்றைப் பார்த்து உயிரை விட்டது அதன் குறியீடாகப் பார்க்கிறேன்

அறம்.சோற்றுக்கணக்கு,மத்துறு தயிர்,தாயார்பாதம்,வணங்கான் -எல்லாக் கதைகளுமே உண்மைச் சம்பவங்களும்,மனிதர்களும் கலந்த புனைவாதலால் அவற்றில் உயிர்த்தன்மையும்,நம்பகத்தன்மையும் நிறைந்திருக்கின்றன

அன்புடன்
ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம்

இவற்றில் எந்த அளவுக்கு உண்மை என்று என்னாலேயே சொல்லிவிடமுடியாது. சில வரலாற்று மனிதர்கள், சில பொற்கணங்கள் மட்டுமே உண்மை. அவற்றில் இருந்து உருவான செடிகள் என இக்கதைகளைச் சொல்வென்

ஜெ

அன்புள்ள ஜெ..

ரெண்டு நாளா ஒரு உறுத்தல். கால்ல எதையோ மிதிச்சிட்டா மாதிரி ஒரு அருவெறுப்பு.

சரஸ்வதிய வீட்டுக்குக் கூட்டி வந்து அவளுக்கு மலத்தால் அபிஷேகம் பண்ணா, அப்பறம் எப்படி சங்கீதம் வரும் அவங்க சந்ததிக்கு?

அந்த ஆளுமையை நோக்கிச் சொல்ல எனக்கு கெட்ட வார்த்தைகளே உள்ளன.

என்ன சங்கீதம் மயிரு மண்ணாங்கட்டி..

பாலா

பாலா

அந்தச் சீற்றம் நியாயமானது. ஆனால் நாமும் அதைப்போன்ற அறம் மீறிய எதையோ அறியாமல் செய்துகொண்டுதான் இருப்போம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தாயார் பாதம் , இந்த தொகுப்பின் உச்சம் , ஒரு தேர்ந்த சிற்பி , அங்கம்
அங்கமாக செதுக்கி விட்டு , கண்களை திறக்காமல் , பார்வையாளனின்
கோணத்துக்கு விட்டதை போல் உள்ளது , இந்த தொகுப்பை , படிபவர்கள் நிச்சயம்
மாற்றத்தை தனக்குள் உணர்வார்கள் .

என்றென்றும் நன்றி ,
சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்

எது சிலையோ அதைத்தவிர மிச்ச பாறையை பொளித்து எடுத்துவிடுவதே சிற்பக்கலை என்று சொல்வதுண்டு. சிறுகதையில் எது மையமோ அதை சொல்லாமலே விட்டுவிடுவதும் ஒரு உத்தி

ஜெ

முந்தைய கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 3
அடுத்த கட்டுரையானை டாக்டர் -கடிதங்கள்