சாயல்- அபி

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

அபி கவிதைகள் நூல்

புத்தகத்தை மூடு 

விளக்கை அணை

உன் அறிதுயிலில் உணரப்படட்டும்

உன் மேஜயோரத்தில் புகையும் 

கொசுபத்தி போலவோ 

ஊதுபத்தி போலவோ 

இந்தப் பிரபஞ்சமெங்கும்  நிறைந்துகொண்டிருக்கும்

உறக்கமென்பதறியா

விழிப்பொன்றின் மாண்பு .

 

தேவதேவன். 

 

மேற்கண்ட தேவதேவனின் கவிதை [வரிகள் இடம்மாறி இருக்கலாம் நினைவில் பதிந்த வகையை மீட்டி எழுதியது] எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. நயம் விமர்சகர் எவர் கையிலேனும் இந்தக் கவிதை சிக்கினால் அவர் இது கவிதையே இல்லை  என்று கூட நிறுவி விடுவார். இத்தகு விஷயங்களுக்கு வெளியே  என்னைக் கவரும் அம்சம் இந்தக் கவிதை கையாளும் படிமம் வழியே உணர்த்த வரும் ஒன்று. மாண்பு என்று அழைக்கப் பெறும் அது பெயரற்றது. உறக்கமென்பதறியா விழிப்பு அது.

 

புத்தகத்தை மூடி தியானத்துக்குள் போ.  அறிவை மூடி வைத்து அறிதலை திற. கவிதைக்குள் இலங்கும் இக் குரல் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி குரலை வழிமொழிவது. [தேவதேவனே ஜிட்டுவின் வழிக்கால் என்றுதான் நினைக்கிறேன் :) ]  அதே சமயம் ஒரு கவிஞன் மட்டுமே கண்டு சொல்லும் ஒன்றின் வழியே, அதற்க்கான பாதையை சுட்டும் கவிதை இது. மேஜையோர ஊதுபத்தில் இருந்து ஒரு இழைபோல சுருண்டு எழுந்து, மணம் வீசிப் பரவி உயர்ந்து எழுந்து கரையும் ஒன்று. இரவு வானமென, புடவி விரியும்  விசும்பென நிறைந்து நிற்கும் மாண்பை நோக்கி கொண்டு சொல்லும் ஒரு புகை இழை .

 

கர்மேந்திரியம் காணக்கூடிய ஒரு காட்சி வழியே  தொட்டுத் துவங்கித் தொடர்ந்து ஞானேந்திரியம் காணக்கூடிய காட்சிக்கு செல்லக்கூடிய கவிதை.  இதன் தலைக்கீழ் வடிவம் என அபியின் சில கவிதைகளைச் சொல்ல முடியும். நேரடியாக ஞாநேந்திரியத்துகான உணர்வுநிலைக் காட்சிகளில் துவங்கி, இந்தக் கடலில் ஒரு துமியே கர்மேந்திரியம் [அதற்க்கு விதிக்கப்பட்ட வகையில்] அறிவது எனும் நிலையை சுட்டி நிற்கிறது அவரது சில கவிதைகள்.

 

உதாரணமாக இந்தக் கவிதை . சாயல் எனும் தலைப்பு எத்தனை லௌகீகம் வாய்ந்தது?  பொதுவாக இந்த சாயல் மற்றும் அது தரும் சிக்கல்கள் எல்லாம் மெல்லிய இடர் அல்லது மெல்லிய உவகை இந்த அளவுக்குள் வைத்தே லௌகீகம் அறிந்து வைத்திருக்கிறது.  கல்யாண்ஜி கவிதை போல [கல்யாண்ஜி கவிதையை குறைத்து மதிப்பிட்டத்தாக எவரும் கருத மாட்டார்கள் என நம்புகிறேன் :) ]

 

சாயல்

 

என் சின்ன வயதில்

சட்டையில்லாத அப்பா

எப்படியோ இருப்பார்.

அவருடைய தளர்ந்த இந்த வயதில்

சட்டை போட்டால் அப்பா

எப்படியோ இருக்கிறார்.

அப்படியே இல்லாமல் இருப்பதுதான்

அவருடைய சாயல் போல.

கல்யாண்ஜி.

 

நல்ல கவிதை அப்படியே எனும் கற்பனை அளிக்கும் உவகையை எப்படியோ  எனும் யதார்த்தம் இல்லாமல் செய்வதை அதை ஏற்றுக்கொள்ளும் ஆசுவாசத்தை மையம் கொள்ளும் கவிதை.

 

மேற்கண்ட கவிதை  புலன்கள் வழியே கிடைக்கும் காட்சியை கொண்டு லௌகீக எல்லைக்குள் அமைகையில் அபியின் சாயல் கவிதை, மொழி நிலைக்கும் அக ஆழம் எதுவோ அந்த ஆழத்தின் காட்சி கொண்டு அங்கிருந்து துவங்கி கண்களுக்கு சிக்கும் காட்ச்யில் வந்து நிறையும் ஆத்மீக பரிமாணம் ஒன்றை மையம் கொள்கிறது.

 

சாயல்

ஒரு நாள் ஒரு சாயலைப் பார்த்தேன்

நீண்டு கிடந்த சாலையில்
நெடுனேரம் நின்றுகொண்டிருந்தது

வடிவ ஒழுங்குக்குட்பட்ட வருத்தத்துடனும்
கைகளில் இருகப்படித்த மகிழ்ச்சியுடனும்
எதிரெதிராக விரைந்துகொண்டிருந்த
மனிதக் கூட்டத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தது

தனது அலைகளை ஏவி
அனைவரையும் நனைத்தது
எவரும் கண்டுகொள்ளவில்லை

தன் ஒருமையிலிருந்து விடுபட்டது
சிதறல் அன்று என்று
சொல்லிக்கொண்டது

தன் நிலையில் நிற்க முடியாத போது
சிறிது நேரம்
மங்கி மறைந்துபோய்
மறுபடி தோன்றியது

தன்னை உறுத்துப் பார்த்துச்
சந்தேகத்துடன் நகரும் குழந்தைகளைப்
புன்னகைத்தது

ஊர்ந்து பரவி
நாலா திசையும் கடந்தது

கடலோரங்களில்
மலைச்சரிவுகளில்
மனித விரலிடுக்குகளில்
சஞ்சரிப்பதாயிற்று

யாரும் அறியாத அதன் கம்பீரம்
மாசு படாது ஜொலித்தது.

 

அபி

 

எத்தனை விஷயங்களை சட்டெனத் திறந்து விடுகிறது இக் கவிதை.  யாருமறியாதது,கம்பீரமானது,மாசுபடாதது,ஜொலிப்பது, குழந்தைகளால் [அல்லது குழந்தைகளின் கண்களைக் கொண்டால்] கண்டு விடக் கூடியது. அது வடிவ ஒருமைக்குள் சிக்கி விட்ட துயரத்துடனும், கைகளில் இறுக்கிப் பற்றிய மகிழ்ச்சியுடனும்,எதிரெதிராக விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்துக் கொண்டிருக்கிறது.  ஒருவருமே கண்டுகொள்ளா விட்டாலும் தனது அலைகளை ஏவி கணம் தோறும் ஒவ்வொருவரையும் நனைத்துக் கொண்டிருப்பது. ஒருமையில் இருந்து விடுபடுவது சிதறல் அல்ல என அறிந்தோரால் மட்டுமே உணரப் படுவது.

 

அல்லது இப்படியும் சொல்லலாம் நீல வானின் கீழ் மரகதப் பச்சை சரிவின் பின்னே உயர்ந்துநிற்கும் வில்வப் பச்சை மலை முடி மேல் முட்டி நிற்கும் கருங்கொண்டலில் உறைவது, பொற்கம்பளம்  வீசி அடங்கும் அந்திவான் பின்புலக் கடற்கரை விரிவில் உறைவது. அன்றலர்ந்த மதலையின் மொக்குக் கரங்களைப் பிரித்தால், விரலிடுக்கின் செவ்வரிகளிகளில் உறைவது.  ஒருவரும் அறியாதது. தனித்து நிற்பது. குழந்தைகளால் அடையப் பெறுவது.  அபி சுட்டிக் காட்டும் இந்த சாயல்.

 

கடலூர் சீனு

 

 

அபியை அறிதல்- நந்தகுமார்

அபியின் லயம்

நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்

அபியின் கவியுலகு-

மந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்

ஆர் ராகவேந்திரன்

அபியின் தெருக்கள்

அபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி,மிர்ஸா காலிப்- கடிதம்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

முந்தைய கட்டுரைகாவேரியிலிருந்து கங்கை வரை
அடுத்த கட்டுரைமொழி மதம் எழுத்துரு- கடிதம்