சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி

நா.பழனிவேலு

இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம்

அயல் இலக்கியம்- கடிதம்

அன்புள்ள ஜெ,

சிங்கப்பூர் இலக்கியம் பற்றி சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய குறிப்பும் நீங்கள் எழுதிய பதிலும் அவர் எழுதிய மறுப்பும் வாசித்தேன். இந்த பிரச்சினை இப்போதல்ல சுந்தர ராமசாமி இங்கே வந்துபோன காலம் முதல் கடந்த அரைநூற்றாண்டாகவே இருந்துகொண்டிருக்கிறது. அதாவது இங்கே இருக்கும் எழுத்தாளர்கள் ஒருவகையான தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்கள். அவர்களின் எல்லா கருத்துக்களுக்கும் அடிப்படை இந்த தாழ்வுணர்ச்சி மட்டுமே. அதையே கொஞ்சம் தோரணையாக மாற்றிச் சொல்வார்கள்.

இங்கே உள்ளவர்கள் இரண்டுவகை. ஒன்று, தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கே குடியுரிமை பெற்று எழுதுபவர்கள். இன்னொரு சாரார் இங்கேயே பிறந்து வளர்பவர்கள். இங்கேயே பிறந்து வளர்பவர்களுக்கு பண்பாட்டுச்சிக்கல் மிகுதி.  பெரும்பாலும் சிறந்த கல்வியறிவு இருக்காது. இலக்கியவாசிப்பு அறவே இருக்காது – எந்த மொழியிலும்.

இங்கே வந்துசேர்ந்து எழுதுபவர்கள் இன்னொரு சாரார். அவர்களுக்கு உயர்ந்த கல்வியறிவு இருக்கும். ஆனால் அவர்கள் பள்ளி கல்லூரிகளில் இலக்கிய அறிமுகம் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். டியூஷன் வைத்து மனப்பாடம் செய்த தலைமுறை. இங்கே வந்தபின் இங்குள்ள அரசு இலக்கியத்திற்கு நிறையச் செய்வதைக் கண்டு எழுதுபவர்கள். ஆகவே பெரிய அளவில் இலக்கிய அறிமுகம் இருக்காது. இந்தியாவிலிருந்து வரும் இதழ்களில் இவர்களால் அங்குள்ளவர்களுடன் போட்டியிட்டு எழுதி நிறுவிக்கொள்ள முடியாது. ஆகவே இங்குள்ள சின்ன வட்டத்திற்குள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத்தாழ்வுணர்ச்சி காரணமாக இங்கே வரும் தமிழ் எழுத்தாளர்கள் தங்களைப் புகழவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எந்த வகையான விமர்சனத்தையும் கண்டு அஞ்சுகிறார்கள். ஒரு பட்டியலிட்டாலே பதறிவிடுகிறார்கள். நான் இங்கே வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை இங்கே சொல்லும்படி இலக்கியம் வாசித்தவர்கள் என ஒரு ஐந்தாறுபேரைத்தான் சொல்வேன். இதனால் உண்மையிலேயே இலக்கிய அளவுகோல் என்றால் என்ன என்று இவர்களுக்குத் தெரியாது.

இங்கே வருபவர்களில் இரண்டுவகையினர் உண்டு. ஒருசாரார் இங்கே ஏதாவது வாங்கிக்கொண்டு செல்லலாம் என நினைத்து வருபவர்கள். வந்தோமா சந்தோஷமாக சாப்பிட்டு ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பிச் சென்றோமா என்று நினைப்பவர்கள். ஆகவே இங்கே இவர்கள் எதிர்பார்க்கும் எல்லா புகழ்மொழிகளையும் தாராளமாக வழங்கிவிடுவார்கள். அவர்களை இவர்களுக்கும் பிடிக்கும். சா.கந்தசாமி முதல் மாலன் வரை இந்தக்கோஷ்டி.

இன்னொருசாராருக்கு இலக்கியம்தான் முக்கியம். மனிதர்கள் முக்கியமே இல்லை. அவர்கள் இங்கே வந்து பணமோ புகழோ அடையவேண்டியதில்லை. அவர்கள் இங்கே வருவதும் இலக்கியப்பணிக்காகத்தான். ஆகவே அங்கே அவர்கள் என்ன சொன்னார்களோ, எப்படி அணுகினார்களோ, அதையே இங்கேயும் செய்வார்கள். சுந்தர ராமசாமி முதல் நீங்கள் வரை இது ஒரு வரிசை. சுனீல்கிருஷ்ணன் அந்த வகை.

இந்த இரண்டாம் வகையினரின் விமர்சனங்கள் இவர்களுக்கு பதற்றம் உருவாக்குகின்றன. அதை எதிர்கொள்ளவும் தெரியாது. ஆகவே மிகமிக அவமரியாதையான ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். “இங்கே வந்து நம்முடைய உபசரிப்பை ஏற்றுக்கொண்டு இப்படிச் சொல்கிறார்கள்” இன்று சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. இன்று இங்கே வருபவர்களுக்கு சிங்கப்பூர் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் வருவது தங்களுக்காக அல்ல, சிங்கப்பூருக்காகத்தான். அதை இவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. இப்படிச் சொல்வது வரும் இலக்கியவாதிகளின் அருமையை சிறுமைசெய்வது என்றும் தெரிவதில்லை.

சித்துராஜும் அதே வாதத்தைத்தான் சொல்கிறார். “இனிமேல் இவர்களை எல்லாம் கூப்பிடக்கூடாது” என்கிறார்கள். கூப்பிடாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான் என்று சொல்ல இங்கே ஆளில்லை. இவ்வாறு சுனீல் கிருஷ்ணன் போன்றவர்கள் வந்துசென்றால்தான் நீங்கள் எழுதுவது தமிழ்நாட்டில் கவனிக்கப்படும். இன்றைக்கு உங்கள் வழியாகத்தான் மலேசிய- சிங்கப்பூர் இலக்கியம் தமிழகத்தில் கவனிக்கப்படுகிறது என்பது கொஞ்சம் வாசிக்கும் எவருக்கும் தெரியும்.

சுனீல் கிருஷ்ணனுக்கோ உங்களுக்கோ விரிவாக வாசித்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றி கட்டுரை எழுதி அங்கே வாசகர்களின் முன்வைக்க எந்த அவசியமும் இல்லை. அவர்கள் செய்வது இலக்கியப் பணியாகத்தான். அப்படி ஒரு அளவுகோல் உள்ளவர்களின் கருத்தே அங்கே வாசகனால் கவனிக்கப்படும். இங்கே வந்து அத்தனைபேரின் பட்டியலையும்போடும் மாலனின் கருத்துக்கு அங்கே ஒரு மதிப்பும் கிடையாது.

இங்கே அடிக்கடிச் சொல்லப்படும் பல சொத்தை வாதங்களைக் கேட்டு வாய்க்குள் சிரித்திருக்கிறேன். சத்தம்போட்டுச் சிரித்தால் கும்மிவிடுவார்கள். ஒன்று, தமிழ்நாடு போல இங்கே வறுமை இல்லை. ஆகவே இங்கே அங்குள்ளது போன்ற சோக இலக்கியம் இல்லை. ஆகவே இங்கே உள்ள எழுத்து தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லையாம். அதாவது இது பூலோக சொர்க்கம். இங்கே துக்கமே இல்லை. சரி துக்கமே இல்லாத நாடு என்றே வைத்துக்கொள்வோம். இதைவிட வளமான அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இலக்கியம் வருகிறதே அதை எழுதவேண்டியதுதானே? அமெரிக்க எழுத்தைக் கொண்டாடுபவர்கள் அதைவிட கொஞ்சம் கம்மியான சொர்க்கமான சிங்கப்பூரைக் கொண்டாடமாட்டார்களா?

இன்னொரு வாதம், சிங்கப்பூரில் எழுதுபவர்கள் பிஸியானவர்கள். தமிழ்நாட்டிலிருந்து எழுதுபவர்கள் போல இலக்கியத்தை முழுநேரமாகக் கொண்டவர்கள் அல்ல. ஆகவே அப்படித்தான் இருக்கும். உலக இலக்கியப்பரப்பில் பெரிய மாஸ்டர்கள் அனேகமாக அனைவருமே முழுநேர இலக்கியவாதிகள். அதுபெரிய தகுதி. அதோடு தமிழக எழுத்தாளர்களில் பலர் இவர்களை விடவும் பெரிய இடங்களில், மேலும் பிஸியாக இருப்பவர்கள். இதையெல்லாம் ஒரு சால்ஜாப்பாகச் சொல்பவர்களிடம் என்னதான் இலக்கிய பிரக்ஞை இருக்கமுடியும்?

இங்கே என்ன சிக்கல் என்றால் ஒருவரைக்கூட விட்டு விட முடியாது. இங்கே ஒருவரிகூட எதிர்விமர்சனம் கிடையாது. சூர்யரெத்னா என்பவர் நீங்கள் எழுதிய இலக்கிய விமர்சனத்துக்காக போலீஸில் புகார் கொடுத்தார். தமிழ்நாட்டில் இதுவரை இலக்கிய விமர்சனக் கருத்துக்கு எதிராக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதா? அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியென்றால் நிலைமை புரியும் என நினைக்கிறேன்

இச்சூழலில் இவர் நல்ல படைப்பாளி, இவர் சுமாராக எழுதுகிறார் என்றே சொல்லமுடியாது. யார் எந்தப்பட்டியலைப்போட்டாலும் அதில் மிச்சமுள்ள அத்தனைபேரையும் சேர்க்கச்சொல்லி கூச்சலிடுவார்கள். இலக்கிய அளவுகோலே கிடையாது. அப்படி ஒன்று உலகில் இருப்பதே சித்துராஜ் பொன்ராஜுக்கு தெரியாது என்பதை அவருடைய கடிதமே காட்டுகிறது.

இதுதான் பிரச்சினை. குறைந்தபட்சம் தமிழகத்திலிருந்தாவது ஒரு இலக்கிய அளவுகோல் வருவது உயர்ந்த விஷயம். அதை இங்குள்ளவர்கள் ‘மனம்புண்படுவதை’ வைத்து நிறுத்திவிட்டால் நஷ்டம் சிங்கப்பூருக்குத்தான்

இங்கே சித்துராஜ் பொன்ராஜ் போன்றவர்கள் குமுறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? சிங்கப்பூர் இலக்கியம் பற்றி தமிழில் வாசிக்கும் எவரும் தான் அறிந்தவரை கருத்து சொல்லலாம். அவர் அறியாததை சுட்டிக்காட்ட சித்துராஜ் போன்றவர்கள் முயற்சி செய்யலாம். அப்படித்தானே இலக்கியம் வளரும்?

என் பெயர் வேண்டாம். நான் போலீஸ்புகாரை பயப்படும் சாமானிய சிங்கப்பூர்க்காரன்

எம்

***

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்

சிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்

இலக்கியத்தின் வெற்றி

கைநழுவிய கலைக்கணங்கள்

எழுந்துவரும் படைப்புக்குரல்

சீர்திருத்தவாதியின் நேர்க்குரல்

அறியாமை இறக்குமதி

திராவிட இயக்கம் அளித்த முதல்விதை

ஜெயகாந்தனின் முகம்

வம்புகளின் சிற்றுலகம்

நவீனத்துவத்தின் முதல்முகம்

மலேசியா -சிங்கப்பூர் குடியேற்றம்

சிங்கப்பூர் கடிதங்கள் -6

சிங்கப்பூர் இலக்கியம் பற்றி…நவீன்

சிங்கப்பூர் -கடிதங்கள் 5

சிங்கப்பூர் கடிதங்கள் 4

சிங்கப்பூர் கடிதங்கள் 3

சிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்

சிங்கப்பூர் இலக்கியம் -கடிதங்கள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

முந்தைய கட்டுரைநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்
அடுத்த கட்டுரைஇந்தியப் பெருமிதம்