‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55

நகுலன் கைவிடுபடைப் பொறிகளிலிருந்து அம்புகள் எழுந்து பொழிவதை பறவைகளின் ஒலியிலிருந்தே உணர்ந்துகொண்டான். “பின்வாங்குக… முடிந்தவரை பின்வாங்குக!” என ஆணையிட்டபடி திரும்பி காட்டுக்குள் விலகி ஓடினான். கைவிடுபடைப் பொறிகளின் அமைப்பே அண்மையிலிருந்து சேய்மை நோக்கி விரிந்து பரவுவது என்பதை அவன் அறிந்திருந்தான். பின்வாங்கும் படைகளை முற்றழிப்பதற்கானது அந்த முறை. அவர்கள் புரவிகளை ஊக்கி விசைகொண்டு பாய்ந்து சென்றுகொண்டே இருக்க அவர்களுக்குப் பின்னால் அம்புகள் மரக்கிளைகளை ஊடுருவி வந்து பொழிந்திறங்கி மண்ணில் பதிவதை கேட்டனர். அலறல்களும் கூச்சல்களும் வலுத்து பின்னர் ஓய்ந்தன. நகுலன் புரவியை இழுத்து நிறுத்தினான். அவை நுரை கக்கி மூச்சிளைத்தன. சில புரவிகள் தள்ளாடி முகம் தழைந்து விழப்போயின. அவர்கள் இறங்கிக்கொண்டனர்.

நகுலன் இடையில் கைவைத்து ஒலிகளை செவிகூர்ந்தான். ஒரு சிறு முனகலோசைகூட கேட்கவில்லை. “முற்றமைதி. ஒருவர் கூட எஞ்சவில்லை” என்று அவன் சொன்னான். வீர்யவான் “மீன்வலைபோல முழு நிலத்தையும் இடைவெளியே இல்லாமல் அணைத்து இறங்கிவிட்டது அம்புமழை” என்றான். நகுலன் “செல்வோம்” என்று மீண்டும் புரவியில் ஏறிக்கொண்டபோது பிறர் தயங்கினர். வீர்யவான் “அரசே, அங்கே முறையான அரசு இருப்பதாகத் தெரியவில்லை. இது கைப்பிழையால் நிகழ்ந்ததாகக்கூட இருக்கலாம். நம்மை நோக்கி கைவிடுபடைகள் அம்புகளைப் பொழிந்தால் நம்மால் ஏதும் செய்ய முடியாது” என்றான். “ஆம், அங்கே எவர் இருக்கிறார்கள் என்றே நமக்கு இன்னமும் தெரியவில்லை. இது அச்சம்கொண்ட பெண்களின் செயலாக இருக்கலாம். அவர்கள் அனைவரையுமே அஞ்சுவார்கள்” என்றான் இன்னொரு காவலன். நகுலன் “அங்கே பெண்டிரின் அரசே இருக்கிறது என நானும் அறிவேன். ஆனால் கோட்டைக்குமேல் அரசையே நடத்தத் தெரிந்தவள் ஒருத்தி இருக்கிறாள்…” என்றான்.

வீர்யவான் “அரசி பானுமதி…” என்று சொல்லத்தொடங்க நகுலன் “அவரால் இத்தனை முற்றழிவை கற்பனை செய்ய முடியாது. இவள் போருக்கென்றே பிறந்தவள். இன்னொரு திரௌபதி. இத்தனை படையினரையும் முற்றத்திற்கு வரவிட்டு அம்புகளை பொழிந்தாள். திறந்த கோட்டையை பொறி என அமைத்தாள்… இவள் பலமுறை பல்லாயிரம்பேரை உள்ளத்துள் கொலை செய்தவள். பிறவியிலேயே அரசியென்றாகும் சிலரில் ஒருத்தி. அவளை சந்திக்கவும் வணங்கவும் விழைகிறேன்” என்றான். வீர்யவான் “அவ்வண்ணம் ஒருத்தி இருப்பாள் என நான் நினைக்கவில்லை. இத்தருணத்தில் வெவ்வேறு மானுட உள்ளங்களை கொலைவிழைவு கொண்ட தெய்வங்கள் கைப்பற்றிக்கொள்கின்றன. அவை பலிகொண்டுவிட்டன” என்றான். இன்னொரு காவலன் “அஸ்தினபுரியின் கோட்டையே மகாமரியாதை என்னும் அன்னைதெய்வத்தின் பருவடிவு என்பார்கள். அவளுக்கு ஆண்டில் மும்முறை குருதிபலி கொடுத்து வணங்குவார்கள். அன்னை தன் ஆயிரமாண்டுக் கால பசியை தீர்த்துக்கொண்டாள் என்றே படுகிறது” என்றான்.

“கோட்டைக்குள் முடிந்தவரை முன்னரே சென்று பாண்டவர்களின் முழு வெற்றியை அறிவிக்கவேண்டும். அரசமுரசு முழங்கி அஸ்தினபுரியை நாம் எடுத்துக்கொண்டதை குடியவைக்கு தெரிவிக்கவேண்டும். இது என் உடனடிக் கடமை” என்றபின் நகுலன் முன்னால் சென்றான். பிறர் அவனைத் தொடர்ந்தனர். காட்டுக்குள் மரங்களின் இடைவெளிகள் முழுக்க அம்புபட்டவர்கள் விழுந்து கிடந்தனர். அம்புகள் அனைத்துமே முழுக்கப் பாய்ந்து மறுபக்கம் வந்துவிட்டிருந்தன. நீளம்புகள் உடல்களை மண்ணோடு ஆழத் தைத்திருந்தன. ஒவ்வொருவர் உடலிலும் ஒன்றுக்குமேற்பட்ட அம்புகள் இருந்தன. ஒருவர்கூட உயிருடன் இல்லை. தொடையிலும் விலாவிலும் அம்புகள் பாய்ந்தவர்கள்கூட விழிகள் வெறித்திருக்க பற்கள் வெளுத்து தெரிய வலிப்பெழுந்த நிலையில் உறைந்திருந்தனர். “நஞ்சு” என்று வீர்யவான் சொன்னான். “ஆம், உலோகத்திலேயே ஊறியிருக்கும் நஞ்சு அது. நவச்சாரமும் துரிசும் கலந்து உருவாக்கப்படுவது. அம்புகளின் முனைகள் மயிற்பீலி நிறத்திலிருக்கும்” என்று நகுலன் சொன்னான்.

காட்டின் விளிம்பை அடைந்தபோது நகுலன் பெருமூச்சுவிட்டான். அந்த முற்றமெங்கும் உடல்கள் இடைவெளியில்லாமல் பரவிக்கிடந்தன. போர் முடிந்த களம்போல மண்ணில் குருதி ஊறியிருந்தது. புரவிகள் மண்ணுடன் அறைபட்டிருந்தன. சில நீளம்புகள் ஆளுயரத்தில் நின்றன. “செய்தி அறிவித்து ஒப்புதல் பெறாமல் செல்வது பெரும்பிழை” என்று வீர்யவான் சொன்னான். நகுலன் கைகாட்ட அவனுடன் வந்த வீரர்கள் முழவொலி எழுப்பினர். “அங்கிருக்கும் பெண்களுக்கு முழவொலியின் மொழி தெரியுமா?” என்றான் வீர்யவான். ஆனால் கோட்டைமேல் கொடி வருக என அசைந்தது. நகுலன் கைகாட்டிவிட்டு அந்தப் பிணங்களினூடாக அம்புகளை ஒழிந்தும் சரித்தும் சென்றான். அவர்கள் அவனை ஓசையின்றி தொடர்ந்தார்கள். ஒவ்வொருவரும் நரம்புகள் இழுபட்டு நிற்க, தசைகள் உறைந்திருக்க, ஒற்றை உணர்வில் உளம்கூர்ந்திருக்க முன்னால் சென்றனர். கோட்டைவாயிலை அடைந்தபோது ஒவ்வொருவராக பெருமூச்சுவிட்டு உடல் தளர்ந்தனர். கோட்டைமுகப்பை அவர்கள் அடைந்தபோது மேலே முரசுகள் வரவேற்பொலி எழுப்பின.

நகுலன் தன்னை எதிர்கொண்ட இளம்பெண்ணிடம் “இங்கே பொறுப்புக்குரியவர் எவர்?” என்றான். “நானே. என் பெயர் சம்வகை. இக்கோட்டையின் முழுக் காவலும் என் பொறுப்பிலேயே” என்றாள் சம்வகை. “நீ ஷத்ரியகுடியைச் சேர்ந்தவள் அல்ல, அல்லவா?” என்றான் நகுலன். “ஆம் அரசே, நான் யானைப்பயிற்சியாளர் சீர்ஷரின் மகள். என் அன்னை வழியில் மச்சர்குலத்தவள்” என்றாள் சம்வகை. அவளை வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் “உங்கள் வருகையை அஸ்தினபுரி ஏற்கிறது. தாங்கள் அரண்மனைக்குச் சென்று அரசியை காணலாம். உங்கள் வருகை அரண்மனைக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றாள். “இப்போர்சூழ்கையை அமைத்தவர் எவர்?” என்றான் நகுலன். “நான்தான்” என்று அவள் சொன்னாள். அவன் தலையசைத்தபின் முறுக்கவிழ்ந்து நின்றிருந்த கைவிடுபடைகளை ஒரு நோக்கு பார்த்துவிட்டு “அவற்றின் பொறிகளுக்கு சில கணக்குகள் உண்டு. அவ்வகையில் சுழற்றினாலொழிய அவற்றை அவிழ்க்க முடியாது. கோட்டைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவை கற்பிக்கப்படும். கோட்டைப் பொறுப்பில் ஷத்ரியர்கள் அன்றி பிறரை அமைக்கலாகாது என்பது நெறி” என்றான்.

“இங்கே ஷத்ரியப் பெண்டிர் மிகக் குறைவு” என்று சம்வகை சொன்னாள். “இங்கு வந்த நாள் முதல் நான் இப்பொறிகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். சிறுஅகவையிலிருந்தே இவற்றை நோக்கிக்கொண்டிருக்கிறேன். இவை எவ்வண்ணம் அமைந்திருக்கும் என என் உள்ளத்தில் தோன்றியதோ அவ்வண்ணமே அமைந்திருந்தன. இவற்றின் பொறிச்சுழல் கணக்குகள் எனக்கு முன்னரே தெரிந்திருந்து நினைவில் மீண்டது போலவே உணர்ந்தேன்” என்றாள். நகுலன் “நீ மச்சகுலத்தவள் என்றா சொன்னாய்?” என்றான். “ஆம், என் அன்னையை தந்தை தென்திசையில் மச்சர்நாட்டிற்குச் சென்றபோது கண்டு பெண்பணம் அளித்துப் பெற்று மணந்து கொண்டுவந்தார்” என்றாள். நகுலன் “சம்வகை என்றால் கொண்டுசெல்பவள். அனலுக்கு ஊர்தியாகும் காற்றின் மகள்” என்றான். புன்னகைத்து “நன்று, உன் தந்தைக்கு தெய்வங்கள் வகுத்த தருணத்தில் இப்பெயரைச் சூட்டவேண்டும் என்று தோன்றியிருக்கிறது” என்றபின் புரவியில் ஏறிக்கொண்டான். பின்னர் மூக்கைச் சுளித்து “நகரில் ஏதேனும் எரிகிறதா என்ன?” என்றான். “இல்லையே” என்று அவள் சொன்னாள். நகுலன் “நெடும்பொழுதாகவே வெந்த மண்ணின் வாடை என் மூக்குக்குத் தெரிகிறது” என்றான். “ஆம், எனக்கும் தெரிகிறது. வடமேற்குக் காற்றில் அந்த மெல்லிய மணம் உள்ளது… சில தருணங்களில் அது அடுப்பிலேற்றிய புதுக்கலம்போல் உள்ளத்திற்கு உகந்த நினைவுகளையும் எழுப்புகிறது” என்றாள் சம்வகை.

நகுலன் புன்னகைத்துவிட்டு குதிரையை கிளப்பினான். அவள் கோட்டைவாயிலில் நின்றாள். அவன் உள்முற்றத்திலிருந்து அரசப்பெருவீதியை நோக்கிச் செல்லும் பாதையில் நுழைந்தபோது மிகத் தொலைவில் மின்னலின் வெளிச்சம். அதில் மாளிகைக்குவடுகள் ஒளிகொண்டு அணைந்தன. அவன் செவிநிறைக்கும் இடியோசையை கேட்டான். மிக அருகிலென மின்னல் வெட்டி நிலம் ஒளிகொண்டு அதிர்ந்து அணைந்தது. இடியோசை கோட்டைச்சுவர்மேல் எதிரொலித்துச் சூழ்ந்தது. மழை அணுகிவருவதுபோல் ஓசை கேட்டது. மீண்டும் ஒரு மின்னலும் இடியும் எழுந்தன. அஸ்தினபுரியின் தெருக்களில் எவரும் இருக்கவில்லை. புரவிச்சாணியும் கூலப்புழுதியும் சொட்டிய எண்ணையும் கலந்து மணக்கும் அந்தத் தெருக்கள் நெடுங்காலம் புழுதி படிந்து கிடக்கும் பொருட்களைப்போல் மணம்கொண்டிருந்தன. மழை அணுகி வருகிறதா? அல்லது பிறிதொரு படையா அது?

அவன்மேல் மழை அறைந்த பின்னர்தான் மழை என உணர்ந்தான். வீர்யவான் “மழை!” என்றான். ஆனால் இன்னொரு படைவீரன் அலறினான். வீரர்கள் நிலைகுலைய புரவிகள் திசையழிந்து தங்களைத்தாங்களே சுற்றிக்கொண்டன. என்ன ஆயிற்று என்று நகுலனுக்குப் புரியவில்லை. மழை வெம்மைகொண்டிருந்தது. கோடையின் மெல்லிய தூறலில் இருப்பதுபோன்ற மூச்சுத்திணறச் செய்யும் ஆவிமணம். அதன்பின் அவன் திடுக்கிடலுடன் கண்டான், வீர்யவானின் உடல் கொழுங்குருதியால் முழுக்காட்டப்பட்டிருந்தது. கையைத் தூக்கிப் பார்த்தான். விரல்நுனியிலிருந்து செங்குருதி சொட்டியது. “குருதிமழை!” என்று வீர்யவான் கூவினான். “வானிலிருந்து கொட்டுகிறது குருதி.” நகுலன் புரவியை அருகில் இருந்த காவல்மாடத்தை நோக்கி செலுத்தினான். அதன் கூரைக்குக் கீழே ஒண்டிக்கொண்டு பெய்துகொண்டிருந்த மழையை நோக்கினான். விண்ணில் அதற்கு நிறமில்லாததுபோல் தோன்றியது. ஆனால் கூரைவிளிம்பிலிருந்து செந்துளிகள் சொட்டின. புரவிகளையும் வீரர்களையும் செம்மை தழுவி வழிந்தது.

அவன் கூரையிலிருந்து சொட்டிய செந்நீரை கையால் அள்ளி முகத்தருகே கொண்டுவந்து முகர்ந்தான். இளவெம்மை இருந்தாலும் அது குருதியின் மணம் கொண்டிருக்கவில்லை. வெந்த மண்ணின் மணம். அவன் “இது நெடுந்தொலைவில் காந்தாரப் பாலையில் இருந்து வந்த புழுதிமுகில் வானில் பனித்து விழுந்த மழை” என்றான். மழை நின்று கூரைவிளிம்பு சொட்டிக்கொண்டிருந்தது. “ஆம், செந்நிறச் சேறுதான்” என்றபடி வீர்யவான் அருகே வந்தான். இன்னொரு வீரன் தன் உடலை கையால் வழித்து வீசியபடி “அல்லது வேறுவகை குருதி” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று வீர்யவான் எரிச்சலுடன் கேட்டான். “மானுடக்குருதி அல்ல. விலங்குகளின் குருதியும் அல்ல. விண்ணிலிருந்து பொழியும் வேறு குருதியாக இருக்கலாமல்லவா? தேவர்களோ கந்தர்வர்களோ குருதி பொழிந்திருக்கலாம்” என்று அவன் சொன்னான். “உழுதிட்ட வயல்களில் தழை புளித்த ஏழாம் நாள் இதைப்போலவே செங்குருதி எழுவதுண்டு. வயல் பூப்பது என்பார்கள்” என்றான் இன்னொருவன். “வாயை மூடு… நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் பேசாதே” என்று வீர்யவான் சீறினான்.

நகுலன் மீண்டும் கிளம்பியபோது நகரமெங்கும் திறந்திருந்த அனைத்தும் குருதி வடித்துக்கொண்டிருப்பதை கண்டான். மரங்களில் இலைகள் குருதி உதிர்த்தன. இல்லங்கள் குருதி சொட்டின. மாளிகைக்குவடுகள் வானின் ஒளியில் குருதி வழிய நின்றன. சுவர்கள் குருதி வடித்தன. புரவிகள் பிடரியும் மயிரும் சிலுப்பி குருதித்துளிகளை உதிர்த்தன. ஆனால் வடமேற்கிலிருந்து தொடர்ந்து வீசிய வெங்காற்று அவர்களை விரைவிலேயே உலரச் செய்தது. காற்றில் நீர்த்துளிகள் பறந்து சுவர்கள் மேல் பட்டு உலர்ந்தன. வழிந்து கோடாகி மறைந்தன. அவர்களின் உடைகள் பறக்கத் தொடங்கின. குழல் அலைபுரளலாயிற்று. இருமுறை உடைகளை உதறியபோது செம்புழுதி பறந்தது. “செம்புலத்தில் எங்கோ இருந்து மண் எழுந்து வந்து இங்கே விழுகிறது, விந்தைதான்” என்றான் வீர்யவான்.

நகுலன் அரண்மனை வளாகத்தை அடையும்போது நன்றாகவே வானம் வெளுத்துவிட்டிருந்தது. வெயில் சரியவில்லை என்றாலும் கண்கூசுமளவுக்கு ஒளி இருந்தது. ஆனால் எங்கும் மழையீரம் தென்படவில்லை. வானிலிருந்து காற்று நின்று கீழிருக்கும் காற்றே சுழலத் தொடங்கியது. இறுதிக் காவல்மாடத்தில் மட்டுமே காவல்பெண்டுகள் இருந்தனர். அவர்கள் அவர்களை நிறுத்தி அவனை அடையாளம் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். முதிய பெண் உள்ளே ஓடி அங்கே இருந்த இன்னொருத்தியிடம் சொல்ல அவள் எழுந்து வந்து நோக்கி மேலும் திகைத்தாள். ஓர் இளம்பெண் “அரண்மனைக்கு செய்தி சொல்வோம்” என்றாள். “அரண்மனையிலிருந்து ஏற்கெனவே செய்தி வந்துவிட்டது” என்று இன்னொருத்தி சொன்னாள். “என்ன செய்தி?” என்றாள் முதியவள். “அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால்…” என அவள் இழுக்க “நீ என்ன நினைக்கிறாய் என்பதல்ல இங்கே கேள்வி” என்றாள் முதியவள். “எனில் நீங்களே முடிவு செய்க! எனக்கென்ன இழப்பு?” என்றாள் அவள். “வாயை மூடு” என்றாள் முதியவள். “நீங்கள் மூடுங்கள் வாயை…” என்று அவள் திருப்பிச் சீறினாள்.

நகுலன் புன்னகையுடன் நின்று அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் “என்ன ஆயிற்று?” என்றான். “பொறுத்தருள்க அரசே, அரண்மனையிலிருந்து ஆணை வந்திருக்கிறது. முழவொலியாக அது எழுந்ததை நானும் நினைவுகூர்கிறேன். இந்த அறிவிலாப் பெண் அந்த ஆணையை தெளிவுறக் கேட்கவில்லை. இன்னொரு முறை உறுதி செய்யாமல் என்னால் முடிவு எடுக்க முடியாது” என்று முதுமகள் சொல்ல இளையவள் “இங்கே காவல்மாடத் தலைவியாக இருந்து ஆணையிட மட்டும் தெரிகிறது. ஆணைகளை கேட்கவேண்டியது நீங்கள்” என்றாள். “நீ வாயை மூடு முதலில். வெளியே வந்து பேசாதே என பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்” என்றாள் முதியவள். “முதலில் வேற்றாள் முன்னிலையில் என்னிடம் கூச்சலிடக்கூடாது. அதை நானும் சொல்லியிருக்கிறேன்.” முதுமகள் எழுந்துகொண்டு “உள்ளே போடி” என்றாள். “முடியாது, என்ன செய்யவிருக்கிறீர்கள்?” முதுமகள் “நான் அரண்மனைக்கு செய்தி சொல்வேன். உன்னை கழுவிலேற்றுவேன்” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டாள். “நீயும்தான் என் அருகே வந்து அமர்வாய். அரண்மனையின் ஆணையை கேட்காமலிருந்தமைக்காக.”

நகுலன் சிரித்தபடி “அம்மணி, ஒன்று சொல்லவா? எங்களை கோட்டைக்காவல்பெண்ணான சம்வகை உள்ளே அனுப்பியிருக்கிறாள். அவளுக்கு ஆணை சென்றிருக்கிறது. அதே ஆணையை நீங்களும் கடைபிடியுங்கள்” என்றான். “ஆனால்…” என முதுமகள் தயங்க “ஏதாவது கேள்வி வருமென்றால் அவள் மறுமொழி சொல்லட்டும். நீங்களும் அவளையே பொறுப்பேற்க வைத்துவிடலாம்” என்றான் நகுலன். ஒரு பெண் “சம்வகை திமிர்பிடித்தவள்… அவளுக்கு தான் பேரரசி திரௌபதி என்று நினைப்பு” என்றாள். முதுமகள் மாறிமாறி நோக்கி குழம்பி பின்னர் சலிப்புடன் “எனக்குத் தெரியவில்லை” என்றாள். இளம்பெண் “உள்ளே செல்லவிடுவது மட்டுமே ஒரே வழி… இதுகூடத் தெரியவில்லை கிழவிக்கு” என்றாள். “நீங்கள் உள்ளே செல்லலாம், அரசே” என்றபின் முதுமகள் எழுந்து இளையவளிடம் “எவளை கிழவி என்றாய்? அறிவிலி… உன் குலம் என்ன?” என்று கூச்சலிடத் தொடங்க நகுலன் உள்ளே நுழைந்தான். வீர்யவான் வாயில் படிந்த புழுதியை துப்பிவிட்டு “புழுதிக்காற்று” என்றான். அதற்குள் காற்றில் புழுதி பெருகி அவர்களைத் தாக்க கண்களை மூடி கையால் மூக்கையும் பொத்திக்கொண்டு தலைகுனிந்தனர்.

புழுதி வானிலிருந்துதான் இறங்கிக்கொண்டிருந்தது. “புழுதிமழையா?” என்று ஒரு வீரன் கேட்டான். “மண் பொழிகிறது” என்றான் இன்னொருவன். “புழுதிமுகில் இப்போது நேரடியாகவே விழுகிறது” என்றான் நகுலன். அவர்கள் அரண்மனையின் விரிந்த முற்றத்தை அடைந்தனர். எங்கும் ஒதுங்கிக்கொள்ள இயலவில்லை. அரண்மனை பெருமுற்றத்தில் நான்கு பல்லக்குகளும் இரண்டு புரவிகளும் மட்டுமே நின்றன. அதன் கல்பரவிய வெளி ஒளிகொண்டு விரிந்திருக்க அதன் மேல் புழுதி பொழிந்தது. மெல்லிய காற்றில் செம்புழுதி சுழிகளாக சுழன்றபடி நகர்ந்தது. பின்னர் சிற்றலைகளாக எழுந்து சென்றது. நீர் என்றும் நெருப்பு என்றும் தன்னைக் காட்டியது. புழுதியே இருளாக மாறியது. செந்நிறம் விழிகள் முன் திரையென ஆகியது. நகுலன் தலைகுனிந்து தன் உடலையே தனக்கு கூரையென ஆக்கி விரைந்த அடிகளுடன் நடந்து அரண்மனையின் முகப்பை அடைந்தான். அவனுடைய படைவீரர்கள் பலர் ஆங்காங்கே நின்றுவிட்டிருந்தார்கள். அவன் கூரைக்குக் கீழே வந்ததும் சுவர் நோக்கி நின்று மூச்சை இழுத்துவிட்டான். பின்னர் படிகளில் ஏறி உள்ளே சென்றபின் வெளியே பார்த்தான். புழுதித்திரை வானிலிருந்து தொங்கவிடப்பட்டதுபோல நின்று மெல்ல ஆடிக்கொண்டிருந்தது.

அரண்மனையின் காவல்பெண்டு தலைவணங்கினாள். “நான் அரசியரை பார்க்கவேண்டும். முதலில் அஸ்தினபுரியை பொறுப்பேற்று ஆளும் அரசி பானுமதியை. அதன் பின்னர் அவருடைய ஒப்புதலுடன் பேரரசி காந்தாரியை” என்று நகுலன் சொன்னான். அவள் “தாங்கள் இங்கேயே சற்று பொறுத்திருக்கும்படி கோருகிறேன், அரசே. நான் அரசியின் ஒப்புதல் பெற்று வருகிறேன்” என்றாள். அவள் நிலைகுலைந்து போயிருந்தாள். வெளியே செந்நிற மரவுரித்திரை என நின்றிருந்தது புழுதிமழை. அவள் திரும்பித்திரும்பி நோக்கியபடி மேலே செல்ல புழுதிக்குள் இருந்து நகுலனின் படைவீரர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்தனர். “ஒருவன் விழுந்துவிட்டான்” என்று வீர்யவான் சொன்னான். “அவன் மூச்சுத்திணறி இறந்துவிட்டிருக்கக் கூடும்.” இன்னொரு காவலன் “இருவர் விழுந்தனர், படைத்தலைவரே. நாம் ஒருவனை மட்டுமே பார்த்தோம்” என்றான். “இன்னொருவனும் விழுந்திருக்கக் கூடும்” என்று பிறிதொருவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே புழுதிக்குள் இருந்து ஒருவன் கிழித்தெழுந்தவனாக வந்து அவர்கள் முன் விழுந்து உடலை சுருட்டிக்கொண்டான். இருமியபடி தோள் அதிர்ந்தான். “அவனை உள்ளே இழுத்துச்செல்க!” என்றான் வீர்யவான்.

புழுதியை அவர்கள் உதறிக்கொண்டிருந்தபோதே வானில் ஒரு மூடி விழுந்ததுபோல புழுதிமழை நின்றது. திரை அறுந்து விழுவதுபோல் இறுதிப்பொழிவு மண்ணை அடைந்தது. மெல்லிய செம்புகைபோல புழுதியின் எச்சம் காற்றில் நின்றது. பின்னர் ஒலிகள் துலங்கத் தொடங்கின. அலறல்களும் கூச்சல்களும் முழவுகளும் முரசுகளும் சேர்ந்து ஒலிக்கும் ஓசையும். “கால்நாழிகைப் பொழுதுகூட பொழிந்திருக்காது, அதற்குள் இறந்து மீள்வதுபோல உணர்ந்துவிட்டோம்” என்று வீர்யவான் சொன்னான். “அது ஒரு முகில் அப்படியே வந்தமைந்ததுதான்” என்றான் இன்னொரு காவலன். “முன்பும் இப்படி நடந்துள்ளது என்று சூதர்கதைகளில் கேட்டிருக்கிறேன்” என்றான் இன்னொருவன். அச்சமா வியப்பா என்று அறியாத கிளர்ச்சியுடன் அவர்கள் உடல் பரபரத்தனர். “ஊழியில் மண்மழை பொழியும் என்று கேட்டுள்ளேன். கார்த்தவீரியனின் மதுரா மண்மாரியில் மூழ்கி அழிந்தது என்பார்கள்.” நகுலன் முகம்சுளித்து நோக்க அவர்கள் பேச்சை நிறுத்தினர்.

நகுலன் முற்றத்தை பார்த்தான். பாலை நிலப்பரப்புபோல செம்புழுதி அலையலையாகப் படிந்து விரிந்திருந்தது. வற்றிய ஆற்றின் சேற்றுப்பரப்புபோல. கூரைவிளிம்பிலிருந்து அப்போதும் பொழிந்துகொண்டிருந்தது. விரைவிலேயே அது நின்றபோது காற்று பெரும்பாலும் தெளிந்து ஒளிகொண்டிருந்தது. நகுலன் அதை எந்த உணர்வும் இல்லாமல் நோக்கிக்கொண்டிருந்தான். இன்னொரு காற்று வந்து அப்புழுதிப் படலத்தை அள்ள அது செம்பட்டு பரவி உலைவதுபோல அசைந்து பின் சுருண்டு மாளிகையின் வடக்குச்சுவர் நோக்கி சென்றது. சுவர் அருகே புழுதி குவிந்து வந்தறையும் அலை என மேலும் எழ முயன்றது. பின்னர் கொதிப்படங்கி அமைந்தது. முற்றத்தின் கல்லடுக்குகள் தெளியத்தொடங்கின. குதிரைகள் தலைதாழ்த்தி புழுதியை உடலில் இருந்து உதறிக்கொண்டன. பல்லக்கின் மேலிருந்து செந்நிற ஆவி என புழுதி பறந்தது. காவல்மாடத்திலிருந்து ஒரு பெண் வெளியே சென்று எதிர்முனை நோக்கி குனிந்தபடி ஓடினாள். எவரோ எவரையோ கூவி அழைத்தனர்.

வீர்யவான் “என்ன நிகழ்கிறது, அரசே?” என்றான். நகுலன் ஒன்றும் கூறவில்லை. மேலிருந்து ஏவல்பெண்டு ஒருத்தி படிகளில் கீழிறங்கி வந்து தலைவணங்கி “சற்றே பொறுத்திருக்கும்படி அரசியின் ஆணை, அரசே. அரண்மனையில் இன்று காலை முதலே எண்ணியிராதவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முதற்புலரியிலேயே அரசியரில் எழுவருக்கு கரு கலைந்தது. அதன்பின் அரசியரின் கருக்கள் அனைத்துமே கலைந்துகொண்டிருக்கின்றன. அரசி அகத்தளத்திற்கு சென்றிருக்கிறார்கள்…” என்றாள். நகுலன் “எத்தனைபேர் கருவுற்றிருந்தனர்?” என்றான். “மருத்துவச்சி பேசுவதைக் கேட்டேன். ஆயிரத்தவரில் நாநூற்றி எழுபத்தேழுபேர் கருவுற்றிருந்தனர்.” நகுலன் சொல்லின்றி அவளை நோக்கினான். “அனைத்துக் கருக்களுமே கலைந்துவிட்டன என்று சொல்லப்பட்டது. நான் அதை உறுதியாக அறியேன்” என்று அவள் சொன்னாள். “என்ன ஆயிற்று?” என நகுலன் கேட்டான்.

“ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள். கடுந்துயரில் அவர்கள் ஊணும் உறக்கமும் ஒழிந்தமையால் என்று முதலில் சொன்னார்கள். இந்தக் குருதிமழையும் புழுதிக்காற்றும் அவர்களின் மூச்சை நிறுத்தியிருக்கலாம் என்றனர். அனைவருமே கொடுங்கனவுகள் கண்டிருக்கிறார்கள். பதினொரு ருத்ரர்கள் நகரில் நுழைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை பதினொருவருக்கும் குருதிபலி கொடுத்து கொடைநிறைவு செய்யவேண்டும் என்று நிமித்திகர் சொன்னார்.” அவள் திரும்பச் சென்றபடி “அரசி அறைக்கு வந்ததும் நான் வந்து அழைக்கிறேன், அரசே. இங்கே புழுதியற்ற இடத்தில் தாங்கள் சற்று அமரலாம்” என்றாள். நகுலன் “நான் காத்திருக்கிறேன்” என்றான். வீர்யவான் “நான் விழித்திருக்கிறேனா என்பதே ஐயமாக இருக்கிறது” என்றான். கீழே விழுந்து கிடந்தவன் இருமுறை இருமி உடலை நெளித்தபின் அமைதியடைந்தான். அவன் முகத்தை தொட்டுநோக்கிய காவலன் “இறந்துவிட்டான்” என்றான்.

எதிர்முனையிலிருந்து இரு ஏவற்பெண்டுகள் புழுதியை துடைப்பத்தால் மெல்ல கூட்டியபடி வந்தனர். மிகக் குறைவாகவே புழுதி சேர்ந்தது. மிகமிக மென்மையானது. அவர்களுக்குப் பின் இரு பெண்கள் மரவுரியை நீரில் நனைத்து தரையைத் துடைத்தபடியே வந்தார்கள். ஈரம்பட்டதுமே புழுதி குருதியாக மாறியது. வளைந்த குருதிக்கோடுகள் விரிந்து விரிந்து அலையாக மாறி கூடத்தை மூடின. அவன் அக்குருதித்தடங்களை நோக்கியபடி நின்றிருந்தான். மரவுரி நீருடன் வளைந்தமைந்தபோது சிறிய செங்குமிழிகள் தோன்றி வெடித்தன. அவன் போதும் என கைகாட்டினான். ஏவற்பெண்டு வியப்புடன் நோக்க “செல்க!” என அவன் ஆணையிட்டான். அவர்கள் வணங்கி மேலும் தயங்க “நாங்கள் சென்றபின் நிகழட்டும்” என்று நகுலன் சொன்னான். அவர்கள் அகன்ற பின்னரும் மரத்தரையில் குருதி வடிவங்கள் எஞ்சியிருந்தன. அலைகளாக படிந்திருந்தவை உலரத்தொடங்கியபோது வெவ்வேறு வடிவங்கள் கொண்டன. முகங்களாக தெளிந்தெழுந்தன.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசிவப்பயல்
அடுத்த கட்டுரைஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்