கண்ணீரும் வாழ்வும்

மண்ணும் மனிதரும் பற்றி…

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

அன்புள்ள ஜெயமோகன்,

சிவராம காரந்த்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ வாசித்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால், பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ நாவலை வாசித்திருக்கிறேன். இரண்டு நாவலும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றும் ஒரே உணர்வால் வடிவம் கொண்டவை என்றும் தோன்றியது. கண்ணீரின் கதை. பெண்களின் முடிவிலாக் கண்ணீரின் கதை. பெருந்துயரிலிருந்து திரண்டு வரும் வாழ்வின் சாராம்சத்துக்காகக் காத்திருக்கும் பெண்களின் கதை. குடும்பம் என்ற அமைப்புக்காக – குடும்பத்தின் நலத்துக்காக – முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் எதிர்காலம் மீதும் அடுத்த தலைமுறை மீதும் நம்பிக்கை வைத்து வேதனை மிகுந்த நிகழ்காலத்தை ஒவ்வொரு கணமாக நகர்த்தும் பெண்களின் கதை.

இந்நாவலை வாசித்த போது. இந்நாவல் நிகழும் நிலப்பரப்பும் அதன் கடந்த கால வரலாறும் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. தனது அரசு நிலைபெற்றிருந்த போது, அன்றைய ஐரோப்பாவின் ஒட்டுமொத்த கருவூலச் செல்வமும் தனக்கு ஈடாகாது என்ற நிலையில் கோலோச்சிக் கொண்டிருந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் மண். அவர்களால் நிர்வகிக்கப்பட்டிருந்த சீரான சமூக பொருளியல் அடுக்கு. பலநாட்டு வணிகர்களும் குவிந்த வைரக் கடைத்தெரு உலகிலேயே அங்கே மட்டுமே இருந்தது என்னும் படியான செல்வச் செழிப்பு. சில நூற்றாண்டுகளில் அந்நிலத்தின் மக்கள் அடுப்பெரிக்க தழை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மழைக்காலத்திற்கான விறகு சேகரிப்பது மாபெரும் வேலையாக இருக்கிறது. ஒரு நாள் பாடு என்பதே உடலுழைப்பை அளித்தால் மட்டுமே கடக்கக் கூடியது என்ற நிலை.

வைதிகம் இராம ஐதாளருக்கு உணவுக்கவலை இல்லாமல் செய்கிறது. கொட்டும் மழையிலும் ஆற்றைக் கடந்து வைதிகங்களுக்குச் செல்கிறார் ஐதாளர். அதில் சேரும் பணத்தை வீட்டில் ஆங்காங்கே பதுக்கி வைக்கிறார். சமயம் நிலைநிறுத்தப்படும் சமூகத்துக்கு முன்னகர இருக்கும் ஒரு குறைந்தபட்ச உத்ரவாதத்துக்கான குறியீடாக அது எனக்குத் தோன்றியது. கிராமம் தன்னை சடங்குகள் மூலமும் சமயம் மூலமும் நிலைநிறுத்திக் கொள்கிறது. பருவமழையுடன் போராடும் விவசாயம் இருக்கவே இருக்கிறது.

ஐதாளர் வீட்டுப் பெண்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்கின்றனர். மழைக்காலத்துக்கு தாங்கக் கூடிய உலர் உணவுகளை தயாரிக்கின்றனர். ஓய்வற்ற செயல்கள் மூலம் தனிமையைப் போக்கிக் கொள்கின்றனர். இயற்கையுடனான போராட்டம். தங்களைச் சூழ்ந்திருக்கும் சமூக விதிகளுடனான போராட்டம். பேருரு கொண்டு முன்னால் நிற்கும் ஊழுடனான போராட்டம்.

நாகவேணி கதாபாத்திரம் இந்திய இலக்கியத்தின் மகத்தான கதாபாத்திரங்களில் ஒன்று.

இந்நாவலில் ஒரு விஷயம் கவனித்தேன். மகாத்மாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்னால், அதுவரை தேங்கியிருந்த இந்திய சமூக அமைப்பில் சட்டென நிகழும் ஒரு தாவல். ராமன் கள்ளுக்கு எதிராகவும் கதராடைக்கு ஆதரவாகவும் பரப்புரை செய்கிறான். அவன் செயலை நாகவேணி ஆதரிக்கிறாள். காந்தியின் வருகைக்குப் பின் நிகழும் இந்த சமூக மாற்றம் நிறைய இந்திய நாவல்களில் நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நினைவில் வருவது: கிரிராஜ் கிஷோரின் ‘’சதுரங்கக் குதிரைகள்’’, கோவிலனின் ‘’தட்டகம்’’, எம்.எஸ்.கல்யாண சுந்தரத்தின் ‘’பகல் கனவு’’.

கன்னடர்கள் அவர்கள் பெறும் கல்வி மூலமான வேலைவாய்ப்பின் காரணமாக மும்பையையும் சென்னையையும் அவர்களின் இன்னொரு நகரமாகக் கருதுவதன் சித்திரமும் ஆர்வமூட்டியது. நாவலில் கொரநாட்டுப் புடவை என்ற கைத்தறிப் புடவையைப் பற்றிய குறிப்பு ஒன்று வரும். கொரநாடு எனப்படும் கூறைநாடு, மயிலாடுதுறையின் ஒரு பகுதி. இங்கே கைத்தறி நெசவு ஒரு காலத்தில் முக்கியத் தொழிலாக இருந்திருக்கிறது.

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

***

மண்ணும் மனிதரும் வாங்க 

முந்தைய கட்டுரைஈரோடு சிறுகதை முகாம் ,இன்னோரு கடிதம்
அடுத்த கட்டுரைவீடு நமக்கு…