‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53

அஸ்தினபுரியின் கோட்டைக்குமேல் சம்வகை காவலர்தலைவியாக அமர்ந்திருந்தாள். அஸ்தினபுரியின் யானைக்கொட்டிலில் அவளுடைய அன்னையும் தந்தையும் பணிபுரிந்தனர். அவள் தந்தை யானைப்பாகனாக இருந்தார். பின்னர் யானைகளை பயிற்றுபவராக ஆனார். அவளை இளங்குழந்தையாகவே யானைக்கொட்டிலுக்கு கொண்டுசெல்வதுண்டு. ஒரே மகள் என்பதனால் இல்லத்துள் நிறுத்தாமல் அவளை செல்லுமிடமெங்கும் கொண்டுசென்றார். “நம் குடியில் மைந்தரே ஈமச்சடங்கு செய்ய முடியும்… ஆனால் நீ எனக்கு அதை செய்வாய் என்றால் நான் நிறைவடைவேன்” என்று அவர் அவளிடம் ஒருமுறை சொன்னார். “நான் செய்கிறேன்… இப்போதே செய்கிறேன்” என்று அவள் சொல்ல அவர் வெடித்து நகைத்து மனைவியிடம் “கேட்டாயா, இப்போதே செய்கிறேன் என்கிறாள்” என்றார். “போதும் வீண்பேச்சு” என்று அவள் நொடித்தாள்.

தந்தை போருக்குச் சென்ற பின்னர் யானைக்கொட்டில் ஒழிந்தது. ஒருமுறை அவள் யானைக்கொட்டிலை நோக்கச் சென்று அங்கிருந்த வெறுமையைக் கண்டு அஞ்சி ஓடிவந்தாள். இரு நாட்களில் அன்னை பண்டசாலைப் பணிக்கு அரசியின் ஆணைப்படி அனுப்பப்பட்டாள். அஸ்தினபுரியிலிருந்து இறுதிப் படைப்பிரிவும் கிளம்பிச் சென்றதும் நகரத்தின் காவல் முழுமையாகவே முதிய படைவீரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அவர்களை அரசி பானுமதியின் ஆணைகள் வழிநடத்தின. கோட்டைக்காவலுக்கும் அங்காடிக்காவலுக்கும் முதியவர்கள் நிறுத்தப்பட்டனர். தளர்ந்த உடல்களுடன் சுருங்கிக்கூர்ந்த விழிகளுடன் ஆடும் குரல்களில் ஆணைகளை இட்டபடி அவர்கள் காவல் காத்தனர். தங்கள் முதுமையை அவர்கள் அறிந்திருந்தமையால் தங்களையே அஞ்சினர். ஆகவே மேலும் கடுமையாக இருந்தனர். ஒவ்வொன்றையும் மும்முறை நோக்கி உறுதி செய்தனர். நகரமே விசையழிந்து மெல்ல செல்லத் தொடங்கியது.

முதிய ஆலமரத்தின் வேர் என அஸ்தினபுரியை பானுமதியின் ஆணைகள் சென்று கவ்வி இறுக்குகின்றன என்று சூதர்கள் கூறினர். நாடெங்கும் அரசியின் ஆணைகள் செல்லச் செல்ல மேலும் படைவீரர்கள் தேவைப்பட்டனர். தொலைவிலுள்ள ஊர்களிலும் அங்காடிகளிலும் அங்குள்ள முதியோர் காவல்பணி இயற்றினர். ஆனால் வணிகப்பாதைகளில் கள்வர்களின் தாக்குதல்கள் தொடங்கியபோது முதிய படைவீரர்கள் சிறிய அணிகளாக சாலைக்காவலுக்கும் கானெல்லைக் காவலுக்கும் செல்ல ஆணையிடப்பட்டனர். ஊர்க்காவல்பணி பெண்டிரிடம் அளிக்கப்பட்டது. காவல்மாடங்களில் முறைவைத்து அவர்கள் அமர்ந்தனர். அவர்களுக்கான நெறிகளும் தொடர்புமுறைகளும் வகுக்கப்பட்டன. எரிந்தழிந்த காட்டின் அடியிலிருந்து விதை முளைத்து புதிய காடு எழுவதுபோல மற்றொரு அஸ்தினபுரி உருவாகி வந்தது.

அஸ்தினபுரியின் நகர்க்காவலுக்கென பெண்களால் ஆன பதினெட்டு காவல்படைகள் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே சற்றேனும் படைக்கலப்பயிற்சி பெற்ற பெண்கள் நான்காகப் பகுக்கப்பட்டு மூன்று பங்கினர் முதலில் காவலுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு பங்கினர் படைக்கலப்பயிற்சி பெறாதவர்களை பயிற்றுவிக்க நிறுத்தப்பட்டார்கள். பதினைந்து அகவை முடிந்த மங்கையர் அனைவரும் படைப்பயிற்சிக்கு வந்தேயாகவேண்டும் என அரசாணை எழுந்தது. சம்வகை ஒவ்வொருநாளும் அரண்மனையை ஒட்டிய பெருமுற்றத்திற்குச் சென்று அங்கே படைப்பயிற்சி பெற்றாள். சீர்நடையிட்டுச் செல்லவும், படையாணைகளை அறிந்து பணியவும், அடிப்படைக் குழூக்குறிகளை உணரவும் அவளுக்கு கற்பிக்கப்பட்டது. முதலில் மறவரும் இடையரும் உழவரும் குடிகளாகப் பிரிந்து நின்றே படைபயின்றனர். புரவியில் அவர்களைப் பார்வையிட வந்த அரசி பானுமதி அனைத்துப் பெண்களையும் ஒன்றாக்கவேண்டும் என்றும் அகவை, உடலளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை பிரித்துப் பயிற்சியளிக்கவேண்டும் என்றும் ஆணையிட்டாள்.

சம்வகை ஷத்ரியகுலத்து முதுமகளாகிய பிரத்யையின் குழுவில் சேர்ந்தாள். அங்கே வாளேந்தவும் ஈட்டி எறியவும் வில்லேந்தவும் கற்பித்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே எவருக்கு எந்தப் படைக்கலம் இயல்வது என்று கண்டடைந்தனர். சம்வகைக்கு உகந்தது வில்லே என படைபயிற்றுவித்த பிரத்யை சொன்னாள். வில்லை முன்னரே அறிந்திருப்பதுபோல சம்வகை எண்ணினாள். அதை கையிலெடுக்கையிலேயே நிமிர்வு ஒன்று வந்தது. பெண்ணுடலில் இருந்து வெளியேறி பிறிதொரு உருவாக ஆகிவிட்டது போலிருந்தது. வில்லேந்தும்போது அவள் தோள்களும் இடையும் நிலைமாறின. வில்லை தோளிலிட்டு நடக்கையில் கால்கள் இழுத்துக்கட்டப்பட்ட வில் என மண்ணில் ஊன்றின. நோக்கு கூர்கொண்டது. சேய்மைகள் தொலைவிழந்து அண்மைகளாயின. “என் கைகள் பலமடங்கு நீண்டுவிட்டதுபோல் உணர்கிறேன். அதோ அந்த மரத்திலிருக்கும் காய் எனக்கு இப்போது கையெட்டும் தொலைவிலுள்ளது” என்று சம்வகை சொன்னாள்.

“படைக்கலம் பயில்பவர்கள் முதலில் அடைவது மிகையான ஊக்கத்தை. அதை கடந்துசெல்க! படைக்கலம் நம் கை என ஆகவேண்டும். கையை என நாம் அதையும் மறந்துவிட்டிருக்க வேண்டும். தேவையானபோது அதுவே எழுந்துவந்து போரிடவேண்டும்” என்று பிரத்யை சொன்னாள். ஆனால் அவள் எந்நேரமும் வில்லுடன் இருந்தாள். வில்லை தன் உடலில் உணர்ந்துகொண்டே இருந்தாள். “வில் இல்லாதபோது குறையை உணர்கிறேன். வில்லால் நிரப்பப்படும் ஓர் இடம் என்னுள் இருந்திருக்கிறது” என்று அவள் சொன்னாள். “அம்புடன் நானும் பறக்கிறேன். இலக்கடைந்து துள்ளுகிறேன்… இனி என்னால் வில் இன்றி வாழ முடியாதென்று எண்ணுகிறேன்” என்று அவள் சொன்னபோது அவள் தோழி பிரபை “வில்லேந்தும் ஆண்கள் சற்றே பெண்மை கொள்வதுண்டு என்று சொல்வார்கள். நீ ஆண்மையை சென்றடைகிறாய்” என்றாள். “வில்லுக்கு ஆணென்ன பெண்ணென்ன? அது ஒரு தெய்வம். அதற்கு வழிபடுபவர்களே தேவை” என்றாள் சம்வகை.

“வில் பெண்ணுக்குரியதல்ல. முலை பெண்ணை வில்லேந்த முடியாமலாக்குகிறது என்பார்கள். வில்லேந்தும் வேட்டுவப் பெண்டிர் சிலர் முலைகளை அறுத்தெறிவதுண்டு” என்று பிரபை சொன்னாள். அவளும் அதை உணர்ந்திருந்தாள். அவளுடைய முலைகள் சிறியவை. ஆயினும் ஒவ்வொரு அம்புக்கும் அவையும் சேர்ந்து உலைவது நிலையழிவை உருவாக்கியது. “உடல் துறக்காமல் பெண் செலுத்தும் வில்வகை ஒன்று எங்கேனும் இருக்கக்கூடும்” என்று அவள் சொன்னாள். “அந்த வில் பெண்ணுடலின் வளைவுகளை அறிந்ததாக இருக்கும். தோள்வல்லமையால் அன்றி இடைவல்லமையால் விசைபெற்றுக்கொள்வதாக இருக்கும்.” இன்னொரு பெண் “அந்த அம்புகள் மென்மையாக முத்தமிடுபவையாக இருக்குமா?” என்றாள். சம்வகை சீற்றத்துடன் திரும்பி நோக்க அவள் சிரித்தபடி அகன்றாள். “அத்தகைய வில்லை நான் ஒருநாள் ஏந்துவேன். நோக்குக!” என்றாள் சம்வகை.

பிரபை சிரித்து “இந்தப் போர் முடிந்ததுமே பெண்கள் படைமுகப்பிலிருந்து அகற்றப்படுவர். அவர்களுக்கு படைக்கலப் பயிற்சியும் அளிக்கப்படாது. சூத்திரர்கள் அனைவரும் படைக்கலம் பறிக்கப்படுவர். இது இடர்க்காலம் அளிக்கும் விடுதலையே. இவ்விடுதலை ஒரு மாயை” என்றாள். அவளும் அதை அறிந்திருந்தாள். ஆகவே சொல்லடங்கி கற்பனையில் சிறு பொழுது அமர்ந்திருந்துவிட்டு “ஒருவேளை இப்போரில் ஆண்கள் அனைவருமே இறந்துவிட்டிருந்தால் பெண்களே ஆளும் அஸ்தினபுரி அமையக்கூடும் அல்லவா? அரசி பானுமதியோ பேரரசி திரௌபதியோ இதை ஆள்வார்கள். பெண்களாலான படைகள், பெண்கள் அமர்ந்திருக்கும் அரசவை…” என்றாள். “நாம் மைந்தரைப் பெறுவோம். அவர்கள் வளர்ந்து நம்மிடமிருந்து நகரை பெற்றுக்கொள்வார்கள்” என்று பிரபை சொன்னாள். “நாம் மைந்தரையே பெறாவிட்டால்?” என்றாள் சம்வகை. “ஒரு தலைமுறையுடன் அஸ்தினபுரி முடிந்துவிடவேண்டுமா என்ன?” சம்வகை எரிச்சலுடன் “ஆண்குழந்தைகளை ஈன்றதுமே கொல்வோம். இங்கே பெண்கள் மட்டும் போதும்” என்றாள். பிரபை சிரித்துக்கொண்டு அவளைத் தழுவி “அதன்பின் காதலுக்கும் காமத்திற்கும் என்ன செய்வோம்?” என்றாள். “போடி” என அவளை உதறிவிட்டு சம்வகை நடந்து அகன்றாள்.

அஸ்தினபுரி எங்கும் அரசாணை இல்லாமலேயே தற்கட்டுப்பாடு உருவாகி வந்தது. அவளுடைய அன்னை ஒவ்வொரு நாளும் காலையில் கிளம்பிச்சென்று காவல்பணி முடிந்து அந்தியில் மீண்டு வந்தாள். அரண்மனையிலிருந்து ஊதியமென எதுவும் அளிக்கப்படவில்லை. கையிருப்பில் எஞ்சிய பொருளைக்கொண்டு உண்ணும்படி அரசியின் ஆணை கூறியது. முற்றிலும் உணவற்றோர் அரண்மனையின் ஊட்டுபுரைகளிலிருந்து ஒருவேளை உணவுபெற்று உண்ணலாம். ஆனால் ஊட்டுபுரைக்கு இரவலரும் நாடோடிகளும் சூதர்களும் மட்டுமே சென்றனர். குலத்தார் அங்கே செல்வது இழிவெனக் கருதப்பட்டது. “ஆனால் எவரும் உணவொழியவும் கூடாது. உடல்நலத்துடன் இருப்பது அரசருக்குச் செய்யும் கடன் என உணர்க!” என்று முரசறைவோன் அறிவுறுத்தினான். “உங்களுக்கு அளித்த அனைத்தையும் அரசு திரும்பக் கோருகிறது. அது கப்பம் அல்ல, விதைப்பு. அரசு என்பது கருவூலம் அல்ல உழுதிட்ட வயல். நூறுமேனி பொலிந்து உங்கள் கொடிவழியினருக்கு அது மீண்டுவருமென்று துணிக!”

அன்னை சம்வகையிடம் பகலில் தெற்குக் காட்டுக்குச் சென்று உண்ணுதற்கு ஏற்ற கிழங்குகளையும் காய்களையும் சிறிய ஊன்விலங்குகளையும் பறவைகளையும் சேர்த்துவரும்படி சொன்னாள். “இப்போர் இரண்டு நாட்களில் முடிவடையும் என்று சொன்னார்களே?” என்று அவள் அன்னையிடம் சொன்னாள். “எந்தப் போரும் எளிதில் முடியாது. போர் செருகளத்தில் முடிந்த பின்னரும் தெருக்களிலும் அங்காடிகளிலும் நீடிக்கும். அரண்மனைகளில் மேலும் விசைகொள்ளும். போரிலிருந்து விடுபட்டு விளைநிலங்கள் மீண்டும் உயிர்கொள்ள ஓராண்டாவது ஆகும். இந்தப் போர் நம் கணக்கில் முடிய இன்னும் பல ஆண்டுகளேனும் ஆகும். போர் அறிவிக்கப்பட்டதுமே களஞ்சியங்களை பூட்டிவிடவேண்டும் என்பதே நம் முன்னோர் கூற்று. ஒரு நாழி கூலத்தை அதிலிருந்து வெளியே எடுக்க முடியுமென்றால் ஒரு கைப்பிடி அளவே எடுக்கவேண்டும். ஒவ்வொன்றையும் சேர்த்துவைக்கவேண்டும். எதுவும் பெருகலாகாது, எதுவும் முற்றழியலும் ஆகாது. ஒரு குருவியோ சிறுபூச்சியோ கூட உணவின்றி அழியக்கூடாது” என்றாள் அன்னை.

படைப்பயிற்சிக்குப் பின் அந்தியில் ஒவ்வொருநாளும் அஸ்தினபுரியிலிருந்து அவளைப் போன்ற இளமகளிர் கூட்டமாக காடுகளுக்குள் சென்றனர். கிழங்குகளை கெல்லி எடுத்தனர். மரங்களில் ஏறி காய்களையும் கனிகளையும் கொய்தனர். தூண்டில் கொழுவில் சிறுபூச்சிகளை இரையெனப் பொருத்தி காட்டில் வீசி அவற்றைக் கவ்வி தொண்டைசிக்கும் பறவைகளை பிடித்து வந்தனர். இறுக்கிக் கட்டிய கிட்டிகளைக் கொண்டு முயல்களையும் சிற்றுயிர்களையும் பிடித்தனர். கவிழும் பானைகளைக் கொண்டு எலிகளை சிறைப்பற்றினர். மூங்கில்களை வளைத்து சுருக்குகள் அமைத்து மான்களை குடுக்கினர். “இன்று உணவு மிகுந்து கிடைக்கிறது. ஆயினும் நாம் அரையுணவையே உண்ணவேண்டும். பொறியிட்டு அல்லாமல் அம்பெய்து முயல்களையும் மான்களையும் பிடிக்கலாகாது. பிடிபட்டது பெண்விலங்கு என்றால் அதை விடுதலை செய்துவிடவேண்டும். கிழங்குகளில் ஐந்தில் ஒரு பங்கை அங்கேயே நட்டுவிட்டு வரவேண்டும். விதைகளில் ஏழிலொரு பங்கு காட்டில் விதைக்கப்படவேண்டும். நம் களஞ்சியம் அல்ல காடு. தெய்வங்கள் பயிரிடும் வயல் அது என்று உணர்க!” என்று அன்னை சொன்னாள். ஆனால் எலிகள் அளவிறந்து இருந்தன. அவற்றை உண்பதில் தடையில்லை என்று தோன்றியது. “அவ்வண்ணமல்ல, எலிகளை உண்பவை பல இருக்கலாம். எலிகள் மறைந்தால் அவையும் மறையலாம். அனைத்தும் அளவோடு என்பதே போர்நிலையின் நெறி” என்று அன்னை கூறினாள்.

போர் இரண்டாம் நாள் ஆனபோது முதிய படைவீரர்கள் அனைவரும் குருக்ஷேத்ரத்திற்குச் செல்லவேண்டும் என ஆணை எழுந்தது. அவர்கள் அங்கே காடுகாவலுக்கும் எல்லைமாடக் காவலுக்கும் தேவைப்பட்டார்கள். அவர்கள் சென்ற இடங்களில் சாலைக்காவலுக்கு முதிய பெண்டிர் சென்றனர். ஆகவே கோட்டைக்காவலுக்கும் அங்காடிக்காவலுக்கும் இளமகளிர் செல்லவேண்டியிருந்தது. சம்வகை முதலில் அரசமாளிகைக் காவலுக்குத்தான் அனுப்பப்பட்டாள். இல்லத்தில் அவள் மட்டுமே எஞ்சினாள். காவல் பணி முடிந்ததும் கானேகி உணவுசேர்த்துக் கொண்டுவரவேண்டும். அதன்பின் இரவில் அவள் வில்பயின்றாள். ஒருநாள் அரசி பானுமதி கொற்றவைப் பூசனைக்குச் சென்றபோது அவளும் உடன்சென்றாள். அரசி ஆலயம்தொழுது நின்றபோது அவள் தலைக்குமேல் ஆந்தை ஒன்று பறக்க ஒரே அம்பில் அவள் அதை வீழ்த்தினாள். அரசி என்ன நிகழ்ந்தது என உணரவில்லை என்று தோன்றியது. காவல்தலைவி “என்ன செய்தாய்?” என்றாள். “ஆந்தை மங்கலமில்லாப் பறவை… அது அரசிக்கு மேல் பறக்கலாகாது” என்று அவள் சொன்னாள்.

மறுநாள் அவளை கோட்டைக்காவல் பணிக்கு மாற்றும்படி அரசி ஆணையிட்டாள். அது பாராட்டா தண்டனையா என அவளுக்குப் புரியவில்லை. அதை பிரபை ஒரு தண்டனையாகவே எடுத்துக்கொண்டாள். “கோட்டைக்காவலில் இரவுபகல் என்பதில்லை. அங்கே சில பொழுதுகளில் இரண்டு நாட்கள்கூட பணியாற்ற வேண்டியிருக்கும்” என்றாள். அவள் அங்கே சென்றபோது விடுதலையையே உணர்ந்தாள். முதல்முறையாக கோட்டையை அணுகியபோது மெய்ப்புகொண்டாள். அதை அவள் பலமுறை பார்த்திருந்தாலும் அதன்மேல் ஏறியதில்லை. அது மாபெரும் யானைநிரைபோல கிடந்தது. யானைவிலாவின் சங்கிலி போன்று சிறிய படிப்புடைப்புகள் சரிந்து மேலேறிச் சென்றன. படிகளினூடாக அவள் மேலேறிச் சென்று அங்கே இருந்த காவலர்தலைவியிடம் தன் அரசாணையை காட்டியபோது அவள் “நீ வில்லவளா?” என்றாள். “ஆம்” என்று அவள் மறுமொழி சொன்னாள். “நமக்கு வில்லவரே தேவை… முதுமகள்களால் துயிலாமல் காக்கமுடியவில்லை. விழிக்கூரும் இல்லை” என்றாள்.

அவள் கோட்டைக்குமேல் வில்லுடன் சென்று நின்றாள். முதல்முறையாக கோட்டைக்கு அப்பால் விரிந்துகிடந்த மாமுற்றத்தையும் குறுங்காட்டையும் பார்த்தாள். அவள் உள்ளம் நெகிழ்ந்து உடல் பரபரத்தது. விழிவிலக்காமல் நோக்கியபடி பகல் முழுக்க சூழ்ந்துபறந்த காற்றில் அமர்ந்திருந்தாள். பறவையென எழுந்து காட்டுக்குமேல் சுழன்றாள். நகரை விழிகளால் அணைத்தாள். அத்தகைய விடுதலையை அதற்கு முன் அவள் அறிந்திருக்கவேயில்லை. வீடுகள் அத்தனை சிறிதாக ஆகிவிடுமென அவள் எண்ணியிருக்கவில்லை. சிறுசிறு பெட்டிகள்போல அவை தெரிந்தன. சிதல்புற்றுகள். அவற்றுக்குள் ஈரமும் இருளும் நிறைந்த அறைகள். அவற்றில் வாழ்ந்தனர் மகளிர். மீண்டும் அவற்றுக்குள் நுழைய முடியாது. என் உடல் பெருகிவிட்டிருக்கிறது. நான் என்னை மீண்டும் ஒடுக்கிச் சிறிதாக்கிக் கொள்ள இயலாது.

அவள் அன்னை காவல்பணியில் இருந்தபோது கிராதனொருவன் காட்டிலிருந்து தொடுத்த அம்புபட்டு உயிர்துறந்த செய்தி வந்தது. அவளுக்கு அச்செய்தி ஒரு சிறு உள்நடுக்காக மட்டுமே இருந்தது. கையிலிருந்த வில்லுடன் தரைநோக்கி அசைவில்லாது அமர்ந்திருந்தாள். பின்னர் நீள்மூச்சுடன் விடுபட்டு அனைத்து நினைவுகளையும் அப்படியே அள்ளி ஒதுக்கி உள்ளத்திலிருந்து நீக்கினாள். அன்றைய பணிகளை எண்ணிக்கொண்டாள். எழுந்து சென்று அவற்றை ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கினாள். விரைவிலேயே அதில் முற்றாக மூழ்கினாள். ஒவ்வொன்றையும் செய்ய அவள் தனக்குரிய வழி ஒன்றை கண்டடைந்திருந்தாள். அதை ஆண்கள் அவ்வகையில் செய்ய முடியாது என எண்ணிக்கொண்டாள். செயல் அவளை அகம் நிறையச் செய்தது. அவள் அன்றிரவு மீண்டும் இருளின் தனிமையில் தன் அன்னையை எண்ணிக்கொண்டபோது நெஞ்சு விம்மி விசும்பல் என தொண்டையில் எழுந்தது. விழிகள் நிறைந்தன. உடனே வில்லை எடுத்துக்கொண்டு கோட்டையினூடாக காவல்நடை செல்லத் தொடங்கினாள். சூழ்ந்திருந்த இருண்ட காட்டையும் அதன்மேல் பரவியிருந்த ஓரிரு விண்மீன்களையும் நோக்கிக்கொண்டே நடந்தாள்.

அதன்பின் அவள் அரிதாகவே வீட்டுக்குச் சென்றாள். கோட்டையிலும் அதன் அடியிலிருந்த சிற்றறைகளிலுமாக வாழ்ந்தாள். அம்பெய்து அவள் பறவைகளை வீழ்த்தினாள். அவற்றையே அனல்காட்டி அங்கே அமர்ந்து தோழியருடன் உண்டாள். கோட்டைமுகப்பின் கைவிடப்பட்ட சிறுகட்டடங்களை, அம்பேந்தி நின்றிருந்த கைவிடுபடைகளை, யானைகள் இழுக்கும் சகடங்களால் மூடப்படும் பெருங்கதவங்களை நோக்கி நோக்கி அறிந்தாள். ஒவ்வொருநாளும் அவள் அறிந்துகொள்ள ஏதேனும் இருந்தது. அவற்றை தோழியருடன் பகிர்ந்துகொள்ளத் துடித்தாள். ஆனால் அவர்கள் எதையும் கேட்கும் விழைவுகொண்டிருக்கவில்லை. அனைத்துப் பெண்டிரும் போருக்குச் சென்ற மைந்தரையும் கொழுநரையும் தந்தையரையும் மட்டும்தான் எண்ணிக்கொண்டிருந்தார்கள். போருக்கு அவர்கள் கிளம்பும்போது அவர்கள் பெறப்போகும் வெற்றியையும் புகழையும் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே ஓங்கி ஒலித்தன. அப்போர் ஓரிரு நாட்களில் முடியும் என்று அனைவரும் நம்பினர். ஆகவே சாவுகுறித்த பேச்சே எழவில்லை. ஆனால் அனைவர் உள்ளத்திலும் சாவு பற்றிய எண்ணம் உறைந்திருந்தது. அவர்கள் கிளம்பிச்சென்று கண்மறைந்தபோது அதுவே முதலில் எழுந்துவந்தது.

முதல்நாள் போரே அவர்களின் உள்ளங்களை திகைக்கச் செய்தது. அதன் சாவு எண்ணிக்கை அங்கே வந்துசேர்ந்தபோது அது மிகையென்றே அவர்கள் எண்ணினார்கள். மீளமீளக் கேட்டு அதை உறுதிசெய்துகொள்ள முயன்றனர். கேட்கும்தோறும் எண்ணிக்கை கூடியது. அவர்கள் அதை ஐயம்கொண்டு பேசிப்பேசி பலமடங்காக குறைத்தனர். ஐயம் விலகியதும் அது பொங்கி பலமடங்காகியது. மீண்டும் ஐயம்கொண்டனர். அந்த அலைக்கழிவே அவர்களை சோர்வுறச் செய்தது. அவர்களுக்கு அணுக்கமானவர்கள் களம்பட்டிருக்கமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டார்கள். அதற்கு தங்கள் குடிமூத்தார் அருளும் தெய்வங்களின் துணையும் தங்கள் நற்செயல்களும் உதவும் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இருளில் தனிமையில் அவர்கள் சாவை அருகிலெனக் கண்டனர். அலைக்கழிதலே இழத்தலைவிட அழிதலைவிட பெரிய துயரம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆனால் துளி நம்பிக்கையேனும் இல்லாமல் அவர்களால் வாழமுடியாதென்பதனால் அதை உருவாக்கிக்கொள்ளும்பொருட்டு போராடினர். அதன் அலைகளில் தத்தளித்தனர்.

போரின் தொடக்க நாட்களில் பெண்கள் கூடியமர்ந்து போரைப்பற்றியே பேசிக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் போரைப்பற்றி ஏற்கெனவே தங்களுக்கு நிறையவே தெரியும் என்று காட்டிக்கொண்டார்கள். போரின் நுட்பங்கள், நிகழவிருக்கும் போர்ச்செயல்கள் என கற்பனையில் பெருக்கிக்கொண்டே சென்றனர். ஒவ்வொருவருக்கும் போர்க்களத்திலிருந்து நம்பக்கூடிய செய்திகளைக் கொண்டுவரும் சிலர் இருந்தனர். அவர்களினூடாக தங்கள் அன்புக்குரியவர்கள் களத்தில் ஆற்றிய வீரச்செயல்களை அவர்கள் அறிந்தனர். அவர்கள் அடைந்த வெற்றிகளையும் பாராட்டுக்களையும் கூறிக்கொண்டார்கள். மெய்யான செய்திகள் எப்போதேனும்தான் வந்தன. பெரும்பாலும் அங்கிருந்து அஸ்தினபுரிக்குள் நுழைந்த ஒற்றர்களிடமிருந்து. ஒற்றன் ஒருவன் உள்ளே நுழைந்ததும் அவர்கள் அவனை சூழ்ந்துகொண்டார்கள். அவன் ஓரிரு சொற்களில் மறுமொழி உரைத்து அவர்களைத் தவிர்த்து அரண்மனைக்கோ பண்டகசாலைக்கோ சென்று மீண்டபோது அவனைத் தொடர்ந்துசென்று அழைத்துவந்தனர். அவனை பேசவைப்பதற்காக தங்கள் பெண்மையின் தளுக்குகளைக்கூட பயன்படுத்தினர். அவனிடம் கொஞ்சினர். உரிமையுடன் அவனை தங்களை நோக்கி இழுத்தனர்.

ஆனால் பெரும்பாலான ஒற்றர்கள் போரைப்பற்றிப் பேசவே விழையவில்லை. பேசியபோது அவர்கள் பெருங்கசப்புடன் மட்டுமே சொன்னார்கள். “அங்கே நிகழ்வது போர் என எவர் சொன்னது? வெறும் கொலை. மானுடர் மானுடரை வெட்டிக் குவிக்கிறார்கள். அம்புகள் இலக்கில்லாமல் பாய்ந்து துளைக்கின்றன. மண் குருதியால் நனைந்துகொண்டே இருக்கிறது” என்றான் ஒற்றன். “ஆனால் வீரர்களை எளிதில் கொல்ல இயலாதல்லவா? மாவீரர்களை படைக்கலங்களும் அஞ்சும் என்கிறார்களே?” என்று ஓர் இளம்பெண் கேட்க ஒற்றன் திகைப்புடன் பேச்சை நிறுத்தி அவளை நிமிர்ந்து நோக்கினான். பின்னர் அவன் உரக்க நகைத்து “ஆம், படைக்கலங்களுக்கு எல்லாமே தெரியும். அவை விழிகளும் செவிகளும் கொண்டவை. நினைவும் திட்டமும்கூட அவற்றுக்கு உண்டு” என்றான். அந்தப் பெண் அவன் சொன்னதை நேர்ப்பொருளில் கொண்டு “போரில் இறப்பவர்கள் அஞ்சுபவர்கள், ஓட எண்ணுபவர்கள். ஊழை நெஞ்சுநிலைகொண்டு எதிர்ப்பவர்களிடம் அவை முனைமழுங்கும். அவர்கள் விழுப்புண்களுடன் வீடு திரும்புவார்கள்” என்றாள். “ஆம், அது மெய்” என்று தலைகுனிந்து ஒற்றன் சொன்னான். “அவ்வாறே ஆகுக…” என்றபின் எழுந்து சென்றான்.

ஆனால் அனைவருமே அறிந்திருந்தனர் அங்கே நிகழ்வதென்ன என்று. தனியாக அமர்ந்து பேசும்போது அவர்கள் உளமுடைந்து விழிநீர் சிந்தினர். சிதைந்த குரலில் புலம்பினர். “இனி அவர் முகத்தை காண்பேனா என்றே தெரியவில்லை… இந்த மைந்தனுக்கு அவன் தந்தையை எப்படி காட்டுவேன்!” என்று சொல்லி இளம்குழவியை நெஞ்சோடணைத்தபடி அவள் உடன் நிற்கும் காவல்தோழி கண்ணீர்விட்டாள். நாட்கள் செல்லச்செல்ல பேச்சு அழிந்தது. அனைவரும் முற்றிலும் தனித்தவர்களானார்கள். தேவைக்கேற்ப ஓரிரு சொற்களே பேசப்பட்டன. சம்வகை அந்தச் சொல்லடங்கலை உணர்ந்த பின்னர்தான் தொடக்க நாட்களில் அங்கே மிகையொலியே நிறைந்திருந்தது என்பதை உணர்ந்தாள். மகிழ்ச்சியாக பேசிக்கொண்டால் உளச்சோர்வு நீங்குமென எண்ணியவர்கள்போல பெண்டிர் உரக்க நகைத்து பேசிக் களியாடினர். கேலி செய்துகொண்டனர். வேறெங்கிருந்தோ அது உவகையை கொண்டுவரவும் செய்தது. அவர்களின் வழக்கமான இல்லக் கடமைகளிலிருந்து அவர்களை அது வெளியே கொண்டுவந்தது. தங்கள் தனித்திறனால் அவர்கள் ஆற்றுவதற்கென்று சில அப்போது உருவாகி வந்திருந்தன. செய்துமுடித்தமையின் பெருமையும் பாராட்டு பெற்றதன் உவகையும் அவர்களுக்கும் அமைந்தது.

ஒவ்வொருவருக்கும் வெளியுலகு ஒன்றும் உருவாகி வந்தது. அதில் அவர்கள் சில நாட்கள் திளைத்தனர். சீரடி வைக்கக் கற்றுத்தந்த பின் முதிய காவல்பெண்டு அகன்றுசெல்ல மிகுந்த ஆர்வத்துடன் உளக்குவிப்பால் கூர்கொண்ட முகத்துடன் கால்பழகும் பெண்டிரை அவளே விந்தையாக நோக்கியதுண்டு. உணவு தேடி குறுங்காட்டுக்குள் செல்லும்போதுகூட போர்ச்சுவடுகளின் வாய்த்தாரிகளை சொல்லிக்கொண்டிருந்த பெண்கள் இருந்தனர். தனிமையில் அலையென வந்து தாக்கிய சோர்வை வெல்ல உடனே எழுந்து வில்லையோ வாளையோ எடுத்துக்கொண்டனர். தொடக்க நாட்களில் தங்கள் கொழுநரும் காதலரும் மைந்தரும் திரும்பும்போது அவர்களிடம் அந்நாட்களில் தாங்கள் இயற்றியவற்றைப்பற்றி சொல்லவேண்டுமென எண்ணிக்கொண்டு அந்நினைவுகளை அடையாளப்படுத்திச் சேர்த்தனர். சொல்வதாகவே பகற்கனவுகண்டு அதில் ஆழ்ந்து முகம் மலர்ந்திருந்தனர்.

மெல்லமெல்ல நகரம் ஓசையடங்கியது. ஒருநாள் கோட்டை மேலிருந்து நோக்கியபோதுதான் அந்த அமைதியைக் கண்டு சம்வகை திகைத்தாள். நகரெங்கும் மானுட அசைவிருந்தது. ஆனால் பொருட்களின் ஓசையன்றி மானுடக் குரலே எழவில்லை. மேலிருந்து நோக்கும்போது அது அஞ்சி நடுங்கி அமர்ந்திருக்கும் முயல்போல் தெரிந்தது. அவள் சூழ்ந்திருந்த காடுகளை நோக்கிக்கொண்டிருந்தாள். அதற்குள் பல்லாயிரம் வேட்டைவிழிகள் அந்நகரை வெறித்துக்கொண்டிருப்பதுபோல தோன்றியது. எக்கணமும் கொலைக்கூச்சலுடன் அக்காடு பெருகி நகர்மேல் பொழிந்து மூடிவிடும். அதன் கோட்டைகளை சரிக்கும், அதன் மாளிகைகளை நொறுக்கும். கொடிய பசுமை எழுந்து அதன்மேல் பரவும். மண்ணோடு அழுத்தி உள்ளே கொண்டுசெல்லும். மண்ணுக்கு அடியிலிருப்பது இருட்டு. செறிந்த பருவடிவ இருட்டு. அதில் அஸ்தினபுரியும் மூழ்கி மறையும். அங்கே சென்றவை மீண்டதில்லை. அந்த ஆழத்தில் பல்லாயிரம் அஸ்தினபுரிகள் பதிந்து கிடக்கின்றன. ஒரு சொல்லாகக்கூட நினைக்கப்பெறாமல். ஒரு கனவில்கூட தோன்றாமல்.

நோயுற்ற குழந்தையை அருகே போட்டு விழித்து அமர்ந்திருக்கும் நலிந்த தனித்த அன்னைபோல் அவள் தன்னை உணர்ந்தாள். அது துயிலில் மெல்ல முனகியதுபோல தோன்ற விதிர்த்து கைநீட்டி அதைத் தொட்டு ஆறுதல்படுத்தினாள். மெல்ல தட்டி மீண்டும் துயிலச்செய்தாள். “அன்னை இருக்கிறேன்… அன்னை அருகிலேயே இருக்கிறேன்” என்று அதனிடம் சொல்லிக்கொண்டாள்.

முந்தைய கட்டுரைமுகில்செய்தி
அடுத்த கட்டுரைநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்