முதலை மோடி
மோடி,முதலை -கடிதம்
மோடி, முதலை,முதலீடு
அன்புள்ள ஜெ,
ஏற்கனவே திட்டமிட்ட பயணங்களினால் சிறுகதை அரங்கிற்கு வர இயலவில்லை. ஆனால் எங்கு சென்றாலும் வெண்முரசுதான் கூடவேதான இருக்கு என்ற எண்ணம் அடிமனதில் இருந்து வந்தது. யுத்தம் முடிய முடிய ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது. முப்பந்தைந்து வயதிற்குமேல் வாடா போடா என்று அழைக்கும் நண்பர்களை பெற்றுத்தந்த ஒரு நிகழ்காவியம் முடியப்போகிறதோ என்ற பதட்டம் அது. ஆனால் உபபண்டவர்கள் மறைந்த அன்று ஏனோ ஒரு நிம்மதி தோன்றியது. அன்றைய மோடி முதலை கட்டுரையை படித்ததும் பெரும் நகைப்பும் தோன்றியது.
மலபார் போலீஸ் என்ற படத்தில் சின்னச்சாமியாக வரும் சத்யராஜை அழைக்க ரயில் நிலையத்தில் அவரை அதற்குமுன் கண்டிராத கவுண்டர் வந்து காத்திருப்பார். சின்னச்சாமின்னா என்னா? சின்னதா ஒருத்தன் வருவான்..கண்டுபிடிக்க மாட்டேனா என்று சத்யராஜிடமே சொல்லிக்கொண்டிருப்பார். எனக்கு அந்த காட்சி ஞாபகம் வந்த்து. முதலைக்குட்டி என்தும் அனைவரின் மனதிலும் குறைந்தது மூன்று அடி நீள குட்டி முதலையே காட்சியாக தோன்றியது என்பதே அந்தக் கட்டுரையின் துவக்கப்புள்ளியாக எனக்குத் தோன்றியது. முதலை எட்டடிக்கு நீளமா இருந்து மாட்டையே முழிங்கினா குட்டி கன்றை முழுசா முழுங்குமளவு இருக்காதா என்ன? மேலும் மோடி அடிவருடி அரசில் மிருக காட்சி சாலையிலும் ஓணான் சைஸ் இருக்கும் முதலைக்குஞ்சை காட்டியதும் இல்லை. என்னதான் செய்வது.. நீங்கள் குறிப்பட்ட லேக் ப்ளேஸிட் தரைப்படத்திலும் இறுதியில் முதலைக் குஞ்சுகளுக்கு பாட்டி ஒருத்தி உணவூட்டுவாள். சுவற்றில் காணும் வாழும் பல்லி சைசில் இருக்கும் என்பது நினைவிருக்கிறது..
முதலை பற்றிய கட்டுரை, சமூக வலைதளங்களின் ஒரு வைரலில் விளைந்த அற்றாமையினால் துவங்கினாலும் பயணத்தில் நீங்கள் கண்ட முதலை பற்றிய நகைச்சுவையில் துவங்கி ஏன் எவ்வாறு அவ்வினம் குமரியில் அழிந்தது என்ற இறுதி சித்திரம் வரை தகவல்களை ஒரு கதைபோல அளித்தது.. உண்மையில் இதுபோன்ற சித்திரங்களே தரவுகளைவிட அதிகம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றன என்பது என் எண்ணம். யானை டாக்டர் பெயரைக் குறிப்பிடாமல் பல வடிவங்களில் வேறு வேறு கட்டுரையாக அதில் இருந்த தகவல்கள் பிறகு வெளிவந்தன. ( சோற்றுக்கணக்கு சாயுபு கதை கூட்டத்தில் ஒருவன் பட நாயகனின் மேன்மையை வலியுறுத்தவும், ஒருகாட்சியில் மெர்சல் படத்தின் முன்று நாயகர்களில் ( மூன்றுமே விஜய்தான் ) ஒருவரின் பெருமையை பறைசாற்றவும் கையாளப்பட்டிருந்தது போல )
ஆனால் தளத்தில் அந்த முதலை கட்டுரைக்கான எதிர்வினைகள் சீரியசாக மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததை கண்ட எனக்கு வெமு முடியப்போகும் பதட்டத்தைவிட இந்த பதட்டம் அதிகமாகிவிட்டது. மீண்டும் படித்துப் பார்த்தாலும் அது வைரலான முதலைக்குட்டியின் உருவத்தில் பொதுவாக இருந்த ஒரு மனப்பதிவை பற்றி மட்டும்தான் சொல்கிறதாகத்தான் எனக்குப் பட்டது. என்ன செய்வது..அதற்குள் அடுத்த வைரலும் வந்துவிட்டது. முதலை மூன்றெழுத்து குட்டி மூன்றெழுத்து குஞ்சு மூன்றெழுத்து. வைரல் மூன்றெழுத்து. மூன்றெழுத்து.. மூன்றெழுத்து….
காளிப்பிரசாத்
அன்புள்ள ஜெ
முதலைமோடி கட்டுரை ’மோடி’ என்பதை ஒரு பித்து அல்லது மயக்கம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. அந்தத்தலைப்பும் அதை மோடியைப்பற்றிய விவாதத்துடன் சம்பந்தப்படுத்தியதும் கவன ஈர்ப்புதான். அதன் அடிப்படையான சீண்டல்கள் இரண்டு. ஒன்று இங்கே எழுத்தாளர்களும் முகநூல்போராளிகளும் எந்த அளவுக்கு இயற்கை பற்றிய அறியாமையுடன் இருக்கிறார்கள், அதை எப்படி வெட்கமில்லாமல் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது. இன்னொன்று, மோடி மீதான இவர்களின் விமர்சனம் என்பது வெறும் ஆளுமை மீதான காழ்ப்பு மட்டும்தானே ஒழிய எந்த பிரச்சினையையும் சார்ந்தது அல்ல என்பது. மோடி என்ன செய்தாலும் இவர்கள் எதிர்ப்பார்கள், கேலி செய்வார்கள். மோடியின் செயல்களின் நன்மைதீமைகள் ஒரு பொருட்டே அல்ல.
தனிப்பட்டமுறையில் காழ்ப்பாக இதைக்கொண்டுசெல்பவர்களில் 90 சதவீதம்பேர் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்தான். அதை முற்போக்காளர்கள் வழிமொழிகிறார்கள். ஹிட் கிடைக்குமென எழுத்தாளர்கள் கூடவே செல்கிறார்கள். இந்தக் காழ்ப்பால் என்ன ஆகிறதென்றால் உண்மையிலேயே மோடியை கடுமையாக எதிர்க்கவேண்டிய இடங்களில் எழுகின்ற எதிர்ப்பும்கூட சாமானியர்களால் மோடிக்கு எதிரான காழ்ப்பு என்று புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த ‘கார்ப்பெட் அட்டாக்’ உண்மையில் எதிர்ப்பவர்களின் மனசுக்கு ஒரு ஆறுதல் தருகிறதே ஒழிய பயன் ஏதுமில்லை. மோடி மிக மடத்தனமான விஷயங்களைச் செய்தாலும் இங்கே மக்களிடம் செல்லுபடியாகும் எதிர்ப்பை அளிப்பவர் எவருமில்லை என்ற நிலை வந்திருக்கிறது. இதுதான் அவரை ஜெயிக்கவைக்கிறது.
நடுநிலையாளர்கள், நல்லதுகெட்டது நோக்கிக் சொல்பவர்கள் என்று எவருமே இல்லை என்ற நிலையை முகநூல் உருவாக்கிவிட்டிருக்கிறது. வசை, நையாண்டி செய்யும்போது அதைச் செய்பாவ்ருக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கிறது. அதற்கு இரையாகிறவர் ஒரு சின்ன அனுதாபத்தையே பெறுகிறார். அதிலும் இந்த முதலை மேட்டர் போல ஒன்றுமே தெரியாமல் மீம்ஸ் போட ஆரம்பிப்பதுதான் மோடியை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது. அதைத்தான் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அதைக் கண்டதும் உடனே ஆமாமா என்று சீரியஸாக பதிவுபோட ஆரம்பிப்பவர்கள் இன்னும் கேலிக்குரியவர்கள் ஆகிறார்கள்
அருண் சுவாமிநாதன்