திரௌபதி கதவைத் திறந்து வெளியே வந்தபோது சேடி தலைவணங்கி மேலாடையை நீட்டியபடி “பேரரசி நெடுநேரமாக காத்திருக்கிறார்கள். சற்று பொறுமையிழந்துவிட்டார்கள்” என்றாள். மேலாடையை வாங்கி தன் தோளில் அணிந்து கூந்தலை தன் இடக்கையால் நீவி பின்னால் அமைத்தபடி ஒன்றும் சொல்லாமல் திரௌபதி நடந்தாள். சேடி அவளுக்குப் பின்னால் ஓசையெழாமல் நடந்து வந்தாள். ஆவல்கொள்ளும்போதும் விரைவுச்செய்திகள் சொல்லப்படும்போதும் எவரேனும் காத்திருக்கும்போதும் பிறரால் பார்க்கப்படும்போதும் நடை மாறுபடுவது மானுட இயல்பு. அவ்வியல்பைக் கடந்தவர்களே அரசர்கள் என அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவ்வுணர்வு இருந்தமையால் அத்தகைய தருணங்களில் அவள் மேலும் சீரான நடையை சென்றடைவாள்.
அந்தத் தருணத்தில் அச்சீரான நடையை அவளே உணர்ந்து அத்தருணத்தில் அவ்வாறு தான் நடப்பதை சற்று விந்தையென அறிந்தாள். சென்ற பல நாட்களாகவே அவ்வாறு தன்னைத் தானே விலகி நின்று நோக்கும் பிறிதொருத்தி அவளுக்குள்ளிருந்து எழுந்தாள். உள்ளம் பலவாறாக உடைந்து திசைக்கொன்றாக சிதற ஒன்றுமட்டும் அறியாது எங்கோ எஞ்சி நின்று அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தது. நடக்கத்தொடங்குகையிலேயே அரசியருக்குரிய நடையை அடைந்தவள் அவள் என்று பாஞ்சாலத்தில் கூறினார்கள். அவள் தந்தைக்கு அதைக் குறித்த பெருமிதம் இருந்தது. “கோசலத்திலும் அயோத்தியிலும் அரசருக்கும் அரசியருக்கும் நடைபழகிக் கொடுக்கும் நாடக சூதர் உண்டென்று அறிந்திருக்கிறேன். பண்டு ராகவராமனுக்கும் அவன் தந்தை தசரதனுக்கும் நடை பழகிக்கொடுத்தவர்கள் அவர்கள். இங்கே ஷத்ரியப் பண்பாடு பிறந்த மண் அயோத்தியும் கோசலமும்தான். அப்பயிற்சி அன்றி பிற எதையும் அவர்கள் செய்யலாகாதென்று நெறியுள்ளது. ஏனென்றால் ஒருமுறையேனும் நாடகத்தில் அவர்கள் நடித்தார்கள் என்றால் அந்நடையில் சற்று செயற்கை குடியேறி இளிவரலாகிவிடும்” என்று அவர் சொன்னார்.
“ஒரு துளி உப்பு கலந்தாலும் திரிந்துவிடும் பால் போன்றது அரசநடை. எத்தனை பயிற்றுவித்தாலும் பெரும்பாலானோருக்கு அது அமைவதில்லை. உள்ளத்தில் சற்றே விலக்கமிருந்தாலும் பயின்ற நடையை அவ்விலக்கம் பிறிதொரு திசை நோக்கி இழுக்க இளிவரல் தன்மை கூடிவிடும். பாரதவர்ஷத்தில் மிகச் சிலரே இயல்பென அந்நடை கொண்டவர்கள். அஸ்தினபுரியின் அரசன் அரசன் என்றே பிறந்தவன் என்பார்கள். அரசன் என்று பிறக்காவிடினும் அங்கனுக்கு அந்நடை எவ்வாறு அமைந்ததென்று வியப்பார்கள். மலைக்குடியில் மைந்தன் என்றாலும் மகதன் பேரரசன் என்று ஆனது அவன் விழைவால் என்று விளக்குவார்கள். இவளோ கருவறையிலிருந்தே இதைக் கற்று மீண்டவள் போலிருக்கிறாள். அரசி என அமைந்து அரியணையில் மறைந்து தொடர்ந்து உடல் கொண்டவள் போலும் இவள் என்று அரண்மனைப் புலவர் அவளைப்பற்றி ஒருமுறை கூறியது மெய்யே.” துருபதர் உரக்க நகைத்து “அறிக! அரசன் என்றும் அரசியென்றும் பிறப்பவருண்டு. பிறர் நடிப்பவர்” என்றார்.
அவள் அவை புகும்போது எப்போதும் விழிகள் வியப்பும் பின்னர் பணிவும் கொள்வதை அவள் கண்டாள். எந்த விழிகளையும் அவள் நோக்குவதில்லை. எப்பொருளிலும் நோக்கு நிலைப்பதுமில்லை. அங்கிலாத ஒன்றை நோக்கி அவள் விழி கூர்கொண்டிருக்கும். அப்பாலொன்று அவளை நோக்கிக்கொண்டிருப்பதுபோல் முகம் கனவு நிறைந்திருக்கும். அரசவை பீடத்தில் அமர்கையில் ஒருபோதும் அவள் அதை நோக்குவதில்லை. நடந்து செல்கையில் நிலம் நோக்குவதுமில்லை. நிலம் நோக்குபவளுக்கு அரசநடை அமையாதென்றனர் ஆட்டர். நிலம் ஒருகணத்தில் உளத்தில் பதிந்திருக்கவேண்டும். பின்னர் உள்ளத்தில் அதை ஓவியமென விரித்து அதில் அகம் அமைந்த பிறிதொருவர் நடக்க வேண்டும். அந்நடை இயல்பாக உடலில் அமையவேண்டும். அலையும் விழியும் தன்னுள் ஆழ்ந்த விழியும் தழைந்த விழியும் அரசருக்குரியதல்ல.
திரௌபதி அந்நடையை பழகியதில்லை. ஆகவே நிலத்தை உள்ளத்தால் அளவிட்டபின் நடைநிகழ்த்துவதும் இல்லை. அஸ்தினபுரியின் அவையில் அவள் நுழைந்தபோது திரும்பி நோக்கிய முகங்கள் சொல்லமைந்து விழிவிரிந்து ஓவியப்பரப்பென அமைந்தன. அவள் நடந்து சென்று தன் பீடத்தில் புகைபடிவதுபோல் மெல்ல அமர்ந்து நடனம்போல் கைசுழற்றி மேலாடையை மடியிலிட்டபோது வெடித்தெழுந்ததுபோல் வாழ்த்தொலிகள் பொங்கி குவைமுகடை நிறைத்தன. திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்து “நன்று! நன்று! பண்டு தேவயானி அவை புகுந்தபோது இத்தகைய வாழ்த்தொலிகள் எழுந்திருக்கும்! நன்று!” என்று தலை உருட்டி நகைத்தார். அவையில் எவர் பேசும்போதும் அவர்களை அவள் நோக்குவதில்லை. அவையில் எழும் ஒவ்வொரு சொல்லையும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டுவதுமில்லை. அவள் எடுக்கும் சொற்களில் அவளறியாத ஒன்று அங்கு நிகழவில்லை என்பதும் வெளிப்படும்.
முதல்நாள் அவள் அணி களைந்து கொண்டிருக்கையில் மாயை அவளிடம் “இன்று அவையில் உங்கள் நிமிர்வு கண்டு வணங்காத விழிகள் ஏதுமில்லை, அரசி” என்றாள். “விந்தை என்னவெனில் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் விழிகளிலும் அப்பணிவை கண்டேன்.” அவள் “பிறிதொன்றை நான் எதிர்பார்க்கவில்லை” என்றாள். “ஆம், இப்புவியில் இனியொருவர் பணிவதற்கில்லை என்றே எண்ணுகின்றேன்” என்றாள் மாயை. அச்சொல் அவளை மிதப்பு கொள்ளச் செய்தது. மாயையின் புகழ்ச்சொற்கள்போல் அவளை போதையேற்றுவன வேறில்லை. அவளுடைய விரல்தொடுகைபோல் மெய்ப்புகொள்ளச் செய்வதும் பிறிதில்லை. மாயை அவள் உடைகளைக் களைந்தபடி “இவர்கள் பெண்ணை நேர்விழிகளால் நோக்க அஞ்சுபவர்கள். ஆகவே சிலைகளை செதுக்கி வைப்பவர்கள். கருவறையில் அவற்றை வைத்து பூசெய்கையும் வழிபாடும் இயற்றுபவர்கள். அரசி, இன்று அவை தன்னை மறந்து உங்களை நோக்கிக்கொண்டிருந்தது. நீங்கள் பெண் அல்ல என்பதுபோல” என்றாள். மெல்லிய குரலில் அவள் செவிக்குள் என பேசினாள். “அரசர் என்றும் புலவர் என்றும் முனிவர் என்றும் ஆவது தன் உடலல்லாமல் ஆவதே என்று இன்று அறிந்தேன். ஆட்டர் என்றும் கூத்தரென்றும் நிறைவதுகூட உடல்கடத்தலே.”
அவள் கூடத்திற்குச் சென்று குந்திக்கு தலைவணங்கி பீடத்தை நோக்கி நடந்து மெல்ல அமர்ந்து மேலாடையை மடியிலிட்டு கையால் நீள்குழலை அள்ளி பின்னால் சரித்து தலைநிமிர்ந்து அமர்ந்தாள். யுயுத்ஸு எழுந்து தலைவணங்கி பின் தன் பீடத்தில் அமர்ந்து “இன்றுடன் போர் முடிகிறது அரசி, அச்செய்தியுடன் வந்துள்ளேன். அஸ்தினபுரி தோற்கடிக்கப்பட்டது. அதன் படை முற்றழிந்தது. அதன் மாவீரர்கள் அனைவரும் களம்பட்டனர். குருக்ஷேத்ரத்தில் அவர்களின் கொடியென எதுவும் எஞ்சவில்லை. அவர்களின் முழவொலியும் கொம்பொலியும் முற்றவிந்தன. நமது வெற்றிமுரசு அங்கு ஒலித்துக்கொண்டிருக்கிறது. மின்கொடி குருக்ஷேத்ரத்தில் ஏற்றப்பட்டுவிட்டது” என்றான். திரௌபதி எந்த எதிர்வினையும் காட்டவில்லை. தேர்ந்த சொற்களில் தொல்நூல் ஒன்றிலிருந்து நிகழ்வனவற்றை படித்துக் கூறுபவன்போல் யுயுத்ஸு கள நிகழ்வை சொல்லிக்கொண்டு சென்றான். “போர் முடிந்தது என்னும் நற்செய்தியுடன் இங்கு வர வாய்த்தமைக்கு தெய்வங்களை வணங்குகிறேன். நன்று சூழ்க! இனி மங்கலங்கள் எழுக!” என முடித்தான். “அரசியர் இங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்குச் செல்லவேண்டுமென்றும் அனைத்தும் அங்கு ஒருங்கமைந்திருக்குமென்றும் அரசர் என்னிடம் பணித்தார். இங்கிருந்து தாங்கள் கிளம்பி அங்கு செல்வதற்குள் தாங்கள் நகர்நுழைவதற்கான ஒருக்கங்கள் அங்கு செய்யப்பட்டிருக்கும். அதற்கு ஆணையுடன் ஒற்றர்கள் சென்றுள்ளனர்” என்றான்.
குந்தி “ஆனால் அஸ்தினபுரியின் அரசனைப்பற்றி இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை” என்றாள். யுயுத்ஸு “அவர் களத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இளைய அரசர் பீமசேனனிடம் போரிட்டுக்கொண்டிருந்தவர் சகுனி களம்பட்டார் எனும் செய்தி எழுந்ததுமே தன் கதையை வீசிவிட்டு காட்டுக்குள் புகுந்து மறைந்தார். அவரை நெடுந்தொலைவு துரத்தி வந்த பின்னர் திரும்பி வந்த இளைய அரசர் அவரைக் கொன்று வெற்றியை முழுமைப்படுத்துவேன் என்னும் வஞ்சினத்துடன் தன் உடன்பிறந்தாருடன் காட்டுக்குள் சென்றிருக்கிறார். இன்று மாலைக்குள் அவரை கண்டுபிடித்துவிடுவார்கள். அரசநாகம் முற்றாக ஒளிந்துகொள்ள இயலாது, பறவைகள் அதை அறிந்திருக்கும் என்றொரு சொல் உண்டு” என்று சொன்னான். “ஆனால் இன்னும் அவனை கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை” என்று குந்தி சொன்னாள். யுயுத்ஸு “ஆம், அரசி” என்றான். அவன் குரல் தணிந்தது. “அவன் களம்விட்டு ஒளிந்தோடினான் என்றால் அது இக்களத்தில் இப்போர் முடியலாகாது என்பதனால்தான். இங்கிருந்து அகன்று சென்றிருக்கிறான், அவ்வளவுதான். பிறிதொரு வடிவில் இப்போரை முன்னெடுக்க அவன் எண்ணக்கூடும்” என்றாள் குந்தி.
“போர் முடிந்துவிட்டது என்று என்னிடம் கூறினர்” என்று யுயுத்ஸு சொன்னான். “குருக்ஷேத்திரப் போர் முடிந்துவிட்டது. ஆனால் போர் முடியவில்லை. பிறிதொரு இடத்தில் பிறிதொரு வடிவில் போர் எழக்கூடும்” என்றபின் “அஸ்வத்தாமனும் கிருபரும் கிருதவர்மனும் களம்பட்டனரா?” என்று குந்தி கேட்டாள். “ஆம், அவர்கள் களம்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அக்களத்தில் படைக்கலத்துடன் எழுந்து நிற்பவர் என எவருமில்லை” என்றான் யுயுத்ஸு. “அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டனவா?” என்று குந்தி கேட்டாள். “பேரரசி அக்களத்தில் அனைவரும் செம்மண்குவைகள் போலவே தென்பட்டனர். களம் நிறைந்திருக்கும் அனைத்துமே சேறால் மூடப்பட்டிருந்தன. எவர் முகம் எவர் உடல் என்று கண்டுபிடிப்பது அரிது” என்றான். “முகங்கள் வண்ணங்களால் அடையாளப் படுத்தப்படுவதில்லை. அவை தசையமைப்பால், அதிலெழும் உணர்வு வெளிப்பாடால் அடையாளம் காணப்படுபவை. அறிந்த முகத்தை எந்தப் படலத்திற்குள்ளும் கண்டுபிடிக்கலாம்” என்று குந்தி சொன்னாள். “பிற உடல்கள் கண்டடையப்பட்டன அல்லவா?” என்றாள்.
யுயுத்ஸு சோர்வுடன் “ஆம்” என்றான். “எனில் அவர்கள் எங்கு சென்றார்கள்?” என்று குந்தி கேட்டாள். முனகலாக “களம்விட்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும்” என்று யுயுத்ஸு சொன்னான். “தப்பி ஓடுபவர்கள் அல்ல அவர்கள். ஒன்று, அவர்கள் அஸ்தினபுரியின் அரசனிடம் சென்றிருக்கிறார்கள். அல்லது அரசாணை பெறும் பொருட்டு காத்திருக்கிறார்கள்” என்றாள். யுயுத்ஸு “அவர்கள் இன்றும் களத்தில் நின்றனர். நம் படைகளால் வெல்லப்பட்டிருக்கின்றனர்” என்றான். “அவ்வாறு எளிதில் வெல்லப்படக்கூடியவர்கள் அல்ல அவர்கள். வஞ்சம் தெய்வங்களால் பேணப்படுகிறது. பெருவஞ்சம் தெய்வங்களால் தங்கள் கொடி என கொண்டுசெல்லப்படுகிறது. பேரன்பைப்போல், பேரளியைப்போல் அதுவும் தெய்வங்களின் வெளிப்பாடே” என்று குந்தி சொன்னாள். “அவர்கள் இருக்கும்வரை போர் முடியவில்லை” என்றாள். யுயுத்ஸு “போர் முடிந்துவிட்டதென்றே என்னிடம் சொல்லப்பட்டது. அதை இங்கு கூறுவதே என் கடன்” என்றான். “நீ கூறிவிட்டாய். நாங்கள் காத்திருக்கிறோம்” என்று குந்தி சொன்னாள்.
“அரசி, இங்கிருந்து தாங்கள் கிளம்பி…” என்று யுயுத்ஸு சொல்வதற்குள் கையசைத்து “இங்கிருந்து இப்போது கிளம்ப இயலாது. போர் முடிவுக்காக இங்கு வந்தோம். அம்முடிவு நிகழ்ந்த பின்னர் இங்கிருந்து கிளம்புவதே முறையாகும். அஸ்தினபுரிக்குள் நாங்கள் நுழையும்போது பகை ஒரு துளியும் எஞ்சியிருக்கக் கூடாது” என்றபின் குந்தி சேடியரை நோக்கி கையை நீட்டினாள். சேடியர் அருகணைந்து அவளுடைய கையைப்பற்றி மெல்லத் தூக்கி கொண்டுசென்றார்கள். திரௌபதி அவள் செல்வதை நோக்கி அமர்ந்திருந்தாள். குந்தி உடல் மெலிந்து வெண்ணிற நிழலசைவுபோல் மாறிவிட்டிருந்தாள். குருக்ஷேத்ரம் நாள் குறிக்கப்பட்டது முதல் அவள் உணவருந்துவது ஒவ்வொரு நாளும் குறைந்தபடியே வந்தது. சென்ற பதினெட்டு நாட்களில் உண்பதும் உறங்குவதும் அறவே நின்றுவிட்டது என்று சேடியர் சொன்னார்கள். உருகி மறைவதுபோல் உடல் வற்றி, தசைகள் உலர்ந்து. தோல் வறண்டு சுருங்கி, கண்கள் குழிந்து, பற்கள் முன்னெழுந்து, தோள்கள் முன்குறுகி, முதுகு வளைந்து உருமாறியிருந்தாள். அந்த முந்தைய உடலை திரையென விலக்கி உள்ளிருந்து எழுந்த பிறிதொருவள் போலிருந்தாள்.
ஒருமுறை தன் அறையிலிருந்து வெளிவந்து இயல்பாக விழி திருப்பி அப்பால் நடந்து சென்ற குந்தியைக் கண்டு யாரவள் என்று திகைத்தபோதுதான் திரௌபதியே குந்தி அத்தனை உருமாறியிருப்பதை உணர்ந்தாள். அதன்பின் ஒவ்வொருமுறை அவள் பார்க்கும்போதும் அவள் முன்பு இருந்த தோற்றம் நினைவுக்கு வந்தது. முதல்முறை அவளைப் பார்த்தபோது அன்னை உருவில் எழுந்த அழகி என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்பொழுதே அவள் வெண்ணிற ஆடை அணிந்து மங்கலக்குறிகளேதும் இன்றி இருந்தாள். ஆயினும் கண்களில் இருந்த மிடுக்கும் நகைப்பில் தெரிந்த ஒளியும் ஒருகணத்தில் அவளுக்குள்ளிருந்து ஒரு இளம்பெண்ணை வெளிக்கொணர்ந்தது. தன் நிமிர்ந்த உடலும், விரிந்த தோள்களும், கருவண்ணமும், நீள்விழிகளும்தான் அரசத் தோற்றத்தை அளிப்பவை என்று திரௌபதி எண்ணியிருந்தாள். குறிய வெண்ணிற உடலும், சிறு கண்களும் கொண்ட யாதவகுடிப் பெண்ணின் உடலிலும் பேரரசியின் தோற்றம் எழுவதைக் கண்டு அவளுக்குள் முதல் கணம் எழுந்தது சீற்றம்தான். பின்னர் அவளை அணுகி அன்புக்குரியவளாகி அன்னை என்று கொண்ட பின்னரும்கூட எங்கோ ஆழத்தில் அச்சீற்றம் இருந்தது. ஏதோ ஒரு தருணத்தில், ஒரு சொல்லில், ஓர் முகபாவனையில் அச்சீற்றம் எழுந்துகொண்டேதான் இருந்தது.
போர் எழுந்தபோது குந்தியில் பேரரசியின் மிடுக்கு மேலும் தெளிந்தெழுந்தது. அப்போரையே அவள்தான் நிகழ்த்துபவள் என. ஒற்றர்களிடமிருந்து அனைத்துச் செய்திகளையும் அறிந்துகொண்டிருந்தாள். பாண்டவர்களும் அனைத்தையும் அவளிடம் வந்து உரைத்தனர். அவள் சொல்பெற்றே செயல்பட்டனர். “நாம்” என்று சொல்லும்போது அவள் பாண்டவர்களையே குறித்துவந்தாள். அச்சொல் உருமாறி பாண்டவத் தரப்பின் பெரும்படையை குறிப்பதாக மாறியது. ஒவ்வொருநாளும் களத்திலிருந்து மிருண்மயத்திற்கு செய்தி வந்தது. அவள் அதன்பொருட்டு உச்சிப்பொழுதில் உறங்கி எழுந்து குளித்து உடைமாற்றி காத்திருந்தாள். செய்தி வந்ததும் சென்று அமர்ந்து விழிகூர்ந்து, மடியில் பூட்டி வைத்த கைகளில், விரல்கள் அசைந்து கொண்டிருக்க, மெல்லிய நடுக்குடன் கேட்டுக்கொண்டிருந்தாள். யுயுத்ஸு தன் கூற்றை விரித்துரைத்து முடித்ததும் கூரிய சில கேள்விகளினூடாக அங்கு நிகழ்வதை மேலும் தெளிவுபடுத்திக்கொண்டாள். எச்செய்திக்கும் அவள் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. பீஷ்மரின் வீழ்ச்சி அவளிடம் மெல்லிய முனகலை மட்டுமே எழுப்பியது. பின்னர் மெல்லிய குரலில் “அவருடைய இழப்பை ஈடுசெய்யும் வீரர்கள் அவர்களிடம் உள்ளனர்” என்று மட்டும் சொன்னாள்.
அபிமன்யு களம்பட்ட செய்தியை சொல்லும்போது யுயுத்ஸுவே நடுக்கு கொண்டு குரல் உடைந்தான். “ஒற்றைச் சகடத்தையே படைக்கலமாகக் கொண்டு அவன் களத்தில் நின்றான். அவனைச் சூழ்ந்துகொண்டு தாக்கிக் கொன்றனர் அவர்கள். பெருவீரர்கள், நல்லாசிரியர்கள்… இக்களத்தில் இனி நெறி என்பதில்லை” என்றான். “அது பீஷ்மர் வீழ்த்தப்பட்டபோதே அழிந்தது” என்று குந்தி சொன்னபோது அவன் திடுக்கிட்டான். பின்னர் “அங்கரும் உடனிருந்தார் என்கிறார்கள்” என்றான். அவள் “போர் எனில் போர்தான்” என்றபின் போகட்டும் என கையசைத்தாள். யுயுத்ஸு “பார்த்தன் சோர்ந்து களத்தில் வீழ்ந்துவிட்டார்…” என்றான். குந்தி “அவன் வஞ்சினம் உரைத்தானா?” என்று கேட்டாள். “ஆம் அரசி, நாளை அந்திக்குள் ஜயத்ரதனின் தலைகொய்வதாக சூளுரைத்துள்ளார்” என்றான் யுயுத்ஸு. “அவ்வாறே நிகழ்க!” என்று அவள் சொன்னாள். அவளிடமிருந்து துயரை எதிர்பார்த்துவிட்டு யுயுத்ஸு எழுந்துகொண்டான்.
குந்தி சொல்லடங்கியது கர்ணனின் இறப்புச்செய்தி கூறப்பட்டபோது, யுயுத்ஸு கூறி முடித்து தலைவணங்கியபோது. அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். உதடுகள் உள்மடிந்திருந்தன. எலும்பு புடைத்த மூக்கு மட்டும் முகத்தில் எழுந்து தெரிந்தது. பின்னர் நீல நரம்புகள் தெரிந்த தன் மெல்லிய கையை சேடியை நோக்கி நீட்டினாள். அருகணைந்த சேடி அவள் கையைப்பற்றி தூக்கி நிறுத்த அவள் மேலேயே குந்தி தளர்ந்து சரிந்தாள். பிறிதொரு சேடி வந்து மறுகையை பற்றிக்கொள்ள அவர்கள் இருவரும் இணைந்து அவளை தூக்கிக் கொண்டு சென்றனர். அவள் கால்கள் தரையில் இழுபட்டபடியே செல்வதுபோல் திரௌபதி கண்டாள். வெறுமனே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். யுயுத்ஸு அவளை வியப்புடன் நோக்கிவிட்டு “ஆனால் அங்கர்…” எனத் தொடர திரௌபதி ஓர் உறுமலோசையை எழுப்பினாள். யுயுத்ஸு திகைத்து கைகூப்பி எழுந்துகொண்டான். அவள் அசைவிலாது கற்சிலையென அமர்ந்திருந்தாள்.
அன்று தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்வது வரை தன் முகத்திலும் உடலிலும் முற்றொருமையைக் காத்துக் கொள்ள இயன்றதை குறித்து பின்னர் திரௌபதி எப்போதும் வியந்து கொண்டாள். கர்ணனின் களவீழ்ச்சியை யுயுத்ஸு சொன்னபோது அவளுள் நிகழ்ந்தது ஓர் உடைவு. உடலெங்கும் நடுக்கமாக அது பரவியது. தன்னுள் பிறிதொன்று புரள்வதுபோல் நிலைகுலைவு உருவாக, சூழ்ந்திருந்த ஒலிகள் அனைத்தும் மறைந்து சில கணங்கள் இன்மை நிகழ, மீண்டு வந்து உடலில் பரவிய வெம்மையுடன் அவன் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். குந்தி சென்ற பின்னர் எழுந்து நின்ற போது தன் உடல் நிலைகுலையவில்லை என்பதை உணர்ந்தாள். சுவர்கள் உறுதியாக நிலத்தில் ஊன்றியிருந்தன. மண்ணும் கூரையும் அசைவின்றி அமைந்திருந்தன. சீரான காலடிகளுடன் தன் அறைக்குள் வருவது வரை அவள் நான் எனும் ஒற்றை சொல்லில் தன்னை குவித்திருந்தாள். தாழிட்ட ஒலியில் அச்சொல் சிதற தொடர்ந்து சென்று மஞ்சத்தில் அமர்ந்து கைகளில் தலையைத் தாங்கி குனிந்தமர்ந்து உதடுகளையும் கண்களையும் இறுக்கி அதனூடாக உள்ளத்தை இறுக்கிநிறுத்தி நெடுநேரம் அமர்ந்திருந்தாள்.
தன்னுணர்வு கொண்டபோது தன் பற்கள் கிட்டித்திருப்பதை, கால்கள் உடலில் அழுந்த ஊன்றியிருப்பதை, உடலெங்கும் அனைத்து தசைகளும் இறுகி நின்றிருப்பதை அறிந்தாள். தோள்களை தளரவிட்டபோது உடலெங்கும் தசைகள் தொய்வடைந்தன. இறுக்கமாக கவ்விக்கொண்டிருந்த பற்களின் விசை நெகிழ்ந்தபோது தாடை உளைச்சல் கொண்டது. மஞ்சத்தில் கால்களை நீட்டி கண்களை மூடி படுத்துக்கொண்டாள். என்ன நிகழ்கிறது தனக்குள் என்று தானே விலகி நின்று பார்த்தாள். எண்ணங்களென எதுவும் ஓடவில்லை. பதைப்பென்று ஒன்று எஞ்சியிருந்தது. இழப்புணர்வு. அதை அவள் அதற்கு முன் அபிமன்யுவின் இறப்பு செய்தி வந்தபோது உணர்ந்தாள். அச்செய்தி முதலில் பல இறப்புகளில் ஒன்றாகவே அவளுக்குத் தோன்றியது. அவள் குந்தியின் எதிர்வினையையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் அறை நோக்கி நடக்க நடக்க அபிமன்யுவின் முகம் விரிந்துகொண்டே சென்றது. நூறுமுறை இருமுனையும் தீட்டப்பட்ட வாள்போல் என்று அவனைப் பற்றி சூதன் ஒருவன் பாடினான். மிகைக்கூர் கொண்டவன். எதையும் கிழித்துக்கொள்ளும், எங்கும் ஊடுருவிச் செல்லும் ஒருவன். கூர்மையை எப்போதும் விழியாலேயே உணரமுடிகிறது. அபிமன்யு எக்கூட்டத்திலும் தனித்தே தெரிவான்.
அபிமன்யுவின் இளஅகவை முகமே நினைவுக்கு வந்துகொண்டிருந்து. அச்சமின்மையும் சினமும் ஆணவமும் குழந்தைக்குரிய பேதைமையும் கலந்த அவ்விழிகள். அவனை எங்கு நிறுத்துவதென்று இந்திரப்பிரஸ்தத்தில் எப்போதும் திகைப்பு இருந்தது. இளங்குழவியென்றா? வில் தேர்ந்த வீரன் என்றா? அரச குடியினருக்குரிய ஆணவம் கொண்டவன் என்றா? அனைத்திலும் ஆர்வம் பொங்கும் மழலை என்றா? அவளிடம் மட்டுமே அவன் பணிவை காட்டினான். தன் அன்னையை வெறும் சேடி என்றே நடத்தினான். சுபத்திரை எதிலேனும் அவனை வழிப்படுத்த வேண்டுமெனில் திரௌபதியிடம்தான் சொன்னாள். திரௌபதி அவனை ஒரு போதும் கடிந்தழைத்ததில்லை. அவனை அருகழைத்து தனக்கு நிகரென எண்ணி அவன் செய்கையைப் பற்றி அவனிடமே கூறினாள். அவன் புரிந்துகொள்ள முடியாத ஒன்று இல்லையென்பதை அவள் அறிந்திருந்தாள். தன் துடுக்கை அகற்றி இயல்பு நிலையை அடைந்தபோது பிழைகளை அவன் ஒப்புக்கொண்டான். பிழைநிகர் செய்வதற்கு எப்போதும் சித்தமாக இருந்தான். இந்திரப்பிரஸ்தம் எப்போதும் அபிமன்யுவை அஞ்சியது. “அக்கூர் உங்களிடம் மட்டுமே மழுங்குகிறது” என்று தேவிகை ஒருமுறை அவளிடம் சொன்னாள். “ஆணைகளை இடுவதை அறிந்தவர்கள் எங்கு ஆணையிட இயலாதென்பதையும் அறிந்திருப்பார்கள்” என்று அவள் சொன்னாள். தன் அறைக்குள் அபிமன்யுவை எண்ணி நிலையழிந்து அவள் சுற்றிவந்தாள். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தாள். அந்த ஒவ்வா உணர்வை தன் உடலெங்கும் பரவியிருக்கும் ஓர் மெழுக்கென, தோள்மேல் எழுந்த சுமையென, எங்கோ எவரோ கூர்ந்து நோக்கும் உணர்வென அறிந்தாள். அதை தவிர்க்க வேண்டுமென்ற தவிப்பும் பதற்றமும் மட்டும் அவளிடம் எஞ்சியிருந்தது. படுத்தும் எழுந்தும் சாளரத்தருகே நின்று வெளியே நோக்கியும் அவ்விரவை அவள் கழித்தாள். மஞ்சத்தில் படுத்துத் துயின்று அரைநாழிகைப் பொழுதில் விழித்துக்கொண்டபோது அவள் நெஞ்சில் ஓர் அச்சம்போல் குளிர்ந்த அடிபோல் விழுந்தது. அவன் இனிமேல் இல்லை எனும் மெய் வந்து தொட்டது. அதன்முன் எண்ணங்கள் அனைத்தும் மறைய அவள் ஏங்கி விழிநீர் உகுத்தாள். ஆனால் அன்று காலை புலர்ந்தபோது அன்றைய போருக்கான செய்தியோடு ஒற்றர்கள் வந்திருந்தார்கள். போர் ஒவ்வொரு செய்தியையும் பிறிதொரு செய்தியால் மறைத்தது. ஒவ்வொரு கணமும் தன்னை உருமாற்றிக் கொண்டு கற்பனையை சிதறடித்தது. அத்துளிகளை இணைத்திணைத்து ஒவ்வொரு முறையும் புதிய ஒரு களத்தை அவள் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அங்கு நிகழும் களத்தைவிடப் பெரிய ஒரு களத்தை தான் உருவாக்கிக்கொள்கிறோம் என்று எண்ணினாள். அவள் கற்பனை சென்றடைந்த எல்லையை சிதறடிக்கும் மெய்மையுடன் அன்று மாலை யுயுத்ஸு வந்து சேர்ந்தான். ஒருவேளை போரை உணர்வெழுச்சியுடன், காட்சி விரிப்புடன் பாடும் சூதர்கள் வந்திருந்தால் அத்தனை கொந்தளிப்பு உருவாகியிருக்காது. எண்ணி அடுக்கப்படும் யுயுத்ஸுவின் சொற்கள் ஒவ்வொன்றும் நச்சுவிதைகள் என முளைத்து கூர்முட்கள் நிறைந்த காடென்றாயின.
கர்ணனின் இறப்பை அபிமன்யுவின் இறப்பைப் போல அத்தனை ஆழமாக அவள் உணரவில்லை என்றே தோன்றியது. அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்நடுக்கம் இழப்பிற்காக அல்ல. இழப்பதற்கு எதையும் அவள் கொண்டிருக்கவில்லை. அது ஏன் என்பதை தன்னுள் துழாவி துழாவி அவள் அலைந்தாள். அது முடிவென்பதனால். முடிவு! விந்தையான ஓர் எண்ணம் எழுந்து அவளை மஞ்சத்தில் அமரவிடாது செய்தது. எழுந்தமர்ந்து, பின்னர் எழுந்து நின்று, மீண்டும் அமர்ந்து தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டாள். தொடக்கம் என்பது எத்தனை வாய்ப்புகள் கொண்டது! முடிவின்மையை முன்னால் காண்பது. முடிவு முற்றமைவது. பிறகென ஒன்றில்லாதது. இத்தனை அச்சுறுத்தும் ஒன்று வாழ்வில் உள்ளது என்பதை உணர்வதே இல்லை. ஒவ்வொரு முடிவுக்குப் பின்னரும் பிறிதொரு தொடக்கத்தை எண்ணிக்கொள்கிறார்கள். பிறிதொன்று தொடங்காத முழுமுடிவென்பது இறப்புதான். அதன் பிறகு ஒன்றுமில்லை. மறுபிறப்பும் விண்ணுலகும் வெறும் கற்பனைகள். நினைவுகளோ புகழோ அனைத்தும் வெறும் உருவகங்கள். எவையும் இறப்புக்கு மாற்றல்ல. முடிந்துவிட்டது. எச்சமின்றி, மாற்றின்றி. இனி ஏதுமில்லை.
அவள் தன்னுள் நிகழ்ந்தது ஓர் உடைவென்று உணர்ந்தாள். உடைவென்ற சொல்லே தன்னுள் நிகழ்ந்ததை நன்கு குறிக்கிறது. அது சிதைவு அல்ல. அழிவு அல்ல. மறைவு அல்ல. உடைவு. சிதைவுக்குப்பின் கூடவும், அழிவுக்குப்பின் பிறக்கவும், மறைவுக்குப்பின் தோன்றவும் வாய்ப்புள்ளது. உடைவு மாற்றில்லாதது. ஒன்று நூறு பகுதிகளாகிறது. மீண்டும் பொருந்தமுடியாதபடி. அதை அவ்வாறு நிறுத்திய வடிவம் என்றைக்குமாக அழிந்துவிடுகிறது. எனில் அவ்வடிவை நினைவூட்டும் நூறுநூறு பகுதிகள் எஞ்சியிருக்கின்றன. உடைவு ஒருகணம். அழிவும் சிதைவும் மறைவும் வளர்சிதை மாற்றங்கள். உயிரின் இயல்புகள். உடைவு என்பது ஓர் அறுபடல். இனியில்லை என்று ஒருகணத்தில் ஆதல். உடைந்தவை அக்கணத்தை அழிவில்லாமல் நிலைநிறுத்துகின்றன. இப்புவியில் ஒவ்வொரு கணமும் கோடிகோடி உடைவுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. பேரொலியுடன் உடைபவை. ஓசையில்லாமல், உடைவதறியாமல் உடைபவை. உடைவு! எத்தனை கொடிய சொல்! இரக்கமற்ற சொல்! எத்தனை கூரிய சொல்! நஞ்சு சூடிய சொல்!
அவள் அத்தருணத்தின் வெறுமையை தன்னுள்ளிருந்து உதறி வெளிவிட விரும்பினாள். எழுந்து சென்று சாளரத்தினூடாக இருளை நோக்கி நின்றாள். அபிமன்யுவைப்போல் ஓர் இழப்புதான் இதுவும். சென்ற காலத்தின் ஒரு பகுதி. சென்ற காலம் ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறது. மீண்டும் வந்தமர்ந்தபோது ஒருவேளை உளமுருகி அழுதால் அதிலிருந்து வெளிவந்துவிடக்கூடுமோ என்று எண்ணினாள். வெளிவந்து திரும்பி நோக்குகையில் இந்தத் துயர் பொருளற்றதாகத் தெரியும்போலும். அன்றிரவு முழுக்க மஞ்சத்தில் அமர்ந்தும் எழுந்தும் சாளரத்தருகே நின்று மீண்டும் வந்து படுத்தும் அவள் கணம் கணமென காலத்தை கடந்தாள். காலையில் சேடி வந்து கதவைத் தட்டியபோது அவ்வண்ணமொரு ஓசை கேட்காதா என்று உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது. கதவைத் திறந்து வெளிவந்து “அரசி எவ்வண்ணம் இருக்கிறார்கள்?” என்றாள். “அறைக்குள் சென்று மஞ்சத்தில் படுத்தபோதே மயங்கிவிட்டார்கள். ஒரு நாழிகைக்குப் பின் நினைவு திரும்பியது. விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே அகிபீனா கொடுத்து துயில வைத்தோம்” என்று சேடி சொன்னாள். “நன்று” என அவள் கூறி தன் நீராட்டுக்கு வெந்நீர் ஒருக்கும்படி ஆணையிட்டாள்.
நீராடிக்கொண்டிருக்கும்போதே முந்தைய இரவை ஒருகணமென நினைவுகூர்ந்தாள். முடிவிலாதபடி சுழன்று சுழன்று நீண்ட ஒரு இரவு. இரு விரலால் தொட்டெடுக்கப்படும் சிறுபடிகக்கல்போல் ஒரு தருணமென மாறிவிட்டிருந்தது. அது செறிவுற்று இறுகி ஒளிகொண்டு படிகமென்று ஆகிவிட்டது போலும். அவள் கர்ணனை நினைவுகூர முயன்றாள். முந்தைய நாள் இரவு மிக அண்மையிலென தெரிந்த தோற்றம் அப்போது எத்தனை முயன்றும் உள்ளிருந்து எடுக்க முடியாதபடி அகன்றுவிட்டிருந்தது. மெல்ல அதிலிருந்து விலகிக்கொண்டாள். அவனை எங்கெங்கு நோக்கினோம் என எண்ணிப்பார்த்தாள். அவனை அணுக்கமாக சந்தித்ததே இல்லை எனத் தெரிந்தது. எனில் முந்தையநாள் இரவு அத்தனை உருத்தெளிந்து எவ்வண்ணம் வந்தான்? நீராடி எழுந்து கூந்தலை நீவியபடி அவள் கூடத்திற்குச் சென்றபோது குந்தி அப்பால் சென்றுகொண்டிருந்தாள். சேடி அவளிடம் “பேரரசி எழுந்துவிட்டார். ஒற்றர்களை சந்திக்கச் சென்றுகொண்டிருக்கிறார்” என்றாள். அவள் குந்தியின் நடையை நோக்கிக்கொண்டிருந்தாள். மெலிந்த சிறுகால்கள். ஆனால் அவை சீரான வைப்புகளுடன் அவைநடுவே அரியணை நோக்கிச் செல்வன போலிருந்தன.
அவள் தன் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொள்ளும் முன் சேடியிடம் “இன்று எவர் வந்தாலும் இனி என்னை எழுப்ப வேண்டியதில்லை” என்றாள். அறைக்குள் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். இருள் அனைத்து திசைகளிலிருந்தும் அவள் மேல் படிந்து அழுந்தியது. அங்கே அவ்வண்ணம் படுத்திருக்கும் அவளை அவளே நோக்கிக்கொண்டிருந்தாள். தன் தோற்றமும் மிகவும் மாறிவிட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அங்கு வந்தபின் ஒருமுறையேனும் ஆடியில் அவள் தன்னை பார்த்துக்கொண்டதில்லை. ஆனால் உடல் மெலிந்திருப்பதை, முகம் வற்றிவிட்டிருப்பதை எவ்வண்ணமோ உணர்ந்து கொண்டிருந்தாள். மிக அரிதாகவே அவள் உணவுண்டாள். பெரும்பாலும் புல்லரிசியிட்ட பால்கஞ்சி. அரிதாக பழங்கள். பகலிலும் இரவிலும் துயிலும் விழிப்புமல்லாமல் நாட்கள் நீண்டன. அவள் நீள்மூச்சுவிட்டபடி புரண்டு படுத்து அப்பகலை பின் அவ்விரவை கடந்தாள். எதையோ தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள். அரைத்துயில் தன்மேல் படிந்து சித்தம் விலகி அவ்வறையை நோக்கிக்கொண்டிருந்தபோது அறை மூலையிலிருந்து மாயை வந்து தன் காலடியில் நிற்பதை கண்டாள். அவள் மாயையை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். மாயை அவளிடம் “இன்னும் ஒரு குருதி எஞ்சியுள்ளது” என்றாள்.