முதலை மோடி
மோடி,முதலை -கடிதம்
அன்புள்ள ஜெ
பாலா எழுதிய குறிப்பு முக்கியமானது. இன்றைய அரசு எந்தவிதமான சூழலுணர்வும் இல்லாமல் வெறும் வணிகநோக்கில் காடுகளை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு எதற்குமே தடையில்லை. மலேசியா, சீனா, பிரேஸில் போன்ற நாடுகள் சூழலை ஈவிரக்கமில்லாமல் அழித்து தொழிலை வளர்க்கின்றன. அந்தத் தொழிலின் லாபங்கள் சிறுபான்மையினர் கைகளுக்குச் செல்கின்றன. உலகம் கதறிக்கூப்பாடுபோடுவதை அவர்கள் செவிகொள்வதில்லை. இந்திராகாந்தி காலத்திலிருந்து இந்தியா சூழலுணர்வைப் பற்றிய தெளிவு கொண்ட நாடாகவே இருந்து வந்துள்ளது. நம்மால் முடிந்த அளவுக்கு சூழலை பேணமுயன்றோம். மூன்றாமுலகில் நாம் ஒரு முன்னுதாரணமாகக் திகழ்ந்தோம். அந்த நிலை இதோ மாறிவிட்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் நான்கு துறைகளில் மிகப்பெரிய வீழ்ச்சி வந்துகொண்டே இருக்கிறது. அதன் அடையாளங்கள் தெரிந்துவிட்டன. சென்ற ஆண்டே இதை சொன்னார்கள். இப்போது விளைவுகள் தெரியத்தொடங்கியபின்னரே நம்புகிறார்கள். வாகனஉற்பத்தி – வினியோகம் – செர்வீஸ் துறைகளில் மிகப்பெரிய வீழ்ச்சி. இது இன்னும் கூடுதலாக ஆகும். தொலைதொடர்புத்துறையில் பெரும் வீழ்ச்சி. பிஎஸ்என்எல் தப்பாது. அது பேருக்கு ஒரு நிறுவனமாக இருக்கும். அந்த வீழ்ச்சி எல்லா துறைகளிலும் எதிரொலிக்கும்.விமானப்போக்குவரத்துத் துறையிலும் வீழ்ச்சியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. முக்கியமாக இனி கட்டுமானத்துறை எழுச்சி பெற பல பத்தாண்டுகள் ஆகும். ஆகவே அதையொட்டி இருக்கும் தொழில்களில் பெரிய சரிவு இருக்கும்.
இந்தியாவில் சேமிப்பை முதலீடு செய்ய நிலம் மட்டுமே நம்பகமானதாக இருந்தது. ஏனென்றால் நிலம் இங்கே குறைவு. அதிலும் நகர்ப்புற நிலம் மிகக்குறைவு. ஆகவே அது இன்ஃப்ளேஷனைத் தாங்கியது. முதலீடு மோசம்போகாது என்ற உத்தரவாதம் இருந்தது. உபரிப்பணம் அங்கே செல்லும். அங்கிருந்து மீண்டும் தொழில்முதலீடாக ஆகும். பங்குச்சந்தை உட்பட அனைத்திலும் உச்சகட்ட மோசடிகள் நிகழும் நாடு இது. அரசியல்வாதிகள் ஊடுருவி ஊழல் நிறைந்திருக்கும் ஒரு துறையில் எவரும் நீண்டகால முதலீட்டை நம்பிக்கையுடன் செய்ய மாட்டார்கள். ஆகவேதான் இங்கே நிலம் முதலீடாக மாறியது. வரிக்கெடுபிடிகள் வழியாக அதை அப்படியே இறுக்கிவிட்டார்கள். விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது. பணவீக்கத்திற்கு ஈடுகொடுத்த ரியல் எஸ்டேட் முதலீட்டை அரசாங்கம் அழித்துவிட்டது. நிலம் விற்பவன் அதிகாரிகளுக்கு முன் குற்றவாளியாக ஆகிவிட்டான். பல நிலங்களில் 30 சதவீதம் வரை அதிகாரி அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாகச் செல்கிறது.
ஆகவே உபரிமுதலீடு நாட்டைவிட்டு சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே இருப்பது அப்படியே தேங்கிவிட்டது. ஆகவே எங்கும் முதலீடே இல்லை. எல்லா திசையிலும் தேக்கம். சிறுதொழில்களில் வந்த இந்த தேக்கமே ஒன்றிலிருந்து ஒன்றாக எல்லாவற்றிலும் படர்கிறது. இது பொருளியலை வீழ்ச்சியடையச் செய்கிறது. ஆனால் இந்த அரசு பெயரளவுக்குக்கூட அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்த வீழ்ச்சியால் இந்திய குறுமுதலாளிகளும் பொதுநிறுவனங்களும் அழிந்தால் பெருநிறுவனங்களுக்கு நல்லதுதானே என நினைக்கிறார்கள். முதலீடு, அதிகாரம் எல்லாமே மையப்படுத்தப்படுகிறது. பொருளியல் அழிவை எப்படிக் கடந்துசெல்லப்போகிறோம் என தெரியவில்லை
நண்பர்களுக்கு நான் சொல்வது எந்தத்தொழிலிலும் இப்போது முதலீடு செய்யவேண்டாம். எதையுமே தொடங்கவேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு சிக்கனமாகச் செலவுசெய்தபடி காத்திருங்கள் என்பது மட்டுமே. கணிசமான முதலீடு இருந்தால் நாட்டைவிட்டு வெளியேறி நியூசிலாந்து மொரிஷஸ் போன்ற குட்டிநாடுகளில் சிறிய அளவில் தொழில்தொடங்குவது நல்லது. மற்றபடி முகநூலில் நாடு வளர்கிறதா தேய்கிறதா என்றெல்லாம் பேசிக்கொள்வது வேறுவிஷயம். இந்த காற்றில் பணம் பறந்துபோனால் வரவே வராது.
ஆர்.எம்.பாஸ்கர்
***