ஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை

 

ஈரோடு சிறுகதை முகாமில் “1000 மணி நேர வாசிப்பு சவாலில் 766 மணி நேரத்தை கடந்ததன் பொருட்டு என்னைப் பாராட்டி பரிசு வழங்கிய போது நான் செய்த ஏற்புரையின் எழுத்துவடிவத்தை இணைத்துள்ளேன். நன்றி.

 

சாந்தமூர்த்தி.

 

 

வணக்கம்!

 

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சரியாக 10-00 மணிக்கு தொடங்கிய கூட்டத்தைப் பார்க்கிறேன்.என்னுடைய கூட்டங்களை நான் 10-00 மணிக்கு தொடங்குவேன்.10-01 க்கு அல்ல.10-00 க்கு.ஒரு புதிய மாவட்டத்துக்கு செல்லும் போது அவர்களுக்கு என்னைத் தெரியாது.முதல் கூட்டத்தில் 400 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 50 பேர்தான் இருப்பார்கள்.மற்றவர்களுக்காக காத்திருக்காமல் 10-00 மணிக்கு தொடங்கி விடுவேன்.அடுத்தடுத்த கூட்டங்களில் சரியாகி விடும். விஷ்ணுபுர விழாக்களின் வெற்றிக்கு நேர நிர்வாகம் ஒரு காரணம்.

என்னுடைய கூட்டங்களில் பிறர் அஞ்சக்கூடும்.ஆனால்,இந்தக் கூட்டத்தில் எதிரில் உள்ளவர்களைப் பார்த்து நான் அஞ்சுகிறேன்.நான்,ஜெயமோகன்,ஸ்ரீனிவாசன் போன்ற ஒரு சிலரைத் தவிர எல்லோருமே இளைஞர்கள்.பல துறைகளில் ஜாம்பவான்கள்.எழுத்தாளர்கள்–இன்றில்லையெனில் நாளை.உண்மையில்

நான் தான் junior-most student நான் சாந்தமூர்த்தி. மன்னார்குடி. மாணவன் என்றும் ஆசிரியர் என்றும் தொடங்கி இறுதியாக முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன் மீண்டும் மாணவனாக

மாறியிருக்கிறேன். வட்டம் முழுமை அடைந்தது. இது எனக்கு முதல் முகாம் சுனில் கிருஷ்ணன்

முயன்று தொடங்கிய 1000 மணி நேர வாசிப்பு சவால் முதல் முகாமிலேயே என்னை கௌரவித்துள்ளது அந்த வாசிப்பு மராத்தானில் கலந்து கொள்ள முதலில் நான் சற்று தயங்கினே நிறைய இளைஞர்கள் கலந்து

கொள்வார்கள் நம்மால் அவர்களுக்கு இணையாக ஈடு கொடுத்து ஓட முடியுமா என்று அச்சமும் கூச்சமும் ஏற்பட்டது ஆனாலும் கலந்து கொண்டேன்.

சில நாட்களில் ஜெயமோகன் “1000 மணி நேர வாசிப்பு தவம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார் அதில் வாசிப்பு முன்னணியில் இருந்த 15 பேரை பெயர் குறிப்பிட்டிருந்தார் அதில் நான் பத்தாம் இடத்தில் இருந்தேன் அந்த கட்டுரை எனக்கு ஒரு அகத்தூண்டலாய் அமைந்தது.பத்தாம் இடம் எனக்குப் பத்தாது.

அப்போது நான் என் வலைப்பூவில் “எனக்குத் தேவை இரண்டாம் இடம் கூட அல்ல” என்று ஒரு கட்டுரை எழுதினேன். அது வெளியாகி சில தினங்களில் நான் முதலிடத்துக்கு முன்னேறினேன். இப்போது வரை முதல் இடத்திலேயே இருக்கிறேன். வியாழன் இரவு வரை 766 மணிநேர வாசிப்பை முடித்திருக்கிறேன்.

நேற்று காலை 9 மணி நிலவரத்தின்படி மொத்தம் இந்த போட்டியில் 88 பேர் இருக்கிறோம் பெயர்களை பதிவு செய்துவிட்டு டேக் ஆஃப் ஆகாமலேயே உள்ளவர்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லைஅதில் ஐந்து பேர் 200 என்ற எண்ணிக்கையைக்  கடந்து இருக்கிறார்கள்.அவர்களில் இருவர் எங்கள் ஊர்க்காரர்கள். ஒருவர் சுரேஷ் பிரதீப். அடுத்தவர்– அருண்மொழி நங்கை. மேலும் V.ராதா, தமிழ்ச்செல்வி நல்ல குமார் ஆகியோருடன்  கமலாதேவி நேற்று அல்லது நேற்றுமுன்தினம் இருநூறைக் கடந்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 100 மணி நேரத்தைக் கடந்தவர்கள் 21 பேர்.சிலர் அவ்வப்போது பதிவு செய்வதில்லை என்ற ஐயம் உள்ளது 50 பேராவது இறுதி இலக்கை அடைவார்கள் என்று நம்புகிறேன்.அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஒரு கட்டத்தில் ஒரு பயம் வந்தது இரண்டு மறைகளாவது கழன்றால் தான் இலக்கியம் படிக்கும் ஆசையே வரும் தினம் 7 மணி நேரம் தொடர்ந்து படித்தால் ரொம்ப கழன்று விடுமோ என்ற அச்சம் வந்தது சரி கழலாமலேயே  இருந்தால்தான் என்ன சாதித்துவிட போகிறோம் என்று தோன்றியது. அப்போதுதான் ஜெயமோகனின் அடுத்த கட்டுரை வந்தது அவரே இளவயதில் பகல் இரவு பாராது நாள் கணக்கில் தொடர்ந்து படித்தாராம். எனவே சரியான திசையில்தான் பயணிக்கிறோம் என்ற தெளிவு பிறந்தது

இந்த போட்டியால்  என்ன நன்மை? ஒரு இலக்கை கொள்வதும்,போட்டியாகக் கருதுவதும் உழைப்பை ஒருங்கிணைக்கும்.கவனத்தை கூர்மைப் படுத்தும்.செயல்பாட்டை மேலும் செம்மையாக்கும்.  எனக்கு கிடைத்திருக்கும் லாபங்கள் மூன்று. ஒன்று நிறைய நேரம் தொடர்ந்து வாசிக்க முடிகிறது இந்த மூன்றரை

மாதங்களில் இதுவரை 67 நூல்கள் படித்து இருக்கிறேன் அதற்கு முந்தையமூன்றரை  மாதங்களில் நான் படித்தவை 16 புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்களின் எண்ணிக்கை நான்கு மடங்காகி உள்ளன. போன ஆண்டு முழுவதும் படித்ததை விட இது அதிகம் இரண்டாவதாக  வாசிப்பின் தரம்  கூடியுள்ளது. முன்பு ஒரு சீரியஸான நூல் படித்தால், ஓய்வு எடுப்பது போல் அடுத்ததாக ஒரு லைட் புக் படிப்பேன் இப்போது சீரியஸ் நூல்களையே தொடர்ந்து படிக்க முடிகிறது. மூன்றாவது லாபம் வாசிப்பின் வேகம் கூடியுள்ளது. மடிக்கணினியில் மட்டுமே படிக்கிறேன்.மின்னூல்கள்தான்.

நான் எப்படி படிக்கிறேன்? தினம் அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்து துயில் எழுகிறேன் 4.05 லிருந்து 6.05 வரை இரண்டு மணி நேரம். ஆறு ஐந்துக்கு நகராட்சி குழாயில் நீர் வரும் அந்த கடினமான செயலை செய்தல்– குடும்பத்திற்காக நான் செய்யும் மகத்தான சேவை அது ஒன்றே. பின்னர் 6.25 முதல் 7.25 வரை ஒரு மணி நேரம். இரவு  ஒன்பதரை முதல் பத்தரை வரை ஒரு மணி நேரம் ஆக இந்த நான்கு

மணிநேர வாசிப்பு மாற்றமில்லாதது பகலில் பேத்தியுடன் இருக்க வேண்டும்பேத்தி பகலில் தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம், குளிக்கும் நேரம்,TV யில் சோட்டா பீம் பார்க்கும்,செல்பேசியில் பெற்றோருடன் பேசும் நேரம் ஆகிய சமயங்களில் அவ்வப்போது அவசர அவசரமாக படித்துவிடுவேன் ஆக நேரத்தை சிக்கனமாக அல்ல கஞ்சத்தனமாகவே பயன்படுத்த வேண்டும். நான் பேஸ்புக் பார்ப்பதில்லை

whatsapp பார்ப்பதில்லை இப்படியே ஒவ்வொரு நிமிடத்தையும் ஈட்டுகிறேன் அதைப் படிப்பதற்காக பயன்படுத்துகிறேன். என்ன, மற்றவர்களுக்கு வேறு வேலை இருக்கும்.எனக்கு வேறெந்த வேலையும் இல்லை.வாசிப்பு தொடக்கத்தில் சிரமமாக இருக்கும்.பிறகு பழகிப் போய் விடும். பத்து நிமிடம் படிக்காமல் இருப்பது கூட என்னவோ போல் இருக்கிறது  பத்து நிமிஷம் ஒரு மனிதனால்  எப்படி படிக்காமல் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. வெற்றி அடைவது கூட பழக்கம்தான்.நாலைந்து முறை வெற்றி பெற்று பழகி விட்டால்,பிறகு வெற்றி பெறாமல் இருப்பது சிரமம்.1000மணி நேர வாசிப்பு சவால் என்று தொடங்கியது 1000 மணி நேர வாசிப்பு தவமாக தொடர்கிறது.

சுநீல் கிருஷ்ணன் தன்னுடைய ஆயிரம் மணிநேர சவால் என்ற முதல் கட்டுரையில் ஒரு அறிவிப்பு கொடுத்து இருந்தார் இந்த போட்டியில் இறுதியில்  வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று அதில்குறிப்பிட்டிருந்தார் அவர் கூறியவை பொய்த்துவிட்டன போட்டி இன்னும் முடியவில்லை பரிசு வழங்கப்பட்டு விட்டது   ஜெயமோகன் அவர்கள் முன்னிலையில் எம் கோபாலகிருஷ்ணன் அவர்கள்வழங்கிய  இந்த பரிசை விட பெரிய பரிசு இருந்து விட முடியுமா என்ன இந்த கௌரவத்தை எனக்கு அளித்த அனைவருக்கும் நன்றி! வணக்கம்!

முந்தைய கட்டுரைஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்
அடுத்த கட்டுரைஇலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம்