கதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன்? அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச் சரித்தாள். இமைகள்மேல் அரக்கு படிந்திருப்பதுபோல திறக்கமுடியாமல் துயில் அழுத்தியது. கைகளிலும் கால்களிலும் எடையென அது எஞ்சியிருந்தது. அவள் அமர்ந்தவாறே மீண்டும் துயிலில் ஆழ்ந்து தலை தொய்ந்து அசைந்து விழப்போய் விழித்துக்கொண்டாள். “அரசி, இளைய பாண்டவர் பீமசேனன் வந்துள்ளார்” என்றாள் சேடி. அவள் எழுந்துகொண்டு மேலாடைக்காக கைகளை துழாவியபோது இறுதியாக எழுந்த துளிக்கனவு நினைவிலெழ “எப்போது வந்தார்?” என்றாள். கதவைத் திறந்து வெளியே நின்றிருந்த சேடியிடம் “என்ன செய்தி? மைந்தர்களுக்கு என்ன ஆயிற்று?” என்றாள்.
“மைந்தர்களுக்கு ஒன்றுமில்லை அரசி… அரசர் வந்திருப்பது பிறிதொரு செய்தியுடன் என எண்ணுகிறேன்” என்றாள். அவள் கைகால்கள் தளர “தெய்வங்களே” என்றாள். மூதன்னையரின் அந்த ஓயாத வழுத்துதலை அவள் எப்போதும் இளிவரலாகவே எண்ணிக்கொள்வாள். “எந்நேரமும் அஞ்சிக்கொண்டும் வேண்டிக்கொண்டும் இருக்கிறார்கள், தெய்வங்கள் இவர்களுக்கு அள்ளிக்கொடுத்து அமைதியடையச் செய்தால் தங்கள் உலகில் இனிதமைய முடியும்போலும்” என்று ஒருமுறை மாயையிடம் சொன்னாள். “எந்த அன்னையும் தனக்காக வேண்டிக்கொள்வதில்லை, அரசி” என்று மாயை சொன்னாள். “அன்னையாதல் என்பது தன் குழந்தைகளைப்பற்றிய முடிவில்லாத பதற்றத்தை சூடிக்கொள்ளுதல்தான்…” அன்னையென அவள் ஒருபோதும் அதை உணர்ந்ததில்லை. ஆனால் அப்போது நூறு வழிப்பின்னல்கள் வழியாக அவளும் அங்கேதான் வந்துசேர்ந்திருக்கிறாள்.
அவள் மேலாடையை வாங்கி உடல்மேல் இட்டபடி நடந்துகொண்டே “இளவரசர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்றாள். “தென்மேற்கே சௌப்திகம் என்னும் காடு உள்ளது. அதற்குள் மனோசிலை என்னும் ஊரிலிருப்பதாக ஒற்றர்கள் சொன்னார்கள்” என்று சேடி சொன்னாள். அதை பலமுறை அவளே திரௌபதியிடம் சொல்லியிருந்தாள். ஆனால் மீளமீளச் சொல்லவேண்டியிருந்தது. “ஆம்” என்றாள் திரௌபதி. “அவர்கள் நலமாக இருக்கிறார்கள். மூத்தோர் நலமாக உள்ளனர். இளையவர்களாகிய சுருதகீர்த்தியும் சுருதசேனனும் சர்வதனும் சுதசோமனும் சற்றே கடுமையாக புண்பட்டுள்ளனர். ஆனால் உயிரிடர் ஏதுமில்லை. ஓரிரு மாதங்களில் எலும்புகள் கூடி முன்னிலும் ஆற்றலுடன் அவர்கள் எழமுடியும்.” திரௌபதி “ஆம், மருத்துவச்செய்தி வந்தது” என்றாள்.
“அங்கே அஸ்தினபுரியில் அனைத்தும் ஒருங்கியபின் அதிர்வில்லாத தேர்கள் வந்து அவர்களை அழைத்துச்செல்லும். ஓரிரு நாட்கள் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தத் தொடங்குவதுவரை இங்கிருப்பதே நன்று. மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஆழ்ந்த தசைப்புண்கள் உள்ளன. அவற்றில் மழையீரம் படுவது நன்றல்ல என்றனர்” என்று சேடி சொன்னாள். “அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதாகச் சொன்னார்கள்” என்றாள் திரௌபதி. “ஆம், ஆனால் கடுமையான காய்ச்சல் அல்ல. தசைகள் புண்பட்டால் உடல் வெம்மைகொள்வதுண்டு. உலோகத்தைப்போல் உடலையும் உருக்கியே இணைக்கமுடியும் என்பார்கள் மருத்துவர்” என்றாள் சேடி. திரௌபதி “அபிமன்யு எப்படி இருக்கிறான்?” என்றாள்.
ஏவற்பெண்டு மறுமொழி சொல்லவில்லை. திரௌபதி அந்த அமைதியை உணர்ந்து திரும்பி நோக்கியதுமே திடுக்கிட்டு நோக்கை விலக்கிக்கொண்டாள். அவள் எண்ணங்கள் மைந்தரைத் தொட்டதுமே அபிமன்யு நினைவிலெழுந்தான். அவள் தன் மைந்தர்களை ஏன் அபிமன்யுவுடன் இணைத்துக்கொண்டிருக்கிறாள்? கனவில் எப்போதும் அவன் புன்னகையுடன் வந்தான். மூடிய கதவைத் தட்டி அழைத்து திறந்ததும் அவள் எண்ணியிராத அகவையில் அங்கே நின்று அவள் மைந்தரை விளையாடச் செல்லும்பொருட்டு அழைத்தான். “அம்பு பயில கானேகுகிறோம் அன்னையே, சுருதகீர்த்தி வருகிறானா?” என்றான். “கங்கைநீராட்டுக்கு சுருதசேனனை அழைக்க வந்தேன்… அவன் என்ன செய்கிறான் இங்கே?” என்றான்.
அவன் முன்னரே இறந்துவிட்டான் என்பதை அப்போது அவள் அறிந்துமிருப்பாள். ஆகவே அந்த வினாவை அவள் பதற்றத்துடன் எதிர்கொள்வாள். “இல்லை, அவர்கள் இன்று வரப்போவதில்லை… இன்று இளையவனுக்கு உடல்நலமில்லை” என்பாள். “அவர்கள் இங்கில்லையே. பாஞ்சாலத்தில் அல்லவா இருக்கின்றனர்?” என்பாள். அபிமன்யுவை வெவ்வேறு அகவைகளில் அவள் பார்த்ததில்லை. தன் மைந்தரையும்தான். ஆனால் அவர்கள் எப்படி அத்தனை தெளிவாக, நேர்முன் நின்றிருப்பதுபோல அனைத்து அகவைகளிலும் தோன்றுகிறார்கள்? அவளுக்குள் அவர்கள் வளர்ந்துகொண்டே இருந்தனர். பதினான்கு ஆண்டுகள் அன்றாடம் அவள் அவர்களை உள்ளத்தில் நோக்கிக்கொண்டிருந்தாள். உபப்பிலாவ்யத்தில் அவர்களை மீண்டும் கண்டபோது அவள் எந்த வியப்பும் கொள்ளவில்லை. சற்றும் விலக்கம் அடையவில்லை.
சிறுவர்களிடமிருக்கும் பெண்மை அன்னையரை உளம்கூத்தாடச் செய்கிறது. அவர்களின் நீள்குழலை சிறுமியர்போல குடுமியெனக் கட்டி மலர்சூட்டுகிறார்கள். பெண்களுக்குரிய அடர்வண்ண ஆடைகளை அணிவிக்கிறார்கள். அவள் தன் மைந்தரில் சுருதசேனனையும் சுருதகீர்த்தியையும் சதானீகனையும் அடி என்றே அழைத்தாள். சுருதி என்றும் கீர்த்தி என்றும் சதா என்றும் பெயர்களை சுருக்கிக்கொண்டாள். சிறுவர்கள் ஓர் அகவை வரை அன்னை தன்னை சிறுமியென எண்ணுவதை ஒப்புக்கொள்கிறார்கள். அது அன்னையுடன் அணுக்கம் கொள்ளச் செய்வதை, அன்னையின் கைகளுக்குள் கூச்சமில்லாமல் ஒடுங்கச்செய்வதை அறிந்திருக்கிறார்கள். அவர்களின் தோல் மெருகுடனிருக்கும் காலம். தோள்கள் மெலிந்து தேம்பியிருக்கும். அன்னையர் கைபட்டால் அத்தோள்கள் மேலும் முன்வளைந்து ஒடுங்கும். முதுகை வருடிக்கொண்டிருந்தால் அவர்களிடம் பொங்கிக்கொண்டிருக்கும் செயலூக்கம் மெல்ல அணைந்து கைவெம்மையில் துயிலும் குழவிகளென ஆவார்கள்.
குழந்தையுடலில் இருந்து எழுந்து அகல விழையும் குழந்தைகள் அவர்கள். அருகே அமரச்செய்தால் கைகால்கள் தளர, உடலுடன் ஒட்டிக்கொண்டு பேசத்தொடங்குவார்கள். சில தருணங்களில் அகவை குறைந்து மென்மழலை. சில தருணங்களில் மிகைவிசை கொண்டு உடைந்த சொற்களின் தெறிப்பு. அவர்களை குனிந்து நோக்கிக்கொண்டிருக்கையில் நெஞ்சும் வயிறும் நீர்நிறை வயல் என நெகிழ்ந்து ஒளிகொண்டுவிடும். அவர்களின் இமைகளின் பீலிகள் ஈரடுக்கு முடிகளால் ஆனவை. பெரிய கரிய விழிகள். உதடுகள் சிவந்து மென்மையாக ஒளிவிடும். கண்களில் எப்போதும் சிரிப்பும் பரபரக்கும் தேடலும் தென்படும். எதையாவது எடுத்துப் பார்ப்பார்கள். எதைக் கண்டாலும் “இதற்குள் என்ன உள்ளது?” என்பார்கள். அவற்றை உடைத்து நோக்க விழைகிறார்கள் என்பதற்கான சான்று. எந்தக் கூர்பொருளும் ஒருமுறையேனும் அவர்களைக் கவ்வி குருதிகொள்ளும். எங்கு அவற்றை மறைத்திருந்தாலும் அவர்களுக்குள் இருந்து ஒன்று அதை நோக்கி துழாவித் தேடிச் சென்றடையும்.
அவர்களின் புலன்கள் ஆயிரம்முறை தீட்டப்பட்ட கூரொளியுடன் ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தெழுகிறது. “புதிய ஆடை மணக்கிறதே, எவருடைய ஆடை?” என்று சுருதகீர்த்தி கேட்பான். “ஆடைமணமா? அப்படி ஒரு மணம் உண்டா?” என்று அவள் வியக்க தேவிகை “மூத்தவளே, இவன் ஒருமுறை உடைவாள் மணக்கிறது என்றான். என் அறையிலா, இங்கே ஏது உடைவாள் என்றேன். தேடிப் பார்த்தால் மஞ்சத்தில் ஆடைக்குள் அரசர் விட்டுச்சென்ற உடைவாள் கிடக்கிறது” என்றாள். “உடைவாளுக்கு குதிரையின் நாவின் மணம்” என்று சுருதகீர்த்தி சொன்னான். அவர்களின் செவிகளை புரிந்துகொள்ள தெய்வங்களாலும் ஆகாது. பேரொலிகளைக் கேட்டால் முகம் மலர்வார்கள். அது காற்றில் கதவுகள் அறைபடும் ஒலியென்றாலும்கூட. பேரொலிகள் விழவுகள்போல. ஆனால் அடுத்த அறையில் பட்டுச்சால்வை காற்றில் கீழே விழும் ஒலியையும் அவர்களால் கேட்கமுடியும்.
அபிமன்யு குனிந்தமர்ந்து கூர்ந்து நோக்கி “இந்த எறும்புதான்” என்றான். “என்ன அது?” என்று அவள் கேட்டாள். “அன்னையே, ஓர் எறும்பை நோக்கி அதை அடையாளப்படுத்தி பெயரிடுவோம். அதன்பின் அந்த எறும்பை மட்டும் விழிகளால் தொடர்ந்து அது என்ன செய்கிறது என நாளெல்லாம் நோக்கிக்கொண்டிருப்போம். இவன் மறுநாளும் அந்த எறும்பை அடையாளம் காண்பான்” என்றான் சுருதசேனன். அபிமன்யு எண்மரைவிடவும் ஒரு படி மேலானவனாகவே இருந்தான். அவனில் ஒரு நிலைகொள்ளாமை இருந்தது. “அது இரண்டு ஆளுமைகள் சரிவர இணையும்பொருட்டு அவனுள் நிகழ்த்திக்கொள்ளும் போர்… அவனுள் நிகழ்வது முடிவிலாத கிருஷ்ணார்ஜுனப் பூசல்” என்று ஒருமுறை முதுசெவிலி சொன்னாள். அவன் முகத்தில் இருவருமே இல்லை. அவன் தசைகளில் திகழ்ந்தது பலராமனின் தோற்றம். அசைவுகளில் அர்ஜுனன் எழுந்தான். உளம் மயங்கி ஊழ்கமென விழிமங்கும்போது இளைய யாதவர்.
அவன் அலைமோதிக்கொண்டே இருந்தான். அவ்வப்போது சினம் மீதூற தன் உடன்பிறந்தாருக்கு எதிராகவே வில் தூக்கினான். “வில்லை அவன் கருவிலேயே பயின்றிருக்கிறான். கை எழுவதற்குள் வில் எழுகிறது” என்று குந்தி சொன்னாள். “அவர்கள் அனைவரும் அவனை அஞ்சுகிறார்கள். அவனுக்கு எதிர்நிற்க சுருதகீர்த்தியாலன்றி எவராலும் இயலாது என்று பிரதிவிந்தியன் சொன்னான்.” “அவன் கொல்வேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். கொன்றால் மட்டுமே அடங்கும் ஒரு தெய்வம் அவனுள் உறைகிறது, அன்னையே” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “ஆசிரியர்கள் அவனுக்கு கற்பிக்க ஏதுமில்லை. அவனுக்கு அவர்கள் நினைவூட்டுகிறார்கள்” என்றான் யௌதேயன். அபிமன்யு உடன்பிறந்தாருடன் இணையவில்லை. ஆனால் அவர்கள் நடுவிலேயே இருந்தான்.
ஐவரைப் பெற்றிருந்தாலும் அவளுக்கு அவன்மேல் தனி ஈடுபாடிருந்தது ஏன் என அவள் உணர்ந்திருந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் செங்கழல்கொற்றவைக்கு குருதிபலி கொடுக்கும் ஆடிமாதக் கருநிலவின் இரவில் நூற்றெட்டு எருமைகளை கழுத்தறுத்து சோரி சேர்த்து குடம்குடமாக அன்னைமேல் ஊற்றி குருதியாட்டினர். வழிபட்டு நின்றிருந்தவர்களின் விழிகள் அஞ்சி, தவித்து, மெல்ல அமைந்து தொல்மலைத் தெய்வங்களின் வெறிப்பைக் கொண்டன. பெருமூச்சுடன் விலக்கம்கொண்ட சுபத்ரை அவளிடம் “எங்கே மைந்தன்?” என்றாள். அருகே நின்றிருந்த அபிமன்யுவைக் காணாமல் அவள் திரும்பி நோக்கினாள். அரசகுடியினர் மட்டுமே உள்ளே நுழைய இயலும் என்பதனால் சேடியரும் ஏவலரும் அங்கே இருக்கவில்லை.
அவள் சற்று அப்பால் கல்பதிக்கப்பட்ட புறமுற்றத்தில் அபிமன்யுவை கண்டாள். அவன் கால்களைத் தூக்கி வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவள் அருகே சென்றபோதுதான் அவன் செய்வதென்ன என்று புரிந்தது. அங்கே முழுக்காட்டிய கொழுங்குருதி வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவன் அதில் கால் அளைந்துகொண்டிருந்தான். அவளைக் கண்டதும் நிமிர்ந்து புன்னகைத்து “குருதி” என்றான். அவள் சிரித்து “ஆம், ஆனால் எருமைக்குருதி” என்றபின் தன் காலையும் தூக்கி குருதியில் வைத்தாள். அதில் உயிர்வெம்மை இருந்தது. அது மெல்ல துடிப்பதுபோல் இருந்தது. அக்கணம் அபிமன்யு சறுக்கி விழுந்தான். அவள் அவனை பிடிப்பதற்குள் மீண்டும் சறுக்கி புரண்டு எழுந்தான். உடலெங்கும் குருதி நனைந்து மூக்கிலிருந்து கொழுத்து சொட்ட அவளை நோக்கி சிரித்தான்.
கதவைத் தட்டியது அவன்தான். “எங்கே உடன்பிறந்தார்?” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “அவர்கள் விளையாட வருகிறார்களா இல்லையா?” என்று அவன் கேட்டான். அவள் நீள்மூச்செறிந்தாள். அவன் அவர்களைவிட உள்ளத்தால் மிகவும் முன்னாலிருந்தான். பன்னிரண்டு அகவைக்குள் பெண்களை அறிந்திருந்தான். மைந்தன் காமத்தை அறிந்துவிட்டான் என்று அன்னையர் எவ்வண்ணம் அறிகிறார்கள்? ஆனால் தெரிந்துவிடுகிறது. முதல்நாள் அவன் அரண்மனைக்குள் நுழைந்தபோது “எங்கு சென்றிருந்தாய்?” என்று கேட்டபடி அருகணைந்த சுபத்ரை நின்று “ம்?” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த திரௌபதிக்கும் அது தெரிந்துவிட்டிருந்தது. அபிமன்யு உள்ளே செல்ல சுபத்ரை அவளை நோக்கி புன்னகைத்தாள். அவளுக்கு மகிழ்ச்சியும் ஒவ்வாமையும் இணைந்தே உருவாயின. அவள் யார் என அறியும் விழைவு எழுந்ததுமே அதுகூடாதென்றும் தோன்றியது. அவள் எழுப்பும் அதிர்ச்சியையும் கசப்பையும் ஒருபோதும் தன்னால் கடக்க இயலாது.
இவை எங்கே நிகழ்ந்தன? நிகழாதவற்றை நினைவுகூர்கிறேன் என்றால் என் உள்ளம் நெறியழிந்துவிட்டிருக்கிறதா? இவர்களை இவ்வண்ணம் எங்கே கண்டேன்? அவர்களின் உடலில் இருந்து பெண்மை அகல்வதை காண்கிறேன். செல்லத் தொந்தி மறைகிறது. தோள்கள் உறுதியாகின்றன. புயங்களில் தசை இறுகி புடைக்கிறது. பழைய குழவி என எண்ணி தொட்டால் உடலில் மெல்லிய திமிறல் வெளிப்படுகிறது. அசைவென அல்ல. உள்ளிருக்கும் தசைகளில் மட்டும் நிகழும் ஒரு விலகல் என. அதுவரை அவர்கள் குரலில் இருந்த செவி துளைக்கும் கூர்மை மறைகிறது. சிரிப்பிலிருந்த மணியோசை அகல்கிறது. தாழ்ந்த குரலில் எண்ணங்களை ஏற்றிக்கொண்டு பேசக் கற்றுக்கொள்கிறார்கள். பல வினாக்களுக்கு விழிகளை விலக்கிக்கொண்டு மறுமொழி சொல்கிறார்கள். வினாக்கள் மேலும் முன்னகர்ந்தால் எரிச்சல் கொள்கிறார்கள்.
சொல்முட்டிக்கொண்டால் சீற்றத்துடன் கூச்சலிடுகிறார்கள். எதையேனும் எடுத்து வீசுகிறார்கள். பற்களை கடித்துக்கொண்டு கழுத்தில் நீலநரம்புகள் புடைக்க அவர்கள் கூவும்போது எங்கிருந்து எழுகிறது இந்த ஆற்றல் என்னும் வியப்பே அன்னையருக்குள் எழுகிறது. அது அவர்களை மகிழச் செய்கிறது. உதடுகளிலும் கண்களிலும் புன்னகையை மலர வைக்கிறது. அதைக் கண்டு அவர்கள் மேலும் சீற்றம்கொள்கிறார்கள். எப்போது அன்னையரை அவர்கள் பெண்களென எண்ணத்தொடங்குகிறார்கள்? பிற பெண்களை அன்னையரல்ல என்று உணரத்தொடங்கும் அதே அகவையில்தான். ஆனால் நோயுற்றால் மீண்டும் பைதலாகிவிடுகிறார்கள். கைகளை நீட்டி “அன்னையே” என முனகுகிறார்கள். மஞ்சத்தின் அருகே அமர்ந்திருக்கும்படி கோருகிறார்கள். உணவை சிற்றகப்பையால் அள்ளி வாயில் ஊட்டினால் முலை மாறா மதலை என உண்கிறார்கள்.
கனவுகண்டு எழுந்து அருகே வந்து படுத்துக்கொள்ளும் சுதசோமன் அவள் உடலில் பாதியளவு இருக்கிறான். அவன் கை நெஞ்சில் விழுந்தால் அதன் எடை அச்சுறுத்துகிறது. கழுத்தில் குரல்வளை புடைத்திருப்பதை, மார்பின் நடுவே அகல்சுடரின் கரித்தீற்றல் என மென்மயிர் எழுவதை, முகத்தில் பூஞ்சை என மீசைப்பரவல் வருவதை அன்னை விழிகள் எப்போதும் அறியாது கணக்கிட்டுக் கொள்கின்றன. மார்பின் மயிர்நிரை இறங்கி இடையாடைக்குள் சென்று மறைகிறது. தோளிலிருந்து புயங்களுக்கு இறங்கும் நரம்பு தடித்து முடிச்சுகளுடன் புடைக்கிறது. புறங்கையின் நரம்புகள் ஆலம்வேர்கள் என எழுகின்றன. குரல் உடைந்து பின் தடிக்கிறது. வேற்றறையில் பேசிக்கொண்டிருப்பது யுதிஷ்டிரன் என எண்ணிச் சென்று நோக்குகையில் அது பிரதிவிந்தியன் எனக் கண்டு எழும் திகைப்பில் மீண்டும் அவனை புதிதெனக் கண்டுகொள்கிறாள்.
தந்தையைப் போலவே நூலாயும் விழைவு. தந்தையைப் போலவே அன்றாடங்களில் தவிப்பும் இடர்களில் நிகர்நிலையும். தந்தையே மைந்தனாக எழுந்து நிற்பதைக் காண்கையில் தன்னை ஒரு வாயில் மட்டுமே என உணரும் அன்னையின் தவிப்பும் பின்னர் எழும் பெருமிதமும். அன்னையர் மைந்தரை காண்பதே இல்லை. அன்னையர் மைந்தரை நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அன்னையருள் மைந்தர் வளர்வதே இல்லை. அன்னைர் மைந்தரை அன்றாடம் மீண்டும் கண்டடைகிறார்கள். அன்னையரை மைந்தர் முற்றாகவே விலக்கி விடுகிறார்கள். அன்னையரின் உடலின் ஓர் உறுப்பென்றே என்றும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
அவள் ஆடிமுன் அமர்ந்திருந்தாள். அருகே ஏவல்பெண்டு நின்றிருந்தாள். அவள் திகைப்புடன் “என்ன செய்யவேண்டும்?” என்றாள். “நீங்கள் வந்து அமர்ந்தீர்கள், அரசி” என்றாள் ஏவல்பெண்டு. அவள் தன் குழலை நோக்கினாள். அதை நூறுமுறை கழுவிவிட்டிருந்தாள். எனினும் அதில் குருதியின் ஊன்மணம் எஞ்சியிருந்தது. எப்போதும் அவளுடன் அந்த மணம் உடனிருந்தது. இந்தக் கொடுங்கனவுகளை எழுப்புவது அது. காளராத்ரி அன்னையென உடனிருப்பது. அன்று தன்னினைவு மீண்டு மஞ்சத்தில் விழித்துக்கொண்டபோது சேடியர் அப்பால் நின்றிருந்தனர். அவள் முனகியபடி எழுந்தபோது அருகணைவதற்கு மாறாக அகன்றுசெனறனர். அவள் அமர்ந்துகொண்டு “என்ன?” என்றாள். தலையில் எடையை உணர்ந்து தொட்டுப்பார்த்து திடுக்கிட்டாள். சடைக்கற்றைகள்போல நீண்டு கிடந்தது அவளுடைய சாயல். “என்ன?” என்றபடி அவள் எழுந்து நின்றாள். “என்ன ஆயிற்று?” என கூவினாள்.
ஏவல்பெண்டு அருகே வந்து “அரசி, தாங்கள் அப்போது தன்னிலையில் இல்லை. உங்களில் எழுந்தவள் மாயை. அவள் அரசர் கொண்டுவந்த குருதியை அள்ளிப் பூசிக்கொண்டாள்” என்றாள். அவள் அக்கணமே அனைத்தையும் கனவிலெனக் கண்டு கதவைத் திறந்து வெளியே ஓடி நீராட்டறைக்குள் புகுந்து கலம் நிறைந்திருந்த நீரை அள்ளி தன்மேல் விட்டுக்கொண்டாள். பின்னால் ஓடிவந்த சேடியர் அவள் குழலை கழுவத்தொடங்கினர். சுண்ணமிட்டு முதல்முறை. சிகைக்காயும் திருதாளியுமிட்டு மீண்டும். அவர்கள் குழலைத் துடைத்து அகிலிட்டு உலரச் செய்தபின் அவள் அள்ளி முகர்ந்து நோக்கி முகம் சுளித்து மீண்டும் நீராட்டறைக்குச் சென்றாள். அன்று இரவெல்லாம் அவள் குழலை கழுவிக்கொண்டே இருந்தாள். மறுநாள் பகல் முழுக்கவும். கழுவக் கழுவ ஏறிவந்தது நிணத்தின் வாடை.
திரௌபதி எழுந்துகொண்டு கூடம் நோக்கி சென்றாள். மீண்டும் “மைந்தர் எவ்வண்ணம் இருக்கிறார்கள்?” என்றாள். அதற்குள் கூடம் அணுகிவிட்டமையால் ஏவல்பெண்டு ஒன்றும் சொல்லவில்லை. கூடத்தில் பீமன் நின்றிருந்தான். முதற்கணம் அவனை அவள் அடையாளம் காணவில்லை. பீமனை விழிகள் தேடியமையால் செம்மண் பூசிய உடலுடன் சிலை என நின்ற அவன் அவள் கண்களுக்கும் படவில்லை. அவனைக் கண்டு, மறுகணம் உணர்ந்ததும் அவள் மூச்சொலியுடன் சற்று பின்னடைந்தாள். உலர்ந்த குருதியும் செந்நிறச்சேறும் அதனுடன் கலந்த கரிச்சேற்றுப் பூச்சுமாக அவன் மேலும் பெருத்திருந்தான். அவனுடைய ஒரு கண் பிதுங்கி பாறையில் தவளை என மண்டையில் ஒட்டியிருந்தது. கன்னம் வீங்கி முகம் உருகி வழிந்தது போலிருந்தது. தோளும் வீங்கி இருமடங்காகி இருந்தது.
அவளைக் கண்டதும் அவன் மெல்ல அசைந்து அருகே வந்தான். முன்பிருந்தவன் அவன் உடலுக்குள் இருந்து அகன்று பிறிதொருவன் குடியேறிவிட்டிருந்ததை அவள் உணர்ந்தாள். அவள் முன் ஒரு மேலாடையை நீட்டி “இது அஸ்தினபுரியின் அரசன் துரியோதனனின் குருதி படிந்த மேலாடை. உன் கூந்தல் முடிவதற்கு என கொண்டுவந்தேன். அவனை நான் போரில் கொன்றேன். அவை நின்று தெய்வங்களிடம் அறைகூவிய வஞ்சினத்தை முடித்தேன். என் குலமகளின் நிறை பாரதவர்ஷம் முன்பு நிறுவப்பட்டுள்ளது” என்றான். அவள் வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றாள். அவன் அதை அவள் முன் நிலத்தில் இட்டு “என் பணி முடிந்தது. இதை உன் தலையில் சூடிய பின் நீ குழல் முடியலாம். உன் ஒரு சொல்லும் வீணாகவில்லை என உன் குலத்து மூதன்னையரிடம் கூறு” என்றபின் திரும்பினான்.
மறுவாயிலில் குந்தி வந்து நின்றிருந்ததை அவள் அப்போதுதான் கண்டாள். “அவன் உயிர்விட்டானா?” என்று கேட்டாள். “ஆம்” என்று பீமன் அவளை நோக்காமல் சொன்னான். “எஞ்சாமல் அழிந்தானா? ஒரு சொல்லையேனும் எவருக்கேனும் அவன் விட்டுச்செல்லவில்லை அல்லவா?” என்று அவள் மீண்டும் கேட்டாள். பீமன் “இல்லை, அவன் சுடர் அணைவதுபோல் எஞ்சாமல் மறைந்தான்” என்றான். குந்தி “அவர்கள் மூவரும் என்ன ஆயினர்? அஸ்வத்தாமனையும் கிருதவர்மனையும் கிருபரையும் எங்கேனும் கண்டீர்களா?” என்றாள். அதை அப்போதுதான் எண்ணி பீமன் தலைதூக்கி அவளை நோக்கி “அவர்கள் களம்பட்டிருக்கவேண்டும்” என்றான்.
குந்தி சீற்றத்துடன் “அறிவிலி… அவர்கள் அத்தனை எளிதாக மறைபவர்கள் அல்ல. அஸ்வத்தாமனின் வஞ்சம் அழிவிலாது நீடிக்கும் ஆற்றல்கொண்டது. எரிந்துகொண்டிருக்கும் கிருதவர்மன் தன் அகம் முற்றொழிவதுவரை அணையப்போவதில்லை” என்றாள். “அவர்களை தேடி கண்டுபிடிக்கிறோம்” என்று பீமன் சொன்னான். “என் ஆணை இது. செல்க, காடெங்கும் ஒரு மரப்பொந்துகூட எஞ்சாமல் அவர்களை தேடுக! கண்டுபிடித்து அழித்த பின்னர்தான் அஸ்தினபுரியின் அரியணையில் நீங்கள் உறுதியுடன் அமரமுடியும் என்று உணர்க!” என்றாள் குந்தி. பீமன் சினத்துடன் அவளை நோக்கி “இப்போர் முடிந்தது” என்றான். “எப்போரும் முழுமையாக முடிவதில்லை” என்று குந்தி சொன்னாள். பீமன் காலால் நிலத்தை ஓங்கி மிதித்து “என் வரையில் இப்போர் முடிந்துவிட்டது. எந்தப் போரிலும் முடிவிலாது உழல்வதற்கு நான் ஒருக்கமில்லை. என் கடன் நிறைவுற்றது. இனி என் வாழ்க்கை காட்டில்தான்” என்றபின் வெளியே சென்றான். “நில், எங்கே செல்கிறாய்?” என்று அவனை குந்தி தொடர்ந்தாள்.
திரௌபதி அந்த மேலாடையை பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் உடலில் பரவியிருந்த மெல்லிய நடுக்கத்தினூடாக ஓர் ஆழ்சொல் என ஏதோ எழுந்தது. அவ்வறையில் வேறு எவரேனும் இருக்கிறார்களா என்பதுபோல் அவள் சூழ நோக்கினாள். எவருமில்லை என உணர்ந்ததும் நெஞ்சுக்குள் மெல்லிய குளிர்போல் அந்த விழைவை அறிந்தாள். மீண்டும் நோக்கிவிட்டு காலை நீட்டி அந்தத் துணியை தொட்டாள். விதிர்ப்புடன் விலக்கிக்கொண்டாள். அவள் உடல் மெய்ப்பு கொண்டது. கைகளை நெஞ்சுடன் சேர்த்துப் பற்றியபடி பற்கள் உரசிக்கொள்ள கண்களில் நீர் கசிய எங்குமில்லாமல் சில கணங்கள் நின்றாள். மீண்டும் காலை நீட்டி அதை தொட்டாள். அறைக்குள் எவரோ நின்று நோக்கிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. எவர் என்று நோக்கியபோது வெளியே பீமனுடன் பேசும் குந்தியின் குரலையே கேட்டாள்.
குனிந்து அந்தத் துணியை எடுத்துக்கொண்டாள். அதை கைகளில் சுருட்டி முகத்தருகே கொண்டுசென்று முகர்ந்தாள். காய்ந்து கெட்டிப்பட்ட குருதியின் மெல்லிய சீழ்மணம். அவள் ஓடத் தொடங்கினாள். இரு இடங்களில் சுவரில் முட்டிக்கொண்டு மூச்சிரைக்க ஆடிமுன் சென்று அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த ஏவல்பெண்டு “அரசி” என்றாள். “என் குழலை ஐந்தாகச் சீவி பின்னலிடுக! இந்த ஆடையைக் கிழித்து கூந்தலில் கட்டுக!” என்று அவள் ஆணையிட்டாள். ஏவல்பெண்டு பாஞ்சாலத்தவள் ஆதலால் அதை உடனே புரிந்துகொண்டாள். “ஆணை” என்றபின் அந்தத் துணியை வாங்கினாள். அதில் குருதி படிந்து கரும்பசையாக ஒட்டியிருந்த பகுதியை மட்டும் கிழித்தாள். அதை தன் விரலால் நீவி எடுத்து அவள் குழலில் பூசினாள். விரைந்த கைகளால் அவள் குழலை நீவிப் பகுத்து ஐந்து திரிகளாக ஆக்கினாள். அவளுடைய கைகளால் குழல் அளையப்படுவதை நோக்கியபடி அவள் ஆடிமுன் அமர்ந்திருந்தாள். ஆடியில் தெரிந்த பாவை மாயையாக உருமாறும் என எண்ணினாள். அதன் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தாள்.