வாழ்விலே ஒருமுறை

வாழ்விலே ஒருமுறை வாங்க

அன்புள்ள ஜெ

வாழ்விலே ஒருமுறை படித்து கொண்டிருக்கிறேன். முன்பக்கமிருந்து சில கதைகள் (அனுபவங்களை) படித்து விட்டு இறுதியிலிருந்து முன்னோக்கி படித்தேன். ஏதேச்சையாக மகராஜபுரம் சந்தானம் பாடிய மருகேலர ஓ ராகவா பாடல் இரு நாட்களாக மனதிற்குள் தாளமிட்டுக் கொண்டிருந்தது. இப்புத்தகத்தில் அவரைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை படித்த பின் மீண்டும் ஒரு முறை கேட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை உங்கள் எழுத்து வாசிக்க வாசிக்க புதிய கண்டடைதல்களை தந்து கொண்டே இருக்கிறது. இசை, சிற்பங்கள், கோயில்கள், வரலாறு இலக்கியம், தத்துவம். காந்தி என நான் நினைப்பதெல்லாம் உங்கள் தளத்தில் கட்டுரைகளாக விரிந்து கிடக்கின்றன. உங்களை வாசிப்பதால் இவற்றையெல்லாம் நோக்கி போகிறேனா அல்லது எனக்குள் இருக்கும் ஆர்வம் உங்கள் எழுத்தின் மூலம் விரிவடைகிறதா என்று தெரியவில்லை.

நாகையில் ஒரு நாட்டியாஞ்சலி அதில் நடனமாடிய ஒரு பெண் டெல்லியில் இந்திய கோயில் கட்டிடகலை துறையில் முதுநிலை படித்தவர் என்று அறிந்தும் ரயிலுக்கு புரப்பட்டுக் கொண்டிருந்தவரிடம் ஒடிச்சென்று இந்திய கோயில்கள், வகைகள் அவற்றில் உள்ள சிற்பங்களைப் பற்றி அறிய பொது வாசகர்களுக்கு பயன்படும் படி எதாவது நல்ல புத்தகம் இருக்கிறதா? என கேட்டேன் அவர் T A.Gopinatha Rao என்று சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டார். நான் மனதிற்குள் துள்ளிக் குதித்தேன்.

இப்பெயரை கேட்டவுடன் உங்கள் தளத்தில் சிற்பங்கள் என்று அடித்து தேடிப்பார்த்தேன். இப்புத்தகத்தின் பெயர் இருந்தது. உபரித்தகவல் இதனை பின்பற்றி தமிழில் அ.கா.பெருமாள் அவர்கள் ஒரு புத்தகம் தமிழில் எழுத முயற்சிக்கிறார் என்பது! இப்படி எத்தனை என் தேடல்கள், புரிதல்கள், கண்டடைதல்களுக்கு நீங்கள் வழிகாட்டியாய் இருக்கிறீர்கள என நினைத்து வியந்து போகிறேன். கோயிலின் உட்பிரகராகத்தை சுற்றி வந்த போது ஒரு சிற்பத்தின் பெயரை கேட்டேன் தட்சிணாமூர்த்தி என்றார். தட்சிணாமூர்த்தி என்றால் குரு, ஆசிரியன், தென்றிசை முதல்வன் ஆலமர்ந்த ஆசிரியன், அச்சிலையை உற்று பார்த்தேன் அப்போது மனதில் தோன்றிய உருவம் யாரென சொல்ல முடியவில்லை. அவனை அகம் அறிந்து கொண்டிருக்கிறது.அதனை யாரிடமும் சொல்லப் போவதுமில்லை.

கதிரேசன்

நாகை

***

அன்புள்ள ஜெ

வாழ்விலே ஒருமுறை சிறுநூலை இன்றுதான் வாசித்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். வாழ்க்கைச் சித்திரங்கள். தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளைவிட செறிவும் உணர்ச்சிகரமும் உள்பாடங்களும் கொண்ட கதைகள். அனுபவக்குறிப்புகளின் வடிவம்தான். ஆனால் நான் இவற்றைச் சிறுகதைகள் என்றுதான் சொல்வேன்.

இக்கதைகளை சேர்க்காமல் தமிழின் சிறந்த சிறுகதைகளின் பட்டியல் முடிவடையாது என நினைக்கிறேன். ஒவ்வொரு கதையும் பலவகையில் நெஞ்சுக்குள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள். எவ்வளவு நிலங்கள். தமிழில் எவரேனும் இத்தனை முகங்களையும் மனிதர்களையும் எழுத்தில் காட்டியிருப்பார்களா என்றே சந்தேகம்தான். அதற்கான வாழ்க்கைவாய்ப்புகளே இங்கே முன்னோடி எழுத்தாளர்களுக்குக்கூட அமையவில்லை. உங்களுக்கு அனுபவங்கள் அள்ளித் தந்திருக்கிறது வாழ்க்கை. அவற்றை எழுதிக்குவிக்கும்படியான வாழ்க்கையும் அமைந்துவிட்டது.

எஸ்.சுப்ரமணியம்

***

முந்தைய கட்டுரைஇன்றைய காந்திகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமோடியும் முதலையும் -கடிதங்கள்-2