தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன் எழுந்து “அவர்தான்… ஆசிரியரின் மைந்தர்” என்று கூவியபடி தன் வில்லை நோக்கி பாய்ந்தான். “எப்படி தெரியும்?” என்று தன் வில்லை எடுத்தபடி எழுந்த சிகண்டி கேட்டார். “அவருடைய மூன்றாம்விழியை நான் பார்த்தேன். ஒரு கண மின் என்று அது தெரிந்தணைந்தது. அவர் அதை மறைத்துக்கொள்ள இயலாது” என்றபடி திருஷ்டத்யும்னன் அம்பறாத்தூணியை தோளில் மாட்டிக்கொண்டான். சிகண்டி புன்னகைத்து “மின்மினியைப்போல” என்றார். சாத்யகி “அவர்தான்…” என்றான். சிகண்டி “எந்நேரமும் இவன் அவர் தன்னை தேடிவருவதற்காக காத்திருக்கிறான். எல்லா அசைவும் அவராகத் தெரியும் நிலையை அடைந்துவிட்டான்” என்றார்.
“இது அவரே, அசைவுகளில் இப்போது நன்கு தெரிகிறது” என்றான் சாத்யகி. “அவர் எவருக்காக வருகிறார் என்று தெரியவில்லை. பாண்டவ அரசர்கள் எவரும் இங்கில்லை என அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கே ஒளியை பார்த்திருப்பார்கள். அல்லது புரவிவீரன் இங்கு வருவதை அவர்கள் பார்த்திருக்கலாம்” என்றான். சிகண்டி “ஆம், இந்த அறிவிலி அவர்களை இங்கே இட்டுவந்துவிட்டான். நாம் எச்சரிக்கையாக இருந்திருக்கவேண்டும்” என்றார். “இனி அதைப்பற்றி பேசிப் பயனில்லை. அவர்களை நாம் எதிர்கொண்டாகவேண்டும்… நம்மால் இயலும். முன்னரே அவர்களை களத்தில் எதிர்கொண்டு வென்றிருக்கிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், ஆனால் அப்போது அஸ்வத்தாமன் அறத்தோடு நின்றார். தன் அரிய அம்புகள் எதையும் வெளியே எடுக்கவில்லை. இப்போது நெறிமீறி அரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்துகொண்டுதான் வருகிறார் என்பதில் ஐயமில்லை. அதோ அந்தப் பந்த ஒளி அலைகொள்ளும் அசைவிலேயே அவருடைய வெறியின் விசை தெரிகிறது” என்றார் சிகண்டி.
திருஷ்டத்யும்னன் “நாம் எண்ணி அஞ்சவேண்டியதில்லை. அவர்களை சூழ்ந்துகொள்வோம். நம் ஆவநாழியில் அம்பும் கையில் வில்லும் இருக்கும் வரை நின்று போரிடுவோம். ஓர் இரவுதான். புலரிக்குள் இங்கே பாண்டவ அரசர்கள் வந்துவிடுவார்கள்” என்றான். சிகண்டி “அவர்களும்கூட அஸ்வத்தாமனை கொல்ல முடியாது” என்றார். “ஆனால் வெல்லமுடியும். ஏனென்றால் இதுவரை அனைவரையும் அவர்கள் வென்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வெல்லவேண்டும் என விழைகின்றன தெய்வங்கள்” என்றான் சாத்யகி. “இங்கே மைந்தர்தான் இருக்கிறார்கள் என நாம் எவ்வகையிலேனும் அவர்களுக்கு அறிவிப்பது நன்று. அவர் கொடிய அம்புகள் எதையும் எடுக்காமலிருக்கக்கூடும்” என்றான். சீற்றத்துடன் “அது நம்மை நாமே ஒப்புக்கொடுப்பது. அவர்களை அடிபணிந்து உயிர்கோருவது அதைவிட மேலானது” என்றான் திருஷ்டத்யும்னன். “நாம் களம்படலாம். ஆனால் போரிட்டு வீரர்களாகவே மடியவேண்டும்…”
சாத்யகி திரும்பி மனோசிலையை நோக்கினான். அதைச் சூழ்ந்திருந்த காட்டின் பெயர் சௌப்திகம் என்று ஒற்றன் சொல்லியிருந்தான். பதினெட்டு ஊர்கள் கொண்டது. எல்லாமே சிலைகள்தான். அடுத்திருக்கும் ஊர் ஸ்வப்னசிலை, அப்பாலிருப்பது போதசிலை. ஏன் இப்படி பெயர் வந்தது? “எழுக!” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “நல்லவேளை, இங்கே ஓலைக்குடில்கள் ஏதும் இப்போது இல்லை. இந்தச் சிற்றூரின் சுற்றுக்கோட்டை உயிர்மரங்களால் ஆனதாகவும் உள்ளது. இத்தகைய சிறிய காப்புவளைவுகளுக்குள் நின்று பொருதுகையில் எரியூட்டுவதே எதிரி செய்வது… இந்த மழையீரத்தில் அவருடைய எரியம்புகள் பயனற்றவை…” என்றான். சிகண்டி “மனோசிலை… ஊரை நோக்கி எந்த எதிரியையும் அழைத்துவரும் அறிவிப்பு அந்தக் கரும்பாறை” என்றார். “இங்கே பெரிய மரங்கள் இல்லை. மறைந்திருந்து போரிட பாறைகளும் இல்லை. மழையிருள் ஒன்றே நமக்குக் காப்பு…” என்றான் சாத்யகி. “அவர் எரியம்பு எய்தால் அது பயனற்றுப்போகும். நாம் அவரை நேருக்கு நேர் நின்று எதிர்கொண்டே ஆகவேண்டும்… இந்தத் தேரை தடைக்காப்பாக முன்னால் நிறுத்துவோம்… புரவிகளை பின்னால் கொண்டுசென்று கட்டுக! ஒருவேளை இங்கிருந்து அகல்வதென்றால் அவை தேவைப்படும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.
காட்டை நோக்கிவிட்டு “அணுகிவிட்டார்கள்!” என்று சாத்யகி சொன்னான். திருஷ்டத்யும்னன் “நான் முகப்பில் சென்று நின்று போரிடுகிறேன்… மூத்தவர் இங்கே முற்றத்தில் நின்றிருக்கட்டும். இல்லம் நோக்கி செல்லும் அம்புகளை அவர் தடுக்கவேண்டும். யாதவர் பக்கவாட்டில் காட்டுக்குள் புகுந்துவிடவேண்டும். போர் தொடங்கியதும் அவர்களை விலாப்பக்கமாக தாக்கவேண்டும்…” என்று ஆணையிட்டான். சாத்யகி “இங்கே போர் நடப்பதை நாம் முழவறைந்து அறிவிக்கவேண்டும் அல்லவா?” என்றான். திருஷ்டத்யும்னன் “கூடாது… இங்கு அவர்களின் வீரர்கள் எஞ்சியிருந்தால் தேடிவந்துவிடுவார்கள். ஒற்றனும் மருத்துவனும் இரு வழிகளிலாக காட்டுக்குள் செல்லட்டும். வழியில் நம் படையினரையோ ஒற்றர்களையோ கண்டால் இங்கே அவர்களை வரச்சொல்லட்டும்… ஆனால் குறிமொழி உசாவிய பின்னரே அவர்களிடம் பேசவேண்டும். குறிமொழி இன்றி அணுகுபவர் எவராயினும் எதிரிகளே” என்றான். சிகண்டி “மூவரும் அணுகிக்கொண்டிருக்கிறார்கள். மூவரிடமும் விற்களும் அம்புகளும் உள்ளன” என்றார்.
அதற்குள் முதல் இல்லத்தின் உள்ளிருந்து சதானீகன் கைகளை விரித்துக் கூச்சலிட்டபடி முற்றத்தில் இறங்கி ஓடி வந்தான். அவனுக்குப் பின்னால் பிரதிவிந்தியன் “இளையோனே, நில்… நில், இது என் ஆணை” என்று கூவினான். நிர்மித்ரனை நோக்கி “பிடி அவனை… அவனை தடுத்து நிறுத்து” என்று ஆணையிட்டான். நிர்மித்ரன் முற்றத்தில் இறங்குவதற்கு முன் முகப்புக் குடிலில் இருந்து சாத்யகி ஓடிச்சென்று அவனைத் தடுத்து “இளவரசர்கள் அனைவரும் இல்லங்களுக்குள் செல்க! கதவுகள் உள்ளிருந்து மூடப்படவேண்டும்…” என்றான். “அவரை நான் பார்க்கவேண்டும்… அவரிடம் நான் பேசவேண்டும்” என்று சதானீகன் கூவியபடி ஓடிவர அவனை எதிர்கொண்ட சாத்யகி ஓங்கி அறைந்து வீழ்த்தினான். நிர்மித்ரனிடமும் மருத்துவனிடமும் “அவரைத் தூக்கி உள்ளே கொண்டுசெல்க! கதவுகளை மூடிக்கொள்க… புண்பட்ட இளவரசர்கள் இங்கிருப்பதே வெளியே தெரியக்கூடாது” என்றான். “இது உள்ளே புண்பட்டுக்கிடக்கும் இளவரசர்களின் பாதுகாப்புக்காக. அவர்களால் எழ இயலாது. உங்கள் அறிவின்மையாலோ மிகையுணர்ச்சியாலோ அவர்களைக் கொல்ல உங்களுக்கு உரிமையில்லை” என்றான்.
நிர்மித்ரன் தயங்கியபின் பாய்ந்து ஓடிவந்து சதானீகனை தூக்கினான். மருத்துவனும் பிரதிவிந்தியனும் வந்து இணைந்துகொண்டு அவனைத் தூக்கி உள்ளே கொண்டுசென்றார்கள். கதவு இழுத்து மூடப்பட்டது. வெளியே இருந்து அதை தாழிட்டபின் மருத்துவஏவலனிடம் “புரவிகளை வலப்பக்கக் காட்டுக்குள் கொண்டுசெல்க! அவற்றை அழைப்பொலி கேட்கும் தொலைவில் கட்டிவிட்டு ஒன்றில் நீ மட்டும் காட்டுக்குள் செல்க! காட்டுக்குள் நம் ஒற்றர்களோ வீரர்களோ எங்கிருந்தாலும் தொடர்புகொண்டு இங்கு நிகழ்வதை அறிவி. பாண்டவ அரசர்களும் இளைய யாதவரும் இங்கே தாக்குதல் நிகழும் செய்தியை அறியவேண்டும்” என்றான். மறுபக்கம் வந்த ஒற்றனிடம் அதே ஆணையைப் பிறப்பித்தபடி பின்னடைந்து காட்டுக்குள் நுழைந்து அம்பறாத்தூணியை நிலத்தில் வைத்துவிட்டு முழந்தாளிட்டு அமர்ந்தான். அவர்கள் இருவரும் இரு பக்கங்களிலாக விலகிச் சென்றார்கள். காட்டுக்குள் பறவைகளின் ஓசை அவர்கள் செல்வதை காட்டியது. அதுகூட நன்றே, எவரோ செல்கிறார்கள் என எண்ணி அவர்களின் உளம் கலையுமென்றால் ஒருவரை குறைக்கமுடியும். ஓர் இரவு கடந்துசெல்லவேண்டும். இருண்ட நீண்ட இரவு.
காட்டுக்குள் தீப்பந்தத்தின் தழலசைவு தெரியத்தொடங்கியது. ஒளிபட்ட மரங்கள் கனன்று கனன்று முகம்காட்டி இருளில் மூழ்கி பின்மறைய மூவரும் அணுகிக்கொண்டிருந்தனர். சாத்யகி தன்னுள் எழுந்த படபடப்பை நோக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் உள்ளத்தில் அமையாது பதறிச் சுழன்றன. கைதொட்டு அம்பெடுத்து போர்புரிய முடியுமா என்பதே ஐயமாக இருந்தது. திருஷ்டத்யும்னன் எங்கிருக்கிறான் என்று உணரமுடியவில்லை. அவன் குடில்முகப்பின் இருளில் மூழ்கி மறைந்துவிட்டிருந்தான். ஒளிப்புள்ளி தயங்கி பின்னர் நிலைத்தது. சாத்யகி அதையே நோக்கிக்கொண்டிருந்தான். வஞ்சம் கொண்ட ஒரு விழி. அவருக்கு நுதல்விழி உண்டு என்கிறார்கள். அவர் சிவனின் கூறு என்கிறார்கள். இளமையில் துரோணர் மூவிழியனின் மகாருத்ர நுண்சொல்லை அவருக்கு மட்டும் அளித்தார். அதை அறுபதாண்டுகளாக ஒவ்வொரு நாளும் பன்னிரண்டாயிரம் முறை கூறிவருகிறார். அவருடைய நரம்புகளின் துடிப்பாகவே அது ஆகிவிட்டிருக்கிறது. அவர் இன்று அதை கூறவே வேண்டாம். அவரே அதுவாகிவிட்டார். அவருடைய அம்புகளில் மூவிழியனல் எழும். அவருடன் சிவகணங்கள் வந்துகொண்டிருக்கும். அவன் பெருமூச்சுவிட்டான்.
விம் என நாணொலி எழுந்தது. அம்பு சீறி வந்து அவர்கள் அமர்ந்திருந்த குடிலை தாக்கியது. அது அவர்களை கலைப்பதற்காக என்று தெரிந்தது. சிறு ஒலிகூட அவருக்கு காட்சியாகத் தெரியும். திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்தவனாக அசைவின்றி அமர்ந்திருந்தான். ஆனால் அந்த அம்பு விழுந்ததுமே அவன் தலைக்கு மேலிருந்து வௌவால் எழுந்து பறந்தது. அடுத்த கணம் அஸ்வத்தாமனின் அம்பு வந்து அவனை அறைந்தது. அவன் எழுவதற்குள் மேலும் மேலும் அம்புகள் வந்து அவன்மேல் பதிந்தன. சாத்யகி தன் வில்லை நிறுத்தி ஊர் நோக்கி காட்டிலிருந்து புதர்களுக்குள் நீரோடை என ஓசை மட்டுமாக ஒழுகி வந்துகொண்டிருந்த மூவரையும் அறைந்தான். கிருதவர்மன் திரும்பி அவனை எதிர்கொண்டான். அம்பின் முழக்கத்தைக்கொண்டே அதை அறிந்து தடுத்தான். இருளுக்குள் அம்புகள் சிணுங்கிக்கொண்டன. சிலைத்தன. சிலம்பின. உதிர்ந்து ஓசையழிந்தன. முற்றத்திலிருந்து சிகண்டியும் அம்புகளை ஏவினார். கிருபர் அவரை எதிர்கொண்டார்.
திருஷ்டத்யும்னன் தன்னை இழுத்துக்கொண்டுசென்று நின்றிருந்த தேருக்குப் பின் மறைந்தான். அங்கே உடலை சுருட்டிக்கொண்டபடி அம்புகளால் அஸ்வத்தாமனை தாக்கினான். கிருபர் வெறிகொண்டு கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். கிருதவர்மனும் “வெளியே வா… எவராக இருந்தாலும் வா வெளியே!” என்று கூச்சலிட்டான். அம்புகளை இலக்கு கூருந்தோறும் சாத்யகியின் கண்கள் தெளிவடைந்தன. அஸ்வத்தாமன் அம்புகளினூடாகவே சென்று திருஷ்டத்யும்னனை அடைந்தான். அவன் உடலில் அம்புகள் முள்ளம்பன்றி முட்கள்போல் நிற்பதை காணமுடிந்தது. அவன் அவ்வாறு எழுந்து வருவதைக் கண்டதும் திருஷ்டத்யும்னனின் கைகள் தளர்ந்தன. அவன் உடலில் அம்புகள் பாய்ந்திருக்கக்கூடும். அவனுடைய குருதி வழிந்தோடிக்கொண்டிருக்கக்கூடும். அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை சென்றடைந்ததும் எம்பி இடக்காலால் அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான். அவன் மல்லாந்து விழ அவன் கழுத்தை மிதித்து தன் வில்லின் நாணை அவிழ்த்தான். திருஷ்டத்யும்னன் அவன் காலை தன் கைகளால் அறைந்தபடி “அந்தணரே! அந்தணரே!” என்று கூவினான்.
அஸ்வத்தாமன் நாணை அவன் கழுத்தைச் சுற்றி இறுக்கி திருஷ்டத்யும்னனை இழுத்துச்சென்றான். புலி தன்னைவிடப் பெரிய எருமையைக் கவ்வி கொண்டுசெல்வதுபோலத் தோன்றியது. தன் இடையிலிருந்த தோலில் அப்போதும் கனன்றுகொண்டிருந்த கொள்ளியைச் சுழற்றி அவன் குடிலின் கூரைமேல் வீச அது நீல ஒளியுடன் பற்றிக்கொண்டது. அந்த வெளிச்சத்தில் சாத்யகி அங்கே நிகழ்வதை கண்டான். திருஷ்டத்யும்னன் அஸ்வத்தாமனின் கால்களை கைகளால் பற்றிக்கொண்டு உரத்த குரலில் மன்றாடினான். “ஆசிரியரே, எனக்கு உகந்த இறப்பை அளியுங்கள்… என்மேல் அளி கொள்ளுங்கள். ஷத்ரியனுக்குரிய சாவை எனக்கு அளியுங்கள்!” அவன் தலைமயிரை பற்றிச் சுழற்றித் தூக்கி அவன் முகத்தில் உமிழ்ந்தான் அஸ்வத்தாமன். “கீழ்மகனே, படைக்கலம் இன்றி தேரிலமர்ந்திருந்த ஆசிரியரின் தலையை அறுத்து வீசியவன் நீ. அவர் உடலை எட்டி உதைத்தவன் நீ. நெறி குறித்தோ அளி குறித்தோ உன் நாவால் பேசுகிறாயா?” என்று கூவினான். “அளி என நீ பேசியதனால் உனக்கு புழுவின் சாவை அளிக்கிறேன். நீ மறுபிறப்பில் புழுவென்றாகி நெளிக! ஒளியே அறியாத இருட்புழுவாக ஆகுக!” ஆனால் திருஷ்டத்யும்னன் எண்ணும் திறனை இழந்துவிட்டிருந்தான். “ஆசிரியரே! ஆசிரியரே! ஆசிரியரே!” என வீறிட்டுக்கொண்டே இருந்தான்.
அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனின் நெஞ்சிலும் இடைக்குக் கீழே உயிர்க்குலையிலும் மிதித்தான். அவன் தோள்பூட்டுகளை மிதித்து உடலை செயலிழக்கச் செய்தான். அவன் குரல் உடைந்து விலங்கின் ஓசைபோல் மாறிவிட்டிருந்தது. கழுத்து அறுபடும் ஆட்டின் ஓசை. அதில் வீரம், ஆணவம், தன்னிலை ஏதும் வெளிப்படவில்லை. அவையெல்லாம் சொற்கள். சொற்களில்லாத உயிரின் ஒலி வெறும் மன்றாட்டு மட்டுமே. சாத்யகி வில்தாழ்த்தி தேவதாரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். உடலை அடிமரத்துடன் இணைத்தபடி நடுங்கிக்கொண்டு நோக்கினான். பின்னர் கால்தளர்ந்து வேர்க்குவைக்குள் ஒடுங்கினான். அஸ்வத்தாமனின் பின்பக்கம் இல்லத்தின் கதவு அதிர்ந்தது. பலமுறை அதிர்ந்த பின் அது உடைந்து திறந்து உள்ளிருந்து சதானீகன் தடுமாறியபடி வில்லுடன் வெளியே வந்தான். திண்ணையில் நின்றபடி அஸ்வத்தாமன் மேல் அம்புகளை தொடுத்தான். உள்ளே வேறு விற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அஸ்வத்தாமனின் அசைவால் அம்புகள் ஏதும் அவன் மேல் படவில்லை. சிகண்டி அம்புகளால் அஸ்வத்தாமனை தொடர்ச்சியாக தாக்கினார். கிருதவர்மனும் கிருபரும் இணைந்து சிகண்டியை செறுத்தார்கள். சிகண்டி வெறிகொண்டவர்போல் ஊளையிட்டார். வில்லை நிலத்தில் ஓங்கி அறைந்தார். அவர் உடலெங்கும் அம்புகள் பாய்ந்திருந்தன.
அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை மாறிமாறி வெறியுடன் மிதித்தான். அவன் உடலின் அனைத்து உறுப்புகளையும் மிதித்தே சிதைத்தான். திருஷ்டத்யும்னனின் உடலில் இருந்து பிரிந்த உயிர் குரல்கொண்டதுபோல அவன் கதறல் வேறெங்கிருந்தோ என எழுந்தது “ஆசிரியரே! ஆசிரியரே! ஆசிரியரே!” என்னும் ஓலத்துடன் திருஷ்டத்யும்னன் நிலத்தில் கிடந்து நெளிந்தான். “ஆசிரியரே! ஷத்ரியன், ஆசிரியரே. நான் ஷத்ரியன், ஆசிரியரே!” என்று அவன் குரல் குழைந்தது. அக்குரல் மேலேயே மிதிகள் விழுவதுபோலிருந்தது. அக்குரல் நெளிந்து சிதைந்து உருவழிந்தது. “ஷத்ரியன், ஆசிரியரே!” சொற்கள் துணுக்குகளாகி இருளில் பரவின. ஓய்ந்து அவை அமைதியாக மாறிய பின்னரும் அஸ்வத்தாமன் உதைத்துக்கொண்டே இருந்தான். பின்னர் பற்களை நெரித்தபடி சிகண்டியை ஏறிட்டு நோக்கினான். சிகண்டி கண்ணீருடன் நெஞ்சிலறைந்தபடி “கீழ்மகனே, ஒரு ஷத்ரியனை இழிவுபடுத்திய நீ ஒருபோதும் மீட்படையப் போவதில்லை!” என்று கூச்சலிட்டார். “மீட்பு!” என்றபின் துப்பியபடி அஸ்வத்தாமன் சிகண்டியை நோக்கி சென்றான். சிகண்டி அஸ்வத்தாமன் நேராக அம்புகளுக்கு நெஞ்சுகாட்டி அணுகியமை கண்டு ஒரு கணம் திகைக்க காற்றிலெழுந்தவன்போல பாய்ந்து சென்று இடையிலிருந்து உருவிய உடைவாளால் சிகண்டியின் தலையை வெட்டி நிலத்திட்டு காலால் ஓங்கி உதைத்து தெறிக்கச் செய்தான். வெட்டுண்ட உடல் நின்று தடுமாறி விழுந்து துள்ளியது.
சாத்யகி விலங்குபோல கூச்சலிட்டபடி எழுந்து முற்றம் நோக்கி ஓடினான். அவனை கிருபரின் அம்புகள் வந்து அறைந்து சரித்தன. அவன்மேல் கூரலகு கொண்ட பறவைகள்போல் வந்து மொய்த்துக்கொண்டன. அவன் சருகுகள் மண்டிய சரிந்த நிலத்தில் உருண்டுசெல்லத் தொடங்கியமையால் அவை அவனை அடையாமல் மண்ணில் ஊன்றி நின்று நடுங்கின. அவன் நினைவழிந்து விழுந்துகொண்டே இருப்பதைப்போல் உணர்ந்தான். கிருதவர்மன் “எங்கே அவன்? அவனை எஞ்சவிடலாகாது… அவன் என் முதல் இலக்கு…” என்று கூவுவது கேட்டது.
கிருபரிடம் திரும்பி “நோக்குக!” என்றபடி அஸ்வத்தாமன் இல்லத்திற்குள் செல்ல அங்கே அம்புகள் பட்டு விழுந்துகிடந்த சதானீகன் கையூன்றி எழுந்து அமர்ந்தான். திரும்பிக்கூட நோக்காமல் அவன் தலையை வெட்டி உருட்டினான் அஸ்வத்தாமன். அலறியபடி பாய்ந்துவந்த நிர்மித்ரனின் தலையையும் வெட்டி விழச் செய்தான். குருதி கொப்பளிக்கும் உடல் முன்னால் சரிந்து விழுந்தது. உள்ளிருந்து தள்ளாடியபடி சுவரில் சாய்ந்து அணுகிய சுருதகீர்த்தி கீழே கிடந்த வில்லை எடுத்து அஸ்வத்தாமனை நோக்கி அம்பை செலுத்தினான். அந்த அம்பை உடல் நெளித்து ஒழிந்து பாய்ந்து அவன் தலையை வெட்டினான் அஸ்வத்தாமன். சுருதகீர்த்தி பயின்ற தேர்ச்சியுடன் உடலை வளைக்க அவன் தோளில் அவ்வெட்டு பட்டது. அவன் மல்லாந்து விழுந்தான். அவன் நெஞ்சில் மிதித்து ஏறி அஸ்வத்தாமன் நீட்டிய வாளுடன் இல்லத்திற்குள் புகுந்தான்.
யௌதேயனும் பிரதிவிந்தியனும் நடுங்கியபடி கைகளை நெஞ்சோடு கூட்டி விழிகள் பிதுங்கியிருக்க சுவர் சாய்ந்து நின்றிருந்தார்கள். சுதசோமனும் சர்வதனும் மஞ்சத்தில் கிடந்தனர். யௌதேயன் இடறிய குரலில் “கொல்லுங்கள் ஆசிரியரே, அதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது” என்றான். “ஆம், ஆசிரியரைக் கொன்ற பழி எங்கள் குடியிலிருந்து இவ்வண்ணமேனும் அகல்க!” என்றான் பிரதிவிந்தியன். அஸ்வத்தாமன் விலங்குபோல் உறுமியபடி பாய்ந்து சென்று ஒரே வீச்சில் யௌதேயனை வெட்டினான். மஞ்சத்திலிருந்து எழுந்த சுருதசேனன் அஸ்வத்தாமனை நோக்கி பாய்ந்து அவனை வெறும்கைகளால் பற்றிக்கொண்டான். அவனைத் தூக்கி மண்ணில் அறைந்து அவன் கழுத்துக்குழியின் நரம்புமுடிச்சில் மிதித்து செயலறச் செய்தபின் வெட்டுண்டு சரிந்த யௌதேயனின் தலையை துண்டித்தான். குருதி பிரதிவிந்தியனின் மேல் பட்டது. அவன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டமையால் அஸ்வத்தாமனின் வெட்டு அவன் தோளில் விழுந்தது. அவன் கீழே விழுந்து முனகலுடன் நடுங்கிக்கொண்டிருந்தான். அஸ்வத்தாமன் மஞ்சத்தை நோக்கி சென்றான். சர்வதனும் சுதசோமனும் இமைக்காத விழிகளுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் புன்னகை செய்வதுபோலத் தோன்றியது. ஒருகணம் இருவரும் துரியோதனனைப்போல் விழிமயக்கு காட்ட அஸ்வத்தாமன் நோக்கை திருப்பிக்கொண்டு அவர்கள் இருவரின் தலைகளையும் வெட்டினான். வாயில் குருதி புகுந்துவிட்டதுபோல மீண்டும் மீண்டும் காறித் துப்பியபடி வெளியே சென்றான்.
தொலைவில் குதிரைகளின் குளம்படிகள் ஒலித்தன. கிருதவர்மன் “படை ஒன்று வருகிறது, பாஞ்சாலரே. பெரும்பாலும் அது அரசியரை அழைத்துவரும் படையாக இருக்கலாம்” என்று கூவினான். “நோக்குக!” என்றபடி அஸ்வத்தாமன் இரு இல்லங்களையும் மாறிமாறி நோக்கியபின் கீழிருந்து வில்லை எடுத்து நாணேற்றி எரிந்துகொண்டிருந்த குடிலில் இருந்து அனலை அம்பு ஒன்றால் தொட்டு பற்றவைத்து அந்த இல்லத்திற்குள் ஏவினான். உள்ளே அது நீலநிறமாக வெடித்து பற்றிக்கொண்டது. அதிலிருந்து பொறிகள் கிளம்பி வெவ்வேறு இடங்களில் விழுந்து எழுந்தன. காட்டுக்குள் பறவைகள் கலைந்த ஓலம் எழுந்தது. ஊர் நோக்கிவரும் சாலையில் புரவிகள் குளம்புகள் ஒலிக்க வந்தன. அங்கிருந்து அம்புகளும் கூச்சல்களும் எழுந்தன. கிருபரும் கிருதவர்மனும் திரும்பி அவர்களை நோக்கி அம்புகளை தொடுத்தனர். முன்னால் வந்தவர்கள் அலறி வீழ்ந்தனர். பின்னால் தேரிலிருந்து பெண்களின் அலறலோசைகள் கேட்டன.
வில்தாழ்த்தி அஸ்வத்தாமன் அனலெழுவதை நோக்கி நின்றான். எரி உள்ளே இருந்து நாநீட்டி கதவுப் படல்களை எரித்துக்கொண்டு மேலேறியது. கல்ஓடுகளைத் தாங்கியிருந்த தடித்த தேவதாரு மரச்சட்டங்கள் எரிந்து தழலுடன் வெடித்து கொழுந்து சூடின. தீத்தழல்கள் ஓடுகளினூடாக வெளியே எழுந்து செந்நிறப்புகைபோல் அசைந்தன. கூரை எரிந்தபடியே முறிந்து உள்ளே அழுந்த உள்ளிருந்து அனல் பீறிட்டெழுந்து வான் நோக்கி தாவியது. எரியும் அனலுக்குள் இருந்து எவரோ எழுந்து வெளியே பாய முயல்வது போலிருந்தது. அஸ்வத்தாமன் தன் அம்பால் அந்த உடலை அறைந்து அனலுக்குள் வீழ்த்தினான். இரண்டாவது இல்லத்தின் கூரையும் எரியில் அமிழ்ந்தது. சுவர்கள் வெடித்துச்சரிய உள்ளே தீ கொந்தளித்து நிறைந்திருப்பது தெரிந்தது. அனைத்து இடைவெளிகளினூடாகவும் கொழுந்துகள் நாநீட்டி தாவின.
“செல்வோம், பாஞ்சாலரே” என்று கிருதவர்மன் சொன்னான். “வருவது யார், பாண்டவர்களா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அல்ல, பெண்டிர். பெரும்பாலும் அது யாதவப் பேரரசியும் பாஞ்சாலப் பேரரசியும்தான்…” என்று கிருதவர்மன் சொன்னான். இளித்தபடி “மைந்தர்கள் எரிவதை பாஞ்சாலத்தாள் காணட்டும்… குருதிபடிந்த குழலை புகையிட்டு உலர்த்தட்டும்…” என்றான். வெடித்து நகைத்து கைவீசி அந்த இளிவரலை அவனே விரும்பி “தேவதாருப் புகை… எரியும் ஊனின் நெய்ப்புகை! ஆ!” என்று கூச்சலிட்டான். கிருபர் ஒவ்வாமையுடன் “செல்வோம், பாஞ்சாலனே” என்றார். கிருதவர்மன் “இந்நெருப்பை நோக்கி விடாய் அடங்கவில்லை. இங்கிருந்து செல்லவும் தோன்றவில்லை. இங்கே நிற்போம்… இதை அவள் எப்படி நோக்கி மகிழ்கிறாள் என்று காண்போம்” என்றான். கிருபர் அம்புகளைத் தொடுத்தபடியே “நாம் செல்வதே நன்று. நமக்கு ஒரு கடன் இருக்கிறது. இச்செய்தியை அரசருக்கு தெரிவிக்கவேண்டும்” என்றார். கிருதவர்மன் “அவள் கண்ணீரையும் ஓர் அம்புமுனையால் தொட்டு கொண்டுசெல்வோம்!” என்றான். கிருபர் “அறிவிலி…” என்று பற்களைக் கடித்தபடி கூவினார்.
விழியோரம் ஏதோ தெரிய அஸ்வத்தாமன் திரும்பி நோக்கினான். அங்கே எரிதழலுக்குள் அசைவு ஒன்று தோன்றியது. உறுமியபடி அவன் அம்புகளைத் தொடுத்தான். அவை தழலுக்குள் சென்று விழுந்தன. அசைந்த உருவம் மானுட உருக் கொண்டது. மெல்ல திரண்டு எழுந்தது. கரிய புகையுருவமாக எட்டு கைகளிலும் படைக்கலங்களுடன் தோன்றியது. நீண்ட குழல் செந்தழலால் ஆனது. மண்டையோடுபோன்ற முகத்தில் நோக்கில்லாத இரு கருங்குழிகள் போன்ற கண்கள். அஸ்வத்தாமன் அந்த உளமயக்கை எண்ணி தன்னை துலக்கிக் கொள்வதற்குள் கிருதவர்மன் “அனலில் எழுகிறாள்! அவள் பெயர் காளராத்ரி… துர்க்கையின் இருள்தோற்றம். பேரழிவின் வடிவு” என்றான். கிருபர் “எங்கே? என்ன சொல்கிறாய்?” என்று அச்சத்துடன் கூவினார். “நான் அவளை கனவில் கண்டேன்… நிமித்திகரிடம் கேட்டேன்” என்றான். கிருபர் “எங்கே?” என்று மீண்டும் கேட்டார். “அதோ!” என்று கிருதவர்மன் சுட்டிக்காட்டினான்.
மேலும் படைவீரர்கள் வந்துசேர பாஞ்சாலர்கள் போர்க்கூச்சலிட்டபடி எரியும் ஊரை நோக்கி வந்தனர். அம்புகள் இருளிலிருந்து பெருகி வந்து அவர்களை சூழ்ந்துகொண்டன. அஸ்வத்தாமன் வில்லேந்தி அம்புகளைத் தொடுத்தபடி அவர்களை நோக்கி சென்றான். எரியும் அனலின் ஒளியில் அவன் உடலே தழலாடுவதுபோல் தோன்றியது. அவன் நெற்றியிலிருந்த அருமணி அசைவில் செஞ்சுடர்விட்டது. கிருதவர்மன் காட்டுக்குள் நோக்கியபடி “அவன் எங்கே? யாதவக் கீழ்மகன்? அவனைக் கொன்று அந்த இளைய யாதவன் முன் போட்டால் மட்டுமே நான் வென்றவன்” என்றான். கிருபர் “அவனுக்கான களம் இது அல்ல… இக்காட்டுக்குள் நாம் இப்போது தேடி அலைய முடியாது” என்றார். “அவன் எஞ்சும் நஞ்சு… அவன் எனக்கான பகை” என்று கிருதவர்மன் கூவினான்.