நடனம்

விஜி வரையும் கோலங்கள்

வாழ்க்கையிலிருந்து பேசுவது…

சமீபத்தில் போகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி தன் முகத்தை இளமையான முகமாகவும் முதியமுகமாகவும் ஆக்கிப்பார்த்ததைப் பற்றிச் சொன்னார். இளமையான முகம் அப்படியே அவர் மகன் முகம்போலிருந்தது. அதைக்கண்டு போகன் சோர்ந்துவிட்டார். “சொந்தமாக ஒரு முகம் வைத்துக்கொள்ளக்கூடவா உரிமை இல்லை நமக்கு?” என்பதுபோல

என் முகம் என் அப்பாவின் முகம்போல ஆகிவிட்டதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. சாயலே இல்லை என்றுதான் நான் நம்பியிருந்தேன். ஆனால் வேறுவழியில்லை, அவரை நோக்கித்தான் சென்றாகவேண்டும். அப்படித்தான் சொல்கிறது அறிவியல். மானுடரின் பெரும்பாலான நோய்கள், நோய்களுக்கான வாய்ப்புகள் பாரம்பரியமானவை. பெரும்பாலான இயல்புகள் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் வருபவை.

அப்படியானால் சொந்தமாக ஒன்றுமில்லையா? சொந்தமாக எதையாவது உண்டுபண்ணிக்கொள்ள  விரும்பி நாம் கொள்ளும் இந்த அலைக்கழிவுகளும் தத்தளிப்புகளும் ஆணவங்களும் மட்டும்தான் சொந்தம் போலிருக்கிறது. என் தந்தையின் ஒரு கைதான் நான். என் உறுப்புகளே என் குடி. ஆயினும் இந்தச்சாலையில் என்ன அலைக்கழிதல்.

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?

1

சாலையின் மத்தியில் ஆலிலை ஒன்று
சற்றே பழுப்பு சற்றே பச்சை
நிமிர்ந்து நிற்கிறது
அந்த பக்கமாக வாகனம் செல்கையில்
இந்த பக்கமாக சுழன்று
திரும்புகிறது
இந்த பக்கம் வாகனத்திற்கு அந்த பக்கம்

ஒற்றைக்கால் நடனம்

என்ன நினைத்தானோ சிறுவன்
ஊடே புகுந்து
இலையை
ஓரத்திற்கு உயரே
எறிந்தான்

நடனம் இப்போது மேலே
பறக்கிறது.

2

ஒன்பது மகன்களை பெற்ற
அப்பாவின் இளைய மகன்
அப்பாவின் ஒரு கைமட்டும் பறந்து செல்வது போல
வாகனத்தில் விரைகிறான்
அப்போதுதான் கவனித்தேன்
மீதமுள்ளோர்
மீதமுள்ள அவயங்களாயிருப்பதை

ஒன்பது அவயங்கள்
பதினெட்டு கைகள் கால்கள் கண்கள் செவிகள்
ஒரே புருஷன்

3

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?
மிச்சம் வைத்த ஆசைகள்
மிச்சம் வைத்த தகிப்புகள்
மீதமிருக்கும் தாகங்கள்
மீதமிருக்கும் வஞ்சம்
உறுப்பு தேடித் கொண்டிருக்கின்றன
ஒவ்வொன்றும்

4

சரியாகவே வாழ்ந்ததாகச் சொல்லி ஒரு பிழை விட்டீர்கள்
அந்த பிழையே நானாக வளர்ந்து பெரிதானது
இந்த பிழையைக் கொண்டு போய் அந்த இடத்தில்
நட்டு வைக்க வேண்டும்
இல்லாமல்
தர்க்கம் பண்ணுவதில்
ஒரு பலனும் இல்லை

5

நீ செய்ததை நீ மட்டுமே
எடுக்க முடியும்
நீ செய்தது சீறுமானால் அதுவும் நீ செய்ததுவே
நீ செய்தது பணியுமானால் அதுவும் நீ செய்ததுவே

6

யாருக்கோ நடப்பவையெல்லாமே
எல்லோருக்குமே நடக்கும்
இன்பமானாலும் சரிதான்
துன்பமானாலும் சரிதான்

எடுத்தகற்ற விரும்பினால்
யாருக்கோ நடக்கையில் எடுத்தகற்றவேண்டும்
இன்பமென்றாலும் சரிதான்
துன்பமென்றாலும் சரிதான்

7

அதர்மம்
காத்திருந்து அழும்
அப்போதும் அதற்கு அது
தனது அதர்மம்
என்பது
விளங்காது

அதனால்தான் அது அதர்மம்

8

என் கையில் எல்லாம் ஒழுகுகிறது
என்னது இது சிவன் கை
பாத்திரமல்லவா ?

என் கையில் ஏன்
இருக்கிறது

9

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம்
ஜீவகாருண்யம்

10

எம தர்மனைப் பார்த்துத் திரும்பியவன்
சொல்கிறான்
எம தர்மனும்
தர்மன்தான் என்பதை

கவிதையை பொதுவாசகர்கள், புதிதாக உள்நுழைபவர்கள் வாசிப்பதற்கு அடையும் தடை என்பது அதை கதைபோல ஒரு சூழ்புலத்தில் [conrtext] பொருத்திக்கொள்ள முடியவில்லை என்பதே. உண்மையில் வழக்கமான கவிதை வாசகர்கள், கவிஞர்கள் கூட ஓரிரு சூழ்புலத்தை மட்டுமே அறிந்திருக்கிறார்கள்.அதில் அனைத்தையும் பொருத்தி பொருள் கொள்கிறார்கள்.பொருள்கொள்ள முடியாதனவற்றை நிராகரிக்கிறார்கள்.  மரபான கவிதைக்கு என சில வழக்கமான சூழ்புலங்கள் இருந்ததைப்போலவே நவீனக் கவிதைக்கும் உருவாகி வந்துள்ளது

அந்த எல்லையைக் கடந்து எல்லாவகையான சூழ்புலங்களிலும் நின்று கவிதை பேசியாகவேண்டியிருக்கிறது. இன்றைய கவிதையில் அதற்கான தடையங்கள் சிலவே. அதிலொன்று இக்கவிதைத் தொகை.

மரபு, சாவு .அலைக்கழிதல் என்னும் மூன்று புள்ளிகளில் ஊன்றி ஒருவகை தன்னுரையாடல் போல நீளும் இந்த பத்து சிறு பத்திகளும் புதிய ஒரு கவித்துவத்தை சென்றடைந்திருக்கின்றன. தமிழ்ப்புதுக்கவிதையின் வழமையான வடிவங்களில் , உளநிலைகளில் இவை இல்லை. படிமங்களால் பேசுவது, உருவகங்களை உருவாக்குவது, டைரிக்குறிப்புகள் என அதற்கென சில பழகிய பாணிகள் உண்டு. அவநம்பிக்கை, கசப்பு, தனிமை, துயரம் என சில பாவனைகள் உண்டு. பலசமயம் உண்மையான உணர்வுகள். மேலும் பலசமயம் மிகைப்படுத்தப்பட்ட ‘டெம்ப்ளேட்’ உணர்வுகள்.

தமிழ்ப்புதுக்கவிஞன் தன்னை கலகக்காரன் என்றும், அன்னியன் என்றும், சீண்டுபவன் என்றும், எள்ளிநகையாடுபவன் என்றும் முன்வைக்கிறான். அதுவும் பலசமயம் உண்மையான மேலும் பலசமயம் கற்றுக்கொண்ட நிலைபாடுதான். விமர்சனங்களிலும் கவிதைகளின் பின்னட்டைக்குறிப்புக்களிலும் ‘வாழ்க்கையின் சலிப்பு’ ‘வாழ்வின் அபத்தம்’ ‘வாதைகள்’ ‘ஆங்காரம்’ ‘ஏக்கம்’ ’உறவுகளின் பொருளின்மை’ போன்ற வார்த்தைகளையே நான் காண்கிறேன்

கவிதையின் எண்ணற்ற வாய்ப்புகளை கவிதை எழுதத்தொடங்கும்போதே சென்றடையும் இந்தச் செயற்கை உளநிலைகள் இல்லாமலாக்கிவிடுகின்றனவா என்னும் ஐயம் எனக்கு உண்டு. இவற்றை ஒரு கவிஞன் தன் வாழ்விலிருந்து கண்டடைவது வேறு, ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து கண்டடைவது வேறு. பெரும்பாலும் அதுவே நிகழ்கிறது

அதோடு இன்னொன்றையும் , இங்கே கவிதை எழுதவருபவர்களில் கணிசமானவர்கள் வெவ்வேறுவகையால் உலகியலில் தோல்வியோ கசப்போ அடைந்தவர்கள். ஒருசாரார் குடி போன்றவற்றால் வாழ்க்கை கைவிட்டுப்போனவர்கள். அப்படி அல்லாதவர்களும் கவிதை எழுதவந்தால் குடிக்கவேண்டும் என்ற பொதுமனநிலையால் அதைநோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். ஆகவே எஞ்சுவது கழிவிரக்கமும் கசப்பும் கொஞ்சம் நையாண்டியும்

ஆனால் கவிதை அது மட்டும்தானா? ஞானி அடைவனவற்றை, தத்துவவாதி அடைவனவற்றை கவிஞன் சென்றடையக்கூடும் என்று நாம் கற்றிருக்கிறோம். நம் நவீனக்கவிதையிலேயே தேவதச்சன், அபி, தேவதேவன் என முன்னுதாரணங்கள் உள்ளன. இன்னும் கவிதை அடையவேண்டிய வண்ணங்கள் எவ்வளவோ உள்ளன. அது சென்றடையவேண்டிய திசைகள் விரிந்துகிடக்கின்றன.

லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதைகள் புதுக்கவிதையின் பழகிப்போன தேடல் ,சலிப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக கண்டடைதலை, அதில் உளம் அமைதலை காட்டுகின்றன. அதற்குரிய ஒரு ‘நெஞ்சோடு கிளத்தல்’ மொழி அமைந்துள்ளது. இது இக்கவிதைகளை வீரசைவ வசன கவிதைகளை நினைவூட்டுவதாக ஆக்குகிறது. அக்கமாதேவியின் குகேஸ்வரன் நெஞ்சக்குகையில் வாழ்பவன்தானே?

கண்டடைதலின் கவிதை இக்கவிதைகளை வகுப்பேன். இவற்றை கருத்துக்கள், அறிவுறுத்தல்கள் என்று கொள்வது கவிதை வாசிப்பாகாது. அவ்வெளிப்பாடுகளினூடாக அவை நிகழ்ந்த அந்தத்தருணத்து உளநிலையை, அகஎழுச்சியை சென்றடைய முடியும் என்றால் வாசகனும் அக்கவிதையைப் பெற்றுக்கொள்கிறான்.

இவ்வாறு இக்கவிதைகளை நான் வாசிக்கிறேன். சாலையின் வாகனங்களுக்கு அலைக்கழிந்துகொண்டிருந்த, இடமும் வலமுமாக நிலையழிந்த, இலை ஒன்று ஒரு கால்பட்டு மேலெழுவதே இக்கவிதையின் சூழ்புலம். கவிஞனின் உளநிலையை காட்டும் படிமம். அங்கிருந்து தான் உணர்ந்தவற்றையும் அறிந்தவற்றையும் அவன் சொல்லிச் செல்வது கவிதையின் வடிவம். அவை அடையப்பட்ட தருணங்களில் உள்ளது கவிதை.

தன்னை தன் முன்வடிவங்களின் இயல்பான வளர்ச்சியும் நீட்சியும் என கண்டடைவது முதல்தருணம். தன்னை தனியடையாளம் அல்ல என உணர்வது ஒருபக்கம் என்றால் தான் ஒரு பெரிய தொடர்ச்சியின் துளி என உணர்வது இன்னொரு பக்கம்.ஓர் அழிவின்மையை கவிஞன் உணர்கிறான். நிலையான ஒன்றின் பெருக்கை. அதன் கொப்புளங்களாக வாழ்க்கையை நோக்கும் தெளிவை. அந்தத்தேடல் சாவைச் சென்றடைந்து காலனை பேரறத்தானாக உருவகித்த ஒரு தொல்பழங்குடியின் மெய்மையைச் சென்று தொட்டு நிலைகொள்கிறது.

வெவ்வேறு தனிவெளிப்பாடுகள். ஒவ்வொன்றும் தனித்தவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையும்கூட. அவை இணைந்து உருவாகும் அந்த உளநிலையின் உச்சம் அச்சருகு. ஒரு காலால் விண்ணுக்கு எற்றப்பட்டு பறவையாகும் தருணத்தை அடைந்தது. அது காலனின், தருமனின் கால்.

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்

ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

முந்தைய கட்டுரைமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47