மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் கலிஃபோர்னியாவிலிருந்து பூவேந்திரன் எழுதுகிறேன்.
கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிப்பதன் மூலம் அபியின் கவிதைகளை பலர் வாசிக்க அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.
நான் 1982-1985 மேலூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் படித்தேன். எனக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் அபி சார். மிகவும் வித்தியாசமான தமிழ் ஆசிரியர். கடினம் என மாணவர்கள் ஒதுங்கும் யாப்பிலக்கணத்தை அவர் நடத்திய விதம் என்னை / எங்களை மிகவும் கவர்ந்தது; எளிதாக இருந்தது. அதே நேரம் அடுத்தடுத்து தொடரும் கணித விதிகளை நினைவு படுத்துவது போலும் இருந்தது. பிறகு எனக்கு அவர் சொல்லி தெரிந்த உண்மை – தமிழின் மீது இருந்த பற்றின் மீது காரணமாக அவர் தமிழைப் படித்து இருந்தாலும் கணிதத்தின் மீது அவருக்கு ஆர்வம் இருந்து இருக்கிறது. ஆனால் அவரால் இயலாது என விட்டுவிட்டு இருக்கிறார். பி.ஏ வகுப்பில் அவர் Astronomy படித்து இருக்கிறார். கணிதத்தில் அவரை கவர்ந்த விஷயம் ‘முடிவிலி ‘. அது பற்றி அவர் பேசுவார்.
அவர் நடத்திய யாப்புக் குறிப்புகளை 20 வருடங்கள் பாதுகாத்து வைத்திருந்தேன் … அந்த அளவு யாப்பில் தேர்ந்தவராக இருந்தாலும் யாப்பை ஒதுக்கிவிட்டு அவர் கவிதைகள் படைத்தது ஆச்சரியம்தான். நண்பர் அய்யனாருக்கும் எனக்கும் நூலகத்தில் இருந்து நவீன இலக்கியங்களை எடுத்துக் கொடுத்து அறிமுகம் செய்தவர் அபி சார். பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி என்ற மாதிரியில் வாசித்து வந்தேன். அதிக பட்சம் நான் படித்த தரமான எழுத்தாளர் ஜெயகாந்தன். என்னை புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், மாப்பஸான், கலீல் கிப்ரான் என்று அவர் திசை மாற்றினார். அவர் கவிதை தொடர்பாக நான் பேசியதில்லை. ஒருவகை தயக்கம், ‘ உனக்கு புரிந்தபடி உன் போக்கில் போ’ என்று சொல்லுவார்.
முதல் முறையாக அவர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது டைம் பீஸ் அலாரம் அடித்தது. “ஒரு நிமிடம் – விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆரம்பிச்சு இருக்கும், எப்படி போய்க்கிட்டு இருக்குது என்று பாத்துக்கிறேன்” என்றார். விளையாட்டின் நுணுக்கங்கள் தெரிந்து வைத்து இருந்தார். இது நான் எதிர் பாராதது.
நான் 2007-ல் ஜெர்மனியில் இருந்த பொது அவருடைய மூன்று தொகுப்புகளை இணையத்தில் http://abikavithaigal.blogspot.com வெளியிட்டேன் (அச்சுப் பிழைகளுடன்). பிறகு வேளைப் பளு, நாடோடி வாழ்க்கை – அதைத் தொடர முடியாமல் போனது, அதன் பின் அவருடைய தமிழ் மாணவர் சந்திரசேகரன் http://abikavithaiulagam.blogspot.com என அபி அய்யாவின் கவிதைகளை வெளியிட்டு இருக்கிறார்.
நான் அவருடைய எழுத்தைப் பற்றி எதுவும் எழுதவில்லை. வாசித்து உள்வாங்கிக் கொண்டவர்கள் நிறைய எழுதுவார்கள். அவரால் தமிழ் ஆர்வம் பெற்ற நான் அமெரிக்காவில் இன்று என் பணியோடு கூடுதலாக – அவ்வை தமிழ்ப் பள்ளிக்கு முதல்வராகவும் இருந்து வருகிறேன்.
அபி சாருக்கு என் வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்க்கு என் நன்றிகள்.
அன்புடன்
பூவேந்திரன்
அன்புள்ள பூவேந்திரன்,
நீங்கள் உங்கள் ஆசிரியருக்காகச் செய்திருப்பது மிகப்பெரிய பணி. நிறைவாக உணர்கிறேன். இன்றைய சூழலில் அச்சு ஊடகத்தில் கவிதை போன்ற அரிய படைப்புக்கள் காணாமலாகிவிடுகின்றன. இணையம் அவற்றை ஒருவகையில் அழிவற்றதாக்குகிறது. அந்த பிளாக்ஸ்பாட் அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
ஜெ
அன்புள்ள ஜெ
அபியின் கவிதைகளை எங்கே வாசிக்கலாம்? அவருடையை நூல்கள் இப்போது கிடைப்பதில்லை. விசாரித்தபோது அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட தொகுதி அச்சில் இல்லை என்றார்கள்
அருணாச்சலம்
அன்புள்ள அருணாச்சலம்
அபியின் கவிதைகள் அபி கவிதைகள் என்ற பேரில் நூல்வடிவில் வெளிவந்து விற்றுமுடிந்துவிட்டது. ஒரு மாதத்தில் தமிழினி வெளியீடாக அபியின் கவிதைகள் மீண்டும் வெளியாகும்.
பெரும்பாலான அபியின் கவிதைகளை இணையத்திலேயே வாசிக்கலாம்.
http://abikavithaigal.blogspot.com ,
http://abikavithaiulagam.blogspot.com
ஆகிய தளங்களில். இணைப்புக்கள் இங்கே வரும் அத்தனை கட்டுரைகளுடனும் அளிக்கப்பட்டுள்ளன
ஜெ
அபி கவிதைகள் இணையதளம்
அபி கவியுலகம் இணையதளம்