அபியை அறிதல்- நந்தகுமார்

விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு…

அன்புள்ள ஜெயமோகன்,

இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என் மலை எனக்கு பதில் சைகை தரும்”

“என்னைச் சுற்றி நிரம்பும் காட்டுக் களிப்பு”

என் வாசற் படிகளிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தேன். பிறிதொரு நாளில் நோக்கிக் கொண்டிருக்கும் பொழுது திட திரவமற்றிருந்தேன். ஒளியும் இருளுமற்றிருந்தேன். கால்களுக்கடியில் குழைவாய் என் நிலம். சுற்றிலும் உயிர்த்துடிப்புகளின் அமைதி. சலனங்களிற்குள் புகுந்து துளிகளாய் உருமாறிக் கொண்டிருந்தேன். தவிரவும் இன்றிலிருந்து மட்டுமே முளைக்கும் தாவரங்களின் வேர்களைத் தொற்றிக் கொண்டு எனக்கான பசியினை ஆற்றிக் கொள்ள விளைகிறது. ஆம். மொழி அதன் அர்த்தப்பாடுகளை இழந்து விட்டிருந்தது. பொருள்கள் அதன் ஸ்தூல இருப்பினை களைந்து விட்டிருந்தது. என்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுமே இல்லாத பொழுது வெறுமனே வாசற் படிகளில் வந்திருக்கிறேன். என் இருப்பு புகையாய் ஆகியது. எல்லாவற்றிலும் நான் ஆகியது. எல்லாமுமே நான் இன்றி ஆனது. ஊளையிடும் வானத்திலிருந்து இறங்கி வந்தது எனக்கான மேய்ச்சல் நிலம். தள்ளாடி தள்ளாடி உருள்கிறது மொழி. முயற்சியின்றியும் அமைதியின்றியும் அலைவுற்றுத் திரிந்து கொண்டிருந்த காலம், மிகப் பெரிய தடாகம் போல மையத்திலிருந்து விளிம்பை தன் முடிவற்ற அலைகளினால் விழுங்க விழுங்க, நிலங்கள் புரண்டு படுக்கத் தொடங்கின.

“அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இழுத்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது”

எடையிழந்திருந்தது அனைத்து சூழலும். பலூன்கள் போல ஆகியிருந்தது உண்மையில். சில சமயங்களில் தழல் போலவே பற்றிக் கொண்டது. அப்பொழுது எதனுடனும் இணைந்து கொள்கிறேன்.அவைகளும் என்னைப் போலவே உருமாறும் வரை விடுவதாய் இல்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் வாசல்களிலும் ஜன்னல்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் வெளி ஒன்றிலிருந்து அந்த எடையின்மை நீரினைப் போல வழிந்து நிறைந்தது. அப்பொழுது ஒன்றினுள் ஒன்றன் மேலாய் ஒன்றை ஏற்றிக் கொண்டு பிறிதொன்றாய் அதை ஆக்கி வைத்திருப்பேன். அந்தி மட்டுமே அதற்கு ஏதுவாயும் இருந்தது. அதன் பதுங்கு குழிகளுக்குள் காலாதீதமாய் சாம்பல் வண்ணம் நிறைந்து கிடந்தது. மற்ற நிறங்களுக்கில்லாத வசீகரம் இந்த நிறத்தில். இது எதுவுமில்லாத எதனையும் ஏற்றிக் கொள்கின்ற நிறம் போல. அந்தி அதன் எல்லையின்மையைத் தொட்டு உசுப்பி விடுகிறது. அதன் நிறம் பழுத்து இருளாகிறது. அங்கு கோடுகள் அதன் மஞ்சள் வண்ணத்தை அழித்துக் கொண்டே இருக்க ஊர்கள் ஊராகிக் கொண்டே இருப்பது. ஒரு பூரணமான தொடர் நிகழ்வு.

“பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன”

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்”

வெளிச்சமும் இருளும். இந்த முரணிலிருந்து இது இரண்டும் முயங்கி விட்டிருந்த ஒன்றை அடைய எத்தனிப்பதே பிரயாசை. நடமாட்டங்களில்லாத தெருக்களில், கவிந்த நிழல் பரப்புகளில், நிதானமாய் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் வேர்களில், திட திரவமற்ற இருப்பாய் வியாபித்து உயர்ந்து நிற்கும் மலைகளில், கால்களுக்கடியில் பதுங்கிக் கொள்ள விளையும் தன்னிருப்புகளில், அலைந்து கொண்டே இருக்கும் எண்ணங்களின் நினைவுகளில், பால்யம் தீற்றி விடுபட்டிருந்த அறைகளுக்குள் மெல்லக் கவிந்து உருக்கொள்ளும் ஞாபகங்களினுள் திடூமென முரணற்ற ஒன்றைக் கண்டு திகைத்து உள் திரும்பிக் கொள்வதுமாய் பித்து பிடித்துக் கொண்டிருந்தது மொழி வழி.

“கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்”

நன்றி,

நந்தகுமார்

***

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி,மிர்ஸா காலிப்- கடிதம்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

முந்தைய கட்டுரைஅயல் இலக்கியம்- கடிதம்
அடுத்த கட்டுரைபக்தி இலக்கியம்- கடிதங்கள்