கிளைதாவுவதற்கு முன்பு…

அன்னையின் சிறகுக்குள்

ஜெ,

உங்களால் இப்பொழுது “அன்னையின் சிறகுக்குள்” கட்டுரையில் எழுதியது போல் ஒரு பயணம் மேற்கொள்ள இயலுமா? (ஹல்த்வானி).

அடிப்படையில், பணம் இல்லாமல்?

//உடைகள், உணவு, வசதிகள் எதிலும்போதும்,வேண்டாம்என்று சொல்லும் மனநிலையையே எப்போதும் கொண்டிருக்கிறேன். //

என்பதில் தொடங்கினாலும்,

//நான் மெல்லமெல்ல வசதிக்கு பழகிப்போய்விட்டிருக்கிறேன். அழகு இல்லாத விடுதி உளச்சோர்வை உருவாக்குகிறது. அது இங்கே ஆடம்பரம்தான். ஆகவே எப்போதுமே சற்று உயர்தர விடுதிகளையே நாடிச்செல்கிறேன்.//

இங்கு வந்தடைந்துள்ளீர்கள்.

நான் இங்கிருந்து தொடங்கி அங்கு செல்ல இயலுமா??

என்னால் இந்த கார்பரேட் வாழ்வில் ஒட்ட இயலவில்லை. சராசரியாக இரு, சராசரியாக இரு என கூவிக்கொண்டிருக்கிறது. சிறந்த சராசரியாக இருந்துக்கொண்டு, மேலாளரை வழிபடுதலே உயர்வதற்கான ஒரேவழி.  இதில், தொடர்வதன் மூலம், எனது நேரத்தை, மனநிறைவை, வாழ்வை இழந்துக்கொண்டிருக்கிறேன்.

இவற்றில் இருந்து விலகி, எனக்கான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தில், உளவியல் முதுகலை சேர்ந்துள்ளேன். (தொலைநிலை) இந்த துறையில், ஒரு அடிப்படை வருமானத்தை என்னால் உறுதி செய்ய இயலும். தேடலை தொடர்வதற்கான நேரமும் கிடைக்கும்.

அதேசமயம், பயணங்களில், வாழ்வில் அவசிய தேவைகளை தாண்டி செலவு செய்ய இயலாது. இந்தியாவில் “சுத்தம்” மிக விலை அதிகமானது. நல்ல கழிவறைகளுக்காகவே, பெரிய உணவகங்களில் உண்ண வேண்டியுள்ளது. இரவு தங்கும் விடுதிகள் இன்னும் மோசம்.

கிட்டத்தட்ட ஒரு வருடம், இந்த தேவைகளுக்காக வேலை, நிரந்தர வருமானம் அவசியம் என என்னை சமாதான படுத்தி வந்தேன். இனி அப்படியில்லை. இங்கு, இந்த கட்டமைப்பில் தொடர்வதால் நான் இழப்பத்து மிக அதிகம் என்பதை நன்றாகவே உணர்கிறேன்.

அதே சமயம், இந்த வருமானத்தை கைவிடுவதால், நான் இழப்பது இந்த ஆடம்பரத்தை (சுத்தத்தை). அதற்கு தயார் படுத்திக்கொள்ளும் விதமாக, இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

புறப்பாடு + உங்கள் இளமைக்கால பயணங்களின் பொழுதும் இந்த அழகுணர்ச்சி உங்களிடம் இருந்திருக்கும் அல்லவா. அப்பொழுது, பணம் இல்லாமல், அந்த உணர்ச்சிகளை எப்படி கையாண்டீர்கள்? முதலில் கேட்டதுப்போல், அழகை, நேர்த்தியை அனுபவித்த பின், அழகின்மையை சகித்துக்கொள்ள முடியுமா?

அன்புடன்,

சந்தோஷ்.

***

அன்புள்ள சந்தோஷ்,

என்னால் முடியுமா என்பது எனக்கு நானே எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விதான். முடியும் என்று சொல்லிக்கொள்ளலாம், செய்துபார்க்கவேண்டும். கண்டிப்பாக முன்பு போல பணமே இல்லாமல் செல்ல முடியாது. அந்த நிலையை கடந்துவிட்டேன்.

அன்றிருந்த எனக்கு இரண்டு பிடிப்புக்கள் இல்லை. ஒன்று எதிர்காலம் பற்றிய கனவோ பதற்றமோ. என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. அதோடு நான் அதற்குமுன் ஒரு சேவை அமைப்பில் இருந்தவன். ஆகவே எப்போது வேண்டுமென்றாலும் அங்கே திரும்பிச்செல்லவும் என்னால் இயலுமென்றும் உணர்ந்திருந்தேன். இன்னொன்று, எனக்கு அன்று உறவுகள் இல்லை. என்னை நினைத்துக் கவலைப்படவோ நான் எண்ணிக்கவலைப்படவோ எவருமில்லை.

இன்று அப்படி அல்ல. எனக்கு வலுவான உறவுகள் உள்ளன. எதிர்காலக்கவலை உள்ளது, அவர்களின் எதிர்காலம் பற்றி. ஆகவே என்னை நான் விதிக்கும் தற்செயல்களுக்கு அப்படியே முழுமையாக அளித்துவிடமுடியாது.

மேலும் அப்படி முற்றாக அளித்துவிடுதல் நன்று அல்ல என்றும் இன்று அனுபவம் வழியாக அறிந்திருக்கிறேன். எல்லாம் நன்றாக நடந்தால் சரி. ஆனால் அவ்வாறாக அல்லாமல் ஆகவே வாய்ப்பு அதிகம். எதிலாவது சிக்கிக்கொண்டு வாழ்க்கையின் அரிய பொழுதுகளை, நல்ல வாய்ப்புகளை இழந்துவிடக்கூடும். ஒவ்வொருவரும் அவரவருக்கு அமைந்துள்ள அருந்திறனை முழுமையாகவே வெளிப்படுத்தவேண்டும். அதுவே இயற்கையின் நெறி. அவ்வாறுதான் மகிழ்ச்சியாகவும் இருக்கமுடியும். வெறுமே சாகச உணர்வால், வெற்று ஆணவத்தால் அந்த வாய்ப்புகளை இழப்பதைபோல அறிவின்மை பிறிதில்லை.

ஆகவே நான் இன்று அப்படிச் செல்லமாட்டேன். எவரிடமும் அப்படிச் செல்லும்படிச் சொல்லவும் மாட்டேன். அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு. நான் அப்படிச் சென்ற அந்த இந்தியா அல்ல இன்றிருப்பது. எண்பதுகளில் இருந்த இந்தியாவில் இத்தகைய தீவிரவாதமும் குற்றச்செயல்களும் இல்லை. இந்த அளவுக்கு அரசுக்கண்காணிப்பும் கெடுபிடியும் இல்லை.

ஆனால் ஆடம்பரங்கள் எனக்கு தேவையா? இன்றியமையாதவை என இப்போதும் தோன்றியதில்லை. ஒரு நாளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டிய நட்சத்திரவிடுதியில் இருந்து கிளம்பி தலைக்கு நூறுரூபாய் செலவில் தங்கும் விடுதியில் மறுநாள் தங்கி நான் பயணம் மேற்கொண்டதுண்டு. வசதி பெரிதாகப் படுவதில்லை. அழகு முக்கியமானதாகப் படுகிறது. மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. ஆனால் வசதியின்மை முற்றாக நிலைகுலையச் செய்வதில்லை. அழகின்மை எரிச்சலையும் அன்னியத்தன்மையையும் அளிப்பதில்லை. ஒரு தொடக்கநிலை தயக்கத்திற்குப் பின் கடக்க முடிகிறது. ஆகவே என்னால் இயலும் என்றே நினைக்கிறேன். ஆனால் அது தோற்றம் மட்டும்தானா என்ற அச்சத்தையும் கொண்டிருக்கிறேன்.

வெண்முரசு முடிந்தபின் ஒரு நீண்டபயணம் செய்யவேண்டும் என நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தோளில் பையுடன் கன்யாகுமரியிலிருந்து லடாக் வரை நடப்பது என்று. அது ஒரு கனவு மட்டுமல்ல, என் எல்லையை நானே சென்று முட்டிநோக்கும் முயற்சியும்கூட. பார்ப்போம்.

உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை நான் ஆலோசனைகளைச் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் உங்களைப் பற்றி நீங்களே அறிவீர்கள். அது என் வாழ்க்கை என்றால் நான்கு கேள்விகளைக் கேட்டுக்கொள்வேன்

அ. நான் இன்றிருக்கும் வேலையில் எனக்குரிய தனிவாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள இடமிருக்கிறதா? வேலை தனிவாழ்க்கை என முரணின்றிப் பகுத்துக்கொள்ள இயலுமா?

ஆ,இன்றிருக்கும் வேலையால் நான் வேறு எவருக்கேனும் கடன்பட்டிருக்கிறேனா? எவரையேனும் பேணும்நிலையில் இருக்கிறேனா?

இ. இந்தவேலையின் சமூக அடையாளம், பொருளியல் வசதி ஆகியவற்றுக்கு பழகிவிட்டிருக்கிறேனா? இதை இழந்தால் இதற்கு நிகராக இன்னொன்று அமையாவிட்டால் பெரிய இழப்பை அடைவேனா?

ஆம் என்றால் வேலையை விடமாட்டேன். வேலைக்குள் என் உலகை மெல்லமெல்ல தனியாக உருவாக்கிக்கொள்ளவே முயல்வேன். வேலையை விட்டுவிட்டு அது அளிக்கும் சோர்வால் என் வாழ்க்கையின் அரிய பொழுதை அழிப்பேன் என்றால் நான் அறிவிலி என்றே பொருள். இன்றைய சூழலில் பணம் என்பதன்பொருள் நமக்குப்பிடித்த பொழுதை நமக்கு ஈட்டித்தருவது என்பதே. வேலை என்பதன்பொருள் பணம்.

இன்னொரு வேலைக்கு மாற்றிக்கொள்வது என்றால் இரண்டு கேள்விகளைக் கேட்டுக்கொள்வேன்

அ.அந்த இன்னொரு வேலை எனக்கு உகந்ததே என்று நான் உறுதி உள்ளதா? இல்லை என்றால் எப்படிப் பின்னகர்வேன்?

ஆ. அந்த இன்னொரு வேலையில் நான் தேர்ச்சிகொண்டு தனியாக வேரூன்றும்வரை எப்படி நிலைகொள்வேன்?

அவ்விரு வினாக்களுக்கும் விடையாக சென்றுதான் பார்க்கவேண்டும் என்றால் சென்று நிலைகொள்வதுவரை நிதானமாக இருப்பேன். திரும்பிவர வாய்ப்பை எஞ்சவைத்திருப்பேன்.

ஜெ

கண்டு நிறைவது

முந்தைய கட்டுரைஅபி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43