தாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்

ஐந்து கதைகளிலும் என்னை அறைந்தவை அறமும், வணங்கானும்தான். கெத்தேல்
சாஹிப், ஆறாம், வணங்கான் மூன்றுமே inspiring. தாயார் பாதம் நன்றாக
இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் ஐந்தாவது இடம்தான். :-)

பாலசுப்ரமணியம் யார் என்று தெரியவில்லையே!

கொஞ்சம் nitpicking . // உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே
தெரிஞ்சுடுத்து. // பிராமண மருமகள்கள் இல்லை இல்லை மாட்டுப்பெண்கள்
மாமியாரை அம்மா என்றுதான் அழைப்பார்கள், அத்தை என்று இல்லை – அதுவும்
தஞ்சாவூர்க்காரர்களுக்கு இன்றும் அப்படித்தான். அதே போல “கழுவி” என்ற
வார்த்தையை விட “அலம்பி” என்ற வார்த்தையைத்தான் அதிகமாக பிராமணர்கள்
உபயோகிப்பார்கள்.

ஆர்வி

அன்புள்ள ஆர்வி,

இந்த தேர்வுகள், அல்லது வரிசைகள், வாசகனின் வாசகநிலையையும் வாசிப்புமுறையும் மட்டுமே காட்டுகின்றன என்பது என் எண்ணம். ஒரு வாசகன் கதையுடன் எப்படி தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறான், எப்படி கதையின் நுண்ணர்த்தங்களை எடுத்துக்கொள்கிறான் என்பதைச் சார்ந்தது இந்தக்கருத்துக்கள். எழுதவரும் ஆரம்பத்தில் எழுத்தாளர்களுக்கு ஃபீட் பேக் ஏதோ வகையில் முக்கியமாக இருக்கிறது. பின்னர் ஒரு கதையின் வெற்றியும் தோல்வியும் அதன் அளவும்கூட எழுத்தாளனுக்கே தெரிந்துவிடும் -எழுதியதுமே இதோ தொட்டுவிட்டேன், இதோ நழுவிவிட்டது என தெளிவாகவெ தெரியும்.

உங்கள் வாசிப்பைக் கொண்டு பார்க்கையில் சில அம்சங்கள் தெரிகின்றன. 1. நேரடியான ஓட்டமுள்ள, பின்னல் இல்லாத கதைகளை நோக்கி உங்கள் மனம் செல்கிறது. அவற்றில் ஒன்றுகிறது 2. உள்ளர்த்தங்கள் இல்லாத,’சொல்லவந்ததை சொல்லிநிற்கிற’ கதைகள் உங்களை கவர்கின்றன

இவ்வியல்பால் இக்கூறுகள் இல்லாத கதைகளை நீங்கள் தவறவிட வாய்ப்புள்ளது. இலக்கியவாசிப்பில் ‘ஒன்றுதல்’ என்பது இரண்டாம்பட்சம். வாசகன் இணை ஆசிரியராக கதைகளின் நுண்ணிய கூறுகளை இணைத்து தன் கதையை தானே உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

ஒற்றை ஓட்டமும் பின்னலும் அந்தந்த கருக்களுக்கு ஏற்ப ஆசிரியர்களால் அமைக்கப்படுபவை. என்னைப் பொறுத்தவரை ஒற்றை ஓட்டம் என்பது பலசமயம் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதாக அமையும். வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று சிக்கலாக பின்னிச்செல்லும் சரடுகளால் ஆனது. ஒருவரது வாழ்க்கையைச் சொல்லும்போது பல வாழ்க்கைகளுடன் சேர்த்து அதை அள்ளுவதே சரியானதாக இருக்கும். ஒரு வாழ்க்கை உச்சம் என்பது பல வாழ்க்கைக்க்கூறுகளின் ‘சமநிலைஉச்சம்’ [ஈக்லிபிரியம்] ஆகவே இருக்கும். உலக இலக்கியத்தின் மகத்தான கதைகளில் பெரும்பாலானவை பல சரடுகளின் பின்னல் கொண்டவை.

அதேபோல, சிறுகதை என்ற வடிவமே குறைவாகச் சொல்லி சொல்லாதவற்றை வாசக ஊகத்திற்கு விடும் இயல்பு கொண்டது. வாசக ஊடாட்டம் அதன் வாசிப்பில் நிகழவேண்டும் உட்குறிப்புகள் மூலம் கதைசொல்லும் கதைகளே உலக இலக்கியத்தில் அதிகம். உணர்ச்சிகரமான கரு கொண்ட கதைகள் மட்டுமே நேரடியாக இருக்க ‘உரிமை’ உள்ளவை.

பொதுவாக இக்கதைகளின் அமைப்பு, கதைத்தளம் நடுவே பொது அம்சம் மிகவும் குறைவு. ஒருகதையுடன் முற்றிலுமாக ஒப்பிடும் அளவுக்கு இன்னொரு கதை இல்லை. அந்த வகையான ஒப்பீடு ஒருசிலகதைகளை வைத்துக்கொண்டு பிறவற்றை கவனிக்க மறுக்கக்கூடிய, சிந்திக்க மறுக்கக்கூடிய மனநிலையை உருவாக்கலாம்

இக்கதைகள் தொடர்ந்து வருவதும், அதற்கான வாசக எதிர்வினை தொடர்ந்து வந்துகொண்டிருப்பதும், இணையம் அளிக்கும் நல்வாய்ப்பு. இதை ஒரு கதைவாசிப்புப் பயிற்சிப்பட்டறை என்றே கொள்ள்லாம். ஒருவர் தன் வாசிப்பில் தவற விட்ட விஷயங்களை இன்னொருவரின் கடிதம் மூலம் வாசிக்கலாம். இந்த வகையான கூட்டு வாசிப்பு மூலம் வாசிப்பு பலமடங்கு பெருகுகிறது. நுண்வாசிப்புக்காக வாசல்கள் திறக்கின்றன.

ஆகவே வாசித்ததும் முடிவுகளுக்கு வராமல் இவ்வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்

ஜெ

பின்குறிப்பு:

தொலைபேசி வழியாக தஞ்சாவுருக்கே கூப்பிட்டு கேட்டேன். கீழத்தஞ்சையில்
அத்தை என்று அழைப்பது உண்டு. கழுவி என்று சொல்வதும் உண்டு. அம்மா என்று
சொல்வது சமீபத்திய வழக்கம். கழுவி என்பதற்கும் அலம்பி என்பதற்கும்
வித்தியாசம் உண்டு. கையில் எடுத்து கழுவும் பொருட்கள் அலம்புதல்.
அல்லாதவை கழுவுதல். இந்த வேறுபாடு இப்போது மழுங்கிவிட்டது. ஜானகிராமனின் கதைகளிலேயே இந்த சொல்லாட்சிகள் உள்ளன

=====================

‘ஒரு படைப்பு எந்த விதத்திலாவது உங்களை பாதிக்கணும். அழ வெக்கணும், சிரிக்க வெக்கணும், கோபப்பட வெக்கணும்’ எதுவுமில்லாம மண்ணு மாதிரி இருந்தா அது வீண்’ – ன்ற மாதிரி ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார்.

மெல்ல மெல்ல ஸ்ருதியை கூட்டிக் கொண்டே போய் இறுதியில் உச்சத்தில் நிற்கிறது இந்தக்கதை. இசைச் சூழலிலிலேயே அமிழ்ந்திருந்தாலும் ராமனால் ஏன் பாட முடியவில்லை என்பது இறுதி பகுதியில் தேள் கொட்டினாற் போல் விளங்கி விடுகிறது.

யதார்த்ததிலிருந்து விலகியிருந்தால் அந்தப் படைப்பு எத்தனை போலியாக இரு்க்கும் என்பது கடைசி வரியில் தெரிகிறது. ஒருவேளை நாம் அந்தப் போலியைத்தான் விரும்புகிறோமோ? உண்மையைக் கண்கொண்டு பார்க்க முடியாத வகையில் கூசுகிறது. இலக்கியம், இசை, மண்ணாங்கட்டி எல்லாவற்றையும் விட உயர்ந்தது அடிப்படையானது அன்புதான். அது இல்லாட்டி எத்தனை பெரிய கலையாக இருந்தாலும் கலைஞனாக இருந்தாலும் அது வீண்தான்.


சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com

=============================

அன்புள்ள ஜெ,

தாயார்பாதம் என்னை நுட்பமாக பாதித்த அருமையான கதை. நகைசெய்பவர்கள் கிடுக்கியும் குறடும் வைத்து துளித்துளியாக தங்கத்தை எடுத்து தோடு செய்வதுபோல உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு. தோடுகளைப் பார்க்கும்போது எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. இந்த அளவுக்கு நுட்பமாக இருக்கின்றதே இதை யாராவது முழுக்க பார்ப்பார்களா என்று. ஆனால் அதன் wholeness தான் அதன் கலை என்றும் நினைத்துக்கொள்வேன். தாயார்பாதம் போன்றகதைகளை வாசகர்கள் முழுசாக வாங்கிக்கொள்ளாவிட்டாலும் கதை அவர்கள் மனதில் விதைமாதிரி கிடந்து எப்போதாவது முளைக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

சிவம்

அன்புள்ள சிவம்,

இந்தக்கதையை நீங்கள் எப்படி உங்களுக்காக reorganize செய்துகொண்டீர்கள் என்று சொல்லமுடியுமா? படிப்படியாக இது சிறுகதை வாசிப்பு சம்பந்தமான ஒரு பயிற்சிக்களமாக ஆகிவிட்டது. உங்கள் கருத்து சிலருக்கு உதவலாம்

ஜெ

அன்புள்ள ஜெ

இந்தக்கதை எனக்கு சட்டென்று பிடிபட்டதற்கு என்னுடைய தஞ்சை பின்புலம் காரணமாக இருக்கலாம்.

அதிகமாகச் சொல்லி ’காமெடிபீஸ்’ ஆகவிரும்பவில்லை. நான் ’வெறும்’ வாசகன், எழுத்தாளன் கிடையாது.

சில வரிகளை வரிசைப்படுத்தினாலே போதும் என்று நினைக்கிறேன்.

*

’சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’

’தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார்.’

’பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்’

’சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது’.

— இப்படி இந்தக் கதையை அமைத்துக்கொண்டேன்

அதன்பின் அந்தக்கதை மீதான [ஜானகி] ராமனின் கமெண்டை இப்படி அமைத்துக்கொண்டேன்

எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா.

இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி’

’நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல?

’அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’
*

அந்த கமெண்டை அவரே தொகுத்து தான அடைந்த தரிசனத்தை இப்படிச் சொல்கிறார்


’இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது’

*
சுத்தகலையில் மனிதாபிமானம் இல்லை. இதை அவரது சில கதைகளில் காணலாம். ஆனால் மனிதாபிமானமும் கலந்த கலைதான் யோகமாக ஆகும் என்றுதான் ரங்கண்ணா மூலம் சொல்கிறார்

சிவம்

====================

இராமனுக்கு இசை கணக்குகள் வெளி வராதது போனாலும் உள்ளச்சிதறல்களை உணர்ந்த எழுத்தாளன் ஆனது நல்லதுதான்.

கிளி சொன்ன கதையில் ஆனந்தனின் விசாலம்மை, இங்கே இராமுவின் பாட்டி.

இந்திய மண்ணில் பெண்ணின் துயரம் பொதுவானது, முடிவில்லாதது. இந்த மண்ணின் தெய்வங்களும் இதற்கு விலக்கல்லர். இராமனின் பரிக்ஷைகளுக்கு மனம் உடைந்த சீதை நிலத்தில் மறைந்தாள், சரஸ்வதி போன்ற பாட்டி மனத்தால் மரித்து பல வருடத்திற்கு பின் சுவரில் மறைகிறாள். தூக்கிய பாதத்தை வாமனன் போல அவளை அடிமைப்படுத்துபவனின் தலையில் வைக்க அம்மையால் முடியாதது அல்ல. அம்மை பத்ரகாளி ஆனால் சிவனை அவள் முட்டி முதித்து விட்டு சென்றுவிடுவாள்.

Regards

Ramesh

அன்புள்ள ரமேஷ்

அம்மையின் வைக்கபடாத பாதம் இருப்பதனால்தான் சிவன் ஆடமுடிகிறது , இல்லையா?

ஜெ

மிகச்சரி ஜெ .
அவள் ஒரு சொல், ஒரு செயலில் ” நீ இவ்வளவுதான்” என காண்பித்து விடுவாள். (கு. ப. ரா வின் கனகாம்பரம் நாயகி போல், சமாதானம் செய்து ஆண் பெருமைக்கு கேடு வராது செயல்படுவதினால்தான் பிழைத்துக் கிடக்கிறோம்)
“அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல?” இந்த நம்பிக்கையில்தான் ஆண்களின் ஆட்டம் நடக்கிறது

Regards
Ramesh

============================

அன்புள்ள ஜே

தாயார்பாதம் வாசித்து அதிர்ந்தேன். இதுவரை வந்த கதைகள் எதிலும் இல்லாத ஒரு morbid அம்சம் இந்தக்கதையிலே உள்ளது. உண்மையில் அது வலுவானதாக இருந்தாலும் ஒரு rupture ஐத்தான் கொடுக்கிறது. மனசிலே ஒரு காயம்பட்டது போல இருக்கிறது. என்னுடைய அப்பா ஒருமுறை எச்சில் சோற்றை அப்படியே தூக்கி அம்மா மேல் கொட்டினார். உடம்பெல்லாம் எச்சிலுடன் அம்மா நின்ற கோலம் இன்றும் கண்ணிலே நிற்கிறது. இவ்வளவுக்கும் என் அப்பா ஆசிரியராக இருந்தார். நல்லொழுக்கம் உடைவர். ஒருவர் கூட அவரைப்பற்றி தப்பாக சொல்ல முடியாது. கடுமையாக வேலைசெய்து பிள்ளைகளை ஆளாக்கினார். ஆனால் இதைச் செய்தார். மீண்டும் அதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறேன்

எஸ்.சங்கர்

அன்புள்ள சங்கர்

என் அப்பா நான் இன்று வரை கண்ட ‘ஜெண்டில்மேன்’ களில் ஒருவர். எல்லா வகையிலும் சான்றோன். ஆனால் கழுநீரை அவர் என் அம்மா மேல் கொட்டுவதை – அவள் உண்மையிலேயே ஒரு ஞானசரஸ்வதி- நானும் கண்டிருக்கிறேன்

அதனால்தான் நானும் எழுத வந்திருப்பேன்.

ஜெ

===================================================

அன்புள்ள சார்.,

தாயார் பாதம் படித்தேன். It is on a class of it’s own..!

வரைந்து வைத்த ஓவியமாய் சங்கீதம் மட்டுமே வரமாய் வாங்கி எட்டு வயதில் வீட்டுக்கு சரஸ்வதியை போல வந்த பாட்டி,
வீட்டு வேலை மட்டுமே கதியாய் இருந்து எந்த பெரிய சுகமும் மரியாதையும் இல்லாமல் வாழ்ந்து இறந்ததற்கு, ராமன் தன்
முதற்கதையில் பாட்டியை “தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி
பாடுவள்” என்று உருவாக்கி இருப்பது அற்புதம். பாட்டிக்கு கெடச்ச ஒரு நல்ல விஷயம் ராமன் தான் தோணுது.

ராமன் அவங்க தாத்தா கிட்ட பாட்டு படிச்சு வித்வான் ஆவரத விட, எழுத்தாளரா அவரோட பாட்டியபத்தி எழுனதுதான் மேன்மை.
உள்நாக்குன்னு சொல்லுறது மனசாட்சி தான்னு தோணுது.

விவேகாந்தர் பாறையில் இருக்கும் தாயார் பாதத்தில் இருந்து கதை நினைவலைகளில் செல்வது அழகு. தாயார் எடுத்த பாதம் தரையில் பட்டால்
‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல? ‘ என்பது பாட்டி இறக்கும் போது மிகுந்த அர்த்தமுள்ளதாய் ஆகிறது.

திரும்ப திரும்ப படிக்க வைத்த அற்புதமான கதை. நன்றி.

அன்புடன்.,
ஆனந்த கோனார்

=======================================

அன்புள்ள ஜே,

ராமனுக்கு [!] அவருடைய கதைகளில் கடைசி வரைக்கும் இருந்த பெண்கள் மீதிருந்த பிரியமும் ஈரமும் ஏன் என்று இப்போது தெரிகிறது. பாலுவின் கதாபாத்திரமும் நன்றாக இருக்கிறது. இருவருடைய பர்சனாலிட்டியில் உள்ள வித்தியாசமும் கதையில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அம்பாள்பாதம் என்றே எடுத்துக்கொள்கிறார். இவர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கிறார். ஒற்றைக்காலை தூக்கிய தவம் அவருக்கு கவித்துவமாக இருக்கிறது. இவர் ‘கஷ்டமானது’ என்கிறார்

’பாலு’ வைப்பற்றி இன்னும் எழுதியிருக்கலாம். அவர்தானே இன்னும் நெருக்கம்

செல்வா

முந்தைய கட்டுரைதாயார் பாதம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைதாயார்பாதம்-கடிதங்கள்