‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41

நேர் எதிரில் வேடன் நின்றிருந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்துக்கொண்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கே எங்கிருந்து வந்தான் என்று அஸ்வத்தாமன் வியந்தான். காற்றில் இருந்து பனித்துளியென முழுத்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அல்லது அங்கிருந்த நிழல் ஒரு விழிமாயத்தால் பருவடிவு கொண்டதா? கன்னங்கரிய ஓங்கிய உடலில் நரம்புகளின் ஓட்டம் தெரிந்தது. விரிந்த பலகைகளாக நெஞ்சு. அடுக்கப்பட்டதுபோன்ற இறுகிய வயிறு. ஒடுங்கிய சிற்றிடை. அவன் நாணேற்றித் தெறித்து நிற்கும் வில் போலிருந்தான். களமெழுந்த ஆட்டர்களே அவ்வண்ணம் இருப்பார்கள். உடலின் எடையிலிருந்து எக்கணமும் எழுந்து தூவல் என, புகைச்சுருள் என காற்றில் நெளியத் தொடங்குவார்கள்.

அனல்கொண்டு சிவந்த விழிகள் அவனை நோக்கின. முறுக்கிய கூர்மீசை. தேன்கூடு என சுருண்ட அடர்தாடி. நீண்ட வடிகாதுகளில் காட்டுக்கொடியாலான நாகபடக் குழைகள். சுருட்டிக்கட்டிய சடைக்கொண்டையில் பன்றித்தேற்றையாலான பிறை. இரு தோள்களிலும் வேட்டையாடப்பட்ட இரு மான்களை தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தான். இடையில் ஆடையேதுமில்லை. வலத்தோளில் மழுவும் இடத்தோளில் முப்புரிவேலும் தொங்கவிடப்பட்டிருந்தன. இடையில் தோல்வாரில் நீர்க்குடுவை. அதுவன்றி ஆடையேதுமில்லை. உடலெங்கும் படிந்த புழுதியும் சாம்பலுமே ஆடை எனத் தோன்றியது. தோல்செருப்புகள் மண்ணில் ஊன்றியிருந்தன. அவனுக்குப் பின்னால் ஒரு கன்னங்கரிய நாய் மின்னும் நீர்த்துளிபோன்ற கண்களுடன் நின்றது.

அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியதும் அஸ்வத்தாமன் உளம் மலர்ந்தான். அத்தகைய பேரழகு கொண்ட புன்னகை ஒரு கிராதனின் முகத்தில் தோன்றலாகுமா? பாற்பல் எழுந்த பைதல்களிடம் மட்டுமே எழும் புன்னகை அது. அவன் ஓர் அடி முன்னால் வந்து சற்றே குனிந்தபோது நெற்றியில் ஒரு சிவந்த புண்ணை அஸ்வத்தாமன் கண்டான். சற்றுமுன் அம்புமுனை பட்டதுபோல் நீளநின்ற விழிஎன அது குருதித்தீற்றலாகத் தெரிந்தது. அந்தப் புண்விழி இமைதிறந்து அவனை நோக்கியது. அஸ்வத்தாமன் தன் தலையில் ஒரு விழி திறப்பதை உணர்ந்தான். அவ்விழியால் அந்தக் கிராதனை நோக்கினான். ஊன்விழிகள் மூடியிருக்க தலையிலிருந்த அந்த விழி மேலும் மேலும் கூர்கொண்டது. தண்ணென்ற ஒளியை அது கண்டது. அதன் நோக்கில் வேடனின் நுதல்விழி சிறுவர்களுக்குரிய நகைக்கும் தெளிந்த விழியென மாறியது.

வேடன் அவனுடைய தலைவிழியை நோக்கி தன் கையை நீட்டினான். அஸ்வத்தாமனின் தலையில் அந்த விழி துடித்தது. அவன் அதைத் தொட்டால் அது ஓர் அருமணி என்றாகக்கூடும். அவன் உடலெங்கும் இனிமை பரவியது. விரல்நுனிகளில் இனிமை தவித்தது. அவன் உடலே இனிமையில் துழாவியது. வேடனின் விரல் அவன் முன்நெற்றி விழியைத் தொடும் கணத்தில் நாய் வெருண்டு உறுமியது. பின்னர் குரைத்தபடி வலப்பக்கமாக பாய்ந்தோடியது. வேடன் திரும்பிப்பார்த்தான். அக்கணத்திலேயே உருவழிந்து மறைந்தான். திகைப்புடன் தேடியபடி அஸ்வத்தாமன் எழுந்தான். காடு ஒழிந்து கிடந்தது. சீவிடுகளின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

அவன் தன்னருகே வந்து தைத்து நின்ற அம்பின் நடுக்கத்தைக் கண்டான். அது வந்த கோணத்தில் விழிதிருப்பி அங்கே மரங்களுக்கு அப்பாலிருந்து எழுந்த வேடனை நோக்கினான். வேடன் மீண்டும் வில்லில் அம்புதொடுப்பதற்குள் குனிந்து அந்த அம்பை எடுத்து வீசி அவனை வீழ்த்தினான். தோளில் பட்ட அம்புடன் அவன் நிலத்தில் விழுந்து கையூன்றி எழ முயன்று உடல்நரம்பின் முடிச்சு ஒன்று அறுபட்டிருந்தமையால் நிகர்நிலையிழந்து தளர்ந்து விழுந்து மீண்டும் எழுந்து விழுந்தான். அவனருகே ஒரே தாவலில் அணுகி அவன் உடலை மிதித்து வீழ்த்தி அவன் நெஞ்சில் உதைத்து மண்ணோடு அழுத்தியபடி “கீழ்மகனே!” என்றான் அஸ்வத்தாமன். வேடனின் வெண்ணிற விழிகள் உருண்டன. வாய் இளித்து வெண்பல்நிரை மின்னியது. “கொல்லாதீர் அந்தணரே, நான் உங்கள்மேல் அம்பு தொடுக்கவில்லை. உங்கள் முன் பிறிதொரு வேடன் நின்றிருந்தான். அவனருகே நின்ற நாயையே அம்பால் அறைந்தேன்” என்றான்.

காலை எடுத்து திரும்பி நோக்கிய அஸ்வத்தாமன் “வேறு வேடனா? எங்கே?” என்றான். “நான் மெய்யாகவே பார்த்தேன். ஒரு கரிய நெடிய வேடன். சடைமுடிக்கற்றையில் பன்றிப்பிறை அணிந்தவன். தோளில் இரு மான்களை தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தான். அவன் உங்களை நோக்கி கைநீட்டினான். நீங்கள் விழிமூடி ஊழ்கத்தில் அமர்ந்திருந்தீர்கள். உங்கள் தலையிலிருக்கும் இந்த அருமணியை எடுக்க அவன் முயல்கிறான் என நான் கருதினேன். அவனை அச்சுறுத்தி துரத்த நினைத்தேன்.” அவன் இளித்து “அந்த அருமணியை நானே கவரலாமே என்று திட்டமிட்டேன்” என்றான். அஸ்வத்தாமன் மீண்டும் காட்டை சூழ நோக்கிவிட்டு “அவர்கள் எங்கே?” என்றான்.

வேடன் எழுந்துகொண்டு “அதுதான் விந்தை… அவன் அப்படியே மறைந்துவிட்டான். அவனைப் பார்த்ததே விழிமயக்கு என தோன்றும்படி அங்கில்லாமலாகிவிட்டான். அந்த நாயும் மறைந்துவிட்டது. வேடர்களில் சிலர் மாயக்கலை கற்றவர்கள். ஆனால் நாயும் அவ்வண்ணம் மறையும் கலை உண்டு என நான் இப்போதுதான் அறிந்தேன். அவன் மறைந்துவிட்டான்…” என்றான். “நான் எத்தனை சொன்னாலும் தாங்கள் நம்பப்போவதில்லை. ஆனால் கருதுக, நான் தேர்ந்த வேடன். அமர்ந்து விழிமூடியிருக்கும் ஒருவரை அம்பாலறைந்தேன் என்றால் இப்போது அவர் உடல் இங்கே கிடக்கும். என் அம்புகள் குறிதவறுவதில்லை. ஐயமிருந்தால் நோக்குக. அந்த கனியை வீழ்த்தி அது கீழே வருமுன் அடுத்த அம்பால் மேலே கொண்டுசென்று அதன் கிளையிலேயே தைத்துநிறுத்திக் காட்டுகிறேன்.”

“வேண்டாம்… அந்த வேடனை நான் அறிவேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவன் என்னை தொட பலமுறை அணுகியதுண்டு… எப்போதும் இறுதிக்கணத்தில்தான் அவன் மறைகிறான்.” வேடன் “இறுதிக்கணத்தில்தான் நான் செல்கிறேன் என்று என்னிடம் முன்னரும் சொல்லியிருக்கிறார்கள். நான் அவ்வண்ணம் எதையும் செய்வதில்லை. அக்கணம் என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வேன்” என்றபின் இளித்து “அந்த அருமணி உங்களுக்கு எதற்கு? நீங்கள் அந்தணர்போல் தெரிகிறீர்கள். தவம் செய்ய கானகம் வந்துள்ளீர்கள்” என்றான். அஸ்வத்தாமன் “நான் அரசன்” என்றான். வேடன் அவன் கையிலிருந்த வடுக்களை பார்த்தபின் “ஆம், விற்கலையும் வாட்கலையும் தெரிந்தவர்… அரசராக ஆகிவிட்டீர்களா? அந்தணர் அரசர்களானால் அரசர்கள் என்ன செய்வார்கள்? வேளாண்மை செய்வார்களா? இல்லை வேட்டுவம் செய்ய கானேகுவார்களா?” என்றான்.

அவனுடைய இளிப்பால் எரிச்சல் கொண்ட அஸ்வத்தாமன் “செல்க!” என்று கைகாட்டினான். அவன் “நான் தாங்கள் செய்த ஊழ்கத்தை இறுதிக்கணத்தில் கலைத்துவிட்டேன் போலும்… பொறுத்தருள்க, நான் அவ்வண்ணம் எண்ணவில்லை. நான் அந்த அருமணியை மட்டுமே இலக்காக்கினேன். அதை நீங்கள் எனக்கு அளிப்பீர்கள் என்றால் நான் இங்கே நின்றிருக்கவேண்டிய தேவையே இல்லை” என்றான். அவன் விழிகளில் சூழ்ச்சி குடியேறியது. “ஊழ்கம் செய்பவர்கள் ஒருவகையில் ஒளிந்துகொள்பவர்களும் கூட. ஊழ்கம் என்றாலே தப்பிவருதல்தானே? துரத்தி வருபவர்களும் இருப்பார்கள் அல்லவா?” என்றான். “செல்க” என்று மேலும் எரிச்சலுடன் அஸ்வத்தாமன் சொன்னான். அவனிடமிருந்து விலகிச்செல்லும் விழைவுடன் அப்பால் நடக்க அவன் தொடர்ந்து வந்து பொய்யான பணிவை தோள்களில் காட்டி, விரிந்த இளிப்புடன் எச்சில் தெறிக்க தொடர்ந்து பேசினான்.

“என் பேச்சு உங்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. பெரும்பாலானவர்களுக்கு என் பேச்சு பிடிப்பதில்லை. என் குலத்திலேயேகூட பலருக்கு என்னை பிடிப்பதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் பேச்சைக் கேட்டு ஒரு முனிவர் எனக்கு ஜல்பன் என்று பெயரிட்டார். என்னை அனைவரும் அவ்வண்ணமே அழைக்கின்றனர். என் அன்னை இட்ட பெயர் வாரண்யன். அதை நானே மறந்துவிட்டேன்…” சினத்துடன் அஸ்வத்தாமன் திரும்பி நோக்க உடல் வளைத்து வணங்கி ஜல்பன் சொன்னான் “அந்தணரே, அல்ல அரசே, நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள். தவம் செய்ய கானகம் உகந்த இடம் என்று எவர் சொன்னார்கள் என்றே தெரியவில்லை. ஊர்களிலிருந்து கிளம்பி வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தக் காடுகளில் அரைநாழிகைப் பொழுதுக்குள் ஒரு முனிவரை நீங்கள் பார்த்துவிடலாம். அவர்களைப் பார்த்தால் வெறுங்காற்றில் எடைதூக்குபவர்கள் என்றே எனக்குத் தோன்றும்.”

“ஊர்களில் அவர்களுக்கு ஆயிரம் அல்லல்கள் உண்டு, நான் அறிவேன். அங்கே பொன்னே அரசாள்கிறது. வாள்கள் துணைநிற்கின்றன. பொன்னுடன் வாள் சேரும் இடத்தில் அமைதி என்பது இருக்க முடியாது. ஆகவே இவர்கள் அவற்றை துறந்து இங்கே வருகிறார்கள். இங்கே ஆழ்ந்த அமைதி. அங்கே அனைத்தும் ஒலியெழுப்புபவை. மானுடரும் விலங்குகளும் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கின்றனர். சகடங்கள் ஓலமிடுகின்றன. கோட்டைகளும் மாளிகைகளும் உறுமுகின்றன. சந்தைகள் முழக்கமிடுகின்றன. படைகள் கொந்தளிக்கின்றன. இங்கே மரங்கள் அமைதியாக நின்றிருக்கின்றன. மலைகள் அமைதியே வடிவானவை. புழுக்கள் ஓசையிடுவதில்லை. பூச்சிகளின் ரீங்காரமும் அமைதியே. பறவையொலியும் யானைகளின் பிளிறலும்கூட அமைதியே. ஆகவே இங்கே தவம் செய்யலாமென கருதுகிறார்கள்” என்று அவன் சொன்னான்.

“ஆனால் எதை மறந்துவிடுகிறார்கள் என்றால் இங்கும் ஓசைகள் உண்டு என்றுதான். காடு தனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்கிறது. காடு ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் தவமூதாட்டி என்று தோன்றும். அது உண்மை அல்ல. அது தனித்து அமர்ந்திருக்கும் பிச்சிதான். அவள் பேசுவதெல்லாம் தனக்குள்ளேயேதான். இங்கு எவர் வந்து அமர்ந்தாலும் அவள் நேரடியாக அவர்களை நோக்குவதோ அறிவதோ இல்லை. ஆனால் அவள் நோக்குகிறாள், அறிகிறாள். நீங்கள் அமைந்த சற்றுநேரத்திலேயே அவளுடைய நோக்கு வந்து தொடும். அவளுடைய கை நீண்டு வரும். ஐயமிருந்தால் முயல்க. நீங்கள் எங்கே அமர்ந்திருந்தாலும் விழிமூடி இருந்தால் சற்றுநேரத்திலேயே ஒரு விலங்கோ பறவையோ உங்கள் முன் வந்து நின்றிருக்கும்.” அவன் பறவையோசையுடன் நகைத்து “சில தருணங்களில் அது மலைப்பாம்பாக இருக்கும். பிச்சி உங்களை அள்ளி ஆரத்தழுவிக்கொள்வதுதான் அது” என்றான்.

சினம் எல்லை மீற கையை ஓங்கியபடி திரும்பிய அஸ்வத்தாமன் “செல்… இனி ஒரு சொல் பேசினால் உன் தலை மண்ணில் கிடக்கும்” என்றான். அவன் விழிகளில் அச்சம் எழவில்லை. ஆனால் உடலை அஞ்சுபவன்போல் ஒடுக்கி “நான் என்ன பிழை செய்தேன்? நான் ஊடுருவுவது என்னுடைய பிழை அல்ல என்று சொல்லவந்தேன். அவ்வண்ணம் நிகழ்கிறது. ஊழ்கங்களைக் கலைப்பவள் இந்தப் பிச்சிதான். நான் வரவில்லை என்றால் ஒரு கீரியோ காகமோ வரக்கூடும்… நான் அவள் விழைவால் அவளிடமிருந்து எழுபவன் மட்டும்தான். காட்டிலிருந்து எவரால் தப்ப முடியும்?” என்றான். அவன் நகைத்து “நான் அங்கே உங்கள் ஊர்களுக்கெல்லாம்கூட வந்திருக்கிறேன். அங்கும் காடு இருக்கிறது. நகர்களுக்குள் காடு இருக்கிறது. அரசே, அல்ல அந்தணரே, அங்கே மாளிகைகளுக்குள்கூட சிறு காடு இருக்கிறது…” என்றான்.

“காடு இல்லாத இடமே இல்லை… ஒரு கைப்பிடி மண்ணில் ஒரு சிமிழ்நீரை ஊற்றி மூன்று நாள் வைத்திருங்கள், அங்கே காட்டின் துளி எழுந்துவிட்டிருக்கும். நகர்களை தவிர்க்கலாம், எந்த முனிவரும் காட்டைத் தவிர்க்க இயலாது” என்று ஜல்பன் சொன்னான். “உச்சிமலைப் பாறைகளின் மேல் பசும்பூச்சென பாசி படிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கூட காடுதான்.” தன் சொற்களில் அவன் மகிழ்வது தெரிந்தது. “காடு மென்மையானது, இனியது என்கிறார்கள். அங்குள்ள நகரங்களைவிட உயிர்மிக்கது அது. ஒரு எருதின் சாணியை மூன்றாவது நாள் அள்ளிப்பாருங்கள் ஆயிரம் வெண்ணிற வேர்கள் வந்து அதை உறிஞ்சி உண்டுகொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஒரு கல்லை இங்கே வைத்துவிட்டு சென்று ஒரு மாதம் கழித்து வந்து பாருங்கள், வேர்கள் அதைப் பொதிந்து இறுக்கியிருக்கும். இங்கே எவரும் அமர முடியாது, எதுவும் அமையவும் இயலாது. காடு தேடிவரும்… ஆகவே நீங்கள் என்னை முனியவேண்டியதில்லை.”

“காடு வெறிமிக்க பசிகொண்டவள்… காட்டின் பசிதான் இங்குள்ள அத்தனை விலங்குகளின் வயிற்றிலும் எரிகிறது. அத்தனை வேர்முனைகளிலும் கொடிநுனிகளிலும் தவிப்புகொண்டிருக்கிறது. காடு எவரையும் தனித்திருக்க விடுவதில்லை. வேரும் கொடியும் நீட்டி வந்து அணைத்துக்கொள்கிறது. காட்டுக்குள் வருபவர்கள் காடென்று ஆகிவிடவேண்டும். பிச்சி உங்களையும் பிச்சியாக்கிவிடுவாள். நீங்கள் காடென்று ஆன பின்னர் உங்கள் உறவினர் இங்கே தேடிவந்தால் இங்கே எவரைப் பார்ப்பார்கள்? ஒரு காட்டாளனை. ஆம், என்னைப்போன்ற ஒருவனை. நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் இங்கே ஊழ்கம் என ஒன்றை பயிலமுடியாது. இக்காட்டில் மலைப்பாறைகளும் மரங்களும் பயிலும் ஓர் ஊழ்கம் உண்டு, அதை மட்டுமே எவரும் இங்கே இயற்றமுடியும்…”

அஸ்வத்தாமன் அவனை திகைப்புடன் நோக்கினான். ஜல்பன் பற்கள் தெரிய இளித்தான். அருகே பறந்த ஒரு ஈயை கை வீசிப் பிடித்து நசுக்கி அப்பால் வீசி “ஈ” என்றான். அஸ்வத்தாமன் “நீ யார்?” என்றான். “நான் ஜல்பன்… சற்று மிகுதியாகப் பேசுபவன்தான்… ஏனென்றால் நான் பேசும் சொற்களில் பொருள் இருப்பதில்லை. ஆகவே பேசிப்பேசி பொருளை உருவாக்கிக்கொள்கிறேன். ஒரு கட்டத்தில் அந்தப் பொருளை முழுமைசெய்யும்பொருட்டு மேலும் பேசுகிறேன். எங்காவது பொருள் முழுமையடைந்தால் பேச்சை முடிக்கலாம் என்று நினைப்பேன். ஆனால்…” என்று அவன் தொடங்க அஸ்வத்தாமன் உரத்த குரலில் “நீ இப்படிப் பேச எங்கிருந்து கற்றுக்கொண்டாய்? நீ வேடன்தான், கற்றவன் அல்ல”என்றான்.

“ஆம், நான் வேடன். காட்டில் வாழ்பவன். அந்தணரே, இல்லை நீங்கள் அரசர். இருந்தாலும் கேளுங்கள், நான் எவரிடமும் பேசுவதில்லை. ஏனென்றால் எவரும் என்னிடம் பேசுவதில்லை. ஆகவே நான் என்னிடமே பேசத்தொடங்கினேன். பேசிப்பேசி என் பேச்சு எனக்கே புரியாமல் ஆனபோது பிறரிடம் பேசத் தொடங்கினேன். நான் கற்றவன்போல் பேசுவதாக அவர்கள் சொன்னார்கள்” என்று அவன் சொன்னான். அஸ்வத்தாமன் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றான். ஜல்பன் “நீங்கள் என்னைக் கற்றவன் என்று சொன்னீர்கள் என்றால் நான் இனிமேல் உங்களிடம் கற்றவன் என்று சொல்லிக்கொள்வேன்” என்றான் ஜல்பன். “நான் இன்னமும்கூட ஏராளமாகப் பேசவிரும்புகிறேன். ஆனால் இந்தக் காட்டில் என் குடியினர் எனக்குச் செவிகொடுப்பதில்லை. பிறர் என்னை அஞ்சுகிறார்கள்.”

அஸ்வத்தாமன் சலிப்புடன் முகம் சுளித்தபின் காட்டுக்குள் நடந்தான். “நான் தங்களை இடர்ப்படுத்த எண்ணவில்லை. உண்மையில் உங்கள் ஊழ்கத்தைக் கலைக்க நினைக்கவே இல்லை. நான் எவருடைய ஊழ்கத்தையும் கலைப்பதில்லை. அதாவது கலைக்க எண்ணுவதில்லை. ஆனால் அவ்வாறு ஆகிவிடுகிறது… ஊழ்கமும் காமமும் ஒன்று. அல்லது காமம் ஓர் ஊழ்கம். அல்லது ஊழ்கம் ஒரு புணர்தல் என்று சொல்கிறீர்களா? இருக்கலாம். நான் ஊழ்கத்தில் அமர்ந்ததில்லை. ஆனால் வேட்டைவிலங்குக்காகக் காத்திருத்தல் என்பது ஓர் ஊழ்கமே. அது ஒருவன் தன்னைத்தானே கைகளால் தழுவிக்கொண்டு காமம் நுகர்வதுபோல…” என்றபடி அவன் உடன் வந்தான்.

“நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் இக்கதையை. என் முன்னோன் ஒருவன் இப்படித்தான் வேட்டையாடச் சென்றபோது காட்டில் காமத்தில் புணர்ந்திருந்த இணையன்னங்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்தினான். வீழ்ந்த அன்னத்தைக் கண்டு அழுத அன்னத்தின் குரல் கேட்டு அங்கே தவம்செய்துகொண்டிருந்த முனிவர் ஒருவர் விழித்தெழுந்தார். அவனை நோக்கி அவர் தீச்சொல்லிட்டார்.” அவன் கைகளை தூக்கி “அந்தச் சொற்களை அப்படியே என்னால் சொல்லமுடியும்… நில் காட்டாளனே, காதல்கொண்ட இணைகளில் ஒன்றை வீழ்த்திய நீ முடிவிலாக் காலம் நிலைகொள்ளாமல் அலைவாய். அமைதியடையாமல் தவிப்பாய்” என்றான். அஸ்வத்தாமன் தன்னையறியாமலேயே நின்று அவனை நோக்கினான்.

“ஆம், அவர் என் நேரடி முன்னோர் அல்ல. ஆனால் எங்கள் குடி முழுக்கவே அவருடைய தீச்சொல்லை பெற்றுவிட்டது. ஆகவேதான் நாங்கள் காடுகள் தோறும் அலைகிறோம் என்று என் அன்னையர் கதைகளில் சொல்லியிருக்கிறார்கள்.” அவன் சிரித்து “ஆனால் என்ன வேடிக்கை என்றால் அந்த தீச்சொல்லை அளித்தவனும் எங்கள் மூதாதையே. அவனும் என்னைப்போல காட்டில் வேட்டையாடி வாழ்ந்தவன்தான்” என்றான். “வேடர்களிலேயே ஆற்றல்மிக்கவர்கள் இருக்கிறார்கள். சற்றுமுன் உங்கள் தலையின் அருமணியைக் கவர வந்த அந்த காட்டாளனைக்கூட நான் முன்னர் எங்கோ பார்த்திருக்கிறேன். அவனுடன் அவனைப்போலவே காட்டாளத்தி ஒருத்தி இருந்தாள்…”

அஸ்வத்தாமன் “நீ செல்லலாம்… உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றான். “ஆனால் நான் ஒன்று சொல்வதற்கு கொண்டுள்ளேன். ஏனென்றால் ஊழ்கம் கலைப்பது எங்கள் மூதாதையரிடமிருந்து வரும் இயல்பு என்பதுடன் இதையும் சொல்லியாகவேண்டும். நேற்றுக்கூட தற்செயலாக ஒருவரின் ஊழ்கத்தைக் கலைத்தேன். அவர் உங்களைப்போல அல்ல, மெய்யாகவே அரசர். அவரைப் பார்த்தால் அரசக்கோலத்தில் அனைத்தணிகளுடன் இருப்பதாகவே தோன்றும். ஆனால் அவர் ஓரிரு அணிகளே அணிந்திருந்தார். நீருக்குள் அவர் இருந்தார். மேலிருந்து நோக்கியபோது அவர் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு இருப்பதாகத் தோன்றி நான் அவரை அம்பால் அறைந்தேன். அதை ஏன் செய்தேன் என்று தெரியாது. ஆனால் என் கை அம்பு தொடுத்தது. என்னுடலில் அந்த தொல்மூதாதை குடியேறியிருக்கலாம்.”

அஸ்வத்தாமன் நின்றுவிட்டான். “எங்கே?” என்றான். “அங்கே மலைக்குச் சற்றுமேலே. காலகம் என்பது அந்தக் காட்டின் பெயர். அதற்குள் செங்குத்தான ஒரு பாறையடுக்குக்குக் கீழே சுனை ஒன்று உள்ளது. அதனுள்…” அஸ்வத்தாமன் அவன் தோளைப் பற்றிக்கொண்டு “நீ அவர் மேல் அம்பு தொடுத்தாயா?” என்றான். “அம்பு அவர்மேல் படவில்லை. அவருடன் இருந்த அந்தப் பெண்மேல்தான் பட்டது. ஆனால் அப்படி ஒரு பெண்ணே இல்லை” என்று ஜல்பன் சொன்னான். “நான் திகைத்து நின்றேன். அவர் நீருள் இருந்து எழுந்தார். என்னை வசைபாடுவார் என நினைத்தேன். ஆனால் இனிய புன்னகையுடன் என்னிடம் பேசினார். தன் ஊழ்கம் கலைந்ததைப்பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் முகத்தில் கனிவுதான் இருந்தது… ஊழ்கம் கலைந்ததைப் பற்றி அந்தப் பெண்தான் சீற்றம்கொள்ள வேண்டும். ஆனால் அப்படியொரு பெண்ணே இல்லை.”

அஸ்வத்தாமன் சினத்துடன் பற்களைக் கடித்து “அறிவிலி” என்றான். ஜல்பன் அதை செவிகொள்ளாமல் “ஆனால் அவர் அருகே தெரிந்த அவருடைய நீர்ப்பாவை கொடுந்தோற்றம் கொண்ட தெய்வமாக எனக்குத் தெரிந்தது. என் அச்சமே அப்படிக் காட்டியதென்று இப்போது தெளிந்துள்ளேன். ஆனால் அப்போது அஞ்சிவிட்டேன்… ஓடித் தப்பும்போதுதான் அறுவரைப் பார்த்தேன். அவர்களில் ஒருவர் உங்களைப்போல் இருந்தார். தோளில் வில்லுடன்” என்றான். அஸ்வத்தாமன் பதற்றத்துடன் “எங்கே சென்றார்கள் அவர்கள்?” என்றான். “அவர்களில் ஒருவர் அங்கே சுனைக்குள் கிடந்த அரசனைப்போலவே தெரிந்தார். அதை அவர்களிடம் சொன்னேன். அவர்கள் அவரைத் தேடிச்சென்றார்கள்…” அஸ்வத்தாமன் “அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டான்.

“நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் அறியாமல் மரங்களினூடாகச் சென்றேன்… என்னுடன் குரங்குகளும் வந்தன” என்றான் ஜல்பன். “கிராதர்களாகிய நாங்கள் மரங்களில் காற்றுசெல்லும் ஒலிகூட எழுப்பாமல் செல்லும் கலை அறிந்தவர்கள்…” அஸ்வத்தாமன் “சொல், என்ன நிகழ்ந்தது அங்கே?” என்று கூச்சலிட்டான். “அவர்கள் அவரை நீருக்குள் இருந்து எழுப்பினார்கள். நீரைக் கலக்கி அவரை நிலையழியச் செய்து வெளியே கொண்டுவந்தனர். அதன்பின் அந்த பேருருவர் அவருடன் போர்புரிந்தார். விசைகொண்ட போர். சிலதருணங்களில் மதயானைகள் துதிசுற்றிப்பற்றிப் போரிடுவதுபோல, சில தருணங்களில் புலிகள் அறைந்துகொள்வதுபோல, சில தருணங்களில் எருதுகள் கொம்புகூட்டுவதுபோல. மிகமிக வெறிகொண்ட போர். வரையாடுகளின் முட்டல், கரடிகளின் தழுவல், குரங்குகளின் பாய்ச்சல் அனைத்துமே அங்கே நிகழ்ந்தன.”

அஸ்வத்தாமன் தலை நடுங்கிக்கொண்டிருக்க வெறித்து நோக்கி நின்றான். “பேருருவர் எழுந்து தொடையில் அறைந்தார். ஒரே அடிதான்… நீருள் இருந்த அரசர் மண்ணில் பதிந்துவிழுந்தார்” என்று ஜல்பன் சொன்னான். “ஒரு முனகலோசை கூட இல்லை… நெருப்பு நீர்பட்டு அணைவதுபோல.” அஸ்வத்தாமன் மூச்சொலியில் “தொடையிலா?” என்றான். “ஆம், தொடையில்தான். தொடையில் அடிக்கும்படி சொன்னவர் மயிற்பீலியைச் சூடியவர். அவர் ஏதோ கைகாட்ட பேருருவர் அதைக் கண்டதை நான் கண்டேன். அரசர் வீழ்ந்ததும் பேருருவரின் மூத்தவர் ஒருவர் கூச்சலிட்டு அழுதார். இளையவர் ஒருவர் மயங்கிச் சரிய இன்னொருவர் அவரைப் பற்றிக்கொண்டார். அது முறையல்ல என்று அவர்கள் பூசலிட்டுக்கொண்டார்கள்…”

“அவர் உயிர்பிரிந்துவிட்டதா? உறுதியாக அறிவாயா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “நான் அருகே சென்று கண்டேன். அவர்கள் அவரை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். நான் அருகே சென்று குனிந்து நோக்கினேன். உயிரற்ற உடலை நம்முள் உள்ள பிறிதொருவன் உடனே அடையாளம் காண்கிறான்… அப்போது ஓசை கேட்டது. அந்தப் பேருருவர் வருவதைக் கண்டு நான் நீருள் பாய்ந்து மூழ்கி ஒளிந்துகொண்டேன். அவர் வந்து அரசரின் குருதிபடிந்த மேலாடையை எடுத்துக்கொண்டு திரும்பச் சென்றார். நான் கரையேறி சுனைவிளிம்பில் அமர்ந்தேன். நீருக்குள் ஒரு பெண்ணுருவம் அசைவதைப்போல் தெரிந்தது. அந்த தெய்வவடிவம் நினைவிலெழுந்ததும் நான் அஞ்சி எழுந்து ஓடிவிட்டேன்… காலகத்திலேயே இருக்கவேண்டாம் என முடிவுசெய்தேன்.”

அஸ்வத்தாமன் திரும்பி காட்டுக்குள் ஓடத்தொடங்கினான். அவனுக்குப் பின்னால் ஓடிவந்தபடி ஜல்பன் கூவினான். “அவர்கள் அகன்று சென்றுவிட்டார்கள். அவர்கள் அரசர்கள். காட்டில் ஒருவர் இவ்வண்ணம் அருமணி சூடியிருப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள்… அதை நீங்கள் எனக்கே கொடையளித்தீர்கள் என்றால் அனைத்து வகையிலும் நன்று.” அஸ்வத்தாமன் அவனிடமிருந்து விரைந்து அகன்றான். அவன் குரல் இலைத்தழைப்புக்கு அப்பால் அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. “அரசரின் உடல் அங்கே தனியாகக் கிடக்கிறது… அவர் மண்ணைப் புணர்வதுபோலத் தோன்றும்… நான் வேண்டுமென்றால் வழிகாட்டுகிறேன். அந்த அருமணியை எனக்கு பரிசாக அளிப்பதாக இருந்தால்…”

அஸ்வத்தாமன் அருகிருந்த உயர்ந்த மரத்தின்மேல் ஏறி கிளைக்கவரில் அமர்ந்தபின் இரு கைகளையும் வாயருகே குவித்து நாவால் கொம்பொலி எழுப்பினான். “கிருபர் அறிக! கிருதவர்மன் அறிக! இது உத்தரபாஞ்சாலனின் அறிவிப்பு. அரசர் களம்பட்டார்! கௌரவ மூத்தவர் களம்பட்டார்!” மீண்டும் கீழிறங்கி கிழக்கே சென்று இன்னொரு மரத்தின்மேல் ஏறி நின்று அவ்வோசையை எழுப்பினான். இன்னொரு மரத்தின்மேல் ஏறியபோது தொலைவில் உயரமான பாறை ஒன்று தெரிந்தது. அதன்மேல் தொற்றி ஏறி மீண்டும் கொம்போசையால் அறிவித்தான். நான்கு திசை நோக்கி அறிவிப்போசையை எழுப்பிக்கொண்டே இருந்தான். மானுடக்குரலை விடக் கூரிய சில்லோசை என எழுந்த அது காட்டின் பச்சைப்பரப்பின்மேல் பரவிச்சென்றது.

காட்டுக்குள் இருந்து எதிர்க்கொம்பொலி கேட்டது. “நான் கிருதவர்மன்… இங்கே சாலையில் சென்றுகொண்டிருக்கிறேன்…” மேலும் சிறுபொழுதுக்கு அப்பால் கிருபரின் எதிர்குரல் வந்தது. அஸ்வத்தாமன் பாறைமுகடிலேயே அமர்ந்திருந்தான். சற்றுநேரத்தில் பசுந்தழைப்புக்குள் இருந்து கிருபர் தோன்றினார். பின்னர் கிருதவர்மனும் தெரிந்தான். அவர்கள் இரு திசைகளிலிருந்து அவனை அணுகினர். அஸ்வத்தாமன் அவர்களை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அருகணைந்த கிருபர் “அரசர் எங்கே?” என்றார். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லாமல் காலகம் இருந்த வடமேற்குத்திசை நோக்கி கைகாட்டினான். கிருதவர்மன் ஓடி அருகணைந்து மூச்சிரைக்க நின்று “அரசர் எப்படி வீழ்ந்தார்? எவரால்?” என்றான். “பீமனால் தொடையறைந்து கொல்லப்பட்டார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருதவர்மனின் விழிகளில் எந்த உணர்வும் எழவில்லை. கிருபர் பெருமூச்சுவிட்டார்.

 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைபிறப்பிடம்–யசுனாரி கவபத்தா
அடுத்த கட்டுரைபுலம்பெயர் இலக்கியம் – காளிப்பிரசாத்