அபியின் லயம்

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

 

அன்புள்ள ஜெ

 

அபியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் அனுபவங்களைக் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வதுதான் நல்ல வழி என நினைக்கிறேன். ஆகவே தொடர்ச்சியாக அதற்கு முயன்றுகொண்டிருக்கிறேன். அபியின் ஆரம்ப காலக் கவிதைகள் கிப்ரான் கவிதைகள் போல நேரடியான பேச்சாகவே உள்ளன. பின்னர்தான் அனுபவம் மயங்கும் நிலையைப்பற்றிய பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.அந்தப் படிமங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கலாக ஆகிக்கொண்டே செல்கின்றன

 

எனக்கு அவருடைய இந்தக்கவிதை மிகவும் பிடித்திருந்தது. இக்கவிதையை நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா என்று எனக்குத்தெரியவில்லை. தேவதேவனின் “பொழுதுகளுடன் நான் புரிந்த யுத்தங்களை எல்லாம் முடித்துவிட்டு உன்னருகே வருகிறேன்” என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரியிலிருந்து நான் நிறையவே பெற்றுக்கொண்டிருக்கிறேன். உன்னருகே என்பதை தூக்கத்தின் அருகே என்றுதான் நான் புரிந்துகொண்டேன்.

 

2009ல் நான் மும்பை வந்தேன்.நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நெல்லைமாவட்டத்தில் மிகச்சின்ன ஊரில். மும்பையில் கொஞ்சம் கொஞ்சமாக நான் பழகினாலும் என் மனசு பழகவில்லை. ஒவ்வொருநாளும் வேலை முடிந்து ரயில் பிடித்து வீட்டுக்கு வந்து படுத்து கண்மூடினால் மொத்த நகரமும் என்மேல் ஓடிக்கொண்டிருப்பதைப்போல உணர்வேன்.. மெல்ல நான் அமிழ்ந்துபோனாலும் என்மேல் நகரம் விழித்திருக்கும். இதைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

 

அவ்வாறு என்மேல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நகரம் இந்த உலகம். இன்றைக்கு இருக்கும் இந்த நாகரீகம். நான் உண்மையில் அதன் அடியிலிருந்து கிளம்பி மேலே வந்து சில வேலைகளைச் செய்துவிட்டு மீண்டும் ஆழத்திற்கே சென்றுவிடும் ஒரு பூதம். நான் சிலசமயம் நினைப்பேன். இந்த தூக்கம்தான் எவ்வளவு பெரிய அனுக்ரஹம் என்று. எல்லாவற்றையும் கடந்து நம்மால் தூங்கிவிடமுடிகிறது என்பதே எவ்வளவு பெரிய விஷயம்.

 

லயம்

உறங்கப் போகும் போது
எப்போதும்
ஒரு தாள லயத்தைக்
கடந்து போக நேரிடும்

பாறைகள் குதித்துக்கொண்டிருப்பது போல்
ஆரம்பித்து
நீருக்குள் கூழங்கற்கள் உருள்வதுபோல்
அது முடிவடையும்

இப்போது தாளலயம்
ஓசைவரம்பு தாண்டி
விரிந்து பரவிக்கொள்ளும்
தொட அனுமதிக்காது —
மூச்சுக் காற்றைக்கூட வழுக்கிவிடும்

கவனிப்புக்கு உட்படும் நிலையிலேயெ
வேறோருபுறம்
சூட்சுமமாய்க் கலகம் செய்யும்
0-0
உறங்கிப்போன பின்பு
மறுபடி ஓசை உருக்கள் வெளிப்படும்
காலத்தைக் கணுக்கணுவாகத் தறிக்கும்
காலம் — ஓசை — காலம் — ஓசை எனத்
தொடுத்துக்கொள்ளும்

தாளலயம் மீண்டும்
நீருக்கடியில்
கூழாங்கள் உருளும் ஓசையைப்
பெற்றுவிடும்
இப்போது மிக நெருங்கிக் கேட்கும்
கலகமற்ற சூட்சுமமாய்
என்மீது தடதடக்கும்

ஏனெனில்
நீர்ப்பரப்பு இப்போது
என்மீது ஓடிக்கொண்டிருக்கும்

 

நகரம் ஒரு பெரிய அராஜகமான சத்தம். நகரத்திலே என்னை தொந்தரவுசெய்வதே அதன் லயம் இல்லாத சத்தம்தான். ஆனால் தூக்கம் ஒரு பெரிய லயம். பாறைகள் மோதிக்கொள்வதுதான் நகரம். நீருக்குள் கூழாங்கற்கள் உரசிக்கொள்வதுதான் தூக்கத்தின் லயம். எவ்வளவு அழகான படிமம். ஏனென்றால் நீர்ப்பரப்பு இப்போது என்மீது ஓடிக்கொண்டிருக்கும் என்ற வரிதான் எவ்வளவு அழகான முடிப்பு.

 

நன்றி ஜெ. அபியை அடையாளம் காட்டியதற்கு

 

ஸ்ரீதர் மகாதேவன்

முந்தைய கட்டுரைமகரந்தவெளி – கடிதம்
அடுத்த கட்டுரைஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை! -பாலா