பாரதியும் பாரதிக்குப்பின் பிச்சமூர்த்தியும் தொடங்கிவைத்த புதுவித எழுத்து முறைமைகள்தான், அறுபதுகளில் கவிதை இயக்கம் வேர்பிடித்து வளர அடி மண்ணாய் இருந்ததெனச் சொல்லலாம்.
அந்த வளத்தில் விளையத் துவங்கியவை இன்றும் சங்கிலித்தொடராய் மகசூல்கள் தந்தவண்ணம் இருக்கின்றன. அப்போது ஏராளமான கவிகள் வந்தனர். பல குழுவினராய் பிரிந்து இயங்கி, கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர். ஒரு கோணத்தில் பாரதியிலிருந்தே தமிழின் அரூபக் கவிதைகளும் தொடங்கிவிட்டன என்றாலும், அவருக்குப் பின், அதில் குறிப்பிடும்படி இயங்கியவர், தருமுசிவராம் என்கிற பிரமிள். அதன் பின், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரூபக்கவிதைகளில் மட்டுமே மனஓர்மை கொண்டு இயங்கி, தன்னையே அந்த அரூப கவிமொழிக்கு ஒப்புக் கொடுத்து விட்டவர் அபி.
ஒரு வகைப்பாட்டிற்காக பிரமிளை இங்கு சேர்த்தாலும் அவரது இயங்கு தளங்களின் திசைகளும், அவர் ஏற்படுத்திய சாதக பாதக விளைவுகளும் முற்றிலும் வேறானவை. அபிக்கோ கவிதை மட்டுமே களம். தன் கவிதைக்கு ஆதர்சமும் வாரிசுமில்லாத அபூர்வ கவி அபி. இரைச்சல்களுக்கே ஆட்பட்ட நமக்கு, அவரது மௌனத்தை உணர்வது கடினம்தான். அவர் நுட்பமான வாசகனுக்கு பிடிபடலாம். பிடிபட்டது போல போக்கு காட்டி, ஓடலாம். அல்லது பிடிபட்டுவிடாமலேயே கூடப் போகலாம்.
அபியின் கவிதைச் சாதனைகளில் முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியை கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான். அகச் சலனங்களை நோக்கியே இயங்கும் இவரது கவிதைகள், அரூப நிலைகளிலேயே மையங்கொண்டு திளைக்கின்றன. தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தில், யாரோடும் ஒப்பிட முடியாத, யாரின் சாயலுமற்ற தனிப்பாதையைத் தனக்கென வகுத்துக் கொண்டவர் அபி. அதுவே பொது புத்திக்கு அவர் உறைக்காமல் போனதற்கும் காரணமாக அமைந்து விட்டது.
அரைநூற்றாண்டைக் கடந்த தமிழின் நவீனக் கவிதை வரலாற்றில், சட்டெனக் கண்ணுக்குப் புலனாகாத அபியின் இருப்பு, தேடலும் கரிசனமும் நிறைந்த நுட்பமான வாசிப்பில், பிடிபட சாத்தியமாகிற ஒன்றுதான். நவீன மரபில் இந்த அளவுக்கு அதீத மௌனத்தைத் தன் படைப்புகளின் ஆழத்தில் வண்டலாகப் படியவிட்டுப் பரிசோதித்தவர், இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
வாதப்பிரதிவாதங்கள், பிரகடனங்கள், வெற்று கோஷங்கள், மேடைக்குயுத்திகள், உரத்துப் பேசும் தன்மை, ஆதாயத் தேடல்கள், மறைமுக நிரல்கள் முதுகு சொரிதல்கள், நிரூபித்து அடையத்துடிக்கும் எத்தனங்கள் – என கவிதை உலகில் நிலவும் கசடுகள் எதுவும் இவரது கவிதைகளை மட்டுமல்ல இவரையும் கூடச் சீண்டவில்லை.
ஒரு ராகம் எப்படி நமக்கு சட்டென அடையாளப்படுகிறது? அதன் பிரதான ஜீவஸ்வரங்கள் வழியேதான். அந்த ஜீவஸ்வரங்களை, உரிய முறையில் பிடித்து, துவக்கத்திலேயே உணர வைப்பவர்கள் உண்டு. மேலும் கீழுமாக ஏற்றியும் இறக்கியும் அசைத்தும் பாடும்போது, புரிய வைப்பவர்கள் உண்டு, அதன் சாயல் புலப்பட்டும் இன்னொரு ராகத்தின் மயக்கம் தோன்ற வைப்பவர்களும் உண்டு. ஜீவஸ்வரங்களை ஸ்வராந்திர அடுக்குகளுக்குள் மறைத்து விளையாடுபவர்களும் உண்டு. அந்த வித்வத்துவ விளையாட்டில் மேல்தளத்தில் ஒலிக்கிற சாதாரண காந்தாரத்தைக் கூர்ந்து கேட்டால், அது அந்தர காந்தாரமாக இருக்கலாம். அசட்டு கவனத்தில் கேட்கப்படும் கைசிகி நிஷாதத்தை ஆழ்ந்து கவனித்தால், காகிலி நிஷாதமாக இருக்கும். சில சமயம் புரிந்தது போல இருக்கும், புரியாது. பிறகு, ராகத் தேடலை மறந்து, ப்ருகாக்களின் உதிர்வில் மலைப்போம். கமகங்களில் கிறங்கித் திளைப்போம்.ஒரு கட்டத்தில் ராகமும் அழகான ஒலியும் கூட மறைந்து, உணர்வில் ததும்பும் அலையாக அது மாறி, ஏதோ இனம் புரியாத சிலிர்ப்பை நம்முள் நிகழ்த்தும். அந்த அனுபவத்தை ஒத்ததுதான் அபியின் கவிதைகள்.
செவிக்குப் புலனாகி மனசை வந்தடையும் சங்கீதம்போலவே, கண்களின் வழியே கருத்துக்கு புலனாகி மனசை வந்தடையும் அபியின் கவிதைச் சொற்களும், அதன் அர்த்தத்தில் அங்கு இருப்பதில்லை. நாமறிந்த மொழியின் சொற்களை கொண்டே அவர் எழுதியிருந்தாலும் மொழிக்குள் மொழியை உருவாக்கும் ரசவாதத்தால், புதிய புதிய அனுபவங்களை உணர வைக்கிறார்.
அபியின் ‘ராகம்’ – என்ற ஒரு கவிதை இப்படி முடிகிறது.
”கவிதையின் மூச்சு ஒன்று
கவிதையை மறுத்துக்
கடல்வெளி முழுவதையும்
கரைக்கத் தொடங்கிற்று”
இங்கு கவிதை, மூச்சு, கடல் என்னும் படிமங்கள் வந்த வேகத்தில்
பின் வாங்கிக் கொள்கின்றன. தன்னை மறுத்த தான் ஆகி, ஒரு ராகம்
கொள்ளும் பெருவியாபகம் போல் அனுபவம் உண்டாகிறது.
மேல்தளத்தில் ஒரு பொருளைத்தந்த ஒன்று, அடியாழத்தில் வேறொன்றாக உருமாறி, படிப்பவரின் அறிவுக்கும் அனுபவத்திற்குமேற்ப விதவிதமான பொருள்களைத் தந்து வினோதம் நிகழ்த்துகிறது. ஒரு வகையில் செப்பிடு வித்தை போல, படித்த சொல்லின் பொருள் ஒன்று, கணத்தில் மாயமாகி
அதே சொல்லில் வேறொன்று, ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறது.
பொறுமையையும், நிதானத்தையும், கவனக்குவிப்பையும், புதியதை விழையும் வேட்கையையும் கோருபவை அவரது கவிதைகள். அதை முழுமையாகக் கண்டடைய, அதன் மேல்மூட்டங்களையெல்லாம் விலக்கி விட்டு, குறியீடுகள், சமிக்ஞைகள், சன்ன ஒலிகள், சோபையான வெளிச்சக்கீற்றுகள் போன்றவற்றின் சொற்ப வழிகாட்டலில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகு, நாம் வருமென்று நினைத்த ஊர் வரலாம். அல்லது வேறு புதிய ஊரை அறியலாம். எதுவுமே இல்லையெனில், கடந்துவந்த தூரம் என்னும் ஒரு காலமற்ற அனுபவம் நம்மை நிறைக்கலாம்.
‘நிசப்தமும் மௌனமும்’ – என்று ஒரு கவிதை.
“நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது.
கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாதவெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே.”
ஒரு எளிய பார்வையில், திடீரென நேர்ந்த ஒரு வெடிப்பில், சட்டென ஒரு பறவைக் கூட்டம் பறக்குமொரு காட்சி மனசில் விரிகிறது.
நிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சொல்லும் நிறுக்கப்பட்டு, அதன் கனமறிந்து பயன்படுத்தப் பட்டிருப்பதை உணர முடிகிறது. இது இவரது எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தும் ஒரு அம்சமாகவே இருக்கிறது.
’நெடுங்கால நிசப்தம்’ – என்பது என்ன? யாருடைய நிசப்தம் அது? அல்லது எந்த சமூகத்தின் நிசப்தம்? இல்லை, பிரபஞ்சத்தின் நிசப்தமா? எது அது?
படீரென வெடித்துச் சிதறியது என்றால் ஏன் அப்படி நிகழ்ந்தது?
யாரால் அல்லது எதனால் நிகழ்ந்தது இப்படி?
அடுத்து ’கிளைகளில் உறங்கிய’ – என்கிறார். கிளைகளில் உறங்கியது எத்தகைய பறவை. அது என்ன உறக்கமா? உதாசீனமா?
’புழுத்தின்னிப் பறவைகள்’ – என்று ஒரு சொல்லைப் போடுகிறார். நல்ல பழங்கள் இருந்தும் சாப்பிடவில்லையோ? அல்லது புழுவையே தின்று வாழ சபிக்கப்பட்டவையா அவைகள்?
அதன்பின், சாதாரணமாய்ப் பறக்கவில்லை. அலறியடித்துக் கொண்டு பறந்தோடுகிறது என்கிறார். அலறிக்கொண்டு மட்டுமில்லை. தத்தம் வறட்டு வார்த்தைகளை வேறு, அலகுகளால் கிழித்துக் கொண்டு. மொத்தத்தில்
பறவை என்கிற படிமம், பறவை உருவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு வேறு ஏதோவாக மாறி ஒரு பயங்கரம் தொனிக்கிறது.
இந்தச் சிறிய கவிதை வரிகள் எழுப்பும் கேள்விகள்தான் எத்தனை!
ஒரு தட்டையான நேர்கோட்டுப் பார்வையில் இது தரும் பொருள்களை யோசித்தால், பல மடிப்புகள் விரிகிறது. ஒரு கூட்டத்தின் திடீர் எழுச்சி போலப் படுகிறது. ஒரு குடும்பத்தலைவனின் பொறுமை இழந்த நடவடிக்கையாகப் பார்க்க முடிகிறது. ஒன்றின் தன்னிழப்பில் இன்னொன்று புதிதாய்ப் பிறப்பது போல இருக்கிறது. செப்டம்பர் பதினொன்று போலவும் தோன்றுகிறது. ஒரே ஒரு சிறு காட்சிப் படிமம்தான். அது எத்தனை விதவிதமான அர்த்த அடுக்குகளை பார்வைக்கும் அனுபவத்துக்கும் தக்க விரித்து, முடியாமல் சென்றவாறே இருக்கிறது! அபியின் இந்தக் கவிதையின் தலைப்பு ’நிசப்தமும் மெளனமும்’. அவர் கவிதையில் தொடங்குவது நிசப்தத்தின் வெடிப்பு. அப்படியானால் மெளனம் நிசப்தம் அல்ல. அந்த மெளனத்தின் தரிசனத்தைத்தான் கவிதையின் பிற்பகுதி ஏங்கி நோக்குகிறது.
எஸ்ரா பவுண்ட் படிமத்தைப் பற்றிச் சொன்னதை இங்கு பொருத்திப் பார்க்க இடமிருக்கிறது.
“ஒரு படிமம் என்பது வெறும் கருத்தாக்கமல்ல;
அது ஒரு சுடரும் கண்ணி; கணு;
அல்லதுகொத்து. அது ஒரு சுழல்.
அதிலிருந்து கருத்தாக்கங்கள் பீறிட்டுக் கொண்டேயிருக்கின்றன.”
வாழ்வின் அபத்தம், நிலையின்மை, சலனம், நிச்சலனம், தெளிவு, தெளிவின்மை, கணநேரப்பிரக்ஞை, காலம், இடம், வெளி, தத்துவத் தேடல், புதிர் – என நுட்பமான இழைகளூடே இயங்கும் இவரது கவிதைகளை எடுத்து விளக்க – கவிதைகளில் இவர் சொல்ல முயன்றதைத் தேடித் தவிப்பதைவிட, மறுபடி மறுபடி பயின்று விடைதெரியா உணர்வொன்றை உணரமுயற்சிப்பதே உத்தமம் என்று பல சமயம் எனக்குள் தோன்ற வைத்திருக்கின்றன இவரது கவிதைகள்.
அபியின் இசை ஈடுபாடு அவரது கவிதைகளிலும் அங்கங்கு விரவிக் கிடக்கிறது.
“உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகளை கேட்டுக்கொண்டு என்ன செய்கிறாய்” – என்றும்,
“எப்போதும் நீ கேட்பது நாதமல்ல
நாதத்தில் படியும் உன் நிழல்” – என்றும் ஒரு கவிதையில்
சொல்லும் அபி,
“ஊசி முனைப்புள்ளியில் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது கமகம்” – என்று கமகத்தை இன்னொரு கவிதையில் காட்சிப் படுத்துகிறார்.
“பகல் வெளியில்
எங்கோ பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து விழிக்கூட்டுத் திரும்புகிறது” – என்று ஆரம்பிக்கும்
ஒரு கவிதைக்குத் தலைப்பாக, தாலாட்டுக்குப் பயன்படும் நீலாம்பரி ராகத்தின் பெயரைச் சூட்டுகிறார். அவரது தேர்ந்த சங்கீத ரசனையின் படிவங்கள் கவிதையில் படிந்த சில இடங்கள் இவை.
தன்னோடு பேசுவதும் தன்னை முன்னிருத்திப் பலப்பல உருவெடுத்து விவாதிப்பதும் பகடி செய்வதும் அமைதி கொள்வதும் நிச்சலனத்தில் சலனங்களை எழுப்புவதும் உள்ளுக்குள் கொதிப்பைத் தகிக்கவிட்டுப் பார்வைக்கு அமைதியான ஒரு தோற்றத்தை நிறுத்தி வைப்பதும் புதுவிதப் புதிர்ப்பிராந்தியத்தை இயல்பாக சிருஷ்டிப்பதும் வாசகனின் அனுபவ வழியில் கவிதைகளைக் கண்டுணரச் சில சாவிகளை மறைத்து வைப்பதும் ஒவ்வொரு சொல்லையும் தூக்கி எடுத்து, அதன் ஜிகினாத் துகள்களை உதறி, அர்த்தப் பிசுக்குகளை கழுவித் துடைத்து சுத்தமாக உருமாற்றிப் புழங்க விடுவதும் மொழியின் லயத்தையே ஆதார ஸ்ருதியாகக் கொண்டு பித்தான மனோநிலையில் வார்த்தைகளற்ற ராகத்தை ஆலாபிப்பதுமென – அபியின் கவிதைவெளி பிரத்தியேகமானது. எளிய சொற்களில் தமது தர்க்கத்தை தாமே உருவாக்கி வளர்ந்து செல்வதை ’ஏற்பாடு’, ’மாற்றல்’, ’இருத்தல்’ – போன்ற கவிதைகளில் நாம் காணலாம்.
‘நான்’ – ‘நீ’ என்று தன்னையே இருகூறாகப் பிரித்து, சில கவிதைகளில் உரையாடல் நிகழ்த்துகிறார். எதிரெதிர் துருவமாக இயங்கும் மன அமைப்புகொண்ட ‘நான்’ – ‘நீ’-யை அவற்றில் பேசவிட்டு, மனிதனின் ஸ்பிளிட் பர்சனாலிட்டியை வெளிக் கொண்டு வருகிறார். அல்லது அந்த உளவியல் உண்மையை ஒரு பாவனையாகக் காட்டி விட்டு உளவியல் தாண்டிய வேறொரு தரிசன உலகத்திற்குள் நுழையப்பார்க்கிறார்.
தன் இருத்தலையே விதவிதமாகப் பார்க்கும் அபியின் கவிதைகள், தமிழுக்குப் புதியவை. ழான் – பால் – சார்தர் “Being and Nothingness”-ல் எழுதியுள்ள கட்டுரைகள் போல, என் பார்வையில் என் இருத்தல், என் பார்வையில் நான் இல்லாது இருத்தல். உங்கள் பார்வையில் என் இருத்தல், உங்கள் பார்வையில் என் இல்லாதிருத்தல். காணாமல் போனபிறகு இருத்தல். காணாமல் போனபிறகு இல்லாதிருத்தல் என்று மனித இருத்தலின் பல்வேறு கோணங்களை படம் பிடிக்கிறது அபியின் சில கவிதைகள்.
நாற்பதாண்டு காலக் கவிதை வாழ்வில் மூன்று கவிதைத் தொகுதிகள், பின் இதை எல்லாம் சேர்த்த, அத்துடன் ”மாலை” என்னும் புதிய தொகுப்பு உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுதி. எழுதியவை குறைவெனினும் தமிழ்க் கவிதைப் பரப்பில் இல்லாத தளங்களைத் தனது உக்கிரமான பரிசோதனைகளின் மூலம் தந்து தமிழுக்கு வளம் சேர்த்த அபி.
அய்யந்திரிபறக் கற்பித்த தமிழாசிரியர். நண்பர்களுக்கு வயதுகளின் பேதம் துறந்த தோழன். சபைகளை விலக்கிவிட்டுச் சதா சாயைகளோடு பேசித் திரியும் பித்தன். மாலை, துண்டு, புகழ்மொழிகளின் லேசான தூவானத்திற்கே ஒடி ஒதுங்கி ஓரமாய் நின்று சிரிக்கும் துறவி.
தேர்ந்த கலைஞனுக்கேயுரிய அலைக்கழிப்பும் பரிதவிப்பும் சமன்குலைவுகளும் மனோஅவஸ்தைகளும் லௌகீக உபாதைகளும் இவருக்கு உண்டெனினும், அதையெல்லாம் மீறிப் பிறந்த ஒரு அபூர்வ ராகம் அபி.
புழக்கத்தில் இல்லாத ராகத்தை நாம் இழந்து விடுகிறோம். அதனால் ராகத்துக்கு நேர்வது எதுவுமில்லை. எல்லா வித்வான்களாலும் பாடப்படுவதில்லையெனினும் புதிர்ப்பிராந்திய எல்லைகளில் சுவாதீனமாய்
வளர்ந்து வளர்ந்து, தன்னந்தனியே ஒரு நாதவனத்தை நிர்மாணம் செய்து கொள்ளும் வல்லமை சில அபூர்வ ராகங்களுக்கு உண்டு.
இன்னொரு கோணத்தில் சொன்னால், பல வீடுகளில் தலைச்சன்கள் தன்னையே கரைத்துக் கொண்டு இயங்கி, பிறரது உயர்வின் பெருமிதங்களில் சாந்திகொண்டு துலங்குகின்றன. அபியும் ஒரு தலைச்சன்தான். அவர் அரூபக் கவிமொழியின் தலைச்சன்.
‘மாலை’ – என்று அந்திப் பொழுதைக் குறிக்கும் கவிதை வரிசை,
இவரது கவிதைச் சித்து விளையாட்டின் உச்சபட்ச விஸ்தீரணங்களை காட்டக்கூடியதெனச் சொல்லலாம்.
மாலையைத் தனக்கான தனிப் பொழுதாகவே அடையாளம் காண்கிறார் அபி. பிரம்மாண்டமும் வியப்பும் காத்திருத்தலும், மௌடீகமும் துலங்கும் மாலை அது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் யாருக்காக இப்படிக் காத்துக் கிடக்கிறது என்கிற கேள்வி கவியும் மாலை, அவர் காட்டும் மாலை. நாம் கண்டிராத மாலை. இந்த மாலை, ஒரு புதுவித முல்லைத்திணை. சங்கத் தமிழ்ப் பாடல்களில் தலைவி தலைவனுக்காகவோ தலைவன் தலைவிக்காகவோ காத்திருப்பார்கள். இங்கே கவிதைசொல்லியோ, தன் வரவுக்காகத் தானே காத்திருக்கிறான். எவ்வளவு வித்தியாசமான காத்திருப்பு இது!
தன் சோகத்துக்கும் தத்துவத் தேடலுக்கும் மௌனத்துக்கும் தோதாக மாலையை உருமாற்றி விடுகிறார் அபி. சில கவிதைகளில். பால்யத்தில் உறைந்த மாலையின் நினைவுகளில், நிகழின் சலனங்களைப் படிய விடுகிறார். உயிரற்ற மாலை அபியின் தீண்டலில் இயக்கம் கொள்கிறது.
“புரண்டு படுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை சலிக்கிறது” – என்கிறார் ஒரு மாலைக் கவிதையில்.
“சவுக்குத் தோப்புகள் வேறு கவனமின்றி
வழிதெரியாத கூச்சல்களை
நிர்வாகம் செய்து கொண்டிருந்தன” – என்கிறார்
இன்னொரு மாலைக் கவிதையில்.
மாலை விளையாட்டு முடிந்து அம்மாவிடம்கதை கேட்கும் குழந்தைகளுக்கு
“ஏதேதோ அடுக்குகளில் இருந்து
ஏதேதோ அரூபங்கள்
பறந்து படிந்து மறையும்.
காலத்துள் நிகழ்ந்திராத காலம்
தகதகத்து
பிள்ளைகளின் கண்களில் இறங்கும்”
வெளியில் தெரியாத, இயற்கையின் உள்ளியக்கங்களை இவர் படிமப்படுத்தும் போது, மானிடமும் இயற்கையும் ஒன்று கலந்த பரவச பிம்பங்கள் எழுகின்றன.
மாலைக் கவிதைகளிலும் காலமும் வெளியும் ஒளியும் மௌனமும் விளையாடுகின்றன. அவை இருப்பது போலவும் இல்லாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகின்றன.
ஜாக்ஸன் போலக்கின் ‘ப்ளூபோல்’ வரிசை ஓவியங்கள், பார்வைக்கு முள்படல்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டிருப்பது போலத் தோற்றமளிக்கும். நிதானமான கவனிப்பில், ஒவ்வொரு படலுக்கிடையேயான தூரமும் இருப்பும் வெளியும் வெளிச்சமும் புலனாகும். அதுபோலவே, காலம், வெளி ஆகியவை இக்கவிதைகளில் இருப்பது போலவும் இல்லாதது போலவுமான மாய நிகழ்வினை நிகழ்த்திக் கொண்டே, சொல்லியும் சொல்லாமலும் ஏதேதோ சொல்கின்றன.
இவைகளை எல்லாம் எப்படி நாம் உள்வாங்குவது? காலமென்றும் வெளியென்றும், அண்டமென்றும், சூன்யமென்றும், புதிரென்றும் மௌனமென்றும் விரியும் இவரது கவிதை உலகை எப்படி நாம் புரிந்துகொள்வது? எவ்விதம்தான் அணுகுவது?
இதுவரை நாம் கவிதையென்று படித்தவைகளையும் கவிதை குறித்த நம் முன் அனுமானங்களையும், கருத்தாக்கச் சுமைகளையும் துறந்துவிட்டு கவிதையின் முன், நாம் ஒரு வகை அகநிர்வாணியாகப் போக வேண்டியிருக்கிறது. மதர்ப்புகளையெல்லாம் மறந்து விட்டு இப்படி ரசிக்கத் துவங்கும் போது, குழந்தையாக ஆகிவிடுகின்றன அபியின் கவிதைகள்.அது ”குறுகுறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்…” (புறம்–188) மயக்கும் குழந்தை.