அபியின் தெருக்கள்

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

ஜெ

 

அபியின் கவிதைகளின் அருவத்தன்மையைப் பற்றி பல குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இனி நீண்ட கட்டுரைகள் எழுதப்படும்போதும் இதேபோன்ற பார்வைதான் நீடிக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒரு கவிதையை இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்பதில்லை. அருவமான படிமம் கொண்ட கவிதை என்றால் அப்படி வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பை அது வழங்குகிறது என்று மட்டும்தான் பொருளே ஒழிய அது அருவமான கவிதை என்று அல்ல.

 

நான் அபியின் வாசகன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். இங்கே அன்னியமண்ணில் இருக்கும் இந்த தனிமை இல்லையென்றால் இந்தக்கவிதைகளுக்குள் சென்றிருக்கவே மாட்டேன். நீங்கள் கொடுக்கும் குறிப்புக்கள் வழியாகவே இந்தக்கவிதைகளை நான் வாசிக்கிறேன். நான் நிறைய தமிழ்க்கவிதைகளை வாசிப்பவன் அல்ல. அதேசமயம் ஆங்கிலக்கவிதைகளில் ஈடுபாடுண்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கவிதைகளும் எழுதியதுண்டு. [கவிதை எழுதாத யாராவது கவிதை வாசிக்கிறார்களா என்ன?]

 

என் வாசிப்பில் அபியின் கவிதைகளை தெளிவாக contectualize செய்துதான் வாசிக்கிறேன். அது பெரிய விஷயம் அல்ல. இந்தக்கவிதை இப்படி இங்கே நிகழ்ந்தது, இப்படி இவரால் சொல்லப்பட்டது என்று நாமே ஒரு சூழலையும் சந்தர்ப்பத்தையும் அதற்கு அளிப்பதுதான் அது. உதாரணமாக அபியின் மாலை கவிதையில் உள்ள சிறு தெருக்கள் என்ற பகுதி. நான் இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சோழவந்தான் பக்கமுள்ள என் ஊருக்குப் போயிருந்தேன். அங்கே தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர்தான்.

 

எனக்கு அந்த ஊரில் உடனடியாகத் தோன்றிய விஷயம் அந்த ஊரின் தெருக்கள்தான். கொத்துக்கொத்தாக மண்புழுக்கள் மாதிரி அந்தத்தெருக்கள் இருந்தன. சிறிய தெருக்கள் நரம்புகள் போல அந்த ஊரை சுற்றியிருந்தன. நான்குபேர் சேர்ந்து நடக்கமுடியாத தெருக்கள். பல தெருக்களில் ஒரு வீட்டு வாசலில் இருந்து எதிர்வீட்டுவாசலுக்கு காலைத்தூக்கி வைக்கமுடியும். அந்த அனுபவத்திலிருந்தே அபியின் இந்தக்கவிதையை நான் புரிந்துகொள்கிறேன்,..

 

மாலை – சிறுதெருக்கள்

 

சிறுதெருக்களின்  வேளை அது

அடக்கமாக மகிழ
அவைகளுக்குத்தான் தெரியும்

எல்லாப் பருவங்களிலும்
இறுக்கம் சற்றுத் தளரும் நேரங்களில்
தரயிலிருந்து சிறிது மேலெழும்பின

எளிய சந்திப்புகளில்
கைகோத்து
மாலையின் அணைப்புக்காக
அண்ணாந்திருந்தன

ஒன்றுக்கொன்று
(நட்புக் குறையாமலே)
பரிமாற்றம் நின்றுவிட்டது; அதனால்
குப்பை சேரவில்லை

எந்த உத்தரவுமின்றியே
தீவிரமாக நினைப்பதை நிறுத்தின; அதனால்
அவற்றின் சுவாசத்தில்
மனிதவாடை மறைந்தது

தமது மூல அமைப்பைக்
கிளறுவதையும் நிறுத்தின; அதனால்
அவற்றின் மீது
பயமற்று இறங்கியது மாலை

வெறும் எழுத்துக்கள்
மணிகளைப் போல
அங்கங்கே சிதறிக் கிடந்தன
சறுக்கியும் பொறுக்கியும் விளையாடப்
பிள்ளைகள்தான் இல்லை

 

அந்தச் சின்னத்தெருக்களைப் பற்றிய இந்தக்கவிதை பலபேருக்குச் சொந்த அனுபவமாகவே இருக்கக்க் கூடும். ரொம்பச் சின்னத்தெருக்கள், ஆகவே அடக்கமாக மகிழ அவற்றுக்குத் தெரியும் என்பதே ஓர் அழகான வரிதான். அந்தி ஆனதும் ஓய்ந்து ஒன்றோடொன்று எந்தப் பரிமாற்றமும் இல்லாமல் தளர்ந்துவிடுகின்றன. ஒரு பொட்டலத்தைக் கட்டிய கயிறுகள் தளர்ந்துவிடுவதைப்போல. ஊரை அவை இறுக்குவதில்லை. அந்தத்தெருக்களின் தனிமையை இக்கவிதை காட்டுகிறது. இது அருவமான அனுபவம் ஒன்றும் இல்லை. நான் அன்றைக்கு மாலை நேரடியாக அனுபவித்ததுதான்

 

எம்.சந்திரசேகர்

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47
அடுத்த கட்டுரைமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்