‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38

சகதேவன் தன் கைகளிலேயே உயிர்விடக்கூடும் என்னும் எண்ணத்தை நகுலன் அடைந்தான். பட்டாம்பூச்சிச் சிறகுபோல் அவன் உடல் நகுலனின் கையிலிருந்து துடித்தது. பின்னர் ஒரே கணத்தில் அனைத்து நரம்புகளும் அறுபட்டுத் தளர்ந்ததுபோல, எங்கோ சென்று அறைந்து விழுந்ததுபோல சகதேவன் மண்ணோடு அமைந்தான். அவன் இறந்துவிட்டானா என்னும் அச்சம் எழ நகுலன் அவன் முகத்தை நோக்கினான். விழிகள் மேலெழுந்து செருகியிருக்க வாயிலிருந்து நுரை வழிந்தது. மூச்சு விம்மல்கள்போல சிறு குமிழிகளாக அதில் வெடித்தது. அவன் மூச்சை அக்கோழை அடைத்துவிடக்கூடாது என்று எண்ணி அவனை சற்றே புரட்டி ஒருக்களித்துப் படுக்கச் செய்தான். சகதேவனின் மூச்சு சீரடைந்தது. அவன் வலக்கால் மட்டும் இழுத்துக்கொண்டே இருந்தது.

அர்ஜுனன் சகதேவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் அருகே வந்தபின் அவனுக்கு ஒன்றுமில்லை என உணர்ந்து நின்றான். யுதிஷ்டிரன் “இளையோனே” என்றபடி வந்து குனிந்தார். “அவன் நலமாக இருக்கிறான்… நினைவு தானாகவே மீளட்டும்” என்றான் நகுலன். இளைய யாதவர் “ஆம், அது உள்ளம் செய்யும் மாயம். அது தன்னால் சுமக்கமுடியாதவற்றை இவ்வண்ணம் உதறிக்கொள்கிறது. மீள்கையில் அனைத்தையும் கடந்திருப்பான்… ஓர் உச்ச எதிர்வினையுடன் திரும்பிச் செல்வான்” என்று புன்னகையுடன் சொன்னார். அப்புன்னகை நகுலன் உடலை எரியச்செய்ய அவன் நோக்கை தாழ்த்திக்கொண்டான். யுதிஷ்டிரன் “உன்னைப்போல் மானுடர் மேல் இரக்கமில்லாத ஒருவரை எண்ணியும் நோக்கியதில்லை, யாதவனே” என்றார்.

இளைய யாதவர் புன்னகை செய்து “அவன் உரிய சொற்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளத்தின் மேற்பரப்பிலிருந்து அவன் அவற்றை உருவாக்கிக்கொள்ள இயலாது. ஆகவே மூழ்கிச்செல்கிறான். அங்கிருந்து அரும்பொருட்கள் என அவற்றை எடுத்துவருவான். அவற்றை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொள்வான். அதில் ஏறிக் கடந்துசெல்வான். மானுடர் ஏற்கமுடியாதவை என்றும் கடக்கமுடியாதவை என்றும் ஏதுமில்லை” என்றார். யுதிஷ்டிரன் “நீ மானுடரை வெறுப்பவன். மானுடர் ஆத்மாவில் ஒளியில்லாத சிற்றுயிர்களன்றி வேறல்ல என எண்ணுபவன். யாதவனே, அனைத்தையும் ஒளிரச்செய்யும் சாந்தீபனியின் முதலாசிரியன் நீ. அனைத்தையும் இருளென்று கண்டு இருளைச் சமைத்து இருளே என இங்கே நின்றிருக்கிறாய்” என்றார். இளைய யாதவர் வாய்விட்டு நகைத்தார். பீமன் நிலத்தில் உமிழ்ந்துவிட்டு காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.

உறுமலோசையுடன் சகதேவன் விழித்துக்கொண்டான். சூழலை உணர்ந்ததும் அவன் எழ முயன்றான். நகுலன் அவனை அழுத்திப் பற்றிக்கொள்ள நிலத்தில் கைகளை அறைந்தபடி விலங்குபோல் ஊளையிட்டான். நகுலனை தன் கால்களாலும் கைகளாலும் உந்திப் புரட்டிவிட்டு எழ முயன்றான். நகுலன் அவனை மேலும் மேலும் அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டான். மெல்ல அடங்கி சகதேவன் விசும்பத் தொடங்கினான். நகுலன் எழுந்து அவனருகே அமர்ந்து “உடன்பிறந்தானே, உளம் அமைக! நாம் இளைய யாதவரின் சொற்களை கேட்போம். நமக்கு வேறுவழியே இல்லை” என்றான். “இனி அவர் சொற்களை கேட்கவேண்டியதில்லை. இனியும் அவர் சொற்களை கேட்டால் இப்புவியிலேயே நாம் இழிந்தவர்கள் என்று பொருள். இனி செல்ல வேண்டிய கீழ்மை என எதுவும் இன்று இல்லை. போதும்! இதற்கு அப்பால் ஒன்றில்லை என்று எண்ணுவோம்” என்று சகதேவன் கூவினான்.

“நாம் மேலும் மேலும் இறங்கிக்கொண்டிருக்கிறோம். இத்தருணத்தில் இங்கு உயிர்விட்டால் எழும் தலைமுறைகளின் நினைவிலேனும் சற்று நற்சொல் நம்மைப்பற்றி எஞ்சும்” என்று சகதேவன் கண்ணீருடன் சொன்னான். “எழுக, இங்கிருந்து இவ்வண்ணமே கிளம்பி கானேகுவோம்! இனி மானுடர் முகங்களையே நோக்காதொழிவோம். அரசென்றும் குடியென்றும் புகழென்றும் எதையும் அடையாதிருப்போம்…” உறுதியான தணிந்த குரலில் நகுலன் “நாம் வென்றிருக்கிறோம்” என்றான். சீறி எழுந்தமர்ந்து சகதேவன் “கீழ்மகனே, அச்சொல்லை உரைக்க உனக்கு நாணமில்லையா? எதை வென்றோம்? வென்று எதை அடைந்தோம்?” என்றான். நகுலன் இமைக்காமல் நோக்கி “அஸ்தினபுரியை, இந்திரப்பிரஸ்தத்தை, பாரதவர்ஷத்தை அடைந்திருக்கிறோம்” என்றான். “எதன் பொருட்டு காடுகளில் அலைந்தோமோ, எதன் பொருட்டு மனைவியையும் மைந்தரையும் காணாமல் வாழ்க்கையை அழித்துக்கொண்டோமோ அதை வென்று அடைந்திருக்கிறோம். நம் குடிமேல் இவர்கள் சுமத்திய பழியை நீக்கியிருக்கிறோம். நம் வஞ்சத்தை ஈடேற்றியிருக்கிறோம். நம் சொல்லை இங்கு நிலைநாட்டியிருக்கிறோம்” என்றான்.

“நாம் வெல்லவில்லை! நாம் தோற்றிருக்கிறோம்! பழி சுமந்து மண்ணை அடைந்தோம்! அக்குலமகளாலேயே வெறுக்கப்படும் கீழ்மக்களானோம். வென்றது அவர். அவர் மட்டுமே வென்றிருக்கிறார்! உடன்பிறந்தோனே, பாரதவர்ஷத்தில் இன்று வென்றது அவர் மட்டுமே! இங்கு வாழ்பவரும் வீழ்ந்தவரும் முற்றாகத் தோற்றுவிட்டிருக்கிறார்கள்” என்று சகதேவன் கூறினான். நகுலன் “உளம் அடங்குக… இவை நாம் நம் வெற்றிக்கு அளிக்கும் விலை. உயிர் இழந்து பெறுவதைவிட நூறுமடங்கு மதிப்புக்குரியது அகமிழந்து வெல்வது என்று நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். வென்றவற்றை துறந்தால் நாம் அதற்கு ஈடாக இழந்தவற்றையும் பொருளில்லாமலாக்குகிறோம். நம் பொருட்டு களம்பட்டவர்களுக்கு நாம் காட்டும் நன்றி ஒன்று உண்டு. இவ்வெற்றியை நாம் சூடிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்கள் குருதி சிந்தினர்” என்றான். சகதேவன் இல்லை இல்லை என்பதுபோல் தலையை அசைத்தான். பற்களைக் கடித்து இறுக்கியபடி விழிமூடினான். கண்ணீர் அவன் இமைப்பொருத்து மீறி கசிந்து வழிந்தது.

அவர்களின் கொந்தளிப்பைப் பார்த்தபடி கைகள் தளர்ந்திருக்க யுதிஷ்டிரன் நின்றார். பின்னர் விழப்போகின்றவர்போல் தள்ளாடினார். இரண்டடிகள் பின்னால் சென்று விழுந்து கிடந்த அந்த அடிமரத்திலேயே மீண்டும் அமர்ந்துகொண்டார். இளைய யாதவர் எவரிடமென்றில்லாமல் “ஆம், நான் வென்றிருக்கிறேன். வெற்றி என்றால் அது எச்சமில்லாது அமையவேண்டும். ஒரு துளியேனும் வெல்லற்குரியது எஞ்சுமெனில் அது வெற்றியல்ல. இதோ என் சொல் இங்கு நிலைநாட்டப்பட்டது. அறிக! மறுவினா எழாத சொல்லே உலகை வகுக்கிறது” என்றார். யுதிஷ்டிரன் பற்களைக் கடித்தபடி விழி தூக்கி “யாதவனே, இவ்வழிவுக்கு நீ ஆயிரம் விடைகளை கூறிவிட்டாய். இன்னும் ஆயிரம் சொல்ல உன்னால் இயலும். கூறுக! இதோ என் உடன்பிறந்தான் இங்கு கொல்லப்பட்டுக் கிடக்கிறான். இவ்வண்ணம் நிகழ்ந்ததற்கு நீ ஏதேனும் கூற இயலுமா?” என்றார்.

இளைய யாதவர் புன்னகைத்து “இனி ஒன்றையும் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதுவரை கூறியது அனைத்துமே எச்சமில்லாது வெல்லும் பொருட்டு தொகுக்கப்பட்ட சொற்கள். இறுதிக்கட்டத்தில் தயங்கி நின்றிருக்கலாகாது என்பதன் பொருட்டு உருவாக்கப்பட்ட விசைகள்” என்றார். அர்ஜுனன் அருகே வந்து அங்கு எழுந்த எச்சொல்லையுமே கேளாதவன்போல் தளர்ந்த குரலில் “நாம் கிளம்புவோம், யாதவரே” என்றான். “ஆம், கிளம்பவேண்டியதுதான்” என்று இளைய யாதவர் சொன்னார். “யாதவனே, இதோ விழுந்து கிடப்பவன் அஸ்தினபுரியின் அரசன். இவனை இங்கு விட்டுவிட்டா கிளம்புகிறோம்?” என்றார் யுதிஷ்டிரன். “அவருக்குரிய கடன்களை நாம் இயற்றுவோம். ஆனால் இங்கிருந்து அவர் உடலை நாம் சுமந்து செல்ல இயலாது. அரசர்கள் சிதைசுமக்கும் முறைமையும் இல்லை. திரும்பிச் சென்று அதற்குரிய வீரர்களை அனுப்புவோம். இங்கு விலங்குகள் ஏதுமில்லை. ஆகவே அவர் உடல் சிதைவுற வாய்ப்பில்லை. மேலும் அவரைக் காக்க இங்கு தெய்வங்களும் உடனுள்ளன” என்று இளைய யாதவர் சொன்னார்.

அர்ஜுனன் மறுசொல்லின்றி நடந்து பீமன் சென்ற வழியே காட்டிற்குள் புகுந்தான். நகுலன் சகதேவனிடம் “நாம் இனி இங்கு இருக்க வேண்டியதில்லை. எழுக, நாமும் செல்வோம்” என்றான். சகதேவன் “யாதவரே, ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் கொண்டிருந்த இறுதித் துளியையும் பறித்துவிட்டீர்கள். இனி மூத்தவர் கதை தொட்டெடுப்பாரென்றோ அடுத்தவர் வில்தொட்டு போரிடுவாரென்றோ தோன்றவில்லை. இனி எந்தப் புரவியும் இவனை பிறிதொரு புரவியென்று எண்ணாது. இனி எந்த அரசரும் தங்கள் நாவால் மூத்தவரை அறத்தோன் என்றுரைக்கமாட்டார்கள். இதோ இத்தருணத்தில் என்னிடம் எஞ்சியிருந்ததை நானும் இழந்திருக்கிறேன். இனி எந்த அவையிலும் நடுவன் என்று நான் அமரப்போவதில்லை. இனி ஒருபோதும் எவருக்கும் பொழுது குறித்துக் கொடுக்கப்போவதில்லை. இனி நிமித்த நூல் தொட்டு ஒரு சொல்லும் உரைக்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்” என்றான்.

இளைய யாதவர் “இந்த பலிபீடம் அத்தகையது. இதில் உங்கள் இறுதி உடைமை வரை வைத்தாகவேண்டும். இந்த வேள்வித் தீ தூநீறை அன்றி பிறிதொன்றை எஞ்சவைக்காது” என்றார். சகதேவன் உடைந்த குரலில் “ஏன் இதை செய்கிறீர்கள், யாதவரே? இப்பெரும் பழியை எங்கள் மேல் சுமத்தும் அளவுக்கு நாங்கள் என்ன பிழை செய்தோம்?” என்றான். “இதை நான் உங்கள் மீது சுமத்தவில்லை. இதில் இறங்கியவர்கள் நீங்கள். இதன் அறுதி வரை செல்லாமல் நீங்கள் அமைந்திருக்கமாட்டீர்கள். இல்லை எனில் இப்போதேனும் மறுத்துக் கூறுங்கள் பார்ப்போம். நீயோ உன் உடன்பிறந்தாரோ இவ்வழியே எழுந்துவிட்டீர்கள். எங்கேனும் நின்றிருந்தால் அங்கு நிறைவுற்றிருப்பீர்களா?” என்றார் இளைய யாதவர். “இன்று இழந்துவிட்டதைப்பற்றி எண்ணுகிறாய். எய்தியது இத்தருணத்தில் சிறிதென்றிருக்கிறது. இன்னும் ஓரிரு கணங்கள்தான், சகடம் மறுதிசை நோக்கி சுழலத்தொடங்கும். எய்தியதை கணக்கிடத் தொடங்குவாய். எண்ணி எண்ணிப் பெருக்குவாய். இழந்தவை சுருங்கி எங்கோ சென்று மறையும். எய்தியவற்றின் மேல் மகிழ்ந்து அமர்ந்திருக்கும் உன்னை பார்க்கத்தான் போகிறேன். அன்று இத்தருணத்தை உனக்கு நான் நினைவூட்டுவேன்.”

சகதேவன் திகைப்புடன் அவரை நோக்கிவிட்டு மெல்ல விழிதழைத்து நீள்மூச்செறிந்தான். “நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. மானுடரைப் பற்றி அறுதியாக எதுவும் சொல்ல இயலாது என்பதையே நிமித்த நூலில் இருந்து நான் கற்றிருக்கிறேன்” என்றபின் எழுந்து “செல்வோம்” என்று நகுலனிடம் கைகாட்டிவிட்டு அர்ஜுனனை தொடர்ந்து சென்றான். “தங்கள் இறுதிக் கூற்றையும் உரைக்கலாம் யுதிஷ்டிரரே, இது அரிய தருணம். இனி களம்பட எவருமில்லை” என்றார் இளைய யாதவர். “இத்தகைய தருணங்களில் அனைத்துப் பழிகளையும் உன் மேல் போடுவதற்கே எங்கள் உளம் எழுகிறதென்பதை இப்போதுதான் உணர்ந்தேன். அது ஓர் எளிய தப்பும் வழி. உன் மேல் பழிசுமத்த எத்தகுதியும் எங்கள் ஐவருக்குமில்லை. விழைவும் வஞ்சமும் சீற்றமும் கொண்டிருந்தோம். இத்தருணத்திலுமகூட அவை முற்றடங்கின என்று கூற இயலாது” என்றபின் கசப்புடன் புன்னகைத்து “மானுடர் இயல்பு போலும் அது, தாங்கள் எய்துவதெல்லாம் தங்களால்தான் என்பவர்கள் தாங்கள் இழந்தவற்றுக்கு தெய்வங்களை பொறுப்பாக்குவார்கள்” என்றார்.

“எல்லாப் பழியையும் தெய்வங்கள் மீது போடுவதும் ஒரு உளவிரிவே. இப்புவியில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அறத்திற்கும் மறத்திற்கும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் “அவன் இறுதிக்கணம் வரை கொண்டதை துறக்கவில்லை. எதுவாக இருந்தானோ அதுவாகவே மறைந்தான். அந்த உறுதிப்பாடு இக்களத்தில் வேறு எவருக்கும் இருக்கவில்லை” என்றார். இளைய யாதவர் திரும்பி துரியோதனனை நோக்கினார். “உறுதிப்பாடு தன்னளவிலேயே ஒரு மெய்மை போலும். நாங்கள் ஐவரும் அதை அடையவேயில்லை. ஐந்து விரல்கள் கொண்ட கை என இங்கே நெளிந்து தவிக்கிறோம். எதையோ பற்ற முயன்று நழுவ விடுகிறோம்” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் துரியோதனனை அணுகி அவனை நோக்கியபடி நின்றார். அவர் முகம் கனிந்தது. குனிந்து அவன் தலைமேல் கைவைத்து “இப்பழியும் என்னை சேர்க! இதுவும் எனக்கு மலர்த்தார் என்றே ஆகுக! என் பெயர் இதன்பொருட்டும் விளங்குக!” என்றார்.

ஏனென்று அறியாமல் யுதிஷ்டிரன் மெய்ப்பு கொண்டார். இளைய யாதவர் குனிந்து அந்த கதையை எடுத்தார். அதை சுனைக்கு அருகே கொண்டு சென்று மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நீருள் வீசினார். அலை எழுப்பி நீருள் அது அமிழ்ந்து செல்ல இளைய யாதவரின் உருவமே அலைகளில் நெளிந்தாடுவதை யுதிஷ்டிரன் கண்டார். ஒருகணம் அதில் பிறிதொரு உருவம் தெரிவதுபோல் தோன்ற உளம் திடுக்கிட்டு கூர்ந்து பார்த்தார். அதில் எட்டு கரங்களுடன் தோன்றிய கரிய தெய்வத்தைப்ப் பார்த்து அஞ்சி பின்னடி எடுத்து வைத்தார். அந்த தெய்வமும் இளைய யாதவரும் உரையாடிக்கொள்வதுபோல் தோன்றியது. பின்னர் புன்னகையுடன் திரும்பிய இளைய யாதவர் புற்களத்திற்கு மீண்டு அங்கே கிடந்த பீமனின் கதைத்தண்டை எடுத்து கொண்டுசென்று சுனைக்குள் இட்டார். நீர்ப்பரப்பையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் அதில் முதிய அரச உருவம் ஒன்று தோன்றி அலைபாய்வதைக் கண்டார். இளைய யாதவர் அவ்வுருவை நோக்கிக்கொண்டு நின்றார். அலையடங்கி மீண்டும் சுனை வெறும் நீர்ப்பரப்பென்றானதும் இளைய யாதவர் திரும்பி “செல்வோம்” என்று யுதிஷ்டிரனிடம் சொன்னபடி நடந்து காட்டுக்குள் மறைந்தார்.

யுதிஷ்டிரன் தன் நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அங்கு நின்றார். சுனைக்கரையின் புற்பரப்பில் மண்ணை ஆரத்தழுவியவன்போல் துரியோதனன் குப்புறக் கிடந்தான். தொடை உடைந்து குருதி வழிந்து புல்லில் அரக்கெனப் படர்ந்திருந்தது. ஒரு கணத்தில் துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையே நிகழ்ந்த அந்தப் போர் விழிகளில் தோன்றி மறைந்தது. ஆடையணிகளுடன் ஓர் அரசனுக்கும், ஆடையேதுமின்றி காட்டிலிருந்து எழுந்துவந்த விலங்கு போன்றிருந்த ஒருவனுக்குமான போர். அவர் அக்காட்சியை விழிகளிலிருந்து விலக்கிக்கொண்டார்.

தாங்கள் இருவரும் அவ்வண்ணம் ஒருபோதும் தன்னந்தனியாக இருந்ததில்லை என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்தார். அவ்வாழ்நாள் தொடரில் ஒருமுறையேனும் எங்கேனும் அவ்வண்ணம் தனித்திருந்திருக்கலாகுமா? எண்ண எண்ண வியப்பும் பதைப்பும் கொண்டு அவர் கால்மாற்றி நின்றார். ஒருமுறை கூட தனித்திருக்கும்படி ஏன் நிகழவில்லை? அதை எண்ணாமலேயே தவிர்த்து வந்தோமா? ஒருவேளை அவன் விரும்பி நான்தான் தவிர்த்தேனா? தனித்திருந்திருந்தால், விழிநோக்கி உரையாடியிருந்தால் இவையனைத்தும் நிகழ்ந்திருக்காதா? தெய்வங்கள் அவ்வாறு நிகழலாகாதென்று எண்ணினவா?

யுதிஷ்டிரனுக்குள் இருந்து அவரை உடலதிர வைக்கும் ஓர் எண்ணம் எழுந்தது. அப்போது அவனிடம் உரையாட முடியும். ஒரு சொல்லேனும் உரைத்துவிட இயலும். அவர் மேலும் அவனருகே சென்றார். ஆனால் அவர் உடல் அங்கேயே அசைவற்று நின்றிருந்தது. உடலிலிருந்து எழுந்த அது உடலின் எடையை இழுக்க முடியாமல் சோர்ந்து மீண்டும் உடலிலேயே வந்தமர்ந்தது. துரியோதனனின் கால்களிலிருந்து தலைவரை யுதிஷ்டிரன் நோக்கிக்கொண்டிருந்தார். பழுதற்ற நிகர்நிலை கொண்ட உடல். அப்போது முற்றாக மண்ணில் படிந்திருந்தது. நெடுங்காலம் முன்னர் மண்ணில் விழுந்து பாதி புதைந்ததுபோல. அது மண்ணில் வடிக்கப்பட்டதுபோல் தோன்றியது. மண்ணிலிருந்து தானாகவே உந்திப்புடைத்து எழுந்ததுபோல். அது ஒருபோதும் மானுடனாக உலவியதில்லை. அது மண் அன்றி வேறல்ல.

யுதிஷ்டிரன் திரும்பி நடந்து புதர்வாயிலுக்குள் நுழைவதற்குள் மீண்டும் திரும்பிப்பார்த்தார். அவன் மண்ணாலான சிலையென அப்பரப்பில் முற்றிலும் இயைந்துவிட்டிருந்தான். யுதிஷ்டிரன் முன்னால் செல்பவர்களின் காலடி ஓசையைக் கேட்டபடி தளர்ந்த நடையுடன் தொடர்ந்து சென்றார். அவர்கள் ஒவ்வொருவரின் காலடியும் ஒவ்வொரு இடத்திலென ஒலித்தது. அவர் நடந்து செல்லச் செல்ல அவ்வோசைகள் குவிந்து ஒன்றாக இணைந்து முன்னால் ஒலித்தன. அவர்களின் உடல்களைக் கண்டதும் அவர் நடைதளர்ந்தார். பெருமூச்சுடன் அதுவரை இறுக்கமாக வீசிக்கொண்டிருந்த கைகளை எளிதாக்கினார். அதுவரை உள்ளத்தால் ஒரு சொல்லை இடுக்கிக்கொண்டிருந்தார். அச்சொல்லை திகைப்புடன் நோக்கினார். “புல்.” அதன் பொருள் என்ன? ஏன் அது அவ்வண்ணம் தன்னுள் தங்கியது? உடனே அவர் ஒன்றை உணர்ந்தார், அவருள்ளத்தில் புல் என்னும் சொல்லுடன் இருந்தது மண்ணின் காட்சி.

அவர் அந்தப் பொருளின்மையை தன்னுள் இருந்து ஒதுக்கி சீராக கால்களை எடுத்துவைத்தார். ஒழுங்குள்ள எண்ணங்கள் அகமெனக் கூடியபோது அவர் கொண்ட உணர்ச்சி ஓர் ஏக்கம் மட்டுமே என உணர்ந்தார். எதன் பொருட்டு அந்த ஏக்கம்? அனைத்தும் முடிந்துவிட்டது என்பதனால் விளைவதா? இதுவரை நூறுநூறு திசைகளில் சென்று முடிவில்லாத வடிவங்களில் அவர் அகத்தே நிகழ்த்திய ஒன்று. நிகழவிருப்பது அறியாத வெளி. ஆனால் நிகழவிருப்பதன்மீது மட்டுமே மானுடனுக்கு ஏதேனும் ஆளுகை உள்ளது. பிற அனைத்தும் அவனிடமிருந்து முற்றாக விலகிச்சென்றுவிடுகின்றன. அவன் இல்லாமலேயே தங்களை வகுத்துக்கொண்டுவிடுகின்றன. அவனை மறுவரையறை செய்யத் தொடங்கிவிடுகின்றன. நிகழ்ந்துவிட்டவற்றை எண்ணி எப்போதும் மானுட உள்ளம் பதைக்கிறது. எண்ணி எண்ணி மலைத்து ஏங்கி உருகி பின் நினைவில் உருமாற்றிக்கொள்கிறது.

இனி ஒருபோதும் அவனை சந்திக்க முடியாது. அவ்வெண்ணம் எவரோ காதருகே சொன்னதுபோல் அத்தனை கூர்மையாக எழ அவர் திடுக்கிட்டார். அது ஒன்றே அழுத்தமான உண்மை. நேற்றுவரை அவனைச் சந்திக்க, விழிதொட்டுப் பேச, வாய்ப்பிருந்தது. இனி அந்த வழி இல்லை. அவன் என்னைப்பற்றி என்னதான் நினைத்திருந்தான்? அவனிடம் மட்டும் சொல்ல சில ஆழுள்ளச் சொற்கள் என்னிடமிருந்தன. அவனிடமும் அத்தகைய சில சொற்கள் இருந்தனவா என்ன? இருந்திருக்கும், ஏனென்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறோம். கேளாக் குரல்களால் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். அவனிடமிருந்த அச்சொற்கள் இனி எங்கிருக்கும்? அவற்றுக்குரிய தெய்வங்களிடம் மீண்டிருக்கும் போலும். சொற்கள் அழிவதில்லை. என்றோ எங்கோ அவை என்னிடம் சொல்லப்படும். அன்று இவையனைத்தும் முற்றிலும் பிறிதொன்றாக மாறிவிடும்.

யுதிஷ்டிரன் தொலைவில் பீமன் இடையில் கைவைத்து தலைகுனிந்து நின்றிருப்பதைக் கண்டார். அவனைக் கடந்து அவன் நிற்பதை அறியாதவன்போல் அர்ஜுனன் புதர்களுக்குள் சென்று மறைந்தான். அவனருகே நெருங்கிய நகுலனும் சகதேவனும் அவனை நோக்கியபின் மரங்களுக்கு மேல் பார்த்தபடி நின்றனர். யுதிஷ்டிரன் அவர்களருகே வந்து “என்ன?” என்றார். நகுலன் விழிகளால் மேலே காட்டினான். மரங்களுக்கு மேல் குரங்குகள் கீழே நோக்கியபடி அமர்ந்திருந்தன. “அவன் குலத்தார்” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “அவர்கள் அவரை பொருட்படுத்தவில்லை” என்றான். “எந்தக் காட்டிலும் அவர் அவர்களுடன் உரையாடுவதுண்டு… இன்று அவர்கள் அவரை எதிர் என நோக்குகிறார்கள்.” யுதிஷ்டிரன் “இக்காட்டு குரங்குகள் வேறுவகையினவா?” என்றபடி நிமிர்ந்து பார்த்தார். “இங்கே வரும்போது அவருடன் பேசிக்கொண்டு தலைக்குமேல்தான் வந்தன அவை” என்று சகதேவன் சொல்ல யுதிஷ்டிரன் புரிந்துகொண்டு வெறும் விழிகளுடன் பீமனையும் குரங்குகளையும் மாறி மாறி பார்த்தார்.

பீமனின் அருகே அணைந்து “இளையோனே, அவை நம் மூதாதையர்போல. எந்நிலையிலும் நமது பிழைகளை அவை பொறுத்துக்கொள்ளும். உரிய பிழையீடு செய்வோம், நம் விழிநீரால் பொறுத்துக்கொள்ளும்படி கோருவோம். இவையனைத்தையும் நாம் கடந்துசெல்வோம்” என்றார். பீமனின் உடலில் ஓர் அசைவு எழுந்தது. அதைக் கண்டு அறியாமல் அவன் தோளைத் தொட கைநீட்டிய யுதிஷ்டிரனிடமிருந்து அவன் தோளை விலக்கிக்கொண்டு அப்பால் சென்றான். சகதேவன் “அவர் மீது குருதி படிந்திருக்கிறது” என்றான். பீமன் ஏதும் கூறாமல் நடந்து அகன்றான். யுதிஷ்டிரன் மேலே அமர்ந்திருந்த குரங்குகளைப் பார்த்தபடி அங்கேயே நின்றார். பீமன் திரும்பி மீண்டும் சுனைக்கரை நோக்கிச் சென்றான். “இளையோனே” என யுதிஷ்டிரன் அழைத்தார். அவன் அதைச் செவிகொள்ளவில்லை. அவனைத் தொடர்ந்து செல்ல அவர் உள்ளம் கூடவில்லை. அங்கிருந்து விலகவும் இயலவில்லை.

அவன் காலடிகள் முழக்கமிட திரும்பி வந்து அவரைக் கடந்துசென்றான். “எங்கு சென்றான்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அரசரின் ஆடையை எடுத்துக்கொண்டு செல்கிறார்” என்றான் நகுலன். “அவர் குருதியை நம் அரசிக்கு கொண்டுசெல்வேன் எனச் சூளுரைத்திருக்கிறார்.” யுதிஷ்டிரன் “அவனும் இன்னமும் அதிலேயே இருக்கிறான்… அவர்கள் இருவரும் ஒன்றுபோல” என்றார். பின்னர் தனியாகத் திரும்பி நடந்தார். நகுலன் “அவர் முன்னால் சென்றுவிட்டார். காலடியோசை மறைந்துவிட்டது” என்றான். “அவன் முற்றிலும் தனிமைகொண்டிருக்கிறான். இவ்வண்ணம் அவன் என் விழிநோக்காமலிருந்ததே இல்லை” என்றார் யுதிஷ்டிரன். நகுலன் “அவர் தன் காற்றுக்குலத்தாரிடம் இருந்தே அகன்றுவிட்டிருக்கிறார்” என்றான். அவர் அருகே வந்த இளைய யாதவர் “அது இயல்பானதே. இங்கு ஒவ்வொருவரும் முற்றிலும் பிறரிடமிருந்து தனித்திருக்கிறார்கள். இப்போருக்குப் பின் அத்தனிமை இயல்பானது. நன்றும் கூட” என்றார்.

சீற்றத்துடன் ஏதோ சொல்ல முகம் தூக்கிய யுதிஷ்டிரன் பின்னர் சலிப்புடன் தலையசைத்தார். “நாம் இதைப்பற்றி பேசிக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். “ஆம், இப்போது பேசுவதில் பொருளில்லை. ஆனால் பேசாமல் இருப்பதனாலும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. எல்லாக் கோணத்திலிருந்தும் அனைவரும் பேசிக்கொண்டே இருப்பீர்கள். அகத்தோ புறத்தோ. அனைத்தையும் பேசி முடித்த பின்னர் அனைத்தையும் பேசிவிட்ட நிறைவை அடைந்து மீள்வீர்கள்” என்ற பின்னர் புன்னகைத்தார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் பெருஞ்சினத்துடன் “யாதவனே, எங்கள் மேல் கருணை காட்டு. அடியவர்கள் என்று எண்ணி இதை அருள்க. அளிகூர்ந்து இப்புன்னகையை மட்டும் இனி எங்கள் முன் காட்டாதே. இது நெருப்பென எரிக்கிறது. இது கனவில் எழுமெனில் அக்கணமே அருகிருக்கும் படைக்கலத்தை எடுத்து நாங்கள் நெஞ்சில் பாய்ச்சிக்கொள்ளக்கூடும்” என்றார். இளைய யாதவர் உரக்க நகைத்தபடி நடக்க யுதிஷ்டிரன் அவருக்குப் பின்னால் சென்றார்.

மீண்டும் நீண்ட தொலைவுக்குப் பின்னர் யுதிஷ்டிரன் இளைய யாதவரைக் கண்டார். காடு செறிந்து அவர்களைச் சூழ்ந்திருந்தது. இலைகளின் தொடுகை அவரை இருப்புணர்த்தி ஆறுதல்கொள்ளச் செய்திருந்தது. இளைய யாதவரைக் கண்டபோது பல்லாயிரம் சொற்களினூடாக வந்திருந்தமையால் அவர் நெடுந்தொலைவை அடைந்து பிறிதொருவராக மாறிவிட்டிருந்தார். நினைவுகூர்ந்தவராக “யாதவனே, அந்த இரு படைக்கலங்களையும் நீரிலிட்டாய். அவையிரண்டும் இரண்டு தெய்வங்களாக எழுந்து உன்னிடம் பேசுவதை கண்டேன். கூறுக, அங்கு என்ன நிகழ்ந்தது?” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் நின்றார். “முதலில் எழுந்தவள் வஜ்ரயோகினி. அவள் உருவை நான் கண்டேன்” என்றார். “ஆம், அவள்தான்” என்று இளைய யாதவர் சொன்னார். “கூறுக அவள் உரைத்ததென்ன?” என்றார் யுதிஷ்டிரன்.

இளைய யாதவர் “யோகம் கனிகையில் யோகியை விலக்கிய பெரும்பழி என்னைச் சேரும் என்றாள்” என்றார். “என் இறுதி யோகம் முழுமைகொள்ளாது என்று தீச்சொல் உரைத்தாள்.” யுதிஷ்டிரன் “இறுதி யோகம் என்றால்…” என்று கூறிய பின் “யாதவனே!” என்று துயருடன் அழைத்தார். அதே புன்னகையுடன் இளைய யாதவர் “அது அவ்வாறே என்று நானும் அறிந்திருக்கிறேன்” என்றார். அவர் நடக்க மீண்டும் அவருடன் நடந்து மூச்சிரைக்க அணுகிய யுதிஷ்டிரன் “இரண்டாவதாக எழுந்தவர் யார்? அவர் முதிய தோற்றத்திலிருந்தார்… தொலைவிலிருந்து நோக்குகையில் பீஷ்மப் பிதாமகர் போலிருந்தார்” என்றார். “அவர் காற்றுத்தெய்வத்தின் வழிபாட்டாளரும் மாமல்லருமான ஹஸ்தி. உங்கள் குடியின் முதற்பிதாமகர்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் “அவரா?” என்றார். “ஆம்” என்றபின் “அந்த கதையில் உறைபவர் அவர்தான்” என்றார் இளைய யாதவர்.

யுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “அவர் உரைத்ததென்ன?” என்றார். “என் குடியில் ஒரு துளிக் குருதியும் எஞ்சபோவதில்லை என்றார்” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் உளம் நடுங்க அங்கேயே நின்றுவிட்டார். அவரை நோக்கி புன்னகைத்த இளைய யாதவர் நடந்து புதர்களுக்குள் மறைந்தார். தன் உடலை அங்கிருந்து எழுப்பவே யுதிஷ்டிரனால் இயலவில்லை. பின்னர் அறுந்து விழும் பொருளென அவர்கள் சென்ற திசை நோக்கி தானும் சென்றார். 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇலக்கியத்தன்மை என்பது…
அடுத்த கட்டுரைஅபி,விருது -பதிவுகள்