பீமன் காட்டுக்குள் இருக்கையில் மூச்சுத்திணறியவன் போலிருந்தான். பலமுறை கைகளை முட்டிசுருட்டி பற்களை இறுகக் கடித்து கண்களை மூடி நின்று பின்னர் மீண்டான். அவன் காட்டில் எப்போதுமே இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறிந்திருந்த நகுலன் அவனை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு யுதிஷ்டிரனை பார்த்தான். அவர் தலைகுனிந்து தோள்களைக் குறுக்கியபடி உடன் எவரும் இல்லாதவர்போல் நடந்துவந்தார். இளைய யாதவரின் நிழல் என அர்ஜுனன். இளைய யாதவரின் முகத்தில் மட்டுமே புன்னகை இருந்தது. சிறுவன்போல மலர்ந்த விழிகளால் காட்டை சூழ நோக்கிக்கொண்டு நடந்தார். இலைத்தளிர்களை கிள்ளி முகர்ந்து பார்த்தார். மலர்களை கைகளால் வருடினார். பூமுள் கையில் குத்தியபோது வாயில் வைத்துக்கொண்டார்.
சகதேவன் தள்ளாடியபடி நடப்பதை நகுலன் கண்டான். பலமுறை அவனிடம் பேச எண்ணினாலும் குரலெழவில்லை. அவன் வெளிறிவிட்டிருந்தான். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. கழுத்திலும் தோளிலும் நீல நரம்புகள் புடைத்திருந்தன. அவன் நோயுற்றிருக்கக் கூடுமோ என நகுலன் ஐயுற்றான். அவன் அவ்வப்போது பெருமூச்சுவிட்டு மெல்ல முனகியபோது அவ்வொலி கேட்டு அவன் உளமுலைந்தான். அவனுடைய துயரம் எப்போதுமே தன்னுடைய துயரமாகியிருக்கிறது. ஆனால் அத்துயர் அவனை வந்தடையவில்லை. உடல்வலிகள் மட்டுமே அப்படி பரிமாறப்படுமா என்ன? அவன் அடைவது துயர் அல்லவா? பிறிது உணர்வா? துயரைவிடக் கொல்லும் துன்பம் என பிறிதொன்று உண்டா என்ன?
காட்டின் விளிம்பை அடைந்ததும் முதலில் பீமன் பாய்ந்து வெளியே சென்றான். மூச்சிரைக்க ஓடி அப்பால் சென்று அங்கே ஓடிக்கொண்டிருந்த ஓடையின் கரையில் நின்று நீரை அள்ளி அள்ளிக் குடித்தான். மூச்சுத்திணறுபவன்போல ஓசையெழுப்பினான். அவனை நோக்கியபடி யுதிஷ்டிரன் நடந்தார். காட்டிலிருந்து வெளியே வந்ததும் யுதிஷ்டிரன் “நாம் எங்கு செல்கிறோம்? அஸ்தினபுரிக்கா? இந்திரப்பிரஸ்தத்திற்கா?” என்று இளைய யாதவரிடம் கேட்டார். “நாம் இப்போது செல்லவேண்டிய இடம் குருக்ஷேத்ரம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அங்கே அரசரின் சாவு முறைப்படி முரசறைவிக்கப்படவேண்டும். முழு வெற்றியை குறிக்கும் கொடி ஏற்றப்படவேண்டும். வெற்றியை பீஷ்ம பிதாமகரிடம் அறிவித்து வாழ்த்து பெறவேண்டும்.”
“யாதவனே!” என்று யுதிஷ்டிரன் கூவினார். “என்ன சொல்கிறாய்? அவரிடமா? நம்மால் அவர் முன் சென்று நின்றிருக்க முடியுமா? அவர் நம்மை தீச்சொல்லிட்டு அழிப்பார்… இல்லை, என்னால் இயலாது. நான் வரப்போவதில்லை. ஒருபோதும் என்னால் அதை செய்ய முடியாது.” பீமன் “நான் செல்கிறேன். நான் அவரிடம் சென்று சொல்கிறேன் நான் அரசனைக் கொன்றேன் என்று. எவ்வண்ணம் கொன்றேன் என்று சொல்லவேண்டுமென்றாலும் எனக்கு ஒப்புதலே” என்றான். சீற்றத்துடன் கைகளை விரித்தபடி திரும்பி அடிவைத்து வந்து “செய்தவற்றை எண்ணி பின்னர் துயருறுதல்போல் ஆண்மையின்மை பிறிதில்லை. செய்தவற்றுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள எனக்கு எந்நிலையிலும் தயக்கமில்லை” என்றான். ஓங்கி நெஞ்சில் அறைந்தபடி முழங்கும் குரலில் “ஆம், நானேதான் அனைவரையும் கொன்றேன். குலாந்தகனாகிய பீமன் நான்” என்றான்.
யுதிஷ்டிரன் மெல்ல நடுங்கினார். “நாம் பிதாமகரின் வாழ்த்தை பெற்றாகவேண்டும். இன்று எஞ்சும் குடிமூத்தார் அவரே. அவருடைய வாழ்த்து இன்றி போர்வெற்றி நிறைவுறுவதில்லை” என்றார் இளைய யாதவர். “போர்வெற்றியா? எவருக்கு?” என்று யுதிஷ்டிரன் கசப்புடன் சொன்னார். “நமக்கு, நமக்கு போர்வெற்றி. வேறெவருக்கு? போரில் நாம் வெற்றிபெறவில்லை என்கிறீர்களா? சொல்லுங்கள். இத்தனைபேர் உயிர்கொடுத்ததும் இவ்வளவு நிகழ்வுகளும் முற்றிலும் வீண் என கருதுகிறீர்களா? அவ்வண்ணமாயின் இதோ இதுவே தருணம். உங்கள் ஆடையை களைந்து வீசிவிட்டு திரும்பி காட்டுக்குள் செல்லுங்கள். துறவுபூண்டு காட்டில் தவம்செய்து உய்வடையுங்கள்” என்று பீமன் கூவினான். “நெஞ்சுதொட்டுச் சொல்க! இதோ இந்நிலத்தில் கால் வைக்கையில் இது என் நிலம் என நீங்கள் எண்ணவில்லையா? கூறுக!”
யுதிஷ்டிரன் “இளையோனே” என்று துயரம் நிறைந்த குரலில் அழைத்தார். “உங்களுக்கு வெற்றியின் சுவை தேவை, அதன் கசப்புகள் தேவையில்லை, அவ்வளவுதானே? அவ்வண்ணமே ஆகுக! நீங்கள் எப்பிழையும் இயற்றவில்லை. பிழைகள் இயற்றியவர் நாங்கள். அத்தனை பழியும் என் தலைமேல் நிலைகொள்க!” என்று பீமன் சொன்னான். இளைய யாதவர் “இங்கே பூசலிடுவதில் பொருளில்லை. நாம் இயற்றவேண்டிய பணிகள் பல உள்ளன. களமேகி அங்கே வெற்றியை முழுமை செய்வோம். உரிய அரசத்தூதர் வழியாக மூதரசி குந்திக்கும் அரசி திரௌபதிக்கும் முறைப்படி செய்தியை அறிவிப்போம்” என்றார். “யுயுத்ஸுவை அதற்கு அனுப்புவோம். உரிய முறையில் சொல்லெடுக்க அவனால்தான் இயலும்…” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இணையாகவே அஸ்தினபுரியின் மூதரசிக்கும் அரசியருக்கும் முறைப்படி அரசரின் களம்படல் செய்தி தெரிவிக்கப்படவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதற்கு நகுலன் செல்லட்டும்.”
“அவன் நம்முடன்…” என்று யுதிஷ்டிரன் சொல்ல “அரசகுடியினர் செல்லவேண்டும் என்பது மரபு. உங்கள் ஆணைக்கணையாழி அவனிடம் அளிக்கப்படவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “சென்று அஸ்தினபுரியின் அவையமர்ந்து அரசாணைகளை இடவேண்டும். அஸ்தினபுரியின் அமைச்சர்களுக்கும் அந்தணர்களுக்கும் குடிமூத்தாருக்கும் அவைமுதல்வர்களுக்கும் அரசரின் விண்புகுதல் அரசமுறைப்படி தெரிவிக்கப்படவேண்டும். மக்களுக்கும் முரசறைந்து செய்தி அறிவிக்கப்படவேண்டும். அதற்கு முன் எஞ்சிய காவலர்களைக் கொண்டு நகர்க்காவலை உறுதிசெய்யவேண்டும். அரசருடன் எரிபுகும் வீரர்கள் சிலர் அங்கே இருக்கக்கூடும். அவர்கள் உரிய முறைமைப்படி அதற்கு அனுப்பப்படவேண்டும். அரசரில்லாத நாட்டில் வாழோம் என உறுதிபூண்டவர்கள் இருந்தால் அவர்களின் அரசப்பதவிகள் களையப்பட்டு நாடுநீங்கச் செய்யப்படவேண்டும்.”
“பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளுக்கும் வெற்றிச்செய்தி அனுப்பப்படவேண்டும். எவரேனும் மாற்றுச்சொல் எடுத்தால் அவர்கள் மேல் போர்க்குறி விடுக்கப்படவேண்டும். அவை அனைத்தும் முடிந்த பின்னரே அஸ்தினபுரியில் உங்கள் நகர்நுழைவு நிகழமுடியும்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் “நகுலன் அவற்றை செய்யமுடியும்” என்றார். “சகதேவன் களைத்திருக்கிறான். அவன் என்னுடன் இருக்கட்டும்.” இளைய யாதவர் “ஆம்” என்றார். “இன்னொன்று எஞ்சியிருக்கிறது யாதவனே, அஸ்தினபுரியின் அரசனின் சிதையேற்றம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “ஆம், அரசன் அரசமுறைப்படி சிதையேற்றம் செய்யப்படவேண்டும். அச்சிதை குருக்ஷேத்ரத்திலேயே அமையலாம். அதற்கான நாளும் பொழுதும் அறிவிக்கப்படவேண்டும். மூதரசர் திருதராஷ்டிரர் அனலளிக்கவேண்டும்… அவரை அழைத்து அனைத்தையும் செய்விக்கும்படி சஞ்சயனுக்கு ஆணையிடுக!”
யுதிஷ்டிரன் சலிப்புடன் “முற்றிலும் புதிய போர் எனத் தோன்றுகிறது. திரளாத ஏதோ ஒன்றுடன் முட்டிமோதுவதுபோல” என்றார். “திருதராஷ்டிரரிடம் சென்று நீங்களோ பீமனோ நின்றிருக்க முடியாது. சகதேவன் செல்லட்டும்” என்றார். யுதிஷ்டிரன் “இல்லை, அவனால் இந்நிலையில்…” என்று சொல்லத் தொடங்க “நான் செல்கிறேன், யாதவரே” என்று சகதேவன் சொன்னான். “இளையோனே…” என்று யுதிஷ்டிரன் அழைத்தார். “அவருடைய கைகள்முன் சென்று நிற்பேன். அவர் என்னைக் கொன்றால் அதை மகிழ்வுடன் ஏற்பேன். இந்நிலையில் நான் செய்யக்கூடுவது அது ஒன்றே” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரன் சில கணங்கள் அவனை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். “அவரை குருக்ஷேத்ரத்திற்கு அழைத்து வருக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர் வருவார். அவர் இவ்வுலகில் ஆற்றும் இறுதிச்செயல் அது என அறிவார்.”
“அஸ்தினபுரியின் பெண்களை என்ன செய்வது?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவர்கள் சிதை ஏற விரும்பக்கூடும்… அவர்களை அதிலிருந்து ஒழியும்படி செய்தாகவேண்டும்… அது என் குடிமீதான இழிசொல்லாகவே நீடிக்கும்.” இளைய யாதவர் “அவர்களில் உடன்சிதை ஏற விழைபவர்கள் எவருமில்லை. இருந்திருந்தால் முன்னரே வந்திருப்பார்கள். பானுமதி சிதையேற விழையலாம். அவளிடம் சொல்லுங்கள். அரசருக்கு நீர்க்கடன் செலுத்த எஞ்சியிருப்பது அவளே என. அவள் காசிநாட்டுக்கே திரும்பிச்செல்லட்டும். அங்கே தன் குடிமைந்தன் ஒருவனை தன் மைந்தன் என வேதச்சொல் துணைக்க எடுத்தமைக்கட்டும். துரியோதனனுக்கு நீர்க்கடன்கள் அவர்களால் அறுதிவரை அங்கே செய்யப்படும்” என்றார்.
யுதிஷ்டிரன் “என் குடிமைந்தர் அஸ்தினபுரியில் செய்வார்கள். அவனுக்கு நான் அளித்த சொல் அது” என்றார். “ஆம், ஆனால் அவள் மைந்தர் செய்வதை மறைந்த அரசர் மேலும் விழையக்கூடும்” என்றார் இளைய யாதவர். “அதை சொல்லலாம். அவள் சிதையேறாமல் தடுக்க அது உகந்த வழியே” என்றார் யுதிஷ்டிரன். பின்னர் அச்சத்துடன் “என் குடி நெடுநாள் வாழாது என்கிறாயா, யாதவனே?” என்றார். “இல்லை, அவ்வண்ணம் நான் சொல்லவில்லை” என்றார் இளைய யாதவர். “அவ்வண்ணம் எண்ணுகிறாயா?” என்று யுதிஷ்டிரன் மேலும் அச்சத்துடன் கேட்டார். “நான் அதை எப்படி சொல்லமுடியும்?” என்று இளைய யாதவர் சொன்னார். “இப்பழியால் என் குலம் அழியுமா? என் குருதிவழி அறுபட்டுவிடுமா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவ்வண்ணம் அஞ்சி அஞ்சி வாழ்வதில் என்ன பொருள்?” என்று இளைய யாதவர் சொன்னார்.
“இது பழி… இது குடியைத் தொடரும் பழி… ஐயமே இல்லை. ஆனால் அப்பழி என்னை சார்க! நான் கெடுநரகு செல்கிறேன். இருளுலகங்களில் அலைகிறேன். என் குடிமேல் நான் இப்பழியை ஈட்டிவைத்துவிட்டுச் செல்லமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரன். “அரசே, அரசன் நல்லாட்சியை தன் குடிக்கு அளிப்பான் என்றால் அவன் செய்த களப்பழிகள் கரைந்து மறையும்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் நல்லாட்சியை அளிப்பேன். அறம்நின்று கோலேந்துவேன்” என்றார் யுதிஷ்டிரன். “இது மூதாதையர் மேல் ஆணை. ஒருகணமும் என் தன்னலத்தை கருதமாட்டேன். என் பெருமை என் புகழுக்கென எதையும் இயற்றமாட்டேன். குடிநலமே கொள்வேன்.” பீமன் “அவ்வண்ணம்தான் துரியோதனன் ஆட்சி செய்தான்” என்றான். யுதிஷ்டிரன் திடுக்கிட்டு அவனை நோக்கியபின் தலைகுனிந்தார்.
அவர்கள் தங்கள் தேர்களை அடைந்தனர். பீமன் மீண்டும் ஓடையில் நீர் அள்ளிக் குடித்தான். தேர்களில் ஏறிக்கொண்டபோது ஒவ்வொருவரும் களைத்து உடல்தளர்ந்து விழுவதுபோல் ஆயினர். நகுலன் தன் உடலை துயில் வந்து மூடுவதை உணர்ந்தான். காற்று எடைகொண்டு பாறையாகி அவனை தேர்த்தட்டுடன் அழுத்தியது. இளைய யாதவர் ஒரு தேரை தெளித்தார். இன்னொன்றை பீமன். தேர் சகதி நிறைந்த மண்ணில் சகடங்கள் புதைய உருண்டு செல்லத் தொடங்கியது. நகுலன் துயிலலாகாது என எண்ணினான். அவ்வெண்ணமே கரைந்து மறைய ஆழ்ந்து துயிலத் தொடங்கினான்.
அவர்கள் குருக்ஷேத்ரத்தை அணுகுவதற்குள்ளாகவே அவர்களின் தேர்களை காட்டில் அலைந்த ஒற்றர்கள் கண்டுவிட்டிருந்தனர். குறிச்சொற்களைக் கூவியபடி அவர்கள் வந்து பணிந்தனர். சகதேவன் அவர்களின் குரல்கள் கேட்டு விழித்துக்கொண்டான். அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தான். கௌரவர்களுடன் இணைந்து புரவிகள் மேலேறி ஈட்டிகளை வீசி கீழிருந்து தலைப்பாகை ஒன்றை எடுக்கும் விளையாட்டு. கூச்சலிட்டபடி அவர்கள் சுற்றிச்சுற்றிவர களம் புழுதிபறந்து முகில்திரள் என்று ஆகியது. புரவிகளின் வியர்வையும் புழுதிமணமும் அந்தியின் மென்குளிரும் செந்நிற ஒளியும். துர்மதனும் துச்சலனும் அவனை புரவியிலிருந்து வீழ்த்த முயன்றனர். அதில் துர்மதன் கீழே விழ சுபாகு பாய்ந்துவந்து அவனைப் பற்றி சுழற்றித் தூக்கி தன் புரவிமேல் ஏற்றிக்கொண்டான்.
விழித்தபோது யுதிஷ்டிரன் தேரில் அமர்ந்தபடியே ஆணைகளை இட்டு அவர்களை வெவ்வேறு பணிகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்ததை கேட்டான். அக்கனவில் அனைவருமே இளமையுடன் இருப்பதை எண்ணிக்கொண்டான். குளிர்போல் ஒன்று நெஞ்சை அடைத்தது. துயர் அல்ல. ஏக்கம் அல்ல. அச்சமோ தனிமையோ அல்ல. வெறும் அடைப்பு. அவன் பெருமூச்சுவிட்டு உடலை நீட்டிக்கொண்டான். ஆனால் அந்தக் கனவினூடாக அத்தருணத்தின் இறுக்கத்தை எதிர்த்திசைக்குச் சுழற்றித் திருப்பிக்கொண்டுவிட்டதை உணர்ந்தான். முகம் புன்னகையில் விரிந்திருப்பதை வாயைச் சூழ்ந்திருந்த தசைகளின் விரிவிலிருந்து அறிந்துகொண்டான். இதுவரை என் முகம் எப்படி இருந்திருக்கும்? எடை ஒன்றை தூக்குபவன்போல. கசப்பை உண்டவன்போல. அவன் வேண்டுமென்றே இதழ்களை நீட்டி புன்னகைத்துக்கொண்டான். கைகளை மேலே தூக்கி உடலை நிமிர்த்தி “தெய்வங்களே!” என்று முனகினான்.
யுதிஷ்டிரனின் ஆணையை ஏற்று சில ஒற்றர்கள் குருக்ஷேத்ரத்திற்கு குதிரைகளில் விரைந்தனர். அரசனின் உடல் கிடந்த சுனைக்கரைக்கு இருவர் சென்றார்கள். “மூதரசர் என்ன செய்கிறார்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அங்கே மலையிலேயே குடிலில் இருந்துகொண்டிருக்கிறார். போரை இன்னமும் சஞ்சயன் சொல்லிமுடிக்கவில்லை” என்று ஒற்றன் சொன்னான். “அரசரின் சாவுச்செய்தி வரும்வரை அவன் சொல்லிமுடிக்கப்போவதில்லை.” யுதிஷ்டிரன் “அவன் முரசொலி கேட்டதும் அச்செய்தியை சொல்லியாகவேண்டும். அச்செய்தி அவரை கொந்தளிக்கச் செய்யும். அந்த உணர்வலைகள் ஓய்ந்த பின்னர் சகதேவன் இங்கிருந்து அவரைச் சென்று பார்க்கட்டும்” என்றார். உடனே உள்ளத்தில் எண்ணம் திரள “அவன் இங்கே பிதாமகரிடம் வாழ்த்துபெற்றுவிட்டே அங்கே செல்கிறான் என்பது அவன் அவரை சந்திக்கையில் அவருக்கு அறிவிக்கப்படவேண்டும்” என்றார். ஒற்றன் தலைவணங்கினான்.
குருக்ஷேத்ரம் அணுகுந்தோறும் யுதிஷ்டிரன் நிலையிழந்து “அங்கே எவ்வண்ணம் இருக்கும் அந்நிலம்? உடல்கள் மண்ணில் புதைந்துவிட்டன என்கிறார்கள். மீண்டும் அங்கே செல்வதைப்பற்றி எண்ணவே இயலவில்லை” என்றார். “அங்கே இனி செல்லவே போவதில்லை என்று எண்ணினேன். அதை அப்படியே மறந்துவிடலாமென்று கற்பனை செய்தேன்” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் “எல்லா களங்களும் மண்மூடும்… இன்னும் பதினாறு நாட்களில் நினைவு என ஆகும். நாற்பத்தொரு நாட்களில் கடந்தகாலம் என உருக்கொள்ளும். ஓராண்டில் வெறும் சடங்கென்று நின்றிருக்கும்” என்றார். யுதிஷ்டிரன் “அனைத்தையும் மூடும் மண்… ஆம்” என்றார்.
சகடங்களின் ஓசையுடன் அவர்கள் காத்திருந்தனர். மரங்கள் வந்துவந்து பின்னால் சென்றன. இரு பாறைக்குவைகள் ஒழுகிச்சென்று மறைந்தன. சேற்றுப்பாதை சுருளவிழ்ந்துகொண்டே இருந்தது. “எத்தனை தொலைவு!” என்று யுதிஷ்டிரன் வியந்தார். குருக்ஷேத்ரம் அணுகுவதை அச்சாலையின் சேற்றிலிருந்து உணரமுடிந்தது. அது குருதிவாடை கொண்டிருந்தது. வழிந்தோடிய நீரில் அலையலையாகப் படிந்த மென்சேறு செந்நிணமென்றே விழிதோன்றச் செய்தது. காடுகளுக்குள் சிற்றருவிகளின் ஓசை கேட்டது.
“குருக்ஷேத்ரம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “ஆனால் அங்கே அத்தனை பெரிய நிலம் இருப்பதாகவே தெரியவில்லை. ஓசையே இல்லை.” இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “அது அமைதிகொண்டுவிட்டது. அதன் இலக்கை சென்றடைந்துவிட்டதுபோல” என்று யுதிஷ்டிரன் மீண்டும் சொன்னார். “இங்கு வந்த நாளில் அது எழுப்பிய முழக்கத்தை நினைவுகூர்கிறேன். அனைவரும் களிவெறி கொண்டனர். நான் உள்ளூர அஞ்சினேன். இது குருதிவெறிகொண்ட நிலம் என்று தோன்றியது.” அவரே பேசிக்கொண்டிருந்தார். நகுலன் அவருடைய குரலை அப்போது வெறுத்தான். ஆனால் அவருடைய அச்சொற்கள் அவன் சொற்களாகவும் தெரிந்தன. “இங்கே அறம்விளையும் என்கிறார்கள். இனிமேல்தான் அறம் விளையவேண்டும்… உழுதிட்ட நிலம் இது.”
அப்பால் வந்த தேரில் பீமன் சிலையென அமர்ந்து புரவிதெளிக்க உள்ளே சகதேவனும் அர்ஜுனனும் துயிலில் இருந்தனர். அவர்களின் கனவுகளிலும் இளமைக்காலம்தான் திகழும் போலும். அவற்றில் சிரிப்பொலிகளும் கூச்சல்களும் ஆர்ப்பரிப்புமாக கௌரவர் எழக்கூடும். அவன் அவர்களின் முகங்களை அசைவுகளினூடாக கூர்ந்து நோக்கினான். அர்ஜுனனின் முகத்தில் கைவிடப்பட்ட குழவிகளுக்குரிய துயரும் தனிமையும் இருந்தது. சகதேவன் சிறுவன்போல் முகம் மலர்ந்திருந்தான். ஆம், அது அதே புரவிவிளையாட்டுதான். அதில் அவனும் இருந்தான் என நகுலன் எண்ணிக்கொண்டான்.
மரங்களுக்கு அப்பால் ஒளி தெரிந்தது. அங்கே ஒரு நீர்நிலை இருப்பதைப்போல. யுதிஷ்டிரன் “வந்துவிட்டோம்” என்றார். தேர்கள் அணுகிக்கொண்டிருக்கையில் அங்கே முரசொலிகள் எழுந்தன. “தார்த்தராஷ்டிரன் துரியோதனன் களம்பட்டார். அஸ்தினபுரியின் அரசர் களம்பட்டார். குருகுல வேந்தர் வீழ்ந்தார். திகழ்க துரியோதனனின் புகழ்! விண்புகுக குருகுலத்து மைந்தன்! புகழ் நிலைகொள்க! தேவர்கள் வாழ்த்துக! மூதாதையர் அருள்க! சொல்திகழ்க! என்றும் திகழ்க அவன் பெயர்! ஆம், அவ்வாறே ஆகுக!” நகுலன் என்னவென்றறியாத கணத்தில் உளம்நெகிழ்ந்து விழிநீர் வழிய விம்மினான். அவ்வோசை கேட்டு யுதிஷ்டிரன் திரும்பி நோக்கினார். நகுலன் தலையை கைகளால் தாங்கி மடிந்து அமர்ந்து தோள்கள் குலுங்க அழுதான். யுதிஷ்டிரன் அவனை தொடுவதற்காக கைநீட்டியபின் தவிர்த்தார்.
அவர்களின் தேர்கள் குருக்ஷேத்ரத்திற்குள் நுழைந்ததை நகுலன் உணரவில்லை. ஓசையின்மையை செவி உணர்ந்தபோதுதான் விழிப்புகொண்டு எழுந்து நோக்கினான். அலையலையாக செம்மண்சேறு பரந்து கிடந்தது. நீர் வற்றிய மாபெரும் ஏரியொன்றின் அடித்தட்டுபோல. அந்த ஈரத்திலிருந்து எழுந்த ஆவியின் மணம் அங்கே நிறைந்திருந்தது. அதில் பீதர்மதுவின் எரிவாடையும் கந்தகவாடையும் கலந்திருந்தன. அவர்களின் தேர்கள் நுழைந்தபோது எந்த ஓசையும் எழவில்லை. அசைவில்லாத நீரில் விழுந்து மூழ்குவதுபோல அந்தக் காற்றில் தேர்கள் புதைந்துசென்றன. ஒரு பறவைகூடவா இல்லை? நகுலன் சூழ நோக்கினான். ஒரு சிறகசைவுகூட இல்லை. ஒரு காலடித்தடம்கூட இல்லை. சேற்றில் குமிழிகள் உடைந்த துளைகள். சிறுகுமிழிகள் வெடித்து எடுத்துக்கொண்டிருக்கும் அசைவுகள் தெரிந்தன. சிறிய மீன்விழிகள் போன்ற குமிழிகள். காளான்குமிழ்கள் போன்று பெரியவை. ஆனால் சிற்றுயிர்கள்கூட இல்லை. கூர்ந்து நோக்க நோக்க அதன் வெறுமையே தெளிந்து வந்தது. முற்றிலும் உயிரிழந்து கிடந்தது குருக்ஷேத்ரம்.
தேர்கள் சென்ற தடம் நீண்ட சாட்டைவடுபோல குருக்ஷேத்ரம் மீது படிந்தது. குருக்ஷேத்ரத்தில் எங்கும் முரசுமேடைகள் இருக்கவில்லை. எங்கிருந்து எழுந்தது முரசொலி என்று நகுலன் நோக்கினான். அருகிருந்த காட்டில் மரங்களுக்கு மேலிருந்து அதை எழுப்பிக்கொண்டிருந்தனர். முரசொலி அல்ல அது. நெற்றுகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அறைந்து எழுப்பிய ஒலி. குருக்ஷேத்ரத்தில் படைகள் நிறைந்திருந்தபோது பெருமுரசுகளின் ஓசையே கரைந்து மெல்லொலியாக கேட்கும். அந்த அமைதியில்தான் நெற்றுகள் மோதும் ஒலி முழக்கமிடுகிறது. அது குருக்ஷேத்ரத்தின் அறிவிப்பு அல்ல. குருக்ஷேத்ரத்திலிருந்து இனி எந்த ஓசையும் எழாது. செந்நாவேங்கை உணவுண்டு வயிறு நிறைந்துவிட்டது.
முரசொலி ஓய்ந்ததும் குருக்ஷேத்ரம் மேலும் துலங்குவது போலிருந்தது. நகுலன் மெல்ல அப்பரப்பில் தேர்களின் உடைவுகளை, யானைகளின் உட்ல்குவைகளை, புரவிகளை அடையாளம் காணத்தொடங்கினான். பின்னர் மனித உடல்கள் தெளிந்தன. முகங்கள் எழுந்து வந்தன. மண்படலத்தை கிழித்தபடி சொல்லுடன், நோக்குடன் அவை எழுந்துவிடும் என்று தோன்றியது. ஒவ்வொரு முகத்தையாக அவன் நோக்கிக்கொண்டு சென்றான். அவர்கள் இறந்த கணத்தை அப்படியே மண்ணில் சிலையாக வடித்தது போலிருந்தது. மண்ணிலேயே அத்தனை உணர்ச்சிகளும் இருந்தன. விழிகளின் ஒளியேகூட மண்ணில் எழுந்துவிடும் என்று தோன்றியது. அவன் மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தான். அங்கிருந்து சென்றுவிடவேண்டும். விரைந்து. முடிந்தவரை விரைந்து.
தேரை நிறுத்திவிட்டு இளைய யாதவர் “இனிமேல் தேர்கள் செல்லாது என நினைக்கிறேன். பிதாமகரின் படுகளம் அதோ தெரிகிறது” என்றார். “இச்சேற்றில் நடப்பதா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இறங்குக! வேறுவழியில்லை” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் தயங்கி தேரிலேயே அமர்ந்து தத்தளித்தார். பின்னர் மெல்ல வலக்காலைத் தூக்கி சேற்றில் வைத்தார். உடல்கூசி மெய்ப்புகொள்வது தெரிந்தது. கைகளை மார்புடன் சேர்த்து “உயிருள்ள குழந்தையின் உடல்மேல் நிற்பது போலிருக்கிறது” என்றார். அந்த ஒப்புமை நகுலனை சிலிர்க்கச் செய்தது. அவன் அச்சேற்றுப்பரப்பை பார்த்தான். பின்னர் பற்களை கிட்டித்துக்கொண்டு அதில் கால்வைத்து இறங்கினான். சேறு தண்மையாக இருந்தது. அதில் மெல்லிய உயிர்விதிர்ப்பு இருக்கிறதென்றே தோன்றியது.
அவர்கள் தேரிலிருந்து இறங்கி குருக்ஷேத்ரத்தில் நடந்தனர். அவர்களின் காலடியோசை வேங்கை வேட்டைஊனை மென்று உண்ணும் ஓசைபோல் ஒலித்தது. கால்கள் சேற்றில் துழாவி செம்மண்ணால் ஆனவைபோல் மாறின. கால்களிலிருந்து சேறு மேலெழுந்து மூடுகிறது. கரையான்புற்றுபோல கவ்வித் தழுவி உள்ளிழுத்துக்கொள்கிறது. இன்னும் சிறுபொழுது. அதற்குள் நானும் இச்சேற்றுக்குள் சென்றுவிடுவேன். சேற்றுக்குள் வாள் ஒன்று கிடந்தது. சேறாலான வாள். அவன் அதன் கூர்மையை நோக்கிக் கொண்டு நடந்தான். பின்னர் அறிந்தான் அச்சேறு அசைவற்றிருக்கவில்லை. அது வீசிக்கொண்டிருந்த காற்றில் வடமேற்காக மெல்ல அசைந்து ஒழுகிக்கொண்டிருந்தது. யானைகளின் உடல்கள்மேல் அலையலையென படர்ந்து ஏறியது.
பீஷ்மரின் படுகளம் சேறால் மூடப்பட்ட சுற்றுவளைப்புடன் சேற்றில் மிதக்கும் மரக்கலம்போலத் தெரிந்தது. அவர்கள் அணுகியபோது அங்கிருந்து மெல்லிய முனகலோசை கேட்டது. பிதாமகர் விடாய்கொண்டிருக்கக் கூடும் என்று நகுலன் எண்ணிக்கொண்டான். காலடிகளுக்காக செவிகூர்ந்திருக்கிறாரா? அவன் அவரை எண்ணியபோது அக்கணமே அவராக ஆகி அங்கே கிடந்தான். இப்போது அவருக்குத் தேவை விடாய்நீர் மட்டுமே. மானுடரைக் காண மட்டுமே அவர் விழைவார். அவர்களைக் கண்டதும் அவருடைய முகம் மலரும். போரும் அழிவும் அவருக்கு இப்போது ஒரு பொருட்டே அல்ல. மானுடர் அத்தனை எளியவர்கள். வெறும் உடலுயிர்கள்.
யுதிஷ்டிரன் “பிதாமகரிடம் என்ன சொல்வது?” என்றார். “நாம் எதையும் விளக்கவேண்டியதில்லை. அவருக்கு அதில் ஆர்வமிருக்க வாய்ப்பில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “போர் முற்றிலும் முடிந்துவிட்டது பிதாமகரே என்றும் மட்டும் சொல்வோம்.” பீமன் “நாம் எவர் முன்னிலும் அஞ்சவேண்டியதில்லை. எந்தப் பொய்யையும் நான் சொல்லமாட்டேன்” என்றான். “பொய் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அவர் கோராத உண்மைகளையும் கூறவேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர். “ஆம், அதுவே உகந்தது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நாம் வாழ்த்துபெற வந்துள்ளோம் என்னும் சொல்லிலேயே அனைத்தும் அடங்கிவிடும்.”
அவர்கள் பீஷ்மரின் படுகளத்தை அடைந்தபோது நகுலன் திரும்பி நோக்கினான். நெடுந்தொலைவு வரை எதுவுமே தெரியவில்லை. அவர்கள் இறங்கி வந்த தேரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் காலடித்தடங்கள் முற்றாக அழிந்துவிட்டிருந்தன. அவன் அச்சத்துடன் விழிதிருப்பிக்கொண்டான்