மறந்த கனவுகளின் குகை- கடிதம்

மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா

இனிய ஜெயம்

 

https://www.bbc.com/tamil/india-42959325

 

இந்த சுட்டி உங்கள் பார்வைக்கு.

 

1850-1950 இந்தக் காலக்கட்டம் இந்தியாவில் மானுடவியல்,வரலாற்று ஆய்வுகள்  ஒரு பாய்ச்சலை நிகழ்த்திய காலம் . இக் காலக்கட்டத்தில் ராபட் ப்ரூஸ் பூட்  கொசஸ்தலை அதிரம்பாக்கம் இவற்றில் கண்டெடுத்த தொல் பழங்கால கல்லாயுதங்கள், அவற்றின் காலம் இன்றிலிருந்து மூன்று லட்சம் ஆண்டுகள் என்ற துல்லிய வரையறைக்கு வர 2020 வரை உழைப்பும் வேலைகளும் நடந்திருக்கிறது.  அதிலும் ஒன்றை பாருங்கள், செலவு மிகுந்த லுமிநேஷன்ஸ்டேடிங் முறையை, ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை ஒரு தனி நபர் தனது செலவில் செய்து தந்திருக்கிறார்.

 

இனி இந்த ஆய்வு முடிவுகள் முழுமை கொள்ள, அது  இந்தியாவின் பிற இடங்களில் கிடைத்த,தொல்பழங்கால கற்கருவிகளின் காலத்தோடு இயந்து செல்ல வேண்டும்.அதற்க்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இதே போல ஷாந்தி பாபு போல ஒருவர் ஆங்காங்கே உழைத்துக் கொண்டிருக்க வேண்டும், அவருக்கு சிங்வி போல ஒருவர் உதவ வேண்டும்.  எத்தனை அரிய அலகுகள் மேல் நகர்ந்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது நமது தொல்பழங்காலம் மீதான ஞானம் என்பதை நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது.

 

இந்தக் காலக்கட்டம் இடைக்கற்காலம். அதன் பின் நெடுங்காலம் கழித்து செம்புக் காலமான சிந்து சரஸ்வதி நாகரீகம். இந்த சிந்து நாகரீகத்துக்கும், வேத நாகரீகத்துக்கும் உள்ள தொடர்பு தொடர் ஆய்வில் இருக்கிறது. முன்னதற்கு எழுத்து சான்றுகள் இல்லை. பின்னதற்கு தொல்லியல் சான்றுகள் குறைவு. அங்கிருந்து மகாபாரத காலக்கட்டம் தாண்டிய பிறகே ‘ஆதார பூர்வமான’ இந்திய வரலாறு துவங்குகிறது.

 

தமிழ் நிலத்திலும் இதே ஒற்றுமை. முதலில் இந்த இடைக்கற்காலம், அடுத்து ஆதிச்சநல்லூர் போல செம்பு முதல் இரும்பு காலக்கட்டம் வரையிலான நாகரீகம். அதன் பின் சங்க காலம். வட இந்தியா போலவே இங்கும் முன்னதற்கு எழுத்து சாட்சியம் இல்லை, பின்னதற்கு குறைவான தொல்லியல் சாட்சியமே எஞ்சுகிறது. களப்பிரர் காலம் இருண்டு, பல்லவர் காலத்தில் வரலாற்றில் ஒளி ஊடுருவுகிறது.

 

மேலே சிந்து நாகரீகத்தில் வந்து இணையும் கற்காலத்தின் இறுதி இருபதாயிரம் ஆண்டுகள், இங்கே ஆதிச்சநல்லூரில் வந்து நிறையும் கற்காலத்தின் இறுதி இருபதாயிரம் ஆண்டுகள், இந்த ஆண்டுகளில் பாரத நிலம் நெடுக ஒற்றைப் பண்பாட்டு வெளிப்பாட்டினைக் கொண்ட நாகரீகம் நிலவியதா? அந்த நாகரீககம் உலகெங்கும் அதே சமயம் நிலவிய நாகரீகத்தின் பண்பாட்டுடன் ஆழமான தொடர்பில் இருந்ததா? ஓருலகம் எனும் லட்சியவாதக் கனவு மானுடத்தின் கனவு மட்டுமாக எஞ்சும் ஒன்றல்ல, அந்தக் கனவின் யதார்த்தக்கு வேர் இந்தப் புவியின் ஆழம் வரை வேரோடிய ஒன்றா?  வினாக்களைக் கிளர்த்தும் வசீகர மர்மத்தை இன்னும் ஆழமாக்கியது உங்களின் குடோப்பி பாறை வெட்டு ஓவியங்கள் மீதான பதிவு.

 

ஹெர்சாக், லஸ்காக்ஸ் குகை ஓவியங்கள் குறித்து,அது உருவாகி வந்த பின்புலங்கள் மீதான ஆய்வுகள் யூகங்கள் மீது, கேவ் ஆப் பர்காட்டன் ட்ரீம்ஸ் எனும் பெயரில் ஒரு படம் [முப்பரிமாணத்தில்] எடுத்திருக்கிறார். அந்தப் படம் எடுக்கப்பட்ட பின்புலம் முழுமையையும் ஒரு ஆவணப்படமாக மாற்றி இருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு ஆய்வாளர் சொல்லுகிறார் . அவர் அரிய ஓவியங்கள் கொண்ட  ஒரு குகையை தேடிக்கொண்டிருக்கிறார். அந்தக் குகைக்கு ஒரு பழங்குடி அவரை அழைத்துச் சென்று காட்டுகிறார். பத்தாயிரம் ஆண்டுகள் முன்பான ஓவியங்கள் . ஆய்வாளருக்கு அந்த பழங்குடி ஓவியங்களை காட்டியபடியே முன்னே செல்கிறார். ஒரு இடத்தில் அந்தப் பழங்குடி கிடைத்த இடைவெளியில், தன்னிடமிருந்த வினோத சிகப்பு சாயம் கொண்டு வரையத் துவங்கி விடுகிறார். ஆய்வாளர் பதறிப் போய் அந்தப் பழங்குடியை தடுக்கிறார். இங்கே ஹெர்சாக் இடையே நுழைந்து சொல்கிறார் ‘இப்படித்தான் ஒரு நவீன ஆய்வு மனம் இடையறாது நூற்றாண்டுகளாக தொடரும் ஆழ்மனக் கனவை இடை வெட்டுகிறது. பின்னர் அறுந்து போன தொடர்புக் கண்ணியைத் தேடித் திரிகிறது’.

 

முற்றிலும் உண்மையானதொரு கூற்று. ஒரே ஒரு முறை அந்த தொடர்பு அறுந்து போனால் முடிந்தது. பின்னர் இடைவெளியை நிரப்ப ஏலியன்கள் தான் வரவேண்டும். தொல்பழங்காலத்தின்  மிகப்பெரிய கல்ஓவியங்கள் வானத்தில் இருந்து பார்த்தால்தான் ‘முழுமை’த் தோற்றம் தெரியும்.இங்கே துவங்கிய மர்மம், பல யூகங்கள் வழியே இவை வானத்திருந்து பார்க்கப்போகும் ஏலியன்களுக்காக என்பது வரை வளர்ந்து நிற்கிறது.

 

இந்தியாவில் அத்தகு ஊக ஆய்வுகளுக்கு ஏலியன்கள் துணை தேவைஇல்லை என எண்ணுகிறேன். உதாரணமாக பதிவில் உங்கள் காலடியில் இருக்கும் சுருள் வட்டம் புகைப்படத்தை முதலில் கண்ட கணம் என் நினைவில் எழுந்தது பேலூர் சிற்ப வரிசையில் கண்ட அபிமன்யு சிக்கிக்கொள்ளும் சக்கரவியுகம் சித்திரம்.

 

அதே போல இரு கைகளிலும் மிருகங்களை பிடித்தபடி நிற்கும் வேட்டையமகாராஜா புடைப்பு சிற்பம். அதற்கும் குடிமல்லம் வேட சிவனுக்கும் தொடர்பே இல்லையா என்ன?  அசுரவதத்துக்குப்  பிறகு நரசிம்மத்தின் உஷ்ணம் தணிக்க இரட்டைத் தலைக் கழுகு தனது சிறகுகளால் விசிறிவிடும் ஓவியம் ஒன்றைக் கண்டிருக்கிறேன்.

 

சிரியாவின் கொபெக்லி தேபே கோவில் இன்றிலிருந்து பண்ணிரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. அங்கே காணப்படும் வழிபாட்டு சிலைகளில் ஒன்று வராகம். மணிபத்ர வீரனாகவும், பூவராகனாகவும் இன்றும் இங்கே தொடர்வது. 1940 இல் ஜெர்மனியில் குகை ஒன்றினில் கண்டெடுக்கப்பட்ட  மம்மோத் தந்தத்தில்  செதுக்கப்பட்ட முப்பதாயிரம் வருடத்துக்கு முன்பான சிங்கத் தலை மனிதன் சிலையை அறிவோம். அதற்கும் நமது நரசிம்மத்துக்கும் இடையேஒரு கோடு இழுத்தால் அதுதான் மானுட ஆத்மீக பரிணாம வளர்ச்சியின் சாட்சியமாக இருக்கும்.  ஒளிக்குப் பிறகே கண்கள். அது போல இந்தத் தொன்மங்களுக்குப் பிறகே மானுடத் தன்னுணர்வு என்று தோன்றுகிறது. தலைமுறை தலைமுறைகளாக புற்றினைக் கட்டி எழுப்பும் கரையான்கள்போல, குரங்கில் துவங்கி இன்று வரை மானுடம் தலைமுறை தலைமுறைகளாக இந்தத் தொன்மங்களை கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது

 

மேற்கண்ட பதிவின் இறுதி வரிகளை, உங்களின் குடோப்பி பதிவுகள் மீதான உரையாடலில் பதிலாக நண்பரிடம் சொன்னேன். என்னங்க அவங்க பதிலை ஏலியன்ஸ் கிட்ட விடுற மாதிரி,நீங்க ஆன்மீகத்து கிட்ட விட்டுட்டீங்க என்று பரிதாபமாக வினவினார்.   என் நிலைப்பாட்டை சொன்னேன்.

 

பொதுவாக பண்பாட்டு ரீதியாகவும்,உயிரியல் ரீதியாகவும் மானுடவியலை அணுகும் முறைமைகள் ஒரு அமைப்புக்குள் வந்தது, வேகம் பெற்றது,சர்.எட்வர்ட் பர்னட் டைலர் 1884இல் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மானுடவியல் துறைக்குப் பொறுப்பேற்ற பிறகுதான்.

 

மானுடம் ஒற்றை மூலம் கொண்டதா,பன்மை மூலம் கொண்டதா எனும் வினாவுக்கு இரு தரப்புக்கும்  பத்தாண்டு இடைவெளியில் அறிவியல் தரவுகள் வழியே, மாறி மாறி வாக்கு விழுந்து கொண்டிருக்கிறது .இன்றுவரை. மைடோகான்றிய dna கண்டு பிடிக்கப்பட்ட பிறகு இந்த மூலத்தை தேடும் ஆய்வில் ஒரு வெளிச்சம் பிறந்தது. இந்த dna வை தொடர்வது எளிது.காரணம் இது தாய் வழியாக மட்டுமே ஒழுகிச்செல்லும். உபரியாக பரிணாமத் தகவமைவில் நிகழ்ந்த மாற்றங்களையும் இது துல்லியமாக தன்னுள் கொண்டிருக்கும்.

 

இதைத் தொடர்ந்து சென்றே இன்றைய  மானுடத்தின் ஒரே தோற்றுவாய் ஆப்பிரிக்கா எனும் கருதுகோள் அதிக வாக்குகள் பெற்று கருத்துலகில் நின்றது. 2000 துக்குப் பிறகு  அது மாறிக்கொண்டு இருக்கிறது. ஆப்ரிக்க கொடி வழி வளர்ச்சிப் போக்கை முற்றிலும் தன்னில் கொண்டிருக்காத சில மரபணுக்கள் பண்டைய மானுட படிமங்கள் வழியே கிடைத்து இந்த ஆராய்ச்சியின் புதிய திசைவழிகளை திறந்து விட்டிருக்கிறது.

 

இந்த திசை வழியே கண்டடைந்த ஒன்றே நியாண்டர்தால் மரபணு இன்றைய நவீன மனித மரபணுவுடன் எந்த விதத்திலும் தொடர்பற்றது எனும் முடிவு. கொஞ்ச காலம் முன்பு  நியாண்டர்தாலின் ஒரு குறிப்பிட்ட மரபணு நவீன மனிதனில் உண்டு, அது அந்த மனிதன் பிறந்து தாய்ப்பால் அருந்தும் காலம் வரை அவன் உடலில் பணி செய்து விட்டு,அந்தப் பருவம் முடிந்ததும் அது கோமா நிலைக்குப் போய்விடும் நிலை கண்டறியப்பட்டது. அந்த நிலை கொண்டு நியாண்டர்தால்கள் ஹோமோ உடன் கலந்து கரைந்து போனார்கள் எனும் கோட்பாடெல்லாம் உருவாக்கப்பட்டது. குதிரையும் கழுத்தையும் இணைந்தால் சந்ததி உருவாக்காத கோவேறு கழுதை உருவாவதைப் போல, எங்கேனும் இந்தக் கலப்பு நிகழ்ந்து பார்த்திருக்கலாம் ஆனால் அது மரபணு உண்மை இல்லை எனும் பதில் வாதம் முந்தைய வாதத்தை விட வலிமையாக முன்வந்து நின்றது.

 

https://en.wikipedia.org/wiki/Bryan_Sykes

 

https://en.wikipedia.org/wiki/The_Seven_Daughters_of_Eve

 

மேற்கண்டவை எல்லாம் பிரையன் சைக்ஸ் எனும்  ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த மரபியல் அறிஞர் விரிவாக தனது பல்வேறு நூலில் பேசி இருக்கிறார். தனது கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலின் ஆவணப் பட பிரதிக்கு என பில் ப்ரைசன் இவரை விரிவான நேர்காணல் செய்திருக்கிறார். [இதில் பார்த்தே நான் இவற்றை அறிந்தேன்].

 

ப்ரையன் எழுதிய பல [ மரபியல் வழியாக மானுடத்தை அதன் தோற்றுவாயை  அறிய முனையும்]  நூல்களில் ஒன்று ஏவாளின் ஏழு பெண்மக்கள் எனும் நூல். அந்த நூலில் மொத்த ஐரோப்பிய மாந்தர்களின் மரபணு ஓடையும் ஏழு அன்னையரில் இருந்து கிளைத்த ஒன்றே என மரபியல் ஞானம் வழியே வரையறுக்கிறார். அந்த ஏழு அன்னையருக்கும் பெயர்களை [உர்சுலா,ஸனியா,ஜாஸ்மின் போல] அளித்து அவர்கள் ‘எவ்வாறு’ தோற்றம் அளித்திருப்பார்கள் அவர்களின்  வாழ்வு நிலை எவ்வாறு இருந்திருக்கும், என மரபியல் தகவல்கள் வழியே ஒரு கதை போல சொல்கிறார்.

 

ஐயாயிரம் வருடம் முன்பான சிந்து வெளி மாந்தருக்கோ, இன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சப்த மாதாவை வழிபடும் பக்தருக்கோ மரபியல் அறிவு கிடையாது. ஆனால் இந்த சப்த மாதா  எனும் தொன்மத்தை அவன் ஆழுள்ளத்தால் எங்கோ அறிந்து நமது அன்னயருடனான தொப்புள் கொடி உறவை வழிபாடாகவும் சடங்குகளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறான். ப்ரையன் வந்தடைந்த ஐரோப்பியர் அனைவருக்கும் ஆதித் தாய் சப்த மாதா எனும் கருதுகோளை, மானுடம் முழுமைக்கும் ஆதித் தாய் சப்த மாதர் என நாளையே மரபியல் அறிவு கண்டு சொல்லக் கூடும்.

 

பிரையன் கண்டு சொல்லும் சப்தமாதர் இன்றிலிருந்து 40,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். இந்த சப்த மாதரைத்தான் தனது ஆழ்மன தொன்மம் எனக் கண்டு தலைமுறை தலைமுறைகளாக வழிபட்டு கட்டிஎழுப்பி வந்திருக்கிறது இந்திய மனம். வெறும் இரண்டாயிரம் வருடங்களில் தனது பண்பாட்டு வேரை முற்றிலும் இழந்து நிற்கும் மேற்குலக சூழல் கோரும் கருவிகள் வேறு அதன் சவால்கள் இன்னும் ஆழமானது. இந்தியச் சூழல் முற்றிலும் வேறு. ஐயாயிரம் வருடமாக அறுபடாத ஒரே பண்பாடுத் தொடர்பினைக் கொண்ட, அதுவும் உயிர் கொண்டு இயங்கும் உலகின் ஒரே நிலம் இது.  ஏலியன்ஸ் களை காட்டிலும்  அறிவியலுடன் இயந்து முன் செல்லும்  ஆன்மீக ரீதியான ஒரு பார்வைதான்  இங்கே தேவை.

 

 

கடலூர் சீனு

 

 

கற்காலத்து மழை-8

கற்காலத்து மழை-7

கற்காலத்து மழை-6

கற்காலத்து மழை-5

கற்காலத்து மழை-4

கற்காலத்து மழை-3

கற்காலத்து மழை-2

கற்காலத்து மழை -1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42
அடுத்த கட்டுரைமிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்