சகதேவன் அருகிலிருந்த புல்வெளியை நோக்கி “அங்கா?” என்றான். இளைய யாதவர் “ஆம், இந்த இடத்தை தெரிவுசெய்தவர் அவரே” என்றார். சுனையின் வலப்பக்கமாக நீர் வழிந்து வெளியேறும் ஓடையின் அருகில் பசும்புல்வெளி நீள்வட்டமாக விரிந்திருந்தது. இளைய யாதவர் அங்கு சென்று அந்தப் புல்பரப்பின்மீது காலை வைத்து அழுத்தி “சேறில்லை. குழிகளும் இல்லை. அடியில் மென்மணல்தான். இந்த இடம் கதைப்போருக்கு உகந்தது” என்றார். துரியோதனன் சுனைக்கரையில் தன் இடையில் கையூன்றி நின்றபடி “ஆம், இங்கிருந்து நோக்கினாலே தெரிகிறது. அப்புல்மேல் தவளைகள் இல்லை” என்றான். பீமன் இரு கைகளையும் விரித்து தலைக்குப் பின் கோட்டி உடலை நீட்டினான். அவன் எலும்புகள் சொடுக்கும் ஓசை எழுந்தது.
அந்தச் செயல்கள் வழியாக அதுவரை இருந்த இறுக்கத்தை அனைவரும் கடந்தனர். அங்கே நிகழவிருப்பது ஒரு விளையாட்டே என அவர்களின் உள்ளம் நம்ப விழைந்தது. ஆகவே அவர்கள் சற்று மிகையாகவே ஊக்கத்தை காட்டினர். “கள எல்லையாக புல்வெளியே அமையட்டும்” என்று நகுலன் சொன்னான். இளைய யாதவர் அமர்வதற்காக ஒரு பாறையை அவன் உருட்டிக்கொண்டு வந்து வைத்தான். சகதேவன் பீமனிடம் “மூத்தவரே, அந்த சரிந்த மரத்தை இங்கே இழுத்து அமைத்தீர்கள் என்றால் மூத்தவர் அமரமுடியும்” என்றான். பீமன் அதைத் தூக்கி சுழற்றிக்கொண்டு வந்து களத்தின் விளிம்பில் போட்டான்.
இளைய யாதவர் “தார்த்தராஷ்டிரரே, இப்போரின் நெறிமுறையையும் நடுவமுறையையும் வகுக்கும் உரிமையும் உங்களுக்குண்டு. கூறுங்கள், இங்கு திகழவேண்டியவை எவை? அவற்றை நிலைநிறுத்த வேண்டியவர் எவர்?” என்றார். துரியோதனன் “மற்போருக்கும் கதைப்போருக்கும் நெறிகள் ஒன்றே. அவை என்ன என்பதை என் இளையவனாகிய பீமன் அறிவான். அவற்றை நிலைநிறுத்துவது எங்ஙனம் என்பதை என் சிற்றிளையோன் சகதேவன் அறிவான். இங்கு அவனே நடுவன் என அமைக!” என்றான். யுதிஷ்டிரனை நோக்கியபின் “என் உடன்பிறந்தார் யுதிஷ்டிரனின் நெறிநிற்றலை நான் நன்கறிவேன். ஆனால் நான் களம்பட்டால் முடிசூடவிருப்பவர் அவர். எனவே இப்போரில் அவர் நெறிகளை பேணவில்லை என்று என்றேனும் எவரேனும் சொல்லக்கூடும். சகதேவன் இங்கிருக்கையிலும் இவற்றைக் கடந்தவன் என்பதை நாமனைவரும் அறிவோம்” என்றான். “ஆணை, மூத்தவரே” என்றான் சகதேவன்.
இளைய யாதவர் பீமனிடம் “கூறுக, பீமசேனரே!” என்றார். பீமன் “சொற்கள் ஏதும் என்னிடமில்லை. என் கடன் இது” என்றான். பின்னர் துரியோதனனை நோக்கி “ஆனால் ஒன்றுண்டு. இப்போரில் வெற்றியும் தோல்வியும் இல்லை. எஞ்சுதலும் மடிதலும் மட்டுமே. இக்களத்திலிருந்து வெற்றியுடன் அன்றி நான் உயிருடன் திரும்பமாட்டேன். எனவே எவருடைய அளியும் என்னளவில் பயனற்றதே” என்றான். “எனில் போர் வகுக்கப்படட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். நகுலன் களைப்பு கொண்டவன்போல் நடந்து சரிந்த மரத்தின் மீது அமர்ந்தான். யுதிஷ்டிரன் அவனருகே சென்று அந்த மரத்தின் மீது கையூன்றி மெல்ல உடல் சாய்த்து அமர்ந்து முழங்காலில் கை மடித்து ஊன்றி அதில் தலையை வைத்து முடிக்கற்றைகள் முகம் மீது சரிய குனிந்து விழிகளை மூடிக்கொண்டார்.
சகதேவன் கைகளைத் தூக்கி “வாழ்க நிலம்! வாழ்க வானம்! வளர்க திசைகள்!” என்று கூவினான். “அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்! அறிக ஆசிரியர்கள்! அனைவருக்கும் அடிவணக்கம்.” கைகளைக் கட்டியபடி பீமன் அவனை நோக்கி நின்றான். துரியோதனன் மாறாத புன்னகையுடன் நின்றான். “இப்போர் வசிஷ்டரால் இயற்றப்பட்ட தனுர்வேத பிரகாசிகையின் நெறிகளின்படி நடக்கும் என இங்கே அறிவிக்கிறேன். அந்நூலில் ஹஸ்த சாஸ்திரத்தின்படி அமுக்த யுத்தத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நெறிகள் நூற்றெட்டும் இங்கே கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆஹதம், கோமூத்ரம், பிரஃபூதம், கமலாசனம், ததம், ஊர்த்வகாத்ரம், வாமநமிதம், தக்ஷிணநமிதம், ஆவிருத்தம், பராவிருத்தம், பாதோத்துதம், அவப்ளுதம், ஹம்ஸமர்த்தம் என்னும் செயல்கள் மட்டுமே இங்கே ஏற்புடையவை.”
“இங்கே கதைப்போர் புரிபவர்கள் கதைவீரனுக்கென நூல்கள் வகுத்த சந்த்யாகம், அபதம்ஸம், வராகோத்தூதகம், ஹஸ்தாவஹஸ்தம், ஆலீனம், ஏகஹஸ்தம், அவஹஸ்தம், திவிஹஸ்தம், பாகுபாசம், கடிரோசிதகம், உத்கதம், புஜாவிதமனம், கரோத்தூதம், விமானம், விபாதிகம், சாந்தம், காத்ரவிபர்யாயம், ஊர்த்தபிரஹரம், ஹாதம், கோமூத்ரம், சவ்யம், தக்ஷிணம், பாரகம், தாரகம், தண்டம், கபரீபந்தம், ஆகுலம், த்ரியக்பந்தம், அபாமார்க்கம், பீமவேகம், சுதர்சனம், சிம்ஹாக்ராந்தம், கஜாக்ராந்தம், கர்ஃபாக்ராந்தம் என்னும் முப்பத்துநான்கு வகையான தாக்குதல்களை தொடுக்கலாம். அவற்றை முறைப்படி தடுக்கலாம். இவை தொல்நெறிகளின்படி ஏற்கப்பட்டவை.”
“ஆனால் வசிஷ்ட தனுர்வேதம் மறுத்துள்ள செயல்கள் நான்கு உள்ளன. உடல் தழுவிக்கொள்ளும் காத்ரசம்ஸ்லேஷணம் நிகழலாகாது. நிகழ்ந்தால் உடனே பிரிந்து மீண்டும் போரிடவேண்டும். முதலில் அதைச் செய்தவர் வணங்கி நிற்க மற்றவர் முதற்தாக்குதல் நிகழ்த்தும் உரிமைகொண்டவராவார். பாதாஹதி எனப்படும் கால்பாதங்களைத் தாக்குவது மும்முறை விலக்கப்பட்ட பிழை. தாக்கியவர் மும்முறை எதிரியின் அடியை பெற்றாகவேண்டும். லலாடஹாதம் என்னும் நெற்றியில் அறைதல் ஐந்துமுறை விலக்கப்பட்டுள்ளது. உரோஹாதம் என்னும் தொடையில் தாக்குதல் ஏழுமுறை விலக்கப்பட்ட பிழை. இப்பிழைகளைக் களைந்த போரே தேவர்கள் விரும்புவது. அவ்வெற்றியே மூதாதையரால் வாழ்த்தப்படுவது. ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பது. தலைமுறைகள் எண்ணி மகிழ்வதற்குரியது. அது இங்கே நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!”
“உங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளலாம்” என்று இளைய யாதவர் கூறினார். துரியோதனன் சகதேவனிடம் “இளையோனே, இப்போருக்கான பொழுது குறித்து எனக்குக் கொடு” என்றான். சகதேவன் கண்களை மூடி சில கணங்கள் ஊழ்கத்தில் ஆழ்ந்தபின் “இன்னும் கால்நாழிகைப் பொழுதுக்குப் பின் முதல் பறவை ஒலி எழுந்ததும் உங்கள் முதல் காலடி எழுக!” என்றான். “ஆகுக!” என்று துரியோதனன் சொன்னான். தன் கையில் இருந்த யானைவால்முடியால் ஆன கணையாழியைக் கழற்றி சகதேவனிடம் அளித்து “நீ கூறிய நிமித்தக் குறிப்புக்கு என் பரிசில். என்னிடம் எஞ்சுவது இது ஒன்றே. என் அன்னை நான் இளமைந்தனாக இருக்கையில் அணிவித்தது” என்றான். சகதேவன் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான்.
நகுலன் நிலைகொள்ளாது எழுந்து இளைய யாதவரின் அருகே சென்று “யாதவரே, அவரிடம் கதாயுதம் ஏதுமில்லை. மூத்தவரிடம் இருப்பதோ உடைந்த கதாயுதத்தின் தண்டு. அதை எவ்வண்ணம் சுழற்றுவதென்று அவருடைய கைகளும் தோள்களும் அறிந்திருக்காது. இங்கு எவ்வண்ணம் கதைப்போர் நிகழும்?” என்றான். “அவரிடம் கதாயுதம் உள்ளது. அதை அவர் இப்போது எடுத்துவருவார்” என்று இளைய யாதவர் சொன்னார். பீமன் இளைய யாதவரிடம் வந்து “இந்த கதாயுதம் என் கைகளுக்கு பழகவில்லை, யாதவரே” என்றான். “இப்போரை நிகழ்த்துவது நீங்கள் அல்ல. அக்கதாயுதம்தான். அதுவே படைக்கலம் என்றாகட்டும்” என்று இளைய யாதவர் கூறினார்.
பீமன் பெருமூச்சுடன் “நான் இப்போது ஊழ் ஒன்றையே நம்பவேண்டியிருக்கிறது. பிற எதுவும் என்னிடம் இல்லை. உளம் ஒருங்கவில்லை. படைக்கலத்தை தோள் அறியவில்லை. என் ஆழம் முற்றிலும் சலித்து விலகிவிட்டிருக்கிறது” என்றான். இளைய யாதவர் “அப்படைக்கலத்திற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அது அறியும்” என்றார். பீமன் நீள்மூச்செறிந்தான். அந்த கதைத்தண்டை எடுத்துச் சுழற்றி “இல்லாத முழையை ஒவ்வொரு சுழற்றலிலும் இதன் முனையில் உணரமுடிகிறது” என்றான். “அது அங்கே எழும்” என்றார் இளைய யாதவர்.
துரியோதனன் சுனைநீர் அருகே சென்று கால் மடித்து அமர்ந்து நீர்ப்பரப்பைத் தொட்டு உள்ளிருந்து கதாயுதத்தை எடுத்தான். பொன்னிறமாக நீருக்குள் தெரிந்து வந்து வெளியே எடுத்ததும் வெள்ளியென மின்னியது. அதை வலக்கையால் எளிதாக சுழற்றி இடக்கைக்கு மாற்றி பிறிதொரு முறை சுழற்றி மீண்டும் வலக்கைக்கு எடுத்தபின் புல்வெளி நோக்கி நடந்து சென்று கதிரொளிக்கு எதிர்ப்புறம் நின்று கால்களை அகட்டி உடலைத் தாழ்த்தி நிலைமண்டிலம் கொண்டான். அவன் உடலில் முன்பிருந்த நிகர்நிலை விலகிவிட்டிருந்ததை நகுலன் அப்போது உணர்ந்தான். அவன் புன்னகை ஏன் இளைய யாதவரை நினைவூட்டியது என்று உணர்ந்ததும் அவன் அறியாமல் எழப்போய் மீண்டும் அமர்ந்தான். துரியோதனனில் பெண்மையின் மெல்லிய சாயல் மீண்டிருந்தது.
பீமன் யுதிஷ்டிரனை அணுகி “வாழ்த்துக, மூத்தவரே!” என குனிந்து அவர் கால் தொட்டு சென்னி சூடினான். யுதிஷ்டிரன் அவனை வெறுமனே வாழ்த்தினார். பீமன் கதைத்தண்டை ஏந்தியபடி சென்று துரியோதனனின் எதிர்ப்புறம் நின்றான். கதைத்தண்டை இரு கைகளுக்கும் மாற்றிச் சுழற்றி தரையில் மெல்ல தட்டி கைகளுக்கு அது பழகும்படி செய்தான். பின்னர் குனிந்து தரையில் கைகளை உரசி ஈரம் அகற்றி மீண்டும் இறுகப் பற்றினான். அது அவன் கைகளிலிருந்து நழுவுவதுபோல் தோன்றியது. இரு கைகளால் அதை பிடித்துச் சுழற்றி மீண்டும் நாட்டியபின் சலிப்புடன் பெருமூச்சுவிட்டான். களத்தில் துரியோதனன் சமபாத நிலையில் நிற்க காலடிகள் முன்விரல்களில் அமைய, கால்முட்டுகள் இறுகி நிலைகொள்ள, இரு பாதங்களும் மூன்று அடி இடைவெளியிலேயே பதிய, வைசாகம் என்னும் நிலையில் பீமன் நின்றான்.
சகதேவன் இருவரையும் நோக்கும்படி அகன்று நின்றபின் “ஆகுக, கௌரவ மூத்தவரே! கணங்கள் அணுகிவிட்டன” என்றான். இருவரும் பதுங்கும் வேங்கைகள்போல பின்காலெடுத்து வைத்து மெல்லத் தழைந்து தலையை முன்னால் நீட்டி ஒருவரையொருவர் விழிகளால் நோக்கி அசைவழிந்தனர். சகதேவன் “நிகழ்க!” என்று உரத்த குரலில் ஆணையிட இருவர் உடல்களிலும் அச்சொல் நீர்ப்பரப்பில் கல் விழுந்ததுபோல் மெல்லிய அசைவொன்றை உருவாக்கியது. மீண்டும் சிலைகளென உறைந்தனர். மெல்ல கதையால் தரையை தட்டியபடி பீமன் அசைவுகொண்டான். கால்களை மிக மெல்ல இரையை அணுகும் புலியின் கால்களென எடுத்து வைத்து அரைவட்டமாக அவன் சுழல விழிகளால் அவனைத் தொடர்ந்தபடி துரியோதனன் அசைவிழந்து நின்றான்.
பீமனின் முகம் அங்கே வருவதற்கு முன்னரே துரியோதனனிடம் கதைப்போரில் பட்ட அடியால் உதடுகளும் காதுகளும் கிழிந்து, கண் ஒன்று பிதுங்க குருதி அடைத்து வீக்கம்கொண்டிருந்தது. அவ்வீக்கம் அவன் முகத்தை ஒரு பக்கமாக இழுக்க அதில் எப்போதும் கசப்பும் வெறுப்பும் நிறைந்திருப்பதுபோலத் தோன்றியது. துரியோதனன் உடல் புதிதாக கனிபோழ்ந்து எடுத்த விதைகளின் ஒளி கொண்டிருந்தது. அந்தச் சுனைநீருக்குள் இருந்தமையால் வந்த மெருகா? அன்றி தவத்தின் ஒளியா? அவன் விழிகள் அத்தனை கனிந்து சகதேவன் கண்டதில்லை. ஒருவேளை பாண்டவ மைந்தர்கள் கண்டிருக்கக் கூடும். சதானீகன் ஒருமுறை அவனிடம் அதை சொன்னான். ராகவராமனின் கதையை கூத்தர் நடித்துக்கொண்டிருந்தனர். தசரதன் இறுதியாக தன்னிடம் விடைபெற்றுச் செல்லும் மைந்தனை நோக்கிக்கொண்டு உருகும் விழிகளுடன் படுத்திருந்த காட்சியைக் கண்டு அவன் “மூத்த தந்தை துரியோதனனின் விழிகள்” என்றான்.
சூழ்ந்திருந்தவர்கள் காலத்தை ஒருகணம் மறுகணம் என உணர்ந்தபடி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர். பீமனின் தோள்பட்டைக்குப் பின் தசைகள் இறுகி பின் நெகிழ்ந்தன. அவன் எடுத்த கால்களுக்குக் கீழே அழுந்திய பசும்புல் இதழ்கள் மெல்ல நிமிர்ந்தன. வைத்த காலுக்கு அடியில் புல் மெத்தென்று தழைந்து ஓசையின்றி கால் எழ மீண்டும் நிமிர்ந்து அக்கால்தடம் கரைந்து மறைந்தது. துரியோதனனின் விழிகளை அப்பாலிருந்து நோக்கியபோது இமைகள் பாதி மூடியிருக்க அவன் ஊழ்கத்திலிருப்பதுபோல் தோன்றினான். ஒரு பறவையின் கீச்சொலி கேட்க துரியோதனன் இடக்காலை எடுத்துவைத்த அக்கணம் உறுமலுடன் பீமன் காற்றிலெழுந்து கதைத்தண்டை சுழற்றி துரியோதனனின் தலையை ஓங்கி அறைந்தான். ஒருகணத்திற்கு முன்னரே எழுந்ததுபோல் துரியோதனனின் கதை சுழன்றெழுந்து அதை தடுத்தது. உலோகங்கள் அறைந்துகொள்ளும் ஒலி எழுந்து காடு திடுக்கிட்டது.
பீமனின் கதையை துரியோதனன் தடுத்து கதைமுழையால் தொடுத்துச் சுழற்றி தாழ்த்தி அதே விசையில் தன் கதையை மேலெழுப்பி காற்றில் மிதந்தெழுவதுபோல் பாய்ந்து அவன் தலையை அறைந்தான். பீமன் உடலை இடைவரைக்கும் வளைத்துச் சுழற்றி காலால் நிலத்தை உதைத்தெழுந்து துள்ளி அப்பால் விலகி அதை ஒழிந்தான். அவ்விசையிலேயே கதைத்தண்டை சுழற்றி துரியோதனனின் தோளை அறைந்தான். அக்கதையை எதிர்பார்த்ததுபோல் துரியோதனன் கதை அங்கு காத்திருந்தது. உலோகங்கள் அறைந்தறைந்து எழுப்பிய ஓசை மட்டும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. விந்தையானதோர் பறவைக்குரல்போல. ஒவ்வொரு ஓசையும் ஒரு சொல்போல் ஒலித்தது. ஒரு சொல்லே வெவ்வேறு பொருள் கொண்டு மீள மீள ஒலிப்பதுபோல. ஒற்றைச்சொல்லாலான ஒரு மொழி என. கதைகள் இரு வண்டுகள்போல் வானில் பறந்து ஒன்றையொன்று துரத்தின. ஒன்றோடொன்று முட்டி விலகின. ஒன்றையொன்று தழுவி முயங்கி வட்டமிட்டு பின்னர் சீறி விலகின.
இரு மல்லர்களின் உடல்களிலும் தசைகள் நூறுஅம்புகள் நாண் கொண்டு இறுகி அம்பெய்து தளர்ந்து மீண்டும் அம்பு பெற்று இறுகி அம்பெழுந்து தொய்வதுபோல் அசைந்தன. அவர்களின் உடல்கள் ஒரு நோக்கில் முற்றிலும் ஒன்றே என தோன்றின. ஆடிப் பாவைகளின் போர். தன்னையே தான் அறைந்து கொண்டு ஆடும் ஆடல். உந்தி எழுந்த கால் விரல்களின் நெளிவு. சுழன்று நிலத்தூன்றி மீண்டும் விழும் உள்ளங்காலின் தோன்றிமறையும் வெண்மை. காற்றில் பறந்து சுழன்றெழுந்து அமைந்து சுழன்று வந்த கண்களின் ஒளி ஓர் அலைவுறும் கோடென்றாயிற்று. பீமன் பற்களை இறுகக் கடித்து, தாடையை இறுக்கி, முகம் கோணி, கழுத்துத் தசைகள் இழுபட்டு, வெறியில் உறைந்தவன் போலிருந்தான். துரியோதனன் ஊழ்கத்திலிருப்பவன்போல் முகத்தசைகள் தொய்ந்திருக்க துயிலிலென வாய் மூடியிருக்க நீரலைகளின்மேல் நெற்று என முகம் காற்றில் பறந்துகொண்டிருக்க தோன்றினான்.
பீமனும் துரியோதனனும் போரிடத் தொடங்கியபோது அவர்கள் இருவரும் அவர்கள் மட்டுமே உணரும் ஒரு மிகச் சிறிய வேறுபாடை ஒருவரிடம் ஒருவர் கண்டு அதை மட்டுமே கூர்ந்து நின்றிருப்பதுபோல் தோன்றியது. அவர்கள் அடிவைத்து ஒருவரையொருவர் சுழலத் தொடங்கியபோது அவ்வேறுபாடு சூழ்ந்திருந்தவர்களுக்கும் தெரிந்தது. பீமன் எழுந்து அறைந்த கணம் அவ்வேறுபாடு பேருருக்கொண்டு அது மட்டுமே அங்கென நின்றது. எழுந்து அதை துரியோதனன் தடுத்தபோது அவன் அப்பால் பிறிதொருவனாக எழுந்தான். முற்றிலும் வேறுபட்டவர்களாக அவர்கள் மாறினார்கள். பின்னர் ஒவ்வொரு அறைதலும் ஒவ்வொரு செறுத்தலும் ஒவ்வொரு தாவலும் ஒவ்வொரு தழைதலும் அவர்களை காற்றில் ஊசலாட்டி ஊசலாட்டி ஒருவரோடொருவர் அணுக்கமாக்கியது.
விலக்கத்தால் திடுக்கிட்டு போரினூடாக அணுகிக்கொண்டிருந்தனர் என்று தோன்றியது. ஒருவரையொருவர் நெருங்கி, ஒருவரையொருவர் நன்கறிந்து, ஒருகணத்தின் இருபுறங்களில் என திகழ்ந்து, ஒருகணமே என்றாகி, அறியாத ஏதோ ஒரு தருணத்தில் அங்கு ஒருவர் மட்டுமே கதை சுழற்றிக்கொண்டிருப்பதாக ஆயினர். அதுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போர் மறைந்து அங்கு பிறிதொன்று நிகழ்ந்தது. ஒரு தூய படிகமணி காற்றில் நின்று சுழன்றுகொண்டிருப்பதைப்போல. சுழல்தலில் அது இல்லையென்றாயிற்று. விசையழிகையில் தன் புறங்களே தான் எனக் காட்டியது. அசைவிழக்கையில் மீண்டும் இல்லாமலாகியது. ஒற்றைப் படிகமணி. முடிவிலா பட்டைகள் கொண்டது. இன்மையை பக்கங்கள் என ஆக்கி மாயம்காட்ட வல்லது.
ஒன்று பிறிதொன்றென மாறாவிடில் காலமிலாதாகிவிடுகிறது என்ற வரி நகுலனின் நினைவிலெழுந்தது. காலமின்மையில் நிகழ்வனவும் காலத்தை கலைக்காதவையும் இன்மை என்றாகிவிடுகின்றன. பொருளென்பது காலப்புடைப்பு. நிகழ்வென்பது காலக்குலைவு. அவ்வெண்ணங்களுக்குச் சென்றபோது அங்கே என்ன நிகழ்ந்தது? ஒன்றும் நிகழவில்லை. அல்லது நெடுந்தொலைவு சென்றுவிட்டது செயல்மறுசெயல் எனும் தொடர். அங்கு நிகழ்வதை ஊழிக்காலம் முதல் அவ்வாறே எப்போதும் நோக்கி நின்றிருப்பதாக மறுகணம் அவன் உணர்ந்தான். அது ஒருபோதும் முடியப்போவதில்லை. அவர்கள் அவதம்சத்தில் நாகமென படமெடுத்து கொத்திக்கொண்டனர். வராஹோத்துகத்தில் பன்றி என தலைதாழ்த்திச் சென்று முட்டிக்கொண்டனர். காத்ரவிபர்யாயம் அவர்களை கதையென்று ஆக்கியது.
அறியா உணர்வொன்று சென்று தொட நகுலன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவர் இருவரையும் மாறி மாறி நோக்கியபடி கைகளை மார்பில் கட்டி அசையாமல் நின்றிருந்தார். அவர் இரண்டாக பிரிந்துவிட்டதுபோல, ஒரு பகுதி துரியோதனனையும் ஒரு பகுதி பீமனையும் நோக்கி நின்றதுபோல தோன்றியது. இருவராகவும் அங்கு அவரே நின்று போரிடுவதுபோல. அவ்வெண்ணம் வந்ததும் ஒரு சிறு திடுக்கிடலுடன் இளைய யாதவரின் உடலெங்கும் தசைகள் நெளிந்தசைவதை நகுலன் கண்டான். எடைமிக்க கதைகளை இரு கைகளிலும் ஏந்தி அவரே போரிட்டுக்கொண்டிருப்பது போன்ற இறுக்கமும் நெகிழ்வும்.
அந்த உளமயக்கு அளித்த திகைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்பவன்போல பார்வையை அகற்றி பீமனும் துரியோதனனும் போரிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தான். இரு கதைகளும் ஓசையுடன் அறைந்து அறைந்து துள்ளின. அதற்கு அப்பால் அவர்கள் தங்கள் முழு தனிமையில் அங்கு நிகழ்வதை அறியாத ஊழ்கம் ஒன்றில் இருந்தனர். இரு விழிகளும் நோக்கு உறைந்து காற்றில் உலைந்தாடி சுழன்று வந்தன. இரு உதடுகளிலும் ஒற்றைச் சொல் நிலைகொண்டிருந்தது. எதற்கு இவர்கள் முயல்கிறார்கள்? ஒருவருள் ஒருவர் புகுந்துகொள்ளவா? ஒருவர் உடலை பிறிதொருவர் மாற்றிக்கொள்ளவா? போர்களினூடாக மானுடர் தங்கள் உடல்களை கடந்து செல்கிறார்களா என்ன ?
அப்போரின் ஒவ்வொரு அசைவும் திகைப்பூட்டும் முழுமை கொண்டிருப்பதை அவன் பின்னர் உணர்ந்தான். கதைப்போர் மண்ணில் நெடுங்காலமாக கற்பிக்கப்படுகிறது. படைக்கலப் போர்களில் அதுவே தொன்மையானது என்று கூறப்படுவதுண்டு. கதையிலிருந்தே மனிதனின் பிற படைக்கலங்கள் அனைத்தும் உருவாயின. ஆகவே அது புயல்போல், பெருவெள்ளப் பாய்ச்சல்போல் கட்டற்ற விசை மட்டுமாகவே இருந்தது. அதிலிருந்து போர்க்கலையை சமைத்தெடுத்தனர் மூதாதையர். காட்டு யானையை பழக்கி பட்டத்து யானையாக்குவதுபோல. கதைப்போரில் விற்கலையும் வேல்கலையும் வாட்கலையும் தேர்க்கலையும் யானையூர்தலும் புரவியூர்தலும் மற்போரும் அடங்கியுள்ளன என்று துரோணர் கூறியதுண்டு. ஆனால் பிற போர்கள் அனைத்தும் அவற்றின் அசைவுகளை வகுத்து நெறிகளை கூர்செய்து முழுமையை அடைந்த பின்னரும்கூட கதைப்போர் முற்றிலும் பண்பாட்டுக்குப் பழகாத களிறுபோல் மதத்தை உள்ளொதுக்கி காட்டை கனவுகளில் நிறுத்தி மானுடரிடம் திகழ்ந்தது.
கதைப்போர் ஒருபோதும் முழு நடனமென மாறுவதில்லை. ஏனெனில் அதில் மட்டுமே படைக்கலம் சென்று தாக்கும் பின்விசையை அதை செலுத்துவோன் அக்கணமே தன்னுடலில் அறிகிறான். படைக்கலத்தில் இருந்து அதில் குடிகொள்ளும் தெய்வங்களின் வெறி வீரனுக்குள் வருகிறது. எங்கோ நெறி பிறழ்கிறது. எங்கோ எல்லைகள் கடக்கப்படுகின்றன. எங்கோ ஓரிடத்தில் போரை காட்டிலிருந்து ஒருபோதும் வெளியேறாத தொல்தெய்வங்கள் எடுத்துக்கொள்கின்றன. கதைப்போரில் எப்பொழுதும் கொலைவிலங்குகள் நிகழ்கின்றன. கானுறை தெய்வங்கள் எழுகின்றன. கதை யானையின் துதிக்கையாகிறது. பன்றியின் தேற்றையாகிறது. வரையாடின் நெற்றியாகிறது. மலைப்பாம்பின் உடற்சுருளாகிறது. உருமாறி தன்னை தான் கண்டுபிடித்து அதுவரை வகுக்கப்பட்ட அனைத்தையும் கடந்து செல்கிறது. கதைப்போர் முற்றிலும் அசைவின் முழுமை கொள்ளாது. அவ்வாறு முழுமை கொள்கையில் அங்கு கதை பொருளில்லாமல் ஆகிறது. அதன் பின் மண்ணில் எவரும் கதையேந்தி போரிடவேண்டியதில்லை.
நகுலன் துரோணரின் குரலை கேட்டுக்கொண்டிருந்தான். தன் உடலுக்குள் இருந்து அனைத்து எண்ணங்களும் நுரைக்குமிழிகளென உடைந்து மறைய வெறுமை நிறைந்து எடையின்மை என ஆகி அங்கு நின்றிருப்பதை உணர்ந்தான். ஒருவேளை இதுவே இம்மண்ணில் நிகழும் இறுதி கதைப்போராக இருக்கும். இங்கு அசைவுகள் ஒவ்வொன்றும் அதன் முழுமையை சென்றடைகின்றன. ஒவ்வொரு கணமும் தேர்ந்த சிற்பி வகுத்த வரைவென முற்றிலும், உடல்மறந்த ஆட்டனின் அடவென மாறிக்கொண்டிருக்கிறது. இம்முழுமையை அடைந்த பின்னர் இதில் வெற்றியும் தோல்வியும் இயல்வதல்ல. இதில் இனி நிகழ்வதற்கொன்றுமில்லை. இருவரும் இங்கு இறந்து விழுவார்கள். இருவரும் ஒற்றைக்கணத்தில் விண்புகுவார்கள். இரு உடல்களும் பொருளிழந்து இங்கு கிடக்கும். இரு கதைகளிலும் உறையும் தெய்வங்கள் விடுதலைகொண்டு எழுந்து விண்பரப்பில் தழுவி முயங்கி ஒன்றாகும்.
அவன் அங்கிருந்து எழுந்து விலகியோட விழைந்தான். அனைத்து நரம்புகளும் இறுகி உடைந்துவிடும்போல் தோன்றியது. தன் உடல் ஒரு நுரைக்குமிழியென உடைவதற்கு முந்தைய கணத்தில் நின்றிருப்பதாக உணர்ந்தான். மெல்லிய தொடுகையென ஓர் உணர்வு வந்து அழைக்க அவன் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். அவருடைய வலக்கை நெளிந்து இயற்றிய அசைவை கண்டான். ஏழு… ஏழு என்கிறாரா? அதன் பொருளென்ன என்று அவன் உணர்வதற்குள் பீமன் இரு கால்களையும் பரப்பி நிலத்தில் படிந்து மண்ணில் படுப்பவன்போல் புரண்டு எழுந்து அதே விசையில் சுழன்று கதையால் துரியோதனனின் தொடையில் ஓங்கி அறைந்தான். எலும்பு உடையும் ஓசை கேட்டது. அல்லது நீர்க்குடம் உடையும் ஓசையா அது?
அடியின் விசையில் துரியோதனன் தூக்கி வீசப்பட்டதுபோல் மண்ணில் விழுந்து இருமுறை துடித்துப் புரண்டு மண்ணை தழுவுபவன்போல் கைகளை விரித்து முகம் பதித்து அசைவிழந்தான். ஒரு சிறு முனகல்கூட அவனிடமிருந்து வெளிப்படவில்லை. பீமன் வெறுப்பா துயரா எனத் தெரியாத முகத்துடன் குனிந்து நோக்கி நின்றான். யுதிஷ்டிரர் “யாதவனே!” என்று கூவியபடி எழுந்தார். “இளையோனே! என்ன செய்துவிட்டாய்! என்ன இது! என்ன இது!” என்று கூவியபடி எழுந்து துரியோதனனை நோக்கி ஓடினார். “இது அறப்பிழை! இது மாபெரும் அறப்பிழை!” என்று கைகளை மேலே தூக்கி அலறினார். ஓடிய விசையில் நிலைதடுமாறி மண்ணில் குப்புற விழுந்தார். அவர் முகம் மண்ணை அறைந்தது. கையூன்றி எழுந்தபோது மண்ணும் குருதியுமாக கலந்து முகத்தில் ஒட்டியிருந்தது. “யாதவனே! யாதவனே!” என்று அவர் விசும்பியபடி மண்ணில் தலை பதித்து படுத்துக்கொண்டார்.
சகதேவன் என்ன செய்யவிருக்கிறான் என்று அக்கணமே உணர்ந்து நகுலன் பாய்ந்து சென்றான். சகதேவன் தன் இடையிலிருந்து குறுவாளை எடுப்பதற்குள் அக்கையை தோளுடன் அழுந்தப்பற்றி சுழற்றி கையை மடித்து முழங்காலால் அவன் இடையை உந்தி அவனைச் சரித்து நிலத்தில் வீழ்த்தி அவன் மேல் தன் உடலெடையை அழுத்தி அசையாமல் பிடித்துக்கொண்டான். இளைய யாதவர் “இவ்வழு நிகழ்ந்தே ஆகவேண்டும், அரசே. இல்லையேல் இப்போர் ஒருபோதும் முடிவதில்லை. வெற்றிகள் அனைத்தும் வழுக்களே” என்றார். சகதேவன் முழு வெறியுடன் நகுலனின் பிடியிலிருந்து தப்ப முயன்றான். அவன் கருவிழிகள் உள்ளே சென்று வெண்சிப்பிகள்போல் தெரிந்தன. பற்கள் உதடுகளை கடித்து இறுக்கியிருந்தன. கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர அவன் உடலில் வலிப்பெழுந்தது.