அபிக்கு வாழ்த்து- பாவண்ணன்

 

அன்புள்ள ஜெயமோகன்

 

 

வணக்கம். நலம்தானே?

 

 

இந்த ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக கவிஞர் அபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன்.  நான் விரும்பிப் படிக்கும் கவிஞர்களில் அவரும் ஒருவர். என்றென்றைக்குமான கவிதையுலகின் முக்கியமான தூண்களில் ஒருவர் அவர். எதையும் விளக்காமல் அல்லது சித்திரமாக எதையுமே முன்வைக்காமல் மிகக்குறைவான சொற்களால் ஒரு கோலத்தை எழுதிக் காட்டி மறையும் தன்மையை ஒரு புதுமையாக உத்தியாகத் தன் கவிதைகளை முன்வைத்தவர்

 

 

அவர்.  எண்ணிக்கையில் அவர் கவிதைகள் மிகவும் குறைவானவையே. ஆயினும் ஒவ்வொரு வாசகனின் நூலகத்திலும் கைக்கெட்டும் தொலைவில் அவர் கவிதைத்தொகுதிகள் வைத்திருக்கப்படவேண்டும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கவிதைகளை மட்டும் வாசித்துவிட்டு, பிறகு மனத்தில் எஞ்சும் சொற்களை மட்டும் நாள்முழுதும் அசைபோட்டபடி  இருக்கவேண்டும். நீர்ப்பரப்பில் இருட்டுவேளையில் துழாவித்துழாவி படகைச் செலுத்திக்கொண்டு செல்வதுபோன்றதொரு பயணம் அவர் கவிதைகள் வழியே சாத்தியமாவதை அனைவரும் உணரமுடியும்.

 

 

’சொல்லுதல் யார்க்கும் எளிது சொல்லாதிருத்தலும் எளிது’ என்னும் வரி ஒரு மந்திரச்சொல்லைப்போலவும் மின்னலைப்போலவும் என் மனத்தில் அடிக்கடி மின்னியபடியே இருக்கும்.  அபிக்கு என் வாழ்த்துகள். உங்களுக்கு என் வணக்கம்.

 

 

அன்புடன்

பாவண்ணன்

 

அன்புள்ள பாவண்ணன்

 

நன்றி

 

வாசகர்களின் வாழ்த்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எழுத்தாளர்களில் வாழ்த்து தெரிவித்தவர்கள் குறைவு. நீங்கள் ஒருவரே எனக்கு எழுதியிருக்கிறீர்கள். கவிதைக்கு ஏன் விருது அளிக்கவேண்டும் என்பதற்கான சான்று இது. கவிதை உடைநடையைக் கடக்கும் உரைநடை. தன் உரைநடையைக் கடக்க எப்போதும் முயன்றுகொண்டிருக்கும்  அவ்வாறு தன் எல்லைகளில் நின்றிருக்கும் உரைநடையாசிரியர்களின் முதன்மை வாசிப்பு கவிதையாகவே இருக்கும். எதையும் விரித்தாகவேண்டியதில்லை, சித்தரித்தாகவேண்டியதில்லை , கூர் மட்டும் வெளிப்பட்டால் போதும் என்னும் எடையின்மையால் கவிதை பத்துத்திசைக்கும் பறக்கும் இயல்புகொண்டது.

 

அருவமான உணர்வுகளை மொழியால் சொல்லிவிட முயன்று வெற்றியும் பலவகையான தோல்விகளும் அடைந்தவர் அபி. தமிழில் அவ்வகையில் இன்னொரு கவிஞர் இல்லை. தமிழ் உரைநடையில் அருவமான தருணங்களை அடைய முயல்பவர்கள் குறைவு. ஆகவேதான் போலும் அபி அவர்களால் மிகுதியாக வாசிக்கப்பட்டதில்லை.அவரைப்பற்றி எழுதப்பட்டவற்றை தேடிப்பார்த்தேன். அனேகமாக ஏதுமில்லை.

 

இவ்விருதுக்குப் பின்னராவது அபி வாசிக்கப்படுவார் என நம்புகிறேன்

 

ஜெ

 

 

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி,மிர்ஸா காலிப்- கடிதம்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

முந்தைய கட்டுரைஎழுத்தாளன்,சாமானியன் -ஆர்.அபிலாஷ்
அடுத்த கட்டுரைசீமானும் கிராமப்பொருளாதாரமும்