திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம் “உலோகம்” பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சரி, இந்தமுறை முயன்று பார்ப்போமே என்று அதை வாங்கிவந்தேன். இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இன்றே உங்களுக்கு மடலும் எழுதுகிறேன்.
மிக அருமையான நடையில் எழுதி இருந்தீர்கள். இதில் எந்த அளவுக்கு கதை கலக்கப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்றும் பிரித்தறிய முடியவில்லை. ஒரு போராளியின் அருகில் இருந்து பார்ப்பதுபோல் இருந்தது. த்ரில்லர் புதினமா அல்லது யாருடைய கதையாவது சொல்லப்பட்டு எழுதப்பட்டதா என்றே தெரியாத அளவுக்கு இருந்தது. நான் ராஜேஸ்குமார் புதினங்களை எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து படித்து வருகிறேன். நீங்கள் இதில் மிக வித்தியாசமான நடையை, சுவையைத் தந்திருக்கிறீர்கள்.
வெறும் உரையாடல் மட்டுமல்லாமல் அந்தப் பாத்திரம் தான் பெற்ற பயிற்சியைப் பற்றியும், அதன்மூலம் மனித மனங்களுக்குள் ஊடுருவி பார்ப்பதும், அதனுள் நடக்கும் மனபோராட்டங்களும், அதை எழுதிய நடையும் மிக அருமை. சில நடைமுறை விசயங்களையும் யோசிக்க வாசகர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். நாம் இங்கு என்னதான் 2 ஜி பற்றி அடுமனைகளில் பேசினாலும், ஊடகங்கள் எழுதினாலும் நமக்கு எவ்வளவு பாதுகாப்பான வாழ்க்கை அமையப்பெற்றிருக்கிறோம் என்பதைப் பலமுறை யோசித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. இதுவரையில் நானோ, எனக்குதெரிந்த நபர்களோ துப்பாக்கியைத் தொட்டுகூடப் பார்த்ததில்லை. யாரும் சாலை விபத்துக்களில் தவிர கொடூரமாக வேறு எங்கும் கொல்லப்பட்டதில்லை.
உலோகம் என்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. அலுவல் காரணமாக 370 கி மீட்டர் வாகனம் ஓட்டிவிட்டு இரவு 12 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். மடிக்கணினிப் பையை வீட்டில் இறக்கிவைத்தவுடன் அப்படியே உலோகத்தை திறந்து வைத்தேன். அந்த அளவுக்கு அது தன்பால் என்னை ஈர்த்துக்கொண்டது.
நன்றி.
அன்புடன்,
பிரபு
அன்புள்ள பிரபு
பொதுவாக இவ்விஷயங்களில் கருத்தியல் சார்ந்தும் அரசியல் சார்ந்தும்தான் சிந்தனைகள் ஓடும். நான் அந்த மனிதர்களின் மனங்களுக்குள் செல்லமுடியுமா என்று பார்த்தேன். அதுவே உலோகத்தின் அடிப்படை.
பலவருடங்களுக்கு முன்னர் இதே கருவை ‘ஆயுதம்’ என்ற பேரில் கவிதையாக எழுதியிருக்கிறேன். அது புலம்பெயர்ந்த ஈழத்து நண்பர்களின் இதழ் ஒன்றில் வெளியாகியது. ஒரு மனிதன் எப்போது எப்படி துப்பாக்கியாக ஆகிறான் என்பதைபப்ற்றிய கவிதை
அதைப்பற்றி அன்று புலிகள் இயக்கத்தில் இருந்த நண்பர்கள் பலர் ஆதரித்தும் மறுத்தும் கடிதங்கள் எழுதியிருந்ததை நினைவுகூர்கிறேன்
ஆயுதத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்றுமே நுட்பமாக ஆராயத்தக்கது. அதிலும் ஆயுதம் அரசியலையும் அன்றாட வாழ்க்கையையும் தீர்மானிக்கக்கூடியதாக ஆகும்போது இன்னும் ஆழமான ஆராய்ச்சி தேவையாகிறது
ஆயுதம் மனிதனைத் தன்னைப்போல ஆக்குகிறது. எந்த ஆயுதமும் அதை எவர் ஏந்தினாலும் மெல்ல மனிதர்களை ஒரே வகையினராக ஆக்குகிறது என்பது என் எண்ணம். இந்த வருடங்களில் அவ்வெண்ணம் மேலும் மேலும் உறுதிப்படுகிறது
ஜெ