Veerappan: Chasing the Brigand
அன்பின் ஜெ,
சென்ற வாரத்தில் Veerappan : Chasing the brigand என்ற நூலை வாசித்தேன். வீரப்பனைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த டிஜிபி விஜயகுமார் எழுதிய நூல். சட்டமும் வணிக மேலாண்மையும் படித்திருக்கிறார். ஒரு காவல்துறை ஆய்வாளரின் மகனாக ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து சுயவிருப்பத்தின் காரணமாக காவல்துறை பணிக்கு வருகிறார். கமாண்டோக்களுக்கு பயிற்சியளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இந்திய பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை கவனிக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறார். எல்லைப் பாதுகாப்புப் படையில் பணி புரிந்திருக்கிறார்.
எஸ்.டி.எஃப் க்கு தலைவராக ஆனதும் வீரப்பனைப் பிடித்தே ஆக வேண்டும் என உறுதியுடன் இருக்கும் நபர்களைச் சந்திக்கிறார். சாதாரண கான்ஸ்டபிளிலிருந்து காவல்துறை மேலதிகாரிகள் வரை. தேடுதல் வேட்டையில் வீரப்பனை நூலிழையில் தவற விட்டவர்களையும் சந்தித்து அவர்கள் அனுபவங்களை நேரடியாகக் கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் நோக்கில் வீரப்பன் நெருங்கவே முடியாத ஆள் அல்ல என்று என்பதையும் வீரப்பன் பிடிபடுவது சாத்தியம் என்பதையும் சொல்கிறார்கள். அவற்றைக் கொண்டு எஸ். டி. எஃப்-ன் யுக்திகளை விஜயகுமார் வகுக்கிறார்.
சிறப்பு அதிரடிப்படையின் தலைவராகும் போது அவருக்கு ஐம்பது வயது. சத்தியமங்களம் வந்து சேர்கிறார். அவர் மனைவி பணி ஓய்வு பெறுவதற்குள் வீரப்பனைப் பிடித்து விடுவீர்களா என்று கேட்கிறார். எட்டு வருடம் ஆகும் என நினைக்கிறாயா என மனைவியிடம் கேட்கிறார். உங்களுக்கு வீட்டில் இடம் மாறியிருக்கும் பொருளைத் தேடுவதே கடினம் என்பதால் கேட்டேன் என்கிறார் அவர் மனைவி.
நூலில் தன் காஷ்மீர் அனுபவங்களை ஆங்காங்கே பகிர்ந்து கொள்கிறார். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டை இராணுவம், பி.எஸ்.எஃப், மாநில காவல்துறை ஆகியோர் சுற்றி வளைக்கின்றனர். வீட்டுக்கு முன் இருக்கும் சாலையில் பி.எஸ்.எஃப்-ன் வேன் ஒன்று வந்து விடுகிறது. உள்ளே ஜவான்கள் இருக்கின்றனர். தீவிரவாதிகள் வேனின் டிரைவரை சுட்டுக் கொன்று விடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இம்மாதிரியான நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான குறிப்புகள் இராணுவத்துக்கும் பி.எஸ்.எஃப் க்கும் உண்டு. ஒரு கணம் அவற்றை எண்ணாமல் குறிப்புகளை மீறி தானே ஓடிச் சென்று வேனின் கதவைத் திறந்து டிரைவர் உடலை வேனுக்குள் நகர்த்தி விட்டு அந்த வேனை இயக்கி தூரமாக கொண்டு செல்கிறார். ஜவான்களின் உயிர் காக்கப்படுகிறது.
மதுரையில் இருக்கும் போது தன் நம்பிக்கைக்குரிய எஸ்.டி.எஃப் வீரரின் மரணச்செய்தி வருகிறது. சத்தியமங்களம் விரைகிறார். உடன் அவர் மனைவியும் அவருடன் காரில் வருகிறார். அவர் மனைவி நீண்ட பயணத்தில் தன் துக்கத்தையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஒரு சொல் கூட உச்சரிக்காமல் உடன் வந்தார் என்பதை பதிவு செய்கிறார்.
மைசூரில் ஓய்வு பெறும் கர்நாடக அதிரடிப்படை வீரர் ஒருவரின் பணி ஓய்வு நிகழ்ச்சிக்கு செல்கிறார். ஓய்வு பெறும் வீரர் மனநிறைவு இல்லாமல் இருக்கிறார். விஜயகுமாரிடம் நாம் காட்டுக்குள் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் தேடும் நபரை சமவெளிக்கு கொண்டு வந்தால் நம் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கக் கூடும் என்கிறார். ஆபரேஷன் ககூன் உருவாகி செயலாக்கம் பெறுகிறது.
பல வருடங்களாக தேடப்பட்ட நபருக்கான நேரம் T என குறிக்கப்படுகிறது. குறித்த நேரத்தில் பலர் கேட்க விரும்பிய செய்தி யதார்த்தமாகிறது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. சமீபத்தில் ஹிந்தியில் வெளியானது. விரைவில் தமிழில் மொழியாக்கம் வரவுள்ளது.
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை