பயணம்- கடிதங்கள்

நடந்தே தீரணும் வழி…

பயணியின் கண்களும் கனவும்

அன்புள்ள ஜெ,

மாயனின், ‘நடந்தே தீரணும் வழி’ வாசித்தவுடன் எழுதத் தோன்றியது.

என் சி பி எச் வெளியிட்டுள்ள இராகுல் சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம் வாசித்தேன். எத்திராஜுலு அவர்களின் மொழிபெயர்ப்பு. பயணம் அறிவை விரிவுபடுத்துகிறது என்னும் வாக்கிற்கு இன்னொரு சான்று. ஊர்சுற்றிக்களின் வகைகள், கைக்கொள்ளவேண்டியவை, கடமை எனப் பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவை தெறிக்கும் நடை, அறிவியல், தத்துவம், மதம்சார் சிந்தனைகள் என உட்பொருள் சார்ந்தும் என்றும் பொலிவிழக்காத எழுத்தும் அதன் அற்புத மொழிபெயர்ப்பும். பதினாறு அத்தியாயங்களில்  ஊர்சுற்றிகளுக்கான அற்புத வழிகாட்டிப்புத்தகம். அபாரமான செயலூக்கி, குறைந்தபட்சம் பக்கத்து ஊருக்காவது பயணிக்கப்பணிக்கும்.

விஜயகுமார்.

 

ஊர்சுற்றி புராணம் வாங்க

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் தளம் இலக்கியத்தைப்பற்றிய ஓயாத உரையாடல் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் இலக்கியம் என்பது தமிழில் அரிதாகவே நிகழும் ஒன்று. அதற்கிணையாகவே பயணம் என்னும் கனவை அது உருவாக்குகிறது. இந்தத்தளத்தைப் படிக்கும் எவருக்கும் ஓர் ஊரில் ஒருமாதம் தொடர்ந்து தங்கியிருப்பதே பெரிய பிழை என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது. மாயன் எழுதிய கடிதம் அந்த உணர்ச்சியை உருவாக்கியது. நானும் அதே உணர்ச்சியுடன் கிளம்பிப் பயணம் செய்திருக்கிறேன்.

 

பயணங்களில் நான் கண்டது பயணம் என்பது இங்கே மிகவும் பழக்கமில்லாத ஒன்றாகவே உள்ளது என்பதுதான். பயணம் செய்பவர்கள் அது ‘ஜாலியாக இருப்பது’ என்றுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பயணத்தில் பயணம் சம்பந்தமில்லாத விஷயங்களால் ஜாலியாக இருப்பது என்பதே அவர்களின் புரிதல். ஆகவே நண்பர்களுடன் பயணம் செய்வது என்பது நேரமும் பணமும் வீணாவதுதான்

 

ஆனால் நான் தனியாகச் செய்த எல்லா பயணங்களும் எனக்கு மிக அற்புதமான அனுபவங்களாக இருந்தன. சென்ற மாதம் கொடைக்கானலில் இருந்து அடிவாரம் வரை நடந்தே செல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டேன். கொடைக்கானல் சென்றிருந்தபோது ஒருவர் அப்படி சிலர் செல்வதாகச் சொன்னார். நானும் சேர்ந்துகொண்டேன். எட்டு மணிநேரம் ஆகியது. ஆனால் என் வாழ்க்கையின் மறக்கமுடியாத அனுபவம் அது

 

பயணத்தில் என்ன நடக்கிறது என்றால் நாம் எதையும் சுமந்துகொண்டிருப்பதில்லை. சுமந்துகொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம். மறந்துவிட்டோம் என்பதையே கொஞ்சம் கழித்து ஞாபகம் வரும்போதுதான் உணர்வோம். பயணம் செய்யக் கற்பித்தது உங்கள் தளம்தான். என் வாழ்க்கையில் நான் எவருக்காவது கடன்பட்டிருக்கிறேன் என்றால் உங்களுக்குத்தான்

 

ஜெயக்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45
அடுத்த கட்டுரைவீரப்ப வேட்டை