ஜப்பான், பிழைகள்- கடிதம்
அன்புள்ள ஜெ
ஜப்பான், பிழைகள்- கடிதம் என்னும் கடிதத்தையும் அதில் சுட்டியிருக்கும் கட்டுரையையும் வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் இலக்கியத்தில் என்னவாக இருந்தாலும் இன்றைய நிர்வாகவியலில் ஒன்றும் தெரியாதவர் என்று தெரிந்து புன்னகைத்துக்கொண்டேன். திரு.ராமசாமியைப் போன்றவர்கள் நிர்வாகவியலில் மிகமிகப் பழையபாணி தந்திரங்களைச் செய்பவர்கள். இலக்கிய உலகில் இந்த பழைய தந்திரங்களுக்கு இத்தனை மதிப்பு இருக்கமுடியும் என்பதே ஆச்சரியம்தான்.
இது இரண்டுவகையினரால் செய்யப்படும். கொஞ்சம் தாழ்வுணர்ச்சிகொண்ட, வயதான நிர்வாகிகள் இதைச் செய்வார்கள். படைப்புசக்தி குறைவான மூத்த ஊழியர்களும் இதைச் செய்வார்கள். யார் என்ன சொன்னாலும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே இவர்கள் ரகசியமாக கூகிளில் தேடுவார்கள். எந்த ஒரு விஷயத்தையும் கூகிளில் தனித்தனிச் சொற்களாக்கி தேடவேண்டும். முதல்பக்கத்தைத் தவிர்த்துவிட்டு அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்றால் அந்தக்கருத்துக்கு மாறான கருத்தைக் கண்டடையலாம். அந்த கருத்தில் உள்ள சில சிறிய தகவல்பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். எந்த கட்டுரையிலும் எந்தச்செய்தியையும் சற்றே பிழை என நிறுவிவிட முடியும். கூடவே சில மேலதிக கருத்துக்களை அறிந்துகொள்ளலாம். சில கட்டுரைகளின் தலைப்புக்கள் நூல்களின் பெயர்கள் ஆசிரியர்களின் பெயர்களும் அகப்படும்.
அதை தெரிந்துகொண்டதும் “இந்த தகவல் தப்பு, இதை இவர் சரிபார்த்திருக்கலாம்” “இதைப்பற்றி இன்னின்ன நூல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது” “இதையெல்லாம் எப்பவோ மறுத்துவிட்டார்கள்” என்றெல்லாம் அந்த கருத்து தனக்கு ரொம்ப முன்னாடியே தெரியும் என்றும் அதிலேயே ஊறி கிடப்பவர் என்றும் காட்டிக்கொள்ளலாம். அதற்கென்றே சில பாவனைகள் உண்டு. மேலே இருந்து கொண்டு கொஞ்சம் சலிப்புடன் பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்துவது, வழிகாட்டும் கருணையுடன் எதாவது சொல்வது, அல்லது திரு ராமசாமி செய்வதுபோல மேதைபோல தலையில் அடித்துக்கொள்வது, நையாண்டிசெய்வது.
நிர்வாகவியல் தெரிந்தவர்கள் இவர்களின் இந்த உத்திகளை தெரிந்து வைத்திருப்பார்கள். சம்பந்தப்பட்டவர் தானே செய்த சிந்தனை என்ன, அவரே முன்வைக்கும் கருத்து என்ன என்பதை வைத்து மட்டும்தான் அவர்களை மதிப்பிடுவார்கள். நிர்வாகவியலில் ‘என்ன புரிந்திருக்கிறது’ ‘எப்படி தொகுத்துச் சொல்லமுடிகிறது’ ‘எதை அசலாகச் சொல்கிறார்’ என்ற மூன்று மட்டுமே முக்கியமானவை. எவராலும் எல்லா துறையிலும் அப்படி எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் நம் சூழலில் எப்படியாவது படித்து ஒரு நல்ல பட்டத்தை பெற்றுவிட்டவர்கள் எல்லா துறையிலும் ஞானிகளாக தங்களை எண்ணிக்கொண்டு இளக்காரமும் அலட்சியமுமாக பேசி கேலிப்பொருளாகிக்கொண்டிருப்பார்கள்.
இவர் அந்த ரகம். இவருக்கு புனைவுக்கும் செய்திக்கும் வேறுபாடு தெரியாது என்பதை முந்தைய கட்டுரைகளைப் பார்த்தபோது தெரிந்தது. புனைவெழுத்தை வாசிக்க ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட வாசகனுக்குத்தெரிந்த புனைவின் இயல்புகள் கூட அறிமுகம் இல்லை. தானாகவே எதைப்பற்றியும் எதுவும் அசலாகச் சொல்லத்தெரியாது. எதையும் தொகுத்துச் சொல்லவும் தெரியாது. அனேகமாக எந்தக் கருத்தும் எந்தக் கொள்கையும் அடிப்படையாகப் புரிவதில்லை. ஆகவே இந்த கூகிள் வேட்டையை வைத்துக்கொண்டு நையாண்டியாக பேசி தன்னை ஒரு வகை மேதை என காட்டிக்கொள்ள முயல்கிறார். இதுவரைக்கும் பலரை நையாண்டி செய்து தலையிலடித்துக்கொண்டு பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார் .நானும் தேடிப்பார்த்தேன். ஒரு கட்டுரையில் கூட சொல்லப்பட்ட கருத்தை புரிந்துகொண்டு மறுப்பு தெரிவித்ததில்லை. “கூகிளிலே வேறுமாதிரி இருக்கிறது” என்பது தவிர சொல்வதற்கு ஒரு வரிகூட இவரிடம் இல்லை.இவருடைய கட்டுரைகளில் இவர் வகைவகையாகத் தன்னைப் புனைந்துகொள்வதைக் காண்பவர்கள் இவருடைய உளச்சிக்கல் என்ன என்று புரிந்துகொள்ளமுடியும். மகாபாரத அறிஞர், சம்ஸ்கிருத அறிஞர், அரசியல் ஆய்வாளர், வரலாற்று அறிஞர், கல்வியாளர், அறிவியலாளர், கணிப்பொறிமேதை, இலக்கிய ஆய்வாளர், ஆனால் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எளிய வாழ்க்கை வாழும் கர்மயோகி.இவர் தன்னைப்பற்றிச் சொல்லும் சரடுகளில் உங்களுக்குக்கூட ஒரு காலகட்டத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறது என நினைக்கிறேன்.
உண்மையில் தொன்மத்திற்கும் வீரகதைக்கும் வேறுபாடு தெரியாத ஒருவரிடம் நீங்கள் விளக்கமாகப் பேச ஆரம்பித்துவிடுவீர்களோ என்று பயமாகவே இருந்தது. ஒரு கலையில் அதன் தனித்தன்மையின் தோற்றுவாய்தான் அதன் தொடக்கமாகக் கொள்ளப்படுமே ஒழிய அதன் அடிப்படை இயல்பு தோன்றுமிடம் தொடக்கமாகக் கொள்ளப்படாது என்பதுகூட தெரியாமல் கலைகளைப் பற்றி பேசக்கூடாது என்ற அடிப்படை அடக்கம் கூட இல்லாதவரை ஒரு பொருட்டாகவே நீங்கள் எண்ணியிருக்கக் கூடாது. ஏனென்றால் எல்லா கலைகளும் அடிப்படையில் ஒன்றிலிருந்து ஒன்று என்று தோன்றி வளர்ந்திருக்கும். இதெல்லாம் அடிப்படைகள். இது தெரியாதவர் என்னதான் வாசிக்கிறார்? தமிழில் எழுதும் எவரைப்பற்றியாவது இவர் மதிப்புடன் ஒரு சொல் கூறியிருக்கிறாரா? தோரணையுடன் மதிப்பெண் அளிக்கிறார். அப்படி அளிக்க இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறது என காட்டும் ஒரு வரியாவது எழுதியிருக்கிறாரா? கேவலமான உரைநடையைப் பார்த்தால் துக்ளக் தவிர வேறேதும் வாசித்திருப்பதாகவே தெரியவில்லை.
இந்த வகையானவர்கள் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். அதை மேட்டிமைத்தனமாக காட்டிக்கொள்பவர்கள். என் நிர்வாகத்தில் இவர்களை ஒரு கூட்டத்தில் பேசவே விடமாட்டேன். பிறருடைய கவனத்தைச் சிதறடித்து ஒட்டுமொத்த கிரியேட்டிவிட்டியையும் இல்லாமலாக்கிவிடுவார்கள். இவர்களிடமிருக்கும் நெகெட்டிவிட்டி ஒரு பெரிய நோய். இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகுமென்றால் உங்களை அறியாமலேயே இவர்களின் இந்த மயிர்பிளக்கும் வேலையில் உங்கள் மனமும் ஈடுபடத் தொடங்கும். தகவல்களைக்கொண்டு கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதும், கற்பனைகளைச் செய்வதும்தான் உங்கள் சிருஷ்டிசக்தி. அது கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாகி இவர்களைப்போல நீங்களும் ஆவீர்கள். மெய்யான தகவல்பிழைகள் இருந்தால் அதைச் சொல்ல தகுதியானவர்கள் உங்களிடம் அதை உரியமுறையில் சொல்வார்கள். இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவேண்டாம். இனி ஒரு சொல்கூட இவர்களைப்பற்றிச் சொல்லக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.கத்திச் சலித்து அவர்களே ஓய விட்டுவிடுவதே ஒரே வழி. பொருட்படுத்தப்படவேண்டும் என்ற ஆசையால்தான் இந்தக்கூச்சல். நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் மெல்ல ஓய்ந்துவிடும். அடுத்த இலக்கை நோக்கிச் சென்றுவிடுவார்கள்.
எம்.ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்
நான் புனைவெழுத்தாளன். ஒரு தகவலில் இருந்து கருத்துக்களுக்கும் அதிலிருந்து உருவகங்களுக்கும் செல்பவன். மீண்டும் நினைவுகூர்கையில் உருவகங்களிலும் கருத்துக்களிலும் இருந்து தகவல்களுக்குச் செல்வேன். ஆகவே தகவல்களை அச்சு அசலாக நினைவில் சேர்ப்பதில்லை. கருத்துக்கள், உருவகங்களுக்கு ஏற்ப சிலசமயம் தகவல்கள் நினைவில் உருமாறியிருக்கும். என் வாசகர்கள் தகவல்களுக்காக அல்ல கருத்துக்களுக்காகவும் உருவகங்களுக்காகவும்தான் என்னை வாசிக்கிறார்கள்.
இந்தச் சிக்கல் எல்லா எழுத்தாளர்களிடமும் இருக்கும் ஒன்று. ஆகவே எனது பிழைகளை உரியமுறையில் திருத்துபவர்களிடம் எப்போதும் மதிப்புடன் இருக்கிறேன். ஆனால் கருத்துக்களை புரிந்துகொள்ளமுடியாத ஒரே காரணத்தால் தகவல்களை மிகையாக தேடிக்கொண்டிருப்பவர்களையும், அதை மட்டும் கொண்டு போலிமேட்டிமைகளை நடிப்பவர்களையும் அடிப்படைகளையே அறிந்திராதவர்களையும் பொருட்படுத்துவதில்லை. என் நேரத்தை வீணடிப்பார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்லியே வாழ்க்கை வீணாகும். நீங்கள் சொல்வதுபோல தொன்மம் வேறு வீரகாதை வேறு என ஆனா ஆவன்னாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.
இனி ஒருபோதும் ஒரு சொல்லுக்குக்கூட இத்தகையவர்களை கருத்தில் கொள்ளப்போவதில்லை. நன்றி.
ஜெ