அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அன்புள்ள ஜெ
அபி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் விருது பாராட்டுக்குரியது. விருதுகள் தகுதியானவர்களைத் தேடிச்செல்வதைக் காணும்போது ஒரு பெரிய நிறைவு உருவாகிறது.ஏனென்றால் அது அடிக்கடி இங்கே நடப்பதில்லை. ஒரு விருதின் தேர்வுக்குழுவில் தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளில் இருப்பவர்கள் குறைவு. அது இன்று கொஞ்சம் மாறிக்கொண்டு வருகிறது. அதேசமயம் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகள் இன்றைக்கும்கூட கவிஞர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.
அபி தமிழின் தனித்துவமான கவிஞர். அவருடைய உலகம் மிகவும் அகவயமானது. அவரை நான் வாசித்தது ஒரு குறிப்பிட்ட மனநிலையில். அன்றைக்கு நான் ஓஷோவின் தீவிர ரசிகன். ஓஷோ சொல்லி குர்ஜீஃப் , கலீல் கிப்ரான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு நண்பர் எனக்கு அபி கவிதைகளைக் கொடுத்தார். அவர்களெல்லாம் உலகத்தை நோக்கி பொதுவாகப் பேசுகிறார்கள். கவிஞன் மட்டுமே உனக்காகப் பேசுகிறான். அவர்களின் வரிகளை குர்ஜீஃப் இப்படிச் சொல்கிரார் என்று நீ ஞாபகம் வைத்திருப்பாய். கவிஞனின் வரிகள் உன்னுடைய வரிகளகாவே ஆகிவிடும் என்று சொன்னார்
அபி கவிதைகளை வாசிக்கும் அந்த வயதில் நான் ஆழமாக வாசிப்பவன் அல்ல. அது எனக்கு இன்றைக்குத்தெரிகிறது. ஆனால் அன்றைக்கு அந்த வாசிப்பு எனக்கு மிகப்பெரிய திறப்புகளை அளித்தது. பல வரிகளை நான் அன்றைக்கு மனசுக்குள் சொல்லிக்கொண்டதுண்டு. இன்றைக்கு அபி அந்த கொந்தளிப்பான நாட்களின் நினைவாக இருக்கிறார். அவருக்கு விருது கிடைத்திருப்பது இப்போது அவரை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்ள உதவுவது.
தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?
கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்
போன்ற வரிகள்தான் அவருடைய சிறப்பு. சாத்வீக கனம் என்ற சொல்லை நான் இப்போது கூகிள் இட்டு தேடித்தான் அவருடைய கவிதைகளைக் கண்டுபிடித்தேன். நிமிஷம் நாறும் நாட்கள் என்று நான் ஒரு அமெச்சூர் கவிதை எழுதியதுமுண்டும்
அபி அவர்களுக்கு வணக்கம்
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
அபி அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டபின் அவருடைய கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த வாசகன் நான். என்னுடைய பிரச்சினை அல்ல அது. அவரைப்பற்றிய பேச்சே நம் சூழலில் இல்லை என்பதுதான் காரணம். நான் நீங்கள் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசிக்கவில்லை. [தமிழில் அனேகமாக எல்லா நல்ல கவிஞர்களைப் பற்றியும் எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன். கவிதைபற்றி தமிழில் நிறைய எழுதியவரும் நீங்கள்தான். நீங்கள் எழுதியபின்னாடிதான் நான் சு.வில்வரெத்தினத்தை அடையாளம் கண்டுகொண்டேன்] அபியின் கவிதைகளை வாசிக்க இந்த விருது நல்லதொரு காரஅமாக அமையட்டும்
செந்தில்ராஜ்
அன்புள்ள ஜெ,
அபியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரை புதியதாகக் கண்டடைகிறேன். அதற்கு இந்த விருதுக்கு நன்றி சொல்லவேண்டும். அவருடைய கவிதைகள் தன்னைப்பற்றி தன்னிடமே பேசிக்கொள்ளும் மௌனமான சொற்கள் போலிருக்கின்றன. சாதாரணமாக தெரிகின்றன. ஆனால் சில சொல்லாட்சிகள் கூர்மையாக இருக்கின்றன. ஒரு பொருளை கவிழ்த்துப்போட்டால் அது முற்றிலும் வேறு பொருளாக ஆகிவிடும் என்று தேவதச்சன் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பேசும்போது சொன்னார். அதேபோல சிலவரிகளை அவர் முற்றிலும் வேறுபாணியில் இணைக்கிறார். அந்த வரி வேறாக ஆகிவிடுகிறது. அந்த வரியிலிருந்து அக்கவிதையின் மனநிலையை எளிதாகச் சென்றடைய முடிகிறது
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைபொழுதை விடுவித்து
காத்திருக்கிறேன்
இந்தவரியை ஒரு சூஃபி கவிதையின் வரிபோல வாசிக்கலாம். ஆனால் அகாலத்திலிருந்து இந்த மாலைப்பொழுதை விடுவித்து என்றவரி முழுக்கமுழுக்க நவீனக்கவிதை
அபி அவர்களுக்கு விருது அளித்ததற்கு நன்றி
விஸ்வநாத்