வணங்கான் , கதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

வணங்கான் கதை வாசித்து நெகிழ்ந்தேன். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிரின் அவுட் எடுத்து அனுப்பி வைத்தேன். அவர்களும் வாசித்து உணர்ச்சியுடன் போன் செய்தார்கள். உங்களை ஒருநாள் அப்பாவை சந்திக்கவைக்க வேண்டும். அப்பாவுக்கு நேசமணி அய்யாவை தெரியும். அவர் சொன்னார் நீங்கள் வணங்கானில் எழுதிய சம்பவம், அதாவது யானையிலே ஏற்றியது உண்மையிலே நடந்தது என்றார். நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?

நன்றி, வணக்கம்

சேம் பெஞ்சமின்

அன்புள்ள சேம்,

அது குமரிமாவட்டத்தில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, ஒரு தொன்மக்கதை மாதிரி. எனக்கு அதை விரிவாகச் சொன்னவர் வேதசகாய குமார். மைய நிகழ்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு கதையை வேறு சூழலில் வேறு மனிதர்களால் மறு ஆக்கம் செய்தேன். இந்த வரிசையில் கதைகளின் பொது இயல்பே அவற்றின் மையம் உண்மையானது, அவை அமைந்திருக்கும் சூழலும் கட்டமைப்பும் புனைவு என்பதுதான்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

“அறம்” ஒரு மிகச் சிறந்த அனுபவம்…. வார்த்தைகள் வழியாக ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை உருவாக்க முடியும் என்று முதல் முறையாக உணர்ந்தேன்..
உங்கள் எழுத்தைப் படிப்பது ஒரு சுகானுபவம்…. இது வரை தமிழ் சிறுகதைகளைப் படிக்காத என் நண்பன் “அறம்” படித்துவிட்டுச் சொன்னது

“என்னால இப்படி எழுதியுருக்கான்…கொன்னுட்டான்ல”

நன்றி
ராஜேஷ்

அன்புள்ள ஜே,

நீங்கள் இந்த வரிசையில் எழுதிய நான்கு கதைகளிலே என்னை அதிகமாக கவர்ந்தது சோற்றுக்கணக்குதான். காரணம் அதிலே உள்ள அனுபவத்துடன் நானும் என்னை காணமுடிந்தது. எனக்கும் வாழ்க்கையில் அந்தமாதிரியான நிலைமைகள் வந்தது உண்டு

ஆனால் மீண்டும் வாசிக்கும்போது மத்துறு தயிர்தான் மிகச்சிறப்பானது, நம்பர் ஒன் என்று தோன்றுகிறது. மற்றகதைகளைப்போல இது நேராக இல்லை. இதிலே உள்ள முக்கியமான அம்சமே அந்த பயங்கரமான துக்கம்தான். அது ராஜத்தின் துக்கமா இல்லை பேராசிரியரின் துக்கமா தெரியவில்ல. ஆனால் துக்கம் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது. இன்னாருக்குள்ள துக்கம் என்று இல்லாமல் எல்லாருடைய துக்கமாக நின்றுகொண்டிருக்கிறது. வெறும் மனித துக்கம் அது. அந்த துக்கத்தை கற்பனைசெய்து மீண்டும் கதையை வாசித்தபோது மனசு கலங்கிப்போயிற்று. நெடுநேரம் அந்தக்கதையே நினைத்துக்கொண்டிருந்தேன்.

நன்றி

அருண் கே

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் நலமா?
தங்கள் இணைய தளத்தில் சமீபத்தில் வெளியான வணங்கான் கதை மிகவும் நன்றாக இருந்தது. ஒரு சமூக மாற்றத்தின் சித்திரத்தை இவ்வளவு அழுத்தமாக சிறுகதையில் காட்டியிருப்பது பிரம்மிப்பூடுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு வணங்கான் பிறக்கத்தான் எவ்வளவு விஷயங்கள் கூடி வர வேண்டியிருக்கிறது? பிறக்கும்போதே ஒருவன் தீயுடன் பிறக்க வேண்டியிருக்கிறது. அவனுக்கு அதிகப்படியான திறமைகள் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டம் கை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே மேலே சென்றவர்கள் கை தூக்கி விட வேண்டியிருக்கிறது.பின் புலத்தில் பெரிய சமுதாய மாற்றங்கள் எதோ ஒரு வகையில் உதவ வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உயிருக்கும் அஞ்சாத துணிச்சல் வேண்டியிருக்கிறது. switch போட்டது போல் சமுதாயத்தை மாற்றி அமைத்து விடலாம் என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு அசட்டு தனங்கள்!

மிகுந்த அன்புடன்,
ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்

உண்மைதான்

ஆனால் ஒருவன் தன்னை உணர்ந்து எழுந்துவிட்டால் அவை அனைத்தையும் பணிவாக கொண்டுவந்து அவன் முன் சமர்ப்பிக்கிறது வரலாறு

ஜெ

அன்புள்ள ஜெமோ,

சாதிக் கொடுமையைப் பற்றி இவ்வளவு உக்கிரமாய் ‘வணங்கான்’ல் தாங்கள்
படைத்திருந்தது போல், உங்கள் எழுத்தில் (நான் படித்தவரையில்) என்
நினைவுக்கு எதுவும் வரவில்லை.

அமெரிக்காவில் ஏகபோக வசதிகள் கொண்டாடினாலும் அமோகமாய் சாதிச்
சங்கங்கள் அமைத்து வாழும் நம்மவர் மத்தியில் ‘வணங்கான்’ போன்ற படைப்புகள்
மிக்க அவசியமானதாகும்.

அறம், சோற்றுக்கடன், வணங்கான் – போன்ற செறிந்த இலக்கியங்களை சரமாரித்
தொடுக்கும் உங்களது அபாரப் படைப்பூக்கம், தொடர்ந்து இப்படியே பல்லாண்டு
காலம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே அலாதியாய்
இருக்கிறது.

வந்தனங்கள் !

அன்புடன்,
சண்முகம்.

சண்முகம்,

நன்றி

சாதிக்கு பல முகங்கள். அடக்குமுறைக்கான கருவி அடக்குமுறையை ஒன்றுபட்டு வெல்வதற்கான அடையாளம் நம்மை நாமே குறுக்கிக்கொள்வதற்கான வழி – எதை தேர்வுசெய்கிறோம் என்பது நம் தேர்வு

ஜெ

முந்தைய கட்டுரைநிர்மால்யாவுக்கு விருது
அடுத்த கட்டுரைஅவதூறு, கடிதம்