கற்காலத்து மழை-7

ஒரு பயணத்தின் உச்சம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒர் இடம். பலசமயம் அது தானாக அமைவதுமுண்டு. மத்தியப்பிரதேசப் பயணத்தில் இயல்பாகவே பிம்பேட்கா குகைகள் உச்சமாக அமைந்தன. இந்தப்பயணத்தில் ரத்னகிரியை உச்சமென எண்ணியிருந்தோம். குடோப்பி அவ்வாறாக ஆகியது. ஆனால் அதற்குத் தகுதியான இடம்தான் அது.

 

குடாப்பி வருங்காலத்தில் இன்னும் விரிவான ஆய்வுக்கு உள்ளாகும் என நினைக்கிறேன். பாறைச்செதுக்கு ஓவியங்கள் அப்பகுதியெங்கும் இருக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டிருக்கின்றன. அங்குள்ள பாறைச்செதுக்கு ஓவியங்களை பார்க்கப்பார்க்க புதியதாக ஏதேனும் தெரிந்துகொண்டே இருக்கிறது. அவற்றை தொகுத்து எழுதிவிட முடியாது. அவை அளிக்கும் ஒட்டுமொத்த உணர்வே எனக்கு முதன்மையானது என்று தோன்றியது.

 

இங்குள்ள பாறைச்செதுக்கு ஓவியங்களில் வேட்டைவிலங்குகள், மனித உருவங்கள் பல உள்ளன. வேட்டையாடும் புலி அரிதான ஒரு செதுக்கு. அதேபோல பறவையின் காலடி வடிவங்கள் இங்குள்ளன. அவற்றை அடையாளம் காண்பது ஓர் உளஎழுச்சியூட்டும் தருணம். பறவைக்காலடிகள் எவ்வகையில் முக்கியமானவை என்று தெரியவில்லை. அவற்றுக்கு எதேனும் வானியல் உட்குறிப்பு இருக்கலாம்

 

பொதுவாக இவ்வடிவங்களைப் பற்றிய ஊகங்களில் இவற்றை மூன்று அடிப்படைகளில் புரிந்துகொள்கிறார்கள். 1. இவை குலக்குறிகள். எந்தெந்த குலங்கள் இங்கே வந்து வழிபட்டன என்பதைக் குறிக்கின்றன 2. இவை தெய்வ உருவங்கள். இவற்றுக்குரிய தொன்மங்கள் முன்பு இருந்திருக்கலாம். [உதாரணமாக மீன் தொன்மம் எப்படியோ மச்ச அவதாரத்தின் முன்வடிவமாக இருக்கலாம்] . 3. நாம் இன்று அறியாத வானியல் வடிவங்கள் இவை. நாம் இன்று கரடி, முழக்கோல் என்றெல்லாம் விண்மீன்களை அடையாளப்படுத்துவதுபோல இவர்களும் அடையாளப்படுத்தியிருக்கலாம்.

இங்கு ஒரு சிறிய குழி போன்ற அமைப்பு உள்ளது. அதன் பக்கவாட்டில் கைவிட்டு நோக்கினால் செதுக்கு ஓவியங்கள் உள்ளன. அந்தக்குழிக்குள் அப்போது நீர் நிறைந்திருந்தது. இது இந்த இடம் சடங்குகளுக்கானது என்பதை காட்டுகிறது என்கிறார்கள். ஏனென்றால் இந்த செதுக்கோவியங்களை கண்ணால் எளிதில் பார்த்துவிடமுடியாது.

 

இன்னொரு குறிப்பிடத்தக்க ஓவியம் இரட்டைமீன்கள். அந்த மீன் வடிவை நீரை இறைத்து இறைத்து தேற்றி எடுக்க அரைமணிநேரம் ஆகியது. அது கடந்தகாலத்திலிருந்து திரண்டுவந்தது. இரண்டு மீன்வடிவுகள் உள்ளன. ஒன்று மிகப்பெரியது. ஒரு சிற்பி அதைச்செதுக்கியிருக்கலாம் என்பதற்கான எந்தத் தடையமும் அற்றது.இரண்டு திசைகளிலாக வரையப்பட்டிருக்கும் இந்த மீன்கள் உலகமெங்கும் வெவ்வேறு உருவமாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. நம்முடைய பழைய பஞ்சாங்கங்களில் மீனராசிக்கு இப்படிப்பட்ட மீன்வடிவங்கள்தான்.குடோப்பியில் இரட்டை மீன்களின் வடிவங்கள் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் சரியாகப் பார்க்கவேண்டும் என்றால் இருபதடி உயரத்திலாவது நின்றிருக்கவேண்டும்.

 

 

Ichthys

மீன் வடிவம் குறியீடாகப் பயன்படுத்தப்படுவது உலகமெங்கும் உள்ளது. Ichthys எனப்படும் ஒற்றைமீன் வடிவம் இரண்டு வளைந்த கோடுகளால் ஆனது. தொன்மையான அராபிய,ஐரோப்பிய குலக்குழுச் சின்னம் அது. பின்னர் கிறித்தவ மதத்தில் கிறிஸ்துவை, அல்லது வரவிருக்கும் மீட்பரைக் குறிக்கும் ரகசிய அடையாளமாக ஆகியது. Pisces எனப்படும் இரட்டை மீன் கிரேக்க வானியலின் பன்னிரண்டு ராசிகளில் Zodiac ராசியின் அடையாளம். நம்முடைய மீனராசி. சூரியனின் நகர்வை ஒட்டி இது கணிக்கப்படுகிறது.

 

இந்த இரட்டைமீனுக்கும் சீனாவின் யிங்-யாங் வடிவத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. முடிவற்ற சுழற்சி, ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்ளுதல் போன்ற குறியீட்டு அர்த்தங்கள் கொண்டது மீனமாதத்திற்கு மீன் குறியீடு இருப்பதே அதனால்தான் என சிலர் சொல்வதுண்டு. பகலும் இரவும் மிகச்சமமாக இருக்கும் மாதம் இது. இருளும் ஒளியும் ஒன்றையொன்று .சமன் செய்கின்றன. இங்கே அந்த மீன்வடிவம் எந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் கரடுமுரடாக வரையப்பட்டுள்ளது. மிகத்தொன்மையான வரைவாக இருக்கலாம்.

இங்குள்ள இவ்வடிவம் இந்த இடத்தைப்பற்றி இன்னொரு எண்ணத்தை உருவாக்குகிறது. இது ஒரு திறந்த மலையுச்சி. விண்மீன்களை நன்கு பார்க்கமுடியும். அன்றைய வழிபாட்டில் வானியல் ஒரு முக்கியமான இடத்தை வகித்திருக்கலாம் என நினைக்கிறேன். தெய்வங்களுக்கும் வானின் மீன்களுக்குமான உறவு மிக அணுக்கமானது, சிக்கலானது. இங்குள்ள பிற வடிவங்களுக்கும் வானியலுக்குமான தொடர்பு ஆராயத்தக்கது

 

குடோப்பியின் இன்னொரு ஆர்வமூட்டும் வடிவம் வண்டு. இந்திய குறியீட்டியலில் அனேகமாக இதற்கு இடமே இல்லை. ஆனால் எகிப்தியக் குறியீட்டியலின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று இது. அது இங்கே எப்படி வந்தது? அதன்பொருள் என்ன? இந்த வண்டுவடிவத்தை பற்றி ஆய்வாளர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள்

Pisces

நான் எண்ணிக்கொண்டது நீலகிரியின் தொதவர்களின் மொழியில் நிறைய எகிப்தியச் சொற்கள் இருப்பதாகக் கூறப்படுவதைப் பற்றி. அதைப்பற்றி பிலோ இருதயநாத் எழுதி வாசித்திருக்கிறேன். ஆக்டோவியோ பாஸ் கூட ஒரு கவிதையில் அதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையிலேயே எகிப்திற்கும் நம் தொல்பழங்குடிகளுக்கும் ஒரு பண்பாட்டுத் தொடர்பு இருந்ததா என்ன?

 

பாறைச் செதுக்கு ஓவியங்களை உலகெங்கும் இப்போது கண்டெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.. உண்மையில் இன்று இவற்றை பற்றி உருவாகியிருக்கும் புரிதலுக்கு இன்றைய செய்தி -காட்சித் தொழில்நுட்பத்திற்கு  நாம் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம் புகைப்படக்கலை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இவை பதிவு செய்து பரிமாறப்படுவது இயல்வாதாயிற்று .ஆனால் சென்ற இருபதாண்டுகளில் புகைப்படக்கலையும் இணையமும் இணைந்து உலகெங்கிலும் இருக்கும் குகை ஓவியங்களையும் பாறைச்செதுக்கு ஓவியங்களையும் ஒற்றை  இடத்தில் குவிக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் நினைத்த நேர்த்தில் பார்க்கவும், ஒப்பிடவும் வழிசெய்கின்றன.

yin yang

 

விளைவாக புதிய புதிய தரப்புகள் உருவாகின்றன. பல்வேறு ஊகங்கள் எழுகின்றன. எல்லா ஊகங்களும் சற்றே பிழையானவை, எல்லா ஊகங்களும் சற்றே சரியானவை. ஆனால் இந்த விவாதம் மெல்லமெல்ல ஒரு முழுமையான சித்திரத்தை நோக்கி நம்மைக் கொண்டுசெல்லும் என்றே நான் நினைக்கிறேன். இரண்டு கிளைகளாக இந்த ஆய்வு முன்செல்கிறது. ஒன்று தொன்மங்களையெல்லாம் இணைத்துக்கொண்டு கற்பனைகளினூடாகச் செல்லும் பயணம். ராஜமாணிக்கம் அதில் ஈடுபாடுள்ளவர். இன்னொன்று எந்தவகையான கற்பனைக்கும் இடம்கொடாமல் நடைமுறை சார்ந்தே ஆராயும் பார்வை. இரண்டுமே முக்கியமானவை, இணைமீன்கள் போல ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்பவை

 

இப்பாறை ஓவியங்களைப் பார்க்கையில் மானுட இனம் இன்று பல்வேறு நாகரிங்களால் நூற்றுக்கணக்கான நாடுகளாகவும் பல்லாயிரக்கணக்கான் இனக்குழுக்களாகவும் பிரிந்து அடைந்துள்ள பண்பாட்டுப் பன்மைத்தன்மை என்பது சென்ற ஆறாயிரம் ஆண்டுகளாக உருவாகிவந்தது மட்டுமே என்று எண்ணத்தோன்றுகிறது. அதற்கு முன்னர் இங்கு பிறிதொரு மானுடப்பண்பாடு இருந்தது.. அவர்கள் கற்கால மானுடரிலிருந்து பரிணாமம் அடைந்து வந்து அந்தப் பண்பாட்டை உருவாக்கினார்கள். அது உலகளாவியதாக இருந்திருக்கிறது

அது எப்படி இயலும்? ஒரு காலத்தில் உலகமெங்கும் இருக்கும் மனிதர்கள்  ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். ஆய்வாளர் சொல்வதுபோல இறுதிப்பனியுகத்தில் அவர்கள் கடல்கள்மேல் நடந்தே உலகம் எங்கும் சென்றிருக்கலாம். ஜாரேட் டையமண்ட் செவ்விந்தியப் பழங்குடிகள் சீனாவிலிருந்து சென்றவர்கள் என்கிறார். உலகையே அவர்கள் கால்களால் அளந்திருக்கலாம். அவர்கள் உருவாக்கிய அனைத்துச் சிந்தனைகளும் உலகமெங்கும் பரவி வளர்ந்திருக்கலாம்

 

அத்துடன் இயற்கையுடன் அவர்கள் கொண்டுள்ள உறவால் அவர்களுக்கு பொதுவான சில புரிதல்களும் உள்ளுணர்வுகளும் கிடைத்திருக்கலாம். அவற்றை அவர்கள் அடையாளங்களாக குறியீடுகளாக மாற்றியிருக்கலாம். இக்குறியீடுகள் அனைத்துமே அவர்களின் கனவுகளிலிருந்து எழுந்தவை, அக்கனவுகளைப் பரிமாறிக்கொள்ளவே அடையாலங்கள். அவ்வாறு பரிமாறிக்கொள்வதனூடாக அவர்கள் ஒற்றை மானுடமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.

அந்த  மானுட பண்பாடு இன்று நாம் அறியும் இந்த மானுட பண்பாட்டுக்கு அடியில் உள்ள ஒரு அடித்தளம். அமிழ்ந்து மறைந்துவிட்ட ஒன்று. மண்ணில் அமிழ்ந்திருக்கலாம். நினைவில் அமிழ்ந்திருக்கலாம். மொழியில் கனவில் அமிழ்ந்து கிடக்கலாம். நம் பண்பாட்டுக்குள் ஏதேதோ வடிவில் உறையலாம். நாம் இன்றுவாழும் நகர்களுக்கு அருகேதான் குகையோவியங்களுடன் மலைகள் காட்டுக்குள் மறைந்து நின்றிருக்கின்றன

 

இன்று நாம் வாழும் பண்பாட்டுக்கும் அந்தப் பண்பாட்டுகும் முதன்மையாக ஒரு பெரிய வேறுபாடு இருக்கலாம் என்று தோன்றுகிறது அது இயல்பான உயிர்ப் பன்மையிலிருந்து குவிந்து குவிந்து ஒற்றைத்தன்மை நோக்கி வந்தது. இன்றிருக்கும் பண்பாடு ஒற்றைத்தன்மையிலிருந்து பிரிந்து பிரிந்து பன்மை நோக்கி செல்கிறது..அன்று ஒருவரோடொருவர் பேசிப்பேசி ஒன்றானார்கள். எப்போதோ தங்கள் தனித்தன்மைகளை பேணிக்கொள்ள மொழியைப் பயன்படுத்தலானார்கள்.

ஆச்சரியமாக உள்ளது, மொழிகளால் மானுடம் பிரிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. நாமறிந்த வரலாற்றுக்காலம் முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை அது நீண்டது. பழங்காலத்தில் வளர்ச்சியுற்ற மொழிகள் இருக்கவில்லை. மொழிகளே சில ஒலியடையாளங்களின் தொகுப்பாக இருந்திருக்கலாம். மொழிகள் வளருந்தோறும் மொழிபெயர்க்க கடினமானவை ஆகின்றன.மொழிகள் வளர வளர இலக்கணம் சிக்கலானதாக ஆகிறது. அதை இன்னொருவர் கற்பது கடினமாக ஆகிறது. அப்படிப் பார்க்கையில் பாபேல் கோபுரத்தைக் கட்டிய மானுடரை கடவுள் பலமொழிகள் பேசவைத்து ஒருவரோடொருவர் தொடர்புற முடியாதபடிச் செய்தார் என்னும் அராமியத் தொன்மம் புதிய பொருள் கொள்கிறது.

 

அதேபோல மானுட வரலாற்றை பல யுகங்களாகப் பகுக்கும் இந்தியத் தொன்மமும் அர்த்தம்கொள்கிறது. ஒரு யுகம் ஒரு பேரழிவுடன் முடிவடைகிறது. அதிலிருந்து விதைகள் போல கொஞ்சமே எஞ்சுகின்றது. அவற்றிலிருந்து அடுத்த யுகம் முளைக்கிறது. இன்று சமூகப்பரிணாமவியலைக் கொண்டு குறைந்தது இரண்டு யுகங்களாக மானுட வரலாற்றைப் பகுக்கமுடிகிறது. நமது சென்ற யுகம் பனியால் அல்லது வேறேதோ சூழியல் சிதைவால் அழிக்கப்பட்டு எஞ்சியது மீண்டும் முளைத்தது. நாம் இன்று வாழும் இப்பண்பாடு அப்படி அழியக்கூடுமா?

சென்ற ஐம்பதாண்டுகளாக மானுடப்பண்பாடு மீண்டும் பன்மைத்தன்மையை இழந்து மீண்டும் குவிந்து குவிந்து ஒற்றைத்தன்மையை நோக்கி செல்லத்தொடங்கியிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பம் ஆண்டுக்கு ஆண்டு இரண்டுமடங்கு விசையுடன் செய்துகொண்டிருப்பதே உலகை ஒன்றாக்குவதைத்தான். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மானுட இனம் மீண்டும் முற்றிலும் ஒற்றைப் பண்பாட்டை சென்று அடையக்கூடும். அன்று இப்படி மானுடம் பல பண்பாடுகளாகச் சிதறி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றும் போரிட்டும் வாழ்ந்தது என்பதே திகைப்பூட்டும் செய்தியாக இருக்கக்கூடும்

 

நமக்கு முந்தைய பண்பாட்டு யுகத்தில் இவ்வாறு ஒருமை உருவாவதற்கான காரணங்களில் ஒன்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும். இணைந்து உயிர் வாழவும் விழைந்தனர் என்பதாக இருக்கலாம். ஒருவர் பிறிதொருவரிடமிருக்கும் பொதுத்தன்மையை கண்டடைய ஆர்வம் காட்டியதாக இருக்கலாம். ஆனால் அதைவிடவும் முக்கியமானது மொழியை விட அடையாளங்களுக்கு இருந்த முக்கியத்துவம். மொழி பகுக்கிறது அடையாளங்கள் தொகுக்கின்றன என்று சொல்லலாமா ?

ஓர் அடையாளம் இன்னொரு பண்பாட்டில் எளிதில் கடத்தப்பட கூடியது. அதை மொழி பெயர்க்க வேண்டியதில்லை. பிறர் அவ்வடையாளத்தை சிறு மாற்றங்களுடன் தங்களுடையதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆகவேதான் அடையாளங்கள் ஊசிநூல் போல குறுக்கும் நெடுக்குமாக ஓடி மானுடத்தை ஒன்றெனத் தைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

 

பாறைச்செதுக்குகளிலும் பாறை ஓவியங்களிலும் காணப்படும் பல்வேறு அடையாளங்கள் உலகம் முழுக்க ஒன்றாக இருப்பதைப் பார்க்கையில் நாம் அந்த பண்பாட்டை கற்பனை செய்கிறோம். ஆனால் அது சிறு சிமிழ்நீரைக்கொண்டு ஒரு கடலை கற்பனை செய்வதைப்போல. இந்த வாய்ப்பு ஆய்வாளர்களை விதவிதமான கற்பனைகளில் தள்ளுகிறது. ஆய்வு புனைவை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஆச்சரியமாக ஆய்வுக்குரிய பல வழிகளை புனைவு திறக்கவும் செய்கிறது. ராஜமாணிக்கம் அதை புனைவுண்மை என்கிறார். அதாவது கற்பனைசெய்வதனூடாகச் சென்றடையும் உண்மை.

அதில் பலவகையான தாண்டிக்குதித்தல்கள்.வெலிகோவ்ஸ்கி [ Immanuel Velikovsky] எரிக் வேன் டேனிகன் [Erich von Däniken] போன்றவர்கள் இந்த பொதுத்தன்மை மண்ணுக்கு விண்ணிலிருந்து வந்தது என்கிறார்கள். அயல்கோள் உயிர்கள் மண்ணுக்கு அளித்த கொடை என மானுடப் பண்பாட்டை விளக்குகிறார்கள். அவ்வாறன்றி இந்த பொதுத்தன்மை அன்றிருந்த பல்லாயிரம் இனக்குழுக்கள் அனைத்துக்கும் ஒரேயடியாக தோன்றியிருக்க முடியாதென்கிறார்கள்

 

ராஜமாணிக்கமே பாறைச்செதுக்கு ஓவியங்களின் அளவை வைத்துப் பார்க்கையில் அவை விண்ணிலிருந்து பார்ப்பதற்கான அடையாளங்கள் என்று கொள்வதில் பிழையில்லை என்று வாதிட்டார். விண்ணிலிருந்து அவற்றை நோக்கினார்களா என்பதல்ல கேள்வி, விண்ணிலிருந்து அவை நோக்கப்படவேண்டும் என அவற்றை வரைந்தவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பதுதான் என்று அவர் சொன்னார்.

வெலிகோவ்ச்கி

’உடனடி அறிவியல்தாகிகள்’ இவ்வெண்ணங்களை இகழ்ந்து மறுக்கக்கூடும். ஆனால் கார்ல் சகன் அவருடைய Broca’s Brain என்னும் நூலில் Night walkers and Mystery mongers என்னும் அத்தியாயத்தில் இத்தகைய ஆய்வுகள் எவ்வாறெல்லாம் அறிவியலின் எல்லைகளை விரித்துச்செல்கின்றன என்று சொல்கிறார். குறிப்பாக இதைப்போன்ற பண்பாட்டு ஆய்வுக்களங்களில் இவற்றுக்கு முக்கியமான இடம் உண்டு.

 

விண்ணிலிருந்து வந்திறங்கியது என்பது சற்று எல்லை மீறிய கற்பனை என்றாலும் இந்த பொதுத்தன்மை என்பது வெறும் தற்செயலே என்று வாதிடுவது இன்னொரு எல்லையிலிருக்கும் மிக மிக கட்டுப்படுத்தப்பட்ட பார்வை. இவ்விரு எல்லைக்குள் இந்தப் பாறைஓவியங்களை புரிந்துகொள்வது அவசியம். இப்போதைக்கு நாம் செய்யக்கூடியது எவர் என்னென்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பது மட்டுமே.

எரிக் வான் டேனிகன்

இப்பாறை படிவுகளில் முழுமையாக் நன்கு பார்பதற்கு கோடை காலத்தில் செல்லவேண்டும். பாறைச் செதுக்குகளின் பள்ளங்களிலிருக்கும் மண்ணை அகற்றிவிட்டு அவற்றில் வெண் சுண்ணம் போன்ற எதையாவது தூவி அவற்றை வடிவு துலங்க செய்ய வேண்டும். அதன்பிறகு மேலிருந்து புகைப்படம் எடுத்து அதை சுருக்கி பார்க்கவேண்டும். அப்போதுதான் முழுமையான வடிவம் கிடைக்கும்.

 

அந்த இந்த இரட்டைக்கழுகு திரும்பி வரும்போது மேலும் வியப்பூட்டுவதாக மாறிக்கொண்டிருந்தது. உலகம் முழுக்க உள்ள அந்த அடையாளம் ஆதிக்கத்தின், போரின் குறியீடு. இன்று எந்த மர்மத்தையும் ஒரு சதியாக மாற்றி பார்ப்பதுதான் பொதுவான ஊடக வழக்கம். மேசன்களின் சூழ்ச்சிவலை எனும் கருத்து இன்று புகழ்பெற்றது. உலகெங்குமுள்ள அடிப்படையான தொன்மையான குறியீடுகள் அனைத்தையும் அவர்கள் மேசன்களுடன் இணைத்துவிடுகிறார்கள். மேசன்களின் அமைப்பு இங்கு வேறு வகையில் நிலவியபோது அவர்கள் இந்த அடிப்படைக் குறியீடுகளை பயன்படுத்தினார்கள் என்பது ஓர் உண்மை

 

இந்த உலகம் நாமறியாத, ஆனால் நம்மால் அறிந்துவிடக்கூடிய, மர்மங்கள் மேல் கட்டமைக்கப்பட்டது என்பதைப்போல நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் வேறேது உள்ளது?

[மேலும்]

ROCK CARVINGS AT KUDOPI –NORTH OF GOA – 22

 

 

முந்தைய கட்டுரைமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33