ஸ்ரீபதி -கடிதங்கள்

கலை வாழ்வுக்காக

அன்புள்ள ஜெ

 

நலமே விழைகிறேன்.

 

ஸ்ரீபதி குறித்து மருத்துவமனையில் உங்களைச் சந்திக்கும் போது பேசிக் கொண்டோம்.

 

இரண்டாயிரத்தின் துவக்கத்தில் உங்களை முதம்முறையாக தக்கலை அலுவலகத்தில் சந்தித்தேன். ஊட்டி முகாம் பற்றி குறிப்பிடடீர்கள். மு.தளையசிஙகம் படைப்புகள் சார்ந்த முகாம். என் தம்பி செந்தில்குமார் அப்போது கோவையில் சுமஙகலி கேபிள் விஷனில் பொறியாளனாக பணிபுரிந்துக் கொண்டிருந்தான். முகாமில் கலந்துக்கொள்ள உங்களிடம் அனுமதி பெற்று மூன்று நாட்கள் முன்னதாக கோவை வந்தேன். நாஞ்சில் சாரையும் அவரது அலுவலகத்தில் முதன்முறையாகச் சந்தித்தேன். ஸ்ரீபதியையும்…

 

எளிய ஒரு வாசகனாக உருவான தொடர்பு  நட்பாக பரிணமித்தது. ஏறக்குறைய சமவயது…மிக இயல்பாக உளப்பூர்வமாக யாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள முடிந்தது….ஆரண்யம் சிற்றிதழில்….ஸ்ரீயின் பெருந்தச்சன்…ஷேக்ஸ்பியர் இன் லவ்….திரைக்கதை….எங்கள் விழைவுகள் சார்ந்து ஒன்றிணைத்தது..

 

சென்னைத்திரும்பி தொலைக்காட்சித் தொடர்களில் உதவி, துணை,இணை இயக்குநராக பணிபுரிந்துக் கொண்டிருந்தபோதும் அடிப்படையில் இலக்கியம்…இலக்கிய வாசகன்…என்பது மட்டுமே எனக்கான நானே ஏற்றுக் கொண்ட நம்பிக்கையாக இருந்தது…இவ்விதத்தில் மட்டுமே ஸ்ரீ என்னுடன் முரண்பட்டார். “.வாசகன் என்பதற்கப்பால் வா….எழுது…பகிர்ந்துக்கொள்…எழுத்தில் பகிர்ந்துக்கொள்….இலக்கிய வாசகன் மட்டுமே  என்பது உன்னை நீ ஏமாற்றிக்கொள்தல் மட்டுமே”. என்றார்

 

விளைவாக மிகச்சிறு இடைவெளி….இலக்கியம் சார்ந்து..கவிதைகள் சார்ந்து வாசிப்பு.. மட்டுமே இருத்தலை அர்த்தப்படுத்தக்கூடும் என அலைந்துதிரிந்துக் கொண்டிருந்த போது ஸ்ரீ யை மீண்டும் சந்திக்க முடிந்தது….சென்னையில்…ஒருவரை ஒருவர் அகத்தாலும் புறத்தாலும் உணர்ந்து…புகைத்து…மௌனமாகப்பிரிந்தோம்…அதன்பின் முகநூல் நண்பர்களாக மட்டுமே இருந்தோம்…

 

அனுமோள் கல்விப்பணி சார்ந்து களப்பணியாளனாக உணர்ந்த போது இலக்கியமே ஆதாரமாக இருந்தது. உங்களை சந்திக்க மருத்துவமனை வரும்போது…ஸ்ரீ மட்டுமே வியாபித்திருந்தார்.அவரது இன்மை நண்பர்கள் வழி பகிர்ந்துக் கொள்ளப்பட்ட குற்றவுணர்வு…அவ்விடைவெளி..மிக இயல்பாக உருவாகி நீடித்திருந்தது…குற்றவுணர்வுகளுள் உழன்று அங்கிருந்து மீண்டெழுவது என் இயல்பின் ஒரு பகுதி…

 

ஸ்ரீயின் குடும்பம் குறித்து அறிந்துக்கொண்டேன். சென்ற ஆண்டு ஸ்ரீயின் மகள் பாரதி அம்மாவின் உடல்நிலை சார்ந்தும் நிதிநிலை சார்ந்தும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ந்திருந்தார் பின்பு ஸ்ரீயின் நண்பர்கள் ஒத்துழைப்புடன் கல்வியைத் தொடர்ந்தார் எனவும் அறிந்துக் கொண்டேன். பாரதி தற்போது 11 ஆம் வகுப்பு மாணவி. CBSC பாடத்திட்டம் என்பதால் ஆண்டொன்றிற்கு ₹48,000/ கட்டணம். என்னைப்பற்றிய உங்கள் பதிவை படித்துத் தொடர்பு கொண்டு தற்போது வரையிலும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் சிவா,விஜய், ( சிவா,விஜய் இருவரும் சகோதரர்கள். சென்ற முறை இந்தியா வந்தபோது பார்வதிபுர இல்லத்தில் உங்களைச் சந்தித்தனர் ) சிவக்குமார்,சிவசங்கர் மற்றும் என் நண்பர் தம்பி ராமகிருஷணன் ஆகியோரிடம் ஸ்ரீ குறித்துப் பகிர்ந்துக் கொண்டேன்.

 

சிவக்குமார்,சிவசங்கர்,ராமகிருஷணன் மேலும் நாங்கள் அறுவர் எங்களுக்குள் வாட்ஸாப் குழு உருவாக்கி மாதத்தேவைகளுக்கேற்ப பகிர்ந்து கல்விப்பணியை கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறோம். அகதிகள் முகாம் மாணவியர் தேவைகளுக்கு பெரும்பாலும் முழுமதி அறக்கட்டளை பங்களித்து வருகிறது. டோக்கியோ செந்தில் முழுமதி அறக்கட்டளை உறுப்பினர்களுள் ஒருவர்.நண்பர் சந்திரசேகர் அறக்கட்டளை வாயிலாக ஓரளவு உதவி செய்ய இயல்கிறது. உங்கள் வாசகர் குணசேகரன் (சிங்கப்பூர்)மிகப்பெரும் அளவில் உதவிக் கொண்டிருக்கிறார்.

 

எனவே பாரதியின் பள்ளிக்கல்விக்கப்பால் அவர் விரும்பும் உயர்கல்வி சார்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என தீர்மானித்திருக்கிறோம்.வரும் ஆகஸ்ட் முதல்வாரத்தில் இவ்வாண்டுத் தேவைகளுக்காக பங்களிக்கவிருக்கிறோம்.

 

உங்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ளும் உரிமையை அளித்திருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எழுதிய பிறகு உருவான நண்பர்கள் இணைந்து இப்பணியை முன்னெடுப்பது நிறைவளிக்கிறது. ஸ்ரீயின் நினைவுகளை குற்றவுணர்வின்றி மீட்டெடுக்க சாத்தியப்படுகிறது.

 

மிக்க நன்றி சார்

 

முத்துராமன்

 

 

அன்புள்ள ஜெ

 

ஸ்ரீபதி பற்றிய உங்கள் குறிப்பு என்னை மனம்கலங்கச் செய்தது. பல துறைகளில் இப்படி திறமையும் ஆர்வமும் இருந்தும் பலகாரணங்களால் எண்ணியதுபோல சாதிக்கமுடியாமல் போனவர்கள் உண்டு. நான் நினைத்திருந்தது என்னவென்றால் கலை இலக்கியத்தில் அப்படி இல்லை என்று. ஏனென்றால் அங்கே எந்த அமைப்பின் உதவியும் தேவையில்லை. தனிமனிதனாகவே நின்று செயல்படலாம். ஆனால் அது உண்மையல்ல என்று தெரிகிறது. அதிலும் கனவும் திறமையும் இருந்தால்போதாது. வேறுசில விஷயங்களும் ஒத்து வரவேண்டும். ஆனால் பின்னாடி செய்யலாம் என எதை ஒத்திப்போட்டாலும் இன்றைய வாழ்க்கைச்சூழலில் அதற்கு எந்தப்பயனும் இல்லை என்பதை உணர்ந்தேன். ஸ்ரீபதிக்கு அஞ்சலி

 

எஸ்.ராமச்சந்திரன்  

 

ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு

ஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்

ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு

எழுத்தாளனும் சாமானியனும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36
அடுத்த கட்டுரைகவிஞர் அபி பேட்டி- காணொளி