அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-1

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ,

 

உங்கள் தளத்தில் நீங்கள் கவிஞர் அபியைச் சென்று சந்தித்ததைப் பற்றிய குறிப்பை வாசித்தபின்னர்தான் நான் அபி அவர்களைப் பற்றி அறிந்தேன். அன்று அவருடைய இணையதளம் சென்று ஓர் இரவு முழுக்க அபியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். முழுக்கமுழுக்க மெடஃபிசிக்கலான கவிதைகள். தமிழில் இந்த அளவுக்கு முழுமையாகவே மெட்டஃபிஸிக்கலான கவிஞர்கள் வேறு எவரும் இல்லை என்று நினைக்கிறேன்.

 

ந.பிச்சமூர்த்திதான் தமிழிலே மெட்டஃபிஸிக்கலான கவிதைகளை நிறைய எழுதியவர். ஆனால் அவையெல்லாமே லௌகீகமான ஒரு தெளிவையும் காட்டுகின்றன. தேவதேவனின் மெட்டஃபிஸிக்கலானகவிதைகள் மிகவும் குறைவு. அவை அவருடைய  இயற்கை சார்ந்த அனுபவ மண்டலத்தின் ஒரு பகுதியாகவே வருகின்றன. தேவதச்சனின் கவிதைகளிலும் உயர்நிலைத் தத்துவ அனுபவம்தான் உள்ளது. மெட்டஃபிஸிக்கல் என்பது முழுக்கமுழுக்க ஒரு இணையான உலகத்தை உருவாக்கிக்கொள்வது. இங்கே நிகழ்வனவற்றை விளக்குவது அல்ல.

 

ஆனால் அபி கவிதைகள் தனித்துவமானவை.முழுக்கமுழுக்க மெட்டஃபிஸிக்கலான கவிதைகள் இவை. நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. என் ஆய்வுப்பணிகள் நடுவே வாசிக்க முடியுமாஎன்பதும் சந்தேகம்தான் .

 

நவீனக்கவிதையிலே மெடஃபிசிஸ்க்ஸ் வருவதற்கும் நிறைய சிக்கல்கள் உண்டு. அடிப்படையான மெட்டஃபிஸிக்கல் இமேஜ்கள் எல்லாமே மதம் சார்ந்தவை. அவற்றை மதம் சாராமல் ஆக்கவேண்டும்.  ஏனென்றால் நவீனக்கவிதையில் மதம் சார்ந்த மரபான அர்த்தம் அப்படியே வரமுடியாது. ஆனால் அப்படி ஆக்கினால் அவை பெர்சனல் மெட்டஃபர்களாக ஆகும். அந்தக் கவிஞரின் உலகைச் சுட்டிக்காட்ட மட்டுமே அது உதவும். திரும்பத்திரும்ப அந்த மெட்டஃபரே வந்த்கொண்டிருக்கும்.

 

என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அபி கவிதைகளில் அந்தி என்ற மெட்டஃபர் அப்படி திரும்பத்திரும்ப வருவதைச் சுட்டிக்காட்டுகிறேன்

 

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என் வலி

பொழுது நிரம்புகிறது.

ஒரு இடுக்கு விடாமல்

 

என்ற வரியும் ஓர் உதாரணம். வலி பரவசம் போன்றவற்றை இப்படி ஸ்தூலமாக ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது  நவீன மெட்டஃபிஸிக்கல் கவிதைகளில் இப்படி ஒரு தனிமொழியை உருவாக்கியாகவேண்டும்..

 

ஆனால் அன்றைக்குள்ள சூழலில் எங்கே பார்த்தாலும் இடதுசாரிகளின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தபோது இப்படி தனக்குள் பார்த்துக்கொண்டு எழுதியிருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

 

அபி அவர்களுக்கு வணக்கம்

 

எம்.மாதவ்

 

அன்புள்ள ஜெ

 

அபி கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைக் கூர்ந்து வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

 

பொதுவாகவே கவிதை காமம் சார்ந்ததுதான். உணர்ச்சிகளில் அதுதான் பிரதானமானது என்பதுதான் காரணம். அப்புறம் சாவு. அபி அந்த இரண்டு அடிப்படைகளையும் தொடாமல் எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. அபியின் கவிதைகள் உணர்ச்சிகரமானவை அல்ல. எல்லாமே ஒரே உணர்ச்சி கொண்டவை போலவும் உள்ளன. ஆனால் நாம் அடிக்கடி உணரும் ‘ஒன்றுமெ உணராத’ ஒரு நிலையை அவர் எழுதியிருக்கிறார்

 

அபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

ராஜசேகர்

 

அன்புள்ள ஜெ,

 

அபிக்கு விஷ்ணுபுரம் விருது என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தது. நிறையப்பேர் இனிமேல்தான் அபியை வாசிப்பார்கள் என நினைக்கிறேன். ஆகவே முன்னதாகவே அறிவித்ததும் நல்ல விஷயம்தான். பலரிடமிருந்து கட்டுரைகள் வரும். அவை அபியை நாம் வாசிப்பதற்கான ஒரு நல்ல வழியை திறந்து தரும் என தோன்றுகிறது

 

இணையத்தில் அபியின் நூறு கவிதைகள் உள்ளன. அவற்றை எவரும் அதிகமாகப் பேசவில்லை.இந்த விருதை ஒட்டி அக்கவிதைகளைப்பற்றி ஒரு பேச்சு உருவாகும் என்றால் என்னைப்போன்ற வாசகர்களுக்கு மிக உதவியானதாக இருக்கும்

அருண்

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32
அடுத்த கட்டுரைமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா