கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். கவிஞர் அபி பொதுவாக அறியப்படாத கவிஞர். எனக்கு 10 ஆண்டுகளுக்குமுன்பு கோவை ஞானி அவர்கள் அபியை அறிமுகம் செய்து வைத்தார். அவரை நான் நுட்பமாக வாசிக்கவில்லை.

 

அன்றைக்குள்ள சிக்கல் என்னவென்றால் எந்த ஒரு கவிதையையும் அது சொல்ல வருவது என்ன என்ற அளவிலேயே வாசிப்பதுதான். அதைப்பற்றி கோவை ஞானி அய்யா சொன்னார். “துணி எதுக்குப் பயன்படும்?” என்று அவர் கேட்டார். “ஆடையாக உடுக்கலாம்” என்று நான் சொன்னேன். “அதிலே ஓவியமும் வரையலாம்” என்று அவர் சொன்னார்.” கவிதை எதையோ ஒண்ண சொல்லியாகணும்னு இல்லை. ஒரு மனநிலையையோ உணர்ச்சியையோ சொன்னாலே போரும்”

 

அதிலிருந்துதான் நான் கவிதையைப்பற்றிய பார்வையையே மாற்றிக்கொண்டேன். அதிகமாக கவிதை வாசிப்பது இல்லை. ஆனால் வாசிக்கும்போது அந்த வரி என் ஞாபகத்திலே நிற்கிறதா என்பதை மட்டும்தான் பார்ப்பேன். அப்படி நின்றால் அது என்னைப்பொறுத்தவரை நல்ல கவிதை. அபியின் பல வரிகள் என் ஞாபகத்திலே நின்று எனக்கு ஒரு வகையான தொடர்பை அளித்தன.

 

நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வரி உண்டு. ”பசியும் நிறைவும் ஒன்றேயான ஒரு தணிவு’ அற்புதமான வரி அது. பசி தணிந்தால்தான் நிறைவு. நிறைவு குறைந்தால் அது பசி. இரண்டு ஒன்றான நிலையை அவர் தணிவு என்று சொல்கிறார். அபி நிறைய எழுதியிருக்கலாம். நான் அதிகமாக வாசிக்கவில்லை. இந்த விருதின்வழியாக அவரை நிறைய வாசிக்கும் சூழல் அமையவேண்டும்

 

செந்தில்குமார்

 

அன்புள்ள ஜெ

 

அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளிக்கிறது. பொதுவாக விஷ்ணுபுரம் விருது அங்கீகாரம் இல்லாத முதன்மையான படைப்புமுதல்வர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவர்களில் பலர் கவிஞர்கள். தேவதச்சன், ஞானக்கூத்தன், தேவதேவன். ஏனென்றால் இவர்களுக்குத்தான் அதிகம் கொடுக்கப்படவேண்டும். புனைவு எழுதுபவர்களுக்கு வாசகர்கள் என்ற வெகுமதி உண்டு. கவிதை எழுதினால் அப்படி எதுவும் கிடையாது.அதற்கு ஒரு நாலைந்து வாசகர்கள் மட்டும்தான். அவர்களைத்தான் கலையமைப்புக்கள் சிறப்பாகக் கவனிக்கவேண்டும்.  அபியைப்போன்ற மூத்த கவிஞர் விருது பெறுவது எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று அவரிடம் நாம் சொல்வதுபோல. கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்

 

அரசு மகாலிங்கம்

 

அன்புள்ள ஜெ

 

அபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

கவிஞரை நான் கோவையில் இருப்பவர், வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர் என்றுதான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளை இப்போதுதான் இணையத்தில் சென்று வாசித்தேன். அவை எல்லாமே வேறுவகையான கவிதைகளாக இருக்கின்றன.

 

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இங்கே நாம் அனைவருமே நம்மை வெவ்வேறு வகையிலே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறோம். சாதி மதம் குடும்பம் இனம் மொழி என்று பல அடையாளங்கள். இதைத்தவிர்த்தாலும் இந்தக் காலகட்டம், நம்மைச்சூழ்ந்திருக்கும் வாழ்க்கை ஆகியவற்றைக்கொண்டும் நாம் நம்மை அடையாளப்படுத்தியிருக்கிறோம். இது எதுவும் இல்லாமல் வேறுவகையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அவருடைய கவிதைகள் தொடர்ச்சியாக முயல்கின்றன என்று நினைக்கிறேன். ஆகவேதான் அவை இந்த அளவுக்கு நுட்பமானவையாகவும் பொருள் மயக்கமானவையாகவும் உள்ளன.

 

சாதாரணமாக கவிஞர்கள் எழுதும் காதல், காமம், உறவு, பிரிவு என்ற எந்த ஒரு வகையிலும் இந்தக் கவிதைகளை இணைத்துப்பார்க்க முடியவில்லை. கவிஞரே ஒரு தொகுப்புக்கு அந்தரநடை என்று பெயரிட்டிருப்பது இதனால்தான் என நினைக்கிறேன்

 

எம்.பாஸ்கர்

 

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31
அடுத்த கட்டுரைஇன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி