அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ

அபி அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளித்தது. அறியப்படாத கவிஞர் அவர். நான் பத்தாண்டுகளுக்குமுன்னர் உங்கள் கட்டுரைத் தொகுப்பில் இருந்த கட்டுரை ஒன்றில்தான் அவரைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். அவருடைய கவிதைகளுக்குள் செல்ல மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன.அதற்கு ஒரு பயிற்சி தேவை.

 

அபி போன்ற கவிஞர்கள் பெரும்பான்மைச் சூழலில் மதிக்கப்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு  ஏனென்றால் அவருடைய எழுத்துமுறை அப்படிப்பட்டது. அதில் ‘மக்களுக்கு’ என்று ஒன்றுமே இல்லை. ‘கருத்துக்கள்’ என்றும் எதையும் எடுத்துச் சொல்லிவிட முடியாது. அனேகமாக  அதில் அரசியலே இல்லை. பெரும்பாலான கவிதைகள் ஒரு சிறிய எல்லைக்குள் நிற்பவை. ’மிஸ்டிக்’ ஆன கவிதைகள் அவை.

 

காலத்திற்கும் தனிமனிதனுக்குமான உறவையும் தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமான ஒத்திசைவு முரண்பாடு ஆகியவற்றையும் பேசுபவை.  அவற்றுக்கு உரிய வாசகர்களை மட்டுமே அவை சென்றடைய முடியும். காலத்துயர் என்பது ஒரு எளிமையான தத்துவச்சிக்கல் அல்ல. அது ஒரு நிலை. அதற்குத்தேவையானது ஒரு அகத்தனிமை. அந்தத்தனிமையை தனக்குள்ளும்கொண்ட வாசகனிடமே அவருடைய கவிதைகள் செல்லமுடியும்.

 

ஆகவே அவரை விஷ்ணுபுரம் அமைப்பு போன்ற எழுத்தாளர்களின் அமைப்பு தேர்வு செய்து பரிசளித்தால் மட்டுமே அவர் கவனிக்கப்படுவார். அபி கவிதைகளைப்பற்றிய பலகோணங்களில் உரையாடல் தொடங்கும் என்றும் அவர் மேலொரு கூர்ந்த வாசிப்பு உருவாகும் என்றும் நம்புகிறேன்

 

ஆர்.சந்திரசேகர்

 

அன்புள்ள ஜெ

 

அபிக்கு விஷ்ணுபுரம் விருது என்பது ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. அதை ஓரளவுக்கு நானே ஊகித்திருந்தேன். நீங்கள் அவரைச் சென்று பார்த்து புகைப்படங்கள் வெளியிட்டபோதே எனக்குத் தோன்றியிருந்தது. மிகச்சிறந்த தேர்வு. பாராட்டுக்கள்.

 

அபியின் கவிதைகளை நான் வாசித்தபோது எனக்கு அவை பிடிகிடைக்கவில்லை. அவை ஏன் பிடிகிடைக்கவில்லை என்று நான் பலமுறை பேசியதுண்டு.2014ல் திருச்சியில் நாம் சந்தித்தபோது அதைக் கேட்டேன். நீங்கள் அவருடைய படிமங்கள் அப்ஸ்டிராக்ட் ஆனவை, அருவப்படிமங்கள், ஆகவேதான் புரிந்துகொள்ள கடினமானவை என்று சொன்னீர்கள்.

 

அவருடைய படிமங்கள் மற்ற கவிஞர்களின் படிமங்களைப்போல புற உலகில் காட்சியாகக் காணக்கூடியவை அல்ல. அவை உருவகமாக அடையப்படுபவை. புற உலகில் காட்சியாகக் காணக்கூடிய படிமங்களை நாம் உடனடியாக அடையாளம் கண்டுகொள்கிறோம். மனம் மகிழ்ச்சி அடைகிறது. கவிஞன் அதன்மேல் ஏற்றும் அர்த்தங்களை அங்கிருந்து கற்பனைசெய்து நாமும் அடைகிறோம். ஆனால் அருவமான கவிதைப்படிமங்களை அப்படி நம்மால் மனக்கண்ணால் காண முடிவதில்லை. ஆகவே நாம் அவற்றை புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறோம்.

 

‘யாருடையதென்றில்லாத துயரம் அரைக்கண் பார்வை போல கிறங்கித்திரிந்தது’  என்ற அபியின் வரியை சுட்டிக்காட்டினீர்கள். இது மெட்டஃபரையே படிமம் ஆக ஆக்கியது என்றீர்கள். அபி கவிதைகளுக்குள் செல்ல அது ஒரு நல்ல திறப்பாக அமைந்தது.

 

படித்து பல ஆண்டுகள் ஆகின்றன.மீண்டும் படிக்கவேண்டும். கவிஞருக்கு வாழ்த்துக்கள்

 

ஸ்ரீனிவாஸ்

 

 

அன்புள்ள ஜெ

 

நீங்கள் ஒரு பழைய கட்டுரையில் பிரமிள், அபி, தேவதேவன் ஆகிய மூவரையும் ஒரு வரிசையில் வைக்கிறீர்கள். மெட்டஃபிஸிக்கலாக எழுதியவர்கள் , அப்ஸ்டிராக்ட் ஆக எழுதியவர்கள், அகவயமான தரிசனம் கொண்டவர்க்ள் என்று சொல்கிறீர்கள். அபிக்கு விருது வழங்கும் செய்தியைப் பார்த்ததும் அடாடா இது ஏன் நமக்கு தோன்றாமல் போயிற்று என்ற எண்ணம் வந்தது. தமிழின் முக்கியமான கவிஞர். சக்ரவாகப் பட்சி மாதிரி மழையை வானத்தில் இருந்து நேரடியாகவே குடிக்கும் கவிஞர். இந்த ஆண்டு விருது மகிழ்ச்சியை அளிக்கிறது

 

ஆர்.பாலசுப்ரமணியம்

முந்தைய கட்டுரைஜப்பான், பிழைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைகற்காலத்து மழை-5