அன்புள்ள ஜெ,
ஒத்திசைவு எழுதிய கட்டுரையை (மூன்று பாராவை கட்டுரை என்றா சொல்வது?) சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதை படித்த வகையில், ஒத்திசைவு வழக்கம் போல் தனக்கு தெரிந்த இரண்டு விஷயங்களை வைத்துக்கொண்டு, உலகம் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறதே என்று கவலைபடும் நடையில் எதையோ எழுதியிருக்கிறார். இதை தெளிவான கட்டுரையில் மறுப்பதே சரியாக இருக்கும்.அதை கீழே எழுதியுள்ளேன்.
http://manavelipayanam.blogspot.com/2019/07/blog-post.html
பொதுவாக ஜப்பானிய மையநிலம் சீனாவிலிருந்து வந்தவர்களால் ஆனது என்கிற வரியை வேண்டுமானால் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம். அது நிறுவப்பட்டதல்ல என்பதால். ஜப்பானிய உச்சரிப்பிலான பெயர்களை, புத்தகம் வரும்போது சொல்லுங்கள் மாற்றி தருகிறேன்.
மற்றபடி உங்களது பயண கட்டுரை மிக அருமை ஜெ. ஒரு பெரிய ஸ்கெட்ச் ஜப்பான் பற்றி கொடுத்துவிட்டீர்கள். மிக மகிழ்வாக உணர்ந்தேன்.
செந்தில்குமார்
***
அன்புள்ள செந்தில்குமார்
நான் இலக்கியம் அல்லாத துறைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சி எதுவும்செய்பவன் அல்ல. ஆகவே பிழைகள் இருக்கலாம். எப்போதும் அவற்றை தகுதியானவர்களிடம் கேட்டு திருத்திக்கொள்வேன். இங்கு அவ்வாறு திருத்திக்கொண்டுதான் எவரும் செயல்பட முடியும்.அறிவுச்செயல்பாடு என்பதே அதுதான்.
ஆனால் தகுதியானவர்களிடம் திருத்திக்கொள்வது மிகமுக்கியம். தகுதியானவர்களிடம் அதற்கான அமைதியும் உகந்த மொழிநடையும் இருக்கும்.மற்றவர்கள் தங்கள் போதாமையையே நம்மீது பிழை எனச் சுட்டுவார்கள்.அறியாமையாலும் அதன்விளைவான ஆணவத்தாலும் அவர்கள் அடையும் எல்லா குழப்பங்களையும் நம் மீது ஏற்றிவிட்டுவிடுவார்கள். கடந்துபோதலே ஒரே வழி. ஜப்பானியக்கட்டுரையில் திருத்தத் தக்க பிழைகள் என ஏதுமில்லை என நான் அறிவேன்.
சீனக்குடியேற்றம் பற்றி. முதற் கற்காலத்தில் சீனப் பெருநிலத்தில் இருந்தே ஜப்பானில் குடியேற்றம் உருவானது என்றும் தொடர்ச்சியாக சீனக்குடியேற்றங்கள் நிகழ்ந்தன என்றும் அருங்காட்சியகத்திலெயே குறிப்புகள் இருந்தன. அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.பிற குடியேற்றங்கள், குடியேற்றப்போர்கள்,இனக்கலப்புக்கள் குறித்தெல்லாம் எவரும் இணையத்தில் மேற்கொண்டு வாசிக்கலாம். நான் அளித்தது ஒரு மெல்லியக் கோட்டுச் சித்திரம் மட்டுமே.அதன்மேல் மாற்றுக்கருத்துக்கள் அங்கிருக்கலாம். அதை சேர்த்துக்கொள்கிறேன்
ஜெ
***