கற்காலத்து மழை-5

 

பதினான்காம்தேதி பெல்காம் நகரத்திலிருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இரவு பெல்காம் வந்து சேர்வதற்கு மிகவும் பிந்திவிட்டது .வரும் வழியிலேயே எங்கள் வண்டியின் ஒரு சக்கரம் பழுதடைந்தது. இப்பகுதி முழுக்க  மிகப்பெரும் சாலைகள், மேம்பாலங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்கு பார்த்தாலும் பலகைகள், அவற்றை அறையும் ஆணிகள். அதிலொன்று வசமாக சக்கரத்தில் நுழைந்துவிட்டது

 

பொதுவாக இத்தகைய வாடகை வண்டிகளில் மாற்றுச் சக்கரம் மிகப்பழையதாகவும் அனேகமாக குப்பையில்வீசத்தக்கதாகவுமே இருக்கும். அதை வைத்து பத்து கிலோமீட்டர் கூட ஓட்ட முடியாது. ஆகவே சக்கரத்தை மாற்றிக்கொண்டு ஒருவழியாக பெல்காம் நகரின் புறச்சுற்று வரைச்சென்றோம். அங்கே டயர் ஒட்டும் எல்லா கடைகளும் மூடியிருந்தன. மேலும் சென்று ஓர்இடத்தில் இறங்கி நின்று அங்கிருந்து பெட்ரோல் நிலையத்தை விசாரித்துச் சென்று அவர்களிடம் விசாரித்து டயர் ஒட்டுபவர்  வீட்டுக்கு தொலைபேசி சென்று தூங்கத்தொடங்கியிருந்த அவரை வரவழைத்து சக்கரத்தை ஒட்டி சீரமைத்துவிட்டு கிளம்பி விடுதிதேடலானோம்.

 

நெடுஞ்சாலை அருகிலேயே இருந்தது விடுதி. அங்கே சென்று அறையெடுத்து தங்கும்போது இரவு பத்தரை. தூங்கும்போது பதினொரு மணி கடந்துவிட்டிருந்தது. மழையில்நகரமே நனைந்திருந்தது. சாலையொரம் நன்றாக வழுக்கியது. காற்றில் குளிர் இருந்தது. நாங்கள் செல்வதற்கு இருபது நாட்களுக்கு முன்னர் தான் சாலையில் வெள்ளம் வந்து மூடிச் சென்றிருருக்கிறது என்று தெரிந்துகொண்டோம்.

 

இரவு குளிர் இருந்தது. ஆனால் அக்குளிர் இதமானது. மழைக்குளிருக்கும் பனிக்குளிருக்கும் உள்ள வேறுபாடு ஒன்று உண்டு. பனிக்குளிர் சீராக இறுகிக்கொண்டே சென்று புலரியில் கற்பாறை போல ஆகிவிட்ட்ருக்கும். மழைக்குளிர் குளிர்ந்து பின் சற்று புழுங்குகிறதோ என்ற எண்ணத்தை உருவாக்கும். சட்டென்று போர்வையை விலக்கி காற்றோட்டமாக படுப்போம். பதினைந்து இருபது நிமிடங்களில் மீண்டும் குளிரத்தொடங்கும்.

கேரளத்தில் மழைபெய்யத்தொடங்கி பத்துப் பதினைந்து நாள் கடந்த பிறகு இந்த குளிர் உருவாகும். மண் குளிர்ந்து மண்ணுக்குள் இருக்கும் முழு வெப்பமும் வெளியே போன பிறகு உருவாகும் குளிர் இது என்பார்கள். செடிகளுக்குள் எல்லாம் அனல் உண்டு. மழையில் அந்த அனல் முழுமையாக வெளியே சென்ற பிறகுதான் செடிகள் நடுங்கத்தொடங்கும் என்பது கேரளத்தின் நம்பிக்கை. அருவியில் ஓரிருமணிநேரம் குளித்தபிறகு நமக்கு ஏற்படும் குளிர். மரம் நடுங்கத்தொடங்குவது என்று அதை கேரளத்தில் சொல்வார்கள். மரம் கோச்சுந்ந தணுப்பு என்ற ஒலவடை அங்கு உண்டு. மரங்கள் குளிரில் நடுங்கத்தொடங்கிவிட்டதென்றால் மழை போதுமான அளவுக்கு பெய்துவிட்டது என்று பொருள் .

 

இந்த ஆண்டும் தென்மேற்கு பருவ மழை குறைவாகவே பெய்யும் என்பது கணக்கு. ஆனால் கடைசியில் மழை வலுத்துவழக்கமான கணக்கை எட்டிவிட்டிருக்கிறது.மும்பையிலும் அதற்கு வடக்கிலும் இவ்வாண்டு கடும் மழை. மும்பையில் வெள்ளப்பெருக்கு.இமயமலைகளில் மிக உச்சகட்டமாக பெய்து நதிகளில் வெள்ளப்பெருக்கை உருவாக்கியிருக்கிறது. அஸாம் பெருவெள்ளத்தில் உள்ளது.எப்போதுமே மழை விந்தியமலையைக் கடந்து சென்றுவிட்டதென்றால் தெற்கே மழை குறைவாகவே இருக்கும் . மேற்கு தொடர்ச்சிமலைக் காடுகள் அழியும் தோறும் மழை முகில்கள் வடக்காக கடத்திவிடப்படுகின்றன என்கிறார்கள்.

பெல்காமிலிருந்து மறுநாள் விடிந்ததுமே கிளம்பி மலைகளுக்கு மறுபக்கம் சென்று Petroglyphs என்னும் பாறைச்செதுக்குகளை பார்ப்பது எங்கள் திட்டம். ரத்னகிரி வரை செல்லலாம் என்று எண்ணியிருந்தோம். நாங்கள் எண்ணியிருந்ததை விட இந்தப்பயணம் மிக தாமதமாகவே நிகழ்ந்தது. மேலும் நாங்கள் செல்லும் வழி முழுக்க மழையில் சேதம் அடைந்திருந்ததாக சொன்னார்கள்.  ஆகவே பாறைச்செதுக்குகளை தவிர்த்துவிடலாம் என்று தோன்றியது.

 

ஆனால் அவ்வளவு தொலைவு வந்துவிட்டு பாறைச்செதுக்குகளை தவிர்த்துவிட்டு செல்வது உகந்ததல்ல என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வேண்டுமென்றால் ரத்னகிரி செல்வதை தவிர்த்துவிடலாம். பிறிதொரு முறை பூனா வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ரத்னகிரி வருவது மேலும் சுருக்கமான வழியாக இருக்கும் என்றார் கிருஷ்ணன். ஆனால் குறைந்தது பெல்காம் அருகே இருக்கும் குடாப்பி பாறைப்படிவுகளை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அறுதியாகமுடிவெடுத்தோம்.

மழை பெய்து ஓய்ந்து ஈரம் நிறைந்திருந்த நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து இருபக்கமும் காடுகளும் வயல்களும் செறிந்துகிடந்த கிராமச்சாலைகளினூடாக சென்றோம். இருபுறமும் பசுமை சாலையை மூடுவதற்காக பொங்கி அலைகொண்டு நின்றது .கொடிகள் சாலையில் செல்லும் வாகனங்களை கருதாமல் தளிர்க்கை நீட்டி அடிவாங்கிக்கொண்டிருந்தன. இலைகள் கூட சாலைகள் விளிம்பளவுக்கே நீட்டி நின்றிருந்தன. பசுங்காட்டிற்குள் குன்றுகள் தெரியாமல் முகில்கள். குளிரும் இருந்தது ஆனால் எங்கும் மூச்சிளைக்கவைக்கும் நீராவியும் இருந்தது.

 

பல்வேறு இடங்களில் நின்று தேடி குழம்பி தவறா  வழியில் ஒருமுறை ஏறி இறங்கி குடாப்பிஎன்னும் அச்சிறு ஊருக்கு சென்று சேர்ந்தோம். அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சிறு ஒற்றையடிப்பாறை வழியாக நடந்து குடாப்பியைஅடைந்தோம். குடாப்பிஎன்பது ஐநூறுஅடி உயரமிருக்கும் ஒரு சிறிய மலைப்பகுதியின் அடிவாரத்தில் இருக்கும்மிகச்சிறிய இடையர் கிராமம். அங்கெ சென்று அங்கிருந்த பெரியவர் ஒருவரை விசாரித்தபோது பாறைப்படிவுகள் மேலே இருப்பதாகவும் அழைத்து செல்வதாகவும் சொன்னார். இரு முதியவர்கள் எங்களை மேலே அழைத்து சென்றார்கள்.

குடாப்பியில் ஐம்பது வீடுகள் இருக்கலாம். அந்த ஊர்க்காரர்களுக்கு சமீபத்தில் அந்தப்பாறைச்செதுக்குகள் கண்டுபிடிக்கப்படும் வரை அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அங்கு ஏதோ பாறைசெதுக்குப் பள்ளங்கள் இருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் அங்கு செல்லவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கும் அதற்கும் எந்த பண்பாட்டுத் தொடர்பும் இல்லை.

 

அது ஏதேனும் வகையில் அவர்களுடன் மறைமுகப் பண்பாட்டுத் தொடர்பில் இருக்குமோ என்ற ஐயத்தில் ராஜமாணிக்கம் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்தார். “அங்கே போயி சாமி கும்பிடுவீங்களா?” “அங்க முன்னோருக்குஏதாவது சடங்கு செய்வீங்களா?” ”அங்க முன்னாடி ஏதாவது சடங்குகள் நடந்திருக்கா?” எதற்கும் இல்லை என்பதே அவர்களின் பதில்.அந்த ஊரில் அவர்கள் இரு நூற்றாண்டுகளுக்குள்தான் குடிவந்திருப்பார்கள்.சென்ற இருநூறாண்டுகளில்தான் காடுகளுக்குள் மக்கள் சென்று காடழித்து குடியேறும் வழக்கம் பரவலாக இந்தியா எங்கும் உருவாகியது. மக்கள்தொகை பெருக்கம், பஞ்சங்கள் என அதற்குப் பல காரணங்கள்.

மலைச்சரிவில் ஓடைகளில் தெளிந்த தண்ணீர் பெருகி இறங்கிக்கொண்டிருந்தது. அப்பால் ஒரு பெரிய ஓடை அருவிகள் போல ஆங்காங்கே விழுந்து ஓசைபெருக்கிச் சென்றது. தண்ணீர் பெருகும் ஓடையினூடாகவே மேலே செல்லமுடியும். வழுக்கும் பாறைகளினூடாக கால்களைஎண்ணி எண்ணி வைத்து மேலே சென்றோம். அது குன்றின் உச்சிப்பகுதி ஆனால் சில நூறு ஏக்கர் அளவுக்கு பரந்து விழிகூசும் அளவுக்கு ஒளி நிறைந்து கிடந்தது. வானை பிரதிபலிக்கும்படி மழைநீர் தேங்கியிருந்தமையால் வெயில் இல்லை என்றாலும் உச்சிப்பொழுதின் வெளிச்சம். ஆனால் வெம்மையற்றது. குளிர்ந்தவெயில்.

 

Laterite எனப்படும் செம்மண்படிவுப் பாறைகளால் ஆனது இந்த மலை. தமிழில் செங்கப்பிக்கல். கேரளத்தில் சொறிப்பாறை என்பார்கள் . புவி குளிர்ந்த காலத்தில் பெய்த பெரும் மழையில்  பொழிந்த சேறு படிந்து உருவானது. அதில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான பூச்சிகளின் சிற்றறைகள் கொண்டது. பொதுவாக இங்கு மரங்களேதும் முளைப்பதில்லை. சிறு சிறு இடைவெளிகளில் பச்சைப்புல் மட்டும் நிறைந்திருந்தது. அரிதாக சில இடங்களில் புதர்ச்செடிகளும்.

இந்தப் பாறைகளில்தான் ஏறத்தாழ பதினைந்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாறைச்செதுக்கு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவை கல்லால் அடித்து அடித்து பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பள்ளங்களால் வரையப்பட்ட பெரிய ஓவியங்கள். நாம் வாழும் இந்த மானுடப் பண்பாட்டை ஒரு யுகம் எனக்கொண்டால் அதற்கு முந்தைய யுகத்தைச் சேந்தவை இவை. இறுதிப் பனிக்காலத்துடன் அப்பண்பாட்டு யுகம் முற்றாகவே சிதைந்து அழிந்தது. அதன் எச்சங்களில் இருந்து நாம் வாழும் இப்பண்பாடு மெல்ல பரிணாமம் கொண்டது. அந்த முந்தைய பண்பாட்டில் இன்று எஞ்சியிருப்பவை இத்தகைய சில அடையாளங்கள் மட்டுமே

முந்தைய கட்டுரைஅபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31