யானைடாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி.கிருஷ்ண மூர்த்தி [1923- 2002] தமிழகத்தின் முக்கியமான காட்டியல் நிபுணர்களில் ஒருவர். யானைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது நினைவாக அவரைப்பற்றிய புகைப்படக்கண்காட்சி ஒன்று டாப்ஸ்லிப்பில் அவர் இருந்த இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி தமிழக வனத்துறையில் பணியாற்றிய விலங்குமருத்துவர். அவரது மேலாண்மையில் முதுமலை தெப்பக்காடு யானைமுகாம் உலகப்புகழ்பெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா யானைக்காப்பகங்களுக்கும் அவர் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்தார். முகாம்களில் வாழ்ந்த அனைத்து யானைகளும் அவரை நன்கறிந்திருந்தன.
டாக்டர் கே என்று உலகமெங்கும் அன்புடன் அழைக்கப்பட்ட வி. கிருஷ்ணமூர்த்தி உலகப்புகழ்பெற்ற அறிவியலிதழ்களில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கடைசிக்கட்டுரை பிரிட்டிஷ் ஆய்விதழான நேச்சரில் 2000த்தில் வெளிவந்தது. International Union for the Conservation of Natural Resources, Asian Elephant Specialist Group போன்ற முக்கியமான பல சர்வதேச ஆய்வுக்குழுக்களில் அவர் உறுப்பினராக இருந்தார். 2000த்தில் வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது
காட்டு விலங்குகளின் சடலங்கள் அனைத்தும் சவப்பரிசோதனை செய்யப்பட்டாகவேண்டும் என்பதை தொடர்ந்து வலையுறுத்துபவராக இருந்தார் டாக்டர் கெ. உலகிலேயே அதிக யானைகளை சவப்பரிசோதனை செய்தவர் அவரே. அதிகமான யானைகளுக்கு பிரசவம்பார்த்தவரும் அவரே.
யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு விழச்செய்து அவற்றை சிகிழ்ச்சைக்குள்ளாக்குவதில் அவர் நிபுணர். ப்லநூறு அறுவைசிகிழ்ச்சைகள் செய்திருக்கிறார். வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு குறித்த அவரது கையேடு உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. யானைகளின் எடை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்
தமிழக கோயில்யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித்திட்டம் அவர் முன்வைத்து முன்னின்று நடத்தியதேயாகும். பொதுவாக யானையை பயன்மிருகமாக வளர்ப்பதையும் கோயில்களில் அலங்காரமாக வளர்ப்பதையும் நிறுத்தவேண்டும் என்று கோரிவந்தார்.
இலக்கிய ஆர்வம் கொண்டவர் டாக்டர் கே. அவருக்கு லார்ட் பைரனின் கவிதைகளிலும் சங்க இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று இந்து நாளிதழில் அருண் வெங்கட்ராமன் பதிவுசெய்கிறார்.
2002 டிசம்பர் 9 ஆம்தேதி தன் 73 ஆவது வயதில் மரணமடைந்தார்.
http://www.pbs.org/wnet/nature/episodes/the-elephant-men/interview-filmmaker-harry-marshall/3325/
http://www.hinduonnet.com/mag/2003/07/20/stories/2003072000260400.htm
lathananthpakkam.blogspot.com