யானைடாக்டர் [சிறுகதை] – 3

டாக்டர் கே அவரது வீட்டில்தான் இருந்தார். அவரது குடியிருப்புக்கு வெளியே பெரிய தேக்குமரத்தடியில் செல்வா என்ற பிரம்மாண்டமான குக்கி யானை நின்றிருந்தது. படகுபோன்ற பெரிய வெண்தந்தங்களை மெல்ல தேக்குமரத்தில் உரசி பட்டையை பிளந்துகொண்டிருந்த யானை என்னைப்பார்த்ததும் காதுகூர்ந்து லேசாக துதிக்கை தூக்கி மோப்பம் பிடித்தபின் ‘பம்ம்’ என்று எனக்கு காலைவாழ்த்து சொல்லிவிட்டு மீண்டும் காதசைவை ஆரம்பித்தது.

டாக்டர் அந்நேரத்தில் அவர் அங்கே இருந்தது ஆச்சரியமாக இருந்தது. நான் செருப்பை கழற்றிய ஒலி கேட்டு உள்ளிருந்து எட்டி பார்த்து ‘வா வா’ என்றார். ’என்ன இந்நேரத்திலே? ‘நான் இல்ல அதைக் கேக்கணும்? என்ன இந்நேரத்திலெ இங்க இருக்கீங்க?’ ‘நான் காத்தாலதான் வந்தேன்.ஒரு சர்ஜரி இருந்திச்சு…குக்கி ஒண்ணு, ராமன்னு பேரு. தொடையிலே பெரிய கட்டி. ஏஜ்ட் ஃபெல்லோ. நானும் அவனும் முப்பது வருஷமா பழக்கம். நிதானமான ஆள். நல்ல ஹ்யூமர்சென்ஸ் உண்டு…இன்னும் ஒரு பத்து வருஷம்கூட தாக்குபிடிப்பான்.’

நான் அமர்ந்துகொண்டேன். ‘டீ?’ என்றா டாக்டர் கே. ‘நானே போட்டுக்கறேன்’ என்றேன். ‘உனக்கு மட்டும் போட்டுக்கோ, நான் குடிச்சாச்சு’ நான் டீ போட்டுக்கொண்டிருக்கும்போதே கைகள் பரபரப்பதை உணர்ந்தேன். கோப்பையை நழுவ விட்டுவிடுவேன் என்று தோன்றியது. என் பரபரப்பை பார்த்து ‘என்ன புதுசா ஏதாவது லவ்வா?’ என்றார். ‘இல்லை சார்’ அவர் எழுந்து சோம்பல் முறித்து ‘சங்க இலக்கியங்களிலே பொதுவா நேச்சர் பத்தின டிஸ்கிரிப்ஷன்ஸ் சரியாத்தான் இருக்கும்… ஆனா கபிலர் கொஞ்சம் மேலே போவார். பாத்தியா, ‘சிறுதினை காக்கும் சேணோன் ஞெகிழியின் பெயர்ந்த நெடுநல் யானை மீன்படு சுடர் ஒளி வெரூஉம்’

‘என்ன அர்த்தம் அதுக்கு?’ என்றேன். ‘தினைப்புனம் காக்கக்கூடிய குறவனோட பந்தத்திலே இருந்து விழுந்த தீப்பொறிய பாத்து பயந்த யானை நட்சத்திரங்களை பாத்தும் பயந்துக்குமாம்’ நான் புன்னகை செய்தேன். ‘யானைக்கு மட்டுமில்லை அத்தனை மிருகங்களுக்கும் அந்த மாதிரி விஷயங்களிலே தெள்வு உண்டு. ஒரு பொம்மைத் துப்பாக்கிய ரெண்டாவது வாட்டி கொண்டுபோனா குரங்கு கண்டுபிடிச்சிரும். டேப் ரிகார்டரிலே இன்னொரு யானையோட குரலை ரெக்கார்ட் பண்ணி போட்டா யானை முதல்ல கேக்கிறச்சயே கண்டுபிடிச்சிரும்…என்ன செய்றே? யூ ஆர் நாட் லிஸ்னிங்’

நான் ‘ஒண்ணுமில்லை’ என்றேன். ‘இல்ல யூ ஆர் நாட் நார்மல். கமான், என்ன பிரச்சினை?’ ‘இல்லசார்’ ‘சொல்லு’ என்று என் கண்களைப் பார்த்தார். நான் அவரிடம் எதையுமே ஒளித்ததில்லை. கடகடவென்று சொல்லிவிட்டேன். இரு வருடங்களுக்கு முன்னால் தோன்றிய எண்ணம். அவருக்கு ஒரு பத்மஸ்ரீ விருது. முதலில் நானே அவரைப்பற்றிய எல்லா தகவல்களையும் சேர்த்து முறையாக கலாச்சார அமைச்சகத்துக்கு அனுப்பினேன். அம்முறை அவரது பெயர் பட்டியலிலேயே வரவில்லை. எவருமே கவனிக்கவில்லை.

ஆகவே அடுத்தமுறை ‘லாபியிங்’ ஆரம்பித்தேன். என் நண்பர்கள் மூவர் ஆங்கில இதழ்களில் இருந்தார்கள். ஏழெட்டுபேர் மத்திய அரசு பணியில் இருந்தார்கள். சீராக வருடம் முழுக்க வேலைசெய்தேன். நண்பர்களை முழுக்க பயன்படுத்திக்கொண்டேன். உள்ளே சென்றபோது பல வழிகள் தெரிந்தன.இந்தக்காட்டில் டாக்டர் கேக்கு எப்படி வழிதெரியுமோ அப்படி எனக்கு அதிகார சுற்றுப்பாதைகளில் கால்பழக்கம் இருந்தது. கடைசிவரை கொண்டு சென்று சேர்த்துவிட்டேன்.

உண்மையில் அதற்கு டாக்டர் கேயின் ஆளுமைதான் எனக்கு பெரிதும் உதவியது. அரைகுறை ஆர்வத்துடன் செவிசாய்க்கும் ஒருவரின் மனசாட்சியை டாக்டரின் உணர்ச்சிகரமான ஆளுமைச்சித்திரத்தின் வழியாக விரைவிலேயே தொட்டு விடுவேன். அவரது அற்பத்தனமான வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் செய்வதற்கான வாய்ப்பாக அதை முன்வைப்பேன். அவரது ஆன்மா இன்னும் சுண்ணாம்பாக ஆகிவிடவில்லை, இன்னும் எங்கோ கொஞ்சம் அது துடித்துக் கொண்டிருக்கிறது என்று அவருக்கே தெரிய வைப்பேன். இந்தச்செயலைச் செவதன் மூலம் அவர் இன்னும் ஒரு நல்ல விஷயத்தைச் செய்யக்கூடிய நல்லமனிதர்தான் என அவரே உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பம். அவ்வாறு அந்த கோரிக்கை படி ஏறிச்சென்றது. அது சென்ற படிகளில் எல்லாம் எவரோ ஒருவர் மனம் உருகி டாக்டரைப்பற்றி பேசினார்கள். எங்கோ இருந்துகொண்டு அவர் காலைத்தொட்டு வணங்குவதாகச் சொன்னார்கள்.

இன்னும் சில மணி நேரம்தான் . ‘அப்ப உங்ககூட இருக்கணும் சார்’ என்றேன். நான் நினைத்தது போல அவர் அதை சிரித்து புறம்தள்ளவில்லை.ஆர்வமில்லாமல் தன்செயல்களில் மூழ்கவுமில்லை .என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு ஆழமான பெருமூச்சுடன் தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டார். ‘என்ன டாக்டர்?’ என்றேன். ‘என்ன?’ என்றார். கண்களின் கடுமை என்னை தளார்த்தியது. நான் மெல்ல ‘நீங்க ஒண்ணுமே சொல்லலியே’ என்றேன். அவர் ‘இல்லே…’ என்றபின் ‘ஒண்ணுமில்லை’ என்றார். ‘சொல்லுங்க டாக்டர் , ப்ளீஸ்’

‘இல்ல…’ என்றார் டாக்டர். ‘உனக்கு இந்த பவர்கேம்ஸிலே இவ்ளவு ஆர்வமிருக்கும்னு நான் நினைக்கலை. உன்னைப்பத்தின என்னோட எதிர்பார்ப்புகளே வேற…சரிதான்’ என்றார் ‘டாக்டர்’ என்று ஆரம்பித்தேன். ‘நான் ஆர்க்யூ பண்ணலை. எனக்கு அது வராது…லீவ் இட்’ என்று அவரிடம் நான் அதுவரை காணாத கடுமையுடன் சொன்னார். ‘சொல்லுங்க டாக்டர்’ என்றேன். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு ‘ஸீ, இந்த காட்டிலே இதுவரை எப்டியும் நாப்பது அம்பது ஆபீஸர்ஸை சந்திச்சிருப்பேன். யாருமே கொஞ்சநாளைக்கு பிறகு காட்டிலே இருக்கிறதில்லை. சிட்டிக்கு போய்டுவாங்க. ஏதாவது ஒரு காரணம் சொல்லுவாங்க. காட்டை விட்டு ஃபிஸிக்கலா போனதுமே காட்டைவிட்டு மெண்டலாகவும் போய்டுவாங்க. அதுக்குமேலே அவங்களுக்கு காடுங்கிறது வெறும் டேட்டாதான்’

’ஏன்னு நெறைய யோஜனை பண்ணியிருக்கேன்’ என்றார் டாக்டர் கே. ‘ஒரே காரணம்தான். இந்தக் காட்டிலே அதிகாரம் இல்லை. அதிகாரத்தை ரெண்டு வழியிலே மனுஷன் ருசிக்கலாம். கீழெ உள்ளவங்க கிட்ட அதை செலுத்திப்பாக்கலாம். மேலே பாத்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிண்டே இருக்கலாம். ரெண்டுமே பெரிய திரில் உள்ள ஆட்டங்கள். இந்த காட்டிலே ரெண்டுக்கும் வழி இல்லை. இந்த காடு உங்க அதிகாரத்துக்கு கீழே இருக்குங்கிறது ஒரு அசட்டு பேப்பரிலேதான். நெஜத்திலே காட்டோட அதிகாரத்திலேதான் நீங்க இருக்கிறீங்க. அந்தா வெளியே நின்னுட்டிருக்கானே மலைமாதிரி , செல்வா, அவன் உங்க அதிகாரத்திலயா இருக்கான்? இந்தக் காட்டிலே அவன்தான் ராஜா. அவனோட முகத்திலே இருக்கே அந்த ஆறடிநீள வெள்ளைத் தந்தம்தான் அவனோட செங்கோல். அவன் மனுஷனுக்கு இணக்கமா இருக்கான்னா அந்த ராஜாவுக்கு மனுஷங்கமேலே கருணையும் நல்ல அபிப்பிராயமும் இருக்குன்னு அர்த்தம்…

‘இங்க உங்களுக்கு மேலே போக வழி இல்லை. இங்க இருக்கிறச்ச எங்கியோ உங்களோடொத்தவங்க ஓட்டத்திலே முந்திண்டிருக்கிறதா தோணிண்டே இருக்கும்’ என்று டாக்டர் கே தொடர்ந்தார் ‘அதான் ஓடுறீங்க. காட்டுக்கு மேலே உங்களுக்கு இருக்கிற பொறுப்பை உதறிண்டு போறீங்க. நீ வேற மாதிரி இருப்பேன்னு நினைச்சேன். வெல்’ கையை விரித்த பின் நிலையில்லாமல் எழுந்து நடந்தார் பின்பு கோபத்துடன் ‘ஸீ, இந்த பட்டம், என்னது அது, பிரம்மஸ்ரீயா?‘ நான் மெல்ல ‘இல்ல, பத்மஸ்ரீ’ என்றேன். ‘சரி அது, அத இந்தக்காட்டிலே வச்சுண்டு நான் என்ன பண்ணறது? வெளியே போயி செல்வாகிட்ட காட்டி இந்தபாரு இனிமே நீ மரியாதையா நடந்துக்க நான் பிரம்மஸ்ரீயாக்கும்னு சொல்லவா?

‘இந்தக்காட்ட நீ புரிஞ்சுகிட்டாத்தான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்ட புரிஞ்சுக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க வாழணும்னா முதல் விஷயம் உன்னோட அந்த உலகத்திலே இருக்கிற பணம் புகழ் அதிகாரம் லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிண்டு நீயும் இந்த குரங்குகளை மாதிரி இந்த யானைமாதிரி இங்க இருக்கிறதுதான். உனக்கு இவங்களை விட்டா வேற சொந்தம் இருக்கக்கூடாது. போய்யா, போயி வெளிய பாரு. அந்தா நிக்கிறானே செல்வா…அவனை மாதிரி வேற ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும், அந்த கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்த கடல்மாதிரி மனசும்…அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்கப்போறான்? பிரதமரா, ஜனாதிபதியா? அந்த யானைக்கு உன்னை தெரியும்கிறத பெரிசா நெனைச்சேன்னா டெல்லியிலே எவனோ நாலு கேணையனுங்க எதையோ காயிதத்திலே எழுதி கையிலே குடுக்கறத பெரிசா நெனைப்பியா?‘

அவரது முகத்தில் அந்த ரத்தச்சிவப்பை நெடுநாட்களுக்குப் பின் பார்த்தேன். ஜீப்பில் அமர்ந்து பைரனின் கவிதையைச் சொன்னபோதிருந்ததைப்போல அவர் தழலுருவமாக எரிந்துகொண்டிருந்தார். ’Man, vain insect!’ என்று மாபெரும் கொம்பன் யானையின் பிளிறல் போல பைரனின் முழக்கத்தைக் கேட்டேன். தலை குனிந்து அமர்ந்திருந்தேன். பின்பு சட்டென்று எழுந்து வெளியே சென்றேன். டாக்டர் கே என் பின்னால் ‘நில்லு…’ என்றார். நான் தயங்கியதும் ‘அயம் ஸாரி’ என்றார்.

என் கண்கள் கலங்கிவிட்டன. தலைகுனிந்து என்னை அடக்கியபின் மெல்லிய குரலில் ‘நான் அப்டி நினைக்கலை டாக்டர் …’ என்றேன். ‘நான் உங்கள வெளியே கொண்டு போகணும்னு நெனைச்சேன் டாக்டர். இதோ இங்க வர்ரது வரை இப்டி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும்னு எனக்கு தெரியாது. இப்டி புத்தம்புதுசா ஒரு உலகத்தை பாக்கப்போறம்னு எனக்கு தெரியாது. என்னை நம்புங்க டாக்டர். நான் இப்ப என்ன சொல்றது…. ஆனா எங்க இருந்தாலும் நீங்க என்னை குனிஞ்சுபாத்து பெருமைப்படுறமாதிரித்தான் இருப்பேன். ஒருநாளைக்கும் உங்ககிட்ட நான் இருந்த இந்த நாலுவருஷத்துக்கு துரோகம் பண்ணிட மாட்டேன். ஐ பிராமிஸ் டாக்டர்’

‘ஆனா இங்க வந்து தற்செயலா உங்களைச் சந்திக்கிற வரைக்கும் தெரியலையே டாக்டர். நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார். இலட்சியமே இல்லாத தலைமுறை. தியாகம்னே என்னான்னு தெரியாத தலைமுறை… மகத்தான சந்தோஷங்கள் இந்த மண்ணிலே இருக்குங்கிறதே தெரியாத தலைமுறை..

’இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர் வளந்து வர்ரான். . அவன்தான் ஐடி கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேல பாக்கறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான். அதனால தான் பெரிய பிறவி மேதைன்னு நினைச்சுக்கறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம் இருக்கு…அவங்களிலே ஒரு பத்துபர்செண்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்க்குன்னு தெரியட்டுமேன்னு நினைச்சேன்.

’டாக்டர் நம்ம பசங்க மாதிரி சபிக்கப்பட்ட தலைமொறை இந்தியாவிலே இருந்ததில்லை. அவங்க முன்னாடி இன்னிக்கு நிக்கிறதெல்லாமே வெறும் கட்டவுட்டு மனுஷங்க. லட்சியவாதமோ கனவொ இல்லாத போலி முகங்க. அவங்கள்லாம் ஜஸ்ட் ஜெயிச்சவங்க டாக்டர். திருடியோ மோசடி பண்ணியோ பணமும் புகழும் அதிகாரமும் அடைஞ்சவங்க. அவங்கள முன்னால பாத்துட்டு ஒரு தலைமுறையே ஓடி வந்திட்டிருக்கு. அந்த பசங்க முன்னாடி இந்தா இப்டி ஒரு ஐடியலிஸத்துக்கும் இன்னும் நம்ம சமூகத்திலே எடமிருக்குன்னு சொல்லலாம்னு நினைச்சேன். இன்னும் இங்க காந்தி வாழறதுக்கு ஒரு காலடி மண்ணிருக்குன்னு சொல்லலாம்னு நினைச்சேன். ஒரு பத்துபேரு கவனிச்சாக்கூட போருமே டாக்டர்

’உங்க கையிலே இந்த அசட்டு விருதை கொண்டாந்து குடுத்து உங்களை கௌரவிச்சிடலாம்னு நினைக்கிற அளவுக்கு ஒண்ணும் நான் சுரணை கெட்டு போயிடலை டாக்டர். நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். நானும் என் தலைமுறையும் உங்கள அடையாளம் கண்டுகிட்டோம்ங்கிறதுக்காக என்ன செய்யலாம்னு யோசிச்சேன். குருகாணிக்கையா ஏதாவது உங்க காலடியிலே வைக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனந்த் கூட வந்தான். அதுக்காக இதை பண்ணினோம். அது தப்புன்னா ஸாரி’

பேசப்பேச எனக்கு சரியான சொற்கள் வந்தன. என் மனம் தெளிந்தது.பேசி முடித்து தலை குனிந்து அமர்ந்திருந்தேன். சட்டென்று டாக்டர் கே சிரித்து ‘ஓக்கே ஃபைன். இனஃப் ஷேக்ஸ்ஃபியர்…நான் இப்ப வெளியே போறேன் வர்ரியா?’ என்றார். நானும் அந்த சொல்லில் பனி உலுக்கப்பட்ட மரக்கிளை போல கலைந்து எடையிழந்து சிரித்து விட்டு அவருடன் கிளம்பினேன். செல்வாவை கூட்டிக்கொண்டு யானைமுகாமுக்குச் சென்றோம். செல்வாவுக்கு யானைமுகாமுக்கு உடனே போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அவனை கிளப்பியபோது அவனிடமிருந்த வேகத்தில் இருந்து தெரிந்தது. அவன் யானைமுகாமை அடைந்ததும் அவனை வரவேற்று உள்ளே ஏழெட்டு குரல்கள் எழுந்தன.

‘யூ நோ ஹி இஸ் எ ரியல் டஸ்கர், எ கஸனோவா’ என்றார் டாக்டர் கே. நான் புன்னகை செய்தேன். டாக்டர் உள்ளே நுழைந்ததும் நாற்பத்தெட்டு துதிக்கைகள் தலைக்குமேல் எழுந்து அவரை வரவேற்றன. அவர் அவற்றுடன் கொஞ்சியபடி குலவியபடி வேலைகளில் மூழ்கினார். ஒவ்வொரு யானையாகப் பார்த்து பரிசோதனை செய்து அறிக்கைகளை தயாரித்துக்கொண்டிருந்தார். அவர் சொல்லச் சொல நான் எழுதினேன். நடுவே ஷெல்லி ,கொஞ்சம் கம்பன், கொஞ்சம் பரணர், கொஞ்சம் அமெரிக்க இயற்கையியல் கழக வேடிக்கைகள். மதியம் கைகளை மட்டும் கழுவிக்கொண்டு ஒரு சப்பாத்திச்சுருளை சாப்பிட்டேன், எனக்கு உள்ளே சிக்கன். டாக்டர் கே சுத்த சைவம்.

மாலைவரை நான் ரேடியோவை மறந்திருந்தேன். நான்கரை மணிக்கு செல்வராஜ் என்னை தேடி வந்தான். ‘சார் டெல்லியிலே இருந்து போன்ல கூப்பிட்டுட்டே இருந்தாங்க…இங்கிட்டு டாக்கிட்டர் வூட்டுலே கூப்பிடச்சொன்னேன்..’ நான் ஜீப்பை எடுத்துக்கொண்டு டாக்டர் அறைக்குசென்று ஆனந்தை அழைத்தேன். எடுத்ததுமே ‘ஸாரிடா…எப்டி சொல்றதுன்னே தெரியலை’ என்றான். அதை அங்கே வரும் வழியிலேயே எதிர்பார்த்திருந்தேன் என்று தெரிந்தும் எனக்கு உடம்பெல்லாம் தளர்ந்தது. நெஞ்சு கனத்து நிற்கமுடியாமல் இரும்பு நாற்காலியில் அமர்ந்தேன் ‘மினிஸ்டர் நேத்தே லிஸ்டுலே வேற பேர சேத்துட்டாராம்டா…அதை மறைச்சு ஆழம்பாக்கத்தான் என்னைய கூப்பிட்டு அப்டி தேனா பேசியிருக்கார்…நரிடா அந்தாளு , நினைக்கவே இல்லடா. சம்பந்தமே இல்லாம யார்யாரோ நடிகனுக்கெல்லாம் குடுக்கிறாங்க… ஸாரிடா…அடுத்தவாட்டி பாப்போம்…’

‘பரவால்லடா..நீ என்ன பண்ணுவே’ என்றேன். ‘டேய் அந்த கெழட்டு நரி- ‘ நான் ‘நரி இப்டியெல்லாம் பண்ணாதுடா..பை’ என்று போனை வைத்தேன். தலையைப்பற்றிக்கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். டாக்டர் கே இதை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார், அவரிடம் சொல்லக்கூட வேண்டியதில்லை. ஆனால்…பைக்கில் திரும்பிச்செல்லும்போது அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். என்னை ஒரு இயந்திரத்தில் போட்டு கடைவதுபோல குடைந்து கொண்டிருப்பது எது? நான் என்ன எதிர்பார்த்தேன்? இப்படித்தான் இருப்பார்கள் என நான் அறியாததா?

ஆனால் நான் வேறு ஒன்றை உள்ளூர எதிர்பார்த்தேன். பெரும் இலட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் என்று நினைத்தேன். காந்தியின் வலிமை அங்குதான். அத்தனை இலட்சியவாதங்களும் வாழ்வது அந்த அம்சத்தை பயன்படுத்திக்கொண்டுதான். இந்த காலகட்டத்தில் அதை பரிசோதனை செய்ய விரும்பினேனா? இன்றும் எங்கோ அந்த ஊற்றின் ஈரம் இருந்துகொண்டுதான் இருக்கும் என நினைத்தேனா?

வழியில் அந்த புல்வெளியை பார்த்து கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நின்றேன். பச்சை சுடர்ந்துகொண்டிருந்தது. ஒளியால் ஆன சிறகுகளை அடித்தபடி சிறு பூச்சிகள் சுழன்று சுழன்று பறந்தன. கண்களை நிறைத்தது அந்த பசுமை. பசுமை என்றால் ஈரம். ஈரம் என்றால் உயிர்… என்னென்னவோ எண்ணங்கள். சட்டென்று மனம் கொந்தளித்து வந்து என் தடைகள் மேல் மோதி உடைத்தது. அங்கே தனிமையில் நின்றுகொண்டு தேம்பி விசும்பி அழுதேன். அழும் தோறும் தன்னிரக்கம் மேலெழ கடைசி மன வெறுமையையும் கண்ணீராக ஆக்கி வெளியே தள்ளுபவன் போல அழுதுகொண்டே இருந்தேன்.

எப்போதோ ஆழ்ந்த மௌனத்துக்குச் சென்று பெருமூச்சுடன் அந்த மௌனத்தை உணர்ந்து மீண்டு திரும்பிச்சென்று ஜீப்பில் ஏறிக்கொண்டபோது பல கிலோமீட்டர் ஓடியவன் போல அப்படி களைத்திருந்தேன். நேராக சென்று யானைமுகாமில் ஒரு சிறிய குட்டியை அளந்துகொண்டிருந்த டாக்டர் கே அருகே சென்று நின்றேன். என்னை திரும்பி பார்த்து உடனே கண்டுபிடித்துவிட்டார் ‘என்னய்யா பலூன் ஒடைஞ்சுடுத்தா?’ என்று கேட்டபின் சிரித்துக்கொண்டே ‘அப்ப வேலைய கவனிக்கலாமில்ல?’ என்றார்.

அவரது அருகாமை சிலநிமிடங்களில் என்னை சாதாரணமாக்கியது. மாலை இருட்டுவது வரை அங்கே வேலை இருந்தது. அதன் பின் அவரும் நானும் ஜீப்பிலேயே திரும்பினோம். வழியெங்கும் டாக்டர் கே அவர் எழுதப்போகும் புதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். மனித வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வளர்ப்புமிருகமாக யானை தேவைப்பட்டது. பெரும்சுமைகள் தூக்க அது இல்லாமல் முடியாது. யானை இல்லாமல் தஞ்சாவூரின் பெரிய கோயில்கள் இல்லை. ஆனால் இன்று மனிதனுக்கு யானையின் உதவி தேவை இல்லை. யானையை விட பலமடங்கு ஆற்றல்வாய்ந்த கிரேன்களின் காலகட்டம். இன்று யானை வெறும் அலங்காரத்துக்காகவும் மதச்சடங்குகளுக்காகவும் வளர்க்கப்படுகிறது. மிருககாட்சி சாலைகளில் வேடிக்கைக்காக போடப்பட்டிருக்கிறது.

’கோயிலிலே யானைய வளக்கிறத தடை பண்ணியாகணும். கோயில்கள் யானை வாழறதுக்குண்டான எடமே கெடையாது. யானையோட கண்ணுக்கு பச்சைத்தழையும் மரங்களும்தான் பட்டுண்டே இருக்கணும். அந்தக்காலத்திலே யானைய பட்டத்துயானையா வச்சிருந்தாங்க. இன்னைக்கு உண்டக்கட்டி குடுத்து யானைய வளக்கலாம்னு நெனைக்கறானுங்க. பத்து பைசாவ யானை கையிலே குடுக்கறானுங்க அற்ப பதர்கள். நான்சென்ஸ். நீ யாருன்னு உனக்கு தெரிஞ்சா நீ வச்சிருக்கற அந்த உலோக துண்ட அதுக்கு பிச்சையா போட உனக்கு கை கூசாது? கோயில்யானைகளை மாதிரி இழிவுபட்டு அவமானப்பட்டு பட்டினி கிடக்குற ஜீவன் வேற இல்லை…கண்டிப்பா தடை செஞ்சாகணும்’

’மதச்சடங்குன்னு சொல்லி சிலபேர் அதை எதிர்ப்பாங்க. ஆனா நூறுவருஷம் முன்னாடி பொட்டுக்கட்டுறதையும் அப்டிச் சொல்லித்தான் எதிர்த்தாங்க. யானைய சுதந்திரமா விட்டுரணும். அவன் காட்டோட அரசன். அவனை ஊரிலே போர்ட்டராகவும் பிச்சைக்காரனாகவும் வச்சிருக்கிறது மனுஷ குலத்துக்கே அவமானம். நம்மாளுகிட்ட சொன்னா அவனுக்கு அதெல்லாம் புரியாது. அவனுக்கு எங்க காடு தெரியும்? தண்ணியடிக்கவோ விபச்சாரம் செய்யவோதானே இவன் காட்டுக்குள்ள வர்ரான்? யூரோபியன் இதழ்களிலே இதைப்பத்தி பேசணும். அவன் சொன்னா இவன் கேப்பான். இப்பவும் அவந்தான் இவனோட மாஸ்டர்..’

வீட்டுக்குச் சென்றதுமே அவர் எழுதி வைத்திருந்த பெரிய தீஸிஸை எடுத்து நீட்டினார் ‘படிச்சுப்பாரு…இன்னிக்கு காலையிலே கூட இதைத்தான் ரெடிபண்ணிக்கிட்டிருந்தேன்’ தட்டச்சிடப்பட்ட எழுபது பக்கங்கள். நான் வாசிக்க ஆரம்பித்தேன். பலவருட உழைப்பில் ஏராளமான தகவல்களை திரட்டியிருந்தார் டாக்டர் கே. இந்திய கோயில்களில் உள்ள இருநூறு யானைகளின் தரவுகளை திரட்டி அவற்றின் உடல்நலக்குறைவுகளையும் மனச்சோர்வையும் பட்டியலிட்டிருந்தார். அவற்றை பராமரிப்பதில் உள்ள ஊழலே முக்கியமான பிரச்சினையாக இருந்தது. தேவைக்கும் மிகக்குறைவான உணவே அவற்றுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலும் பக்தர்களின் பிச்சையையே அவை உண்டன. சில பெரும் கோயில்களில் பக்தர்கள் வீசிக்குவிக்கும் எச்சில் இலைகளையும் எச்சில் சோற்றையும்தான் உணவாகக் கோண்டிருந்தன.

இருட்டிவிட்டது. ‘கெளம்பறியா?’ என்றார் டாக்டர் கே ‘வேணுமானா இங்கேயே தங்கிக்கோ. யூ லூக் டயர்ட்’ நானும் அதையே நினைத்தேன். பல நாட்கள் நான் அவருடனேயே தங்குவதனால் எனக்கென்றே அங்கே ஒரு படுக்கையும் கம்பிளியும் இருந்தது. நான் படுத்துக்கொண்டே வாசித்தேன். டாக்டர் கே இரவுணவை அரைமணி நேரத்தில் சமைத்தார். இருவரும் அமைதியாக சாப்பிட்டோம். வெளியே காற்று மரங்களை சுழற்றிக்கொண்டு ஊளையிட்டது. ‘இப்ப உடனே கோயில்யானைகளை தடைபண்ணிடுவாங்கன்னு நான் நம்பலை. இது ஜனநாயக நாடு. நீதிமன்றத்திலே தேவாங்குகள் உக்காந்திருக்கு. மெல்லத்தான் ஆகும். ஆனா தொடங்கி வைப்போமே…எப்பவாவது வந்து சேர்ந்திருவாங்க…’ டாக்டர் சொன்னார்.

’அதுவரை இன்னொரு பிளான் வச்சிருக்கேன்…’என்றார் டாக்டர் கே. ‘வருஷத்துக்கு ஒருமுறை கோயில்யானைகளை பக்கத்துல இருக்கிற காடுகளுக்கு கொண்டுபோயி ஒரு மாசம் வச்சிருக்கிறது. ஒருமாசம் காட்டுக்குள்ள விட்டாலே போதும் யானை பயங்கரமா ரிக்கவர் ஆயிடும். அது வனமிருகம். காட்டுக்காக எது உள்ளுக்குள்ள ஏங்கிண்டிருக்கு. மரங்களையும் செடிகளையும் தண்ணியையும் பாத்தாலே அது உற்சாகமாயிடும்… ரிப்போர்ட்டைப் பாத்தேல்ல? கோயில் யானைகள் எப்பவுமே டென்ஷனா இருக்கு. பெரும்பாலான கோயில்யானைகளுக்கு கடுமையான டயபடிஸ் இருக்கு. அதுகளோட காலிலே புண்ணு வந்தா ஆறுறதே இல்லை’

டாக்டர் கே இன்னொரு செயல்திட்டம் தயாரித்திருந்தார். அரசுக்கு அதை சமர்ப்பணம் செய்யவிருந்தார். கோயில்யானைகளை காட்டுக்குக் கொண்டுவந்து பராமரித்து திருப்பி அனுப்புவதற்குண்டான நடைமுறைகள் செலவுகள் பொறுப்புபகிர்வுகள் எல்லாம் விரிவாக அதில் இருந்தன. வழக்கம்போல ஊசியிடைகூட பிழைகள் இல்லாத முழுமையான அறிக்கை. ’பாரீஸ் ஜூவுக்கு நான் ஒரு ரிப்போர்ட் குடுத்தேன். அதிலே இருந்துதான் நான் இதை உண்டுபண்ணினேன்’ நான் அப்போது மீண்டும் அவருக்கு அந்த கௌரவம் கிடைத்திருக்கலாமே என்று எண்ணினேன். அவரை இன்னும் மேலே கொண்டுசென்றிருக்கும். அவரது சொற்களுக்கு இன்னமும் கனம் வந்திருக்கும்

இரவு பத்துமணிக்கே படுத்துக்கொண்டேன். படுத்ததும் அந்த வெறுமையும் தன்னிரக்கமும் வந்து குளிர் போல என் மேல் அழுத்தி மூடின. மீண்டும் அழுதுவிடுவேனோ என்று பயமாக இருந்தது. கண்களைமூடிக்கொண்டு எதையெதையோ நினைத்தேன். களைப்பு காரணமாக அந்த நினைவுகள் நீள்வதற்குள்ளாகவே தூங்கிப்போனேன். மீண்டும் விழித்தபோது அறையில் வெளிச்சம் இருந்தது. டாக்டர் கே ஸ்வெட்டரை போட்டுக் கொண்டிருந்தார். நான் எழுந்து ‘டாக்டர்!’ என்றேன்.

‘வெளியே ஏதோ சத்தம் கேக்குது…யானை வாசமும் அடிக்குது’ என்றார். ‘யானைக்கூட்டம் வந்திருக்குமோ’ என்றேன். ‘வழக்கமா இந்தப்பக்கம் வராது. ஏதோ காரணம் இருக்கணும்’ என்று டார்ச்சை எடுத்துக்கொண்டார் . நான் எழுந்து என் ஸ்வெட்டரை போட்டுக்கொண்டு அவருடன் கிளம்பினேன். பூட்ஸ்களை போட்டுக்கோண்டு வெளியே இறங்கினோம். இருட்டு பெரிய கரிய திரைச்சீலை போல மாசு மறுவில்லாமல் இருந்தது. பின் அதில் சில கறைகள் தெரிந்தன. அந்தக்கறைகள் இணைந்து காட்டின் விளிம்பாகவும் மேலே வானமாகவும் ஆயின. பின் காட்டுமரங்களின் மொத்தையான இலைக்குவியல்கள் புடைத்து வந்தன.

ஆனால் அதற்குள்ளாகவே டாக்டர் கே யானையை பார்த்துவிட்டிருந்தார். ‘குட்டி’ என்றார். ’ரெண்டு வயசுக்குள்ள இருக்கும்’ ‘எங்க?’ என்றேன். ‘அதோ’ என்று சுட்டிக்காட்டிய இடத்தில் சில கணங்களுக்குப் பின் நானும் யானைக்குட்டியைக் கண்டேன். என் உயரம் இருக்கும் என்று தோன்றியது. சிறிய கொம்புகள் வெள்ளையாக தெரிந்தன. அதன் காதசைவைக்கூட காணமுடிந்தது. ‘இந்த வயசிலே தனியா வராதே’ என்றார் டாக்டர் கே ‘வா பாப்போம்’ இருட்டில் வெளிச்சத்தை அடித்தால் அதன்பின் சூழலையே பார்க்க முடியாது போகும் என்பதனால் இருட்டுக்குள்ளேயே சென்றோம். சில நிமிடங்களில் புல்லிதழ்கள் கூட தெரிய ஆரம்பித்தன.

யானைக்குட்டி மெல்ல பிளிறியபடி துதிக்கையை தூக்கி மோப்பம் பிடித்தது. ‘ஈஸி ஈஸி’ என்றார் டாக்டர் கே யானைக்குட்டி மெல்ல முன்னால் வந்தது. அது நொண்டுவது போலிருந்தது. ‘காயம்பட்டிருக்கு’ என்றேன். ‘ம்’ என்றார் டாக்டர் கே யானைக்குட்டி மீண்டும் நின்று ஜெர்ஸிபசு கத்தும் ஒலியில் பிளிறியது. மீண்டும் தள்ளாடியபடி முன்னகர்ந்தது. டாக்டர் கே என்னிடம் ‘நில்லு’ என்று சொல்லிவிட்டு அருகே சென்றார். அவர் அருகே சென்றதும் அது துதிக்கையை ஊசல் போல வீசி தலையை வேகமாக ஆட்டி அவரை வரவேற்றது. அவர் சென்று அதன் கொம்பில் தொட்டதும் அவர் தோள் மேல் அது தன் துதிக்கையை வைத்தது. துதிக்கை அவர் மேல் கனத்த பாம்புபோல சரிந்து இறங்கியது.

‘வா’ என்றார் டாக்டர் கே நான் அருகே சென்றேன். அவர் அந்த குட்டி யானையை தட்டித் தட்டி அமைதியாக்கினார். அது தன் சின்ன துதிக்கையை அவரை தாண்டி நீட்டி என்னை சோதனை போட முயன்றது. நான் பின்னால் நகர்ந்தேன். ’இவனை படுக்க வைக்கணும். இப்ப சொல்லி புரிய வைக்க முடியாது…’என்றார் ‘போய் என்னோட கிட்டை எடுத்துட்டு வா’ நான் அறைக்குள் ஓடிச்சென்று அவரது பெரிய மருத்துவப்பெட்டியை கொண்டு வந்தேன்

டாக்டர் கே அதன் வாயில் ஊசி போட்டார். கொஞ்ச நேரம் அது குட்டியானைகளுக்கே உரிய முறையிம் துதிக்கையை முன்னங்கால்களுக்கு நடுவிலிருந்து முன்பக்கம் வரை ஊஞ்சல் போல ஆட்டி முன்னும் பின்னும் உடலை அலைத்தது. தலையை பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டு என்னை பரிசோதனைசெய்ய சிலமுறை முயன்றது. பின்னர் அதன் ஆட்டம் தளர்ந்தது. மெல்ல பக்கவாட்டில் சரிந்து உட்கார்ந்து விழுந்து கால்களை நீட்டிக்கொண்டு படுத்தது. துதிக்கை வழியாக புஸ்ஸ் என்று மூச்சு சீறி என் விலா மேல் பட்டது

‘விளக்கு’ என்றார் டாக்டர் கே. நான் காட்டினேன். நினைத்ததேதான், மறுபடியும் பீர்புட்டி. இம்முறை அதன் கீழ் நுனி காலுக்கு வெளியே நீட்டித்தெரிந்தது. யானை அதிக எடையில்லாததனாலும் அதிக நாட்கள் ஆகாமல் இருந்ததனாலும் அது உள்ளே செல்லவில்லை. டாக்டர் அதை பிடித்து இழுத்து உருவினார். குருதி அவர் கையை நனைத்தது. அதன் விளிம்பை கையால் வருடி ‘உடைஞ்சு உள்ளே இல்லைன்னுதான் நினைக்கறேன்’ என்றார். இருந்தாலும் உள்ளே கைவிட்டு சதையை மென்மையாக வருடிக்கொண்டே இருந்தார். ‘வெல் அல்மோஸ்ட் க்ளீன்..ஹி இஸ் லக்கி’ என்றபின் பஞ்சை மருந்தில் நனைத்து உள்ளே செலுத்தி கட்டினார்.

’ஒரு மணி நேரத்திலே எந்திரிச்சிருவான்… காலையிலே முதுமலைக்கு திரும்பி போயிடுவான்’ என்றார் டாக்டர் கே. ‘முதுமலைக்கா?’ என்றேன். ‘ஆமா, அங்கே இருந்துதானே வந்திருக்கான். நீ இவனை பாத்திருக்கே’ ‘இவனையா?’ ‘ஆமா ஒண்ணரை வருஷம் முன்னாடி நாம முதுமலையிலே ஒரு யானைக்கு இதேமாதிரி முள்ளு எடுத்தோமே. அப்ப அந்த பெரிய மஞ்சணாத்தி மரத்தடியிலே நின்னது இவன்தான். அப்ப ரொம்ப சின்னக்குட்டி. எருமைக்குட்டி மாதிரி இருந்தான்..’ என்றார். ‘எப்டி தெரியும்?’ என்றேன். ’ஏன், அங்க பாத்த ஒரு மனுஷனை உன்னால திரும்ப பாத்தா சொல்லிட முடியாதா என்ன?’

டாக்டர் எழுந்து கைகளை பஞ்சால் அழுத்தி துடைத்து காகிதப்பைக்குள் போட்டார். ‘அவ்ளவு தூரம் உங்களை தேடியா வந்திருக்கான்… அமேசிங்!’ என்றேன். ‘பாவம் நல்ல வலி இருந்திருக்கு’ யானைகள் அடையாளங்களைக் கண்டுகொண்டு தேடிச்செல்வதைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். முந்நூறு கிலோமீட்டர் தூரம்கூட யானைகள் தேடிச் செல்வதுண்டு. அவை சிறு தகவலைக்கூட மறப்பதில்லை. ஆனாலும் முதுமலையில் இருந்து ஜீப்பில் திரும்பிய எங்களை அவை எப்படி கண்டுபிடித்தன என்று புரியவில்லை. எங்களை அவை காட்டுக்குள் நின்று வாசனை பிடித்திருக்கலாம். இங்கே முன்பு எப்போதோ வந்து பார்த்திருக்கலாம்.

ஆனாலும் ஒரு குட்டி அத்தனை தூரம் வந்தது பிரமிப்பூட்டியது. நாங்கள் மீண்டும் வீட்டுப்படியை அடைந்ததும் டாக்டர் கே காட்டை உற்றுப்பார்த்தார்ர் . இருளுக்குள் மெல்லிய இருளசைவுகள் உருவாயின. அந்த பெரிய யானைக்கூட்டமே அங்கே நிற்பதைக் காணமுடிந்தது. நான் விளக்கை அடிக்கப்போனேன், ‘நோ’ என்றார் டாக்டர். என்னால் அந்த கால் ஊனமான யானையை அதன் மெல்லிய கோணல் கொண்ட நடையை வைத்து அடையாளம் காணமுடிந்தது. அவை முன்னால் வந்து அரைவட்டமாக காதுகளை அசைத்துக்கொண்டு நின்றன.

‘வந்து கூட்டிண்டு போயிடும், வா’ என்று டாக்டர் சொல்லிக்கொண்டே திரும்பியபோது சட்டென்று இருபதுக்கும் மேற்பட்ட யானைப் பிளிறல்கள் ஒன்றாக இணைந்து பேரொலி எழுப்பின. என் உடல் சிலிர்த்துக் கூசி கண்கள் பொங்கி நிறைந்து வழிந்தன. நெஞ்சடைக்க கைகூப்பியபடி ஒரு சொல் மிச்சமில்லாமல் மனமிழந்து நின்றேன். யானைக்கூட்டம் துதிக்கைகளை தூக்கி வீசி சேர்ந்து மீண்டும் மீண்டும் பிளிறியது. ஆம், தேவதுந்துபிகள் முழங்கின! வான்முரசுகள் இயம்பின! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானைமுக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது
’வா’ என்று சொல்லி உள்ளே சென்றார் யானைடாக்டர்.

முற்றும்

Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433

Chapter 2 :  http://www.jeyamohan.in/?p=12435

Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439

முந்தைய கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 2
அடுத்த கட்டுரைதாயார்பாதம் முதலிய கதைகள்-கடிதங்கள்