பாவனைகள் -கடிதங்கள்

நீர் என்ன செய்தீர்

நமது பாவனைகள்

 

அன்புள்ள ஜெ

 

நமது பாவனைகள் ஒரு கூர்மையான குறிப்பு. நாம் தனிப்பட்ட முறையில் ஒரு வகையில் இருக்கிறோம். கூட்டமாக இருக்கையில் இன்னொருவகையான பாவனையை மேற்கொள்கிறோம். கூட்டமாக இருக்கும்போது தர்மம் நியாயம் என்றெல்லாம் பேசுவோம். தனியாக இருக்கும்போது ‘எது எப்படி என்றால் எனக்கென்ன?” என்ற நிலைபாடுதான். இந்த பாவனைகளைத்தான் நாம் முகநூலில் காட்டிவருகிறோம். தனிப்பட்டமுறையில் எந்த வகையிலும் நேர்மையாக இல்லாதவர்கள்தான் பொதுவெளியில் ஊருக்கே பஞ்சாயத்துசொல்பவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நமது சிந்தனைகள் முழுக்கமுழுக்க சாதி, மதம், குடும்பம் சாந்ததுதான். ஆனால் அதையே நியாயமாகவும் தர்மமாகவும் பொதுவெளியில் உருவம் மாற்றிக்கொள்கிறோம்

சாந்தகுமார்

 

 

இனிய ஜெயம்

நீர் என்ன செய்தீர் துவங்கி நமது பாவனைகள் வரை வாசித்தேன், முன்பு எப்போதோ வாசித்த நூலொன்றிலிருந்து உள்ளே தங்கியுள்ள சொல் நினைவில் எழுந்தது ‘சராசரிகளின் துயரம்’. சராசிகளுக்கும் துயரம் உண்டு அது சார்ந்த சராசரி அறக் கொதிப்பும் உண்டு. என்ன ஒரு அழகு எனில் இந்த அறக் கொதிப்பு இவர்களிடம் உள்ளது என்பதை இவர்களே நம்பவேண்டுமெனில் இந்த சராசரிகளுக்கு இம்மாதிரி ஏதேனும் துயரங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாக சென்று துயரப்பட்டுக்கொண்டே, உபரியாக அறச்சீற்றம் கொண்டபடியே இருப்பார்கள் [நம்மூர் காமெடிகமுநிஸ்ட் எழுத்தாளர்கள் போல].

மாறாக இந்தத் துயரம் உண்மையாகவே தீவிரமாகவே அவர்களின் மனசாட்சியை உரசும் துயரமாக இருப்பின் என்னாகும்? ஒன்று அது அவர்களை தத்துவம் நோக்கி அல்லது களப்பணி நோக்கி, அல்லது தற்கொலை நோக்கி வழியனுப்பி வைக்கும். இந்த தீவிரமின்மை கொண்ட சராசரிகளின் துயரம் சார்த்த மொண்ணை அறக் கேள்விக்குத்தான், தனக்கு மனசாட்சி உண்டு என்பதை தனது தற்கொலை கொண்டு அடிக்கோடிட்டு விடை சொல்லிவிட்டு சென்றார் கெவின் கார்டர்.

சிறுவயதில் ஒன்பதாம் வகுப்பில் என்று நினைவு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கல்விக் கண்காட்சியில் எனது பள்ளி சார்பாக நான் வரலாறு பகுதியில் பங்கு கொண்டு மூன்றாம் பரிசை வென்றேன். [ஆம் உருளைக்கிழங்கில் எரியும் பல்புக்கே முதல் பரிசு]. அதில் நான் உருவாக்கியது புகைப்பட கண்காட்சி. முன்பு முத்தாரம் என்றொரு வார இதழ் வரும்.அதில் வாராவாரம் நடுப்பக்கம் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுப் புகைப்படம் என்ற தலைப்பில் ஒரு படம் வெளியிட்டு, அதை எடுத்தவர்,அது குறிக்கும் வரலாறு சார்ந்த சிறு குறிப்பும் இடம்பெற்றிருக்கும். அதை சேகரிப்பது எனது வழக்கங்களில் ஒன்று. அந்த சேகரத்தைக் கொண்டு அமைத்த கண்காட்சியில் அதிகம் கவனம் பெற்றது கெவின் கார்ட்டர் எடுத்த இந்த காத்திருக்கும் கழுகு புகைப்படமே.

அந்த ஆண்டின் கோடை விடுமுறையில் எங்கள் வகுப்பின் வரலாற்று ஆசிரியை இல்லத்துக்கு சென்றிருந்த போது,அவர் இந்த புகைப்படம் சார்ந்து கிடைத்த அத்தனை குறிப்புகளையும் வெட்டி சேர்த்துவைத்த ஆல்பம் ஒன்றைக் கண்டேன். அந்த அளவு அவர் அந்த செய்தியை பின்தொடர்ந்திருக்கிறார். அதில் நான் கண்ட குறிப்பு ஒன்றில்,கெவின் அந்த புகைப்படம் எடுக்க நேர்ந்த சூழல் குறித்து விவரிக்கிறார்,அதில் அவர் புகைப்படம் எடுத்த அந்தக் குழந்தை, அங்கிருந்து புலம்பெயரும் அதன் குடும்பத்தால், டெட் வெய்ட் கணக்கில் கைவிடப்பட்ட குழந்தை என்று சொல்லி, அப்படி அக் குழந்தையை கைவிட்டு அகலும் அதன் குடும்பத்தை, அந்த குழந்தையை குவி மையமாக கொண்டு, குடும்பத்தை பின்னணியாக அவுட் ஆப் போகசிலும் வைத்து தான் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை வெளியிட்டு இருந்தார். முந்தய படத்தின் வலிமை முன்பு இந்தப் படமோ, அதன் அறச்சிக்கலோ நிலைக்க இயலவில்லை. அது சும்மா ஜிம்மிக்ஸ், கெவின் தான் செய்தது நியாயம்தான் என முட்டுக் கொடுக்க இப்படி ஏமாற்றுகிறார் எனும் ஒரே குரல் வழியே, அந்தப் பின்புலம் கடக்கப்பட்டது.

தனிமனித சாரம் என்ற ஒன்றில்லை. அவனுக்குள் அப்படி ஒரு கருதுகோளை அளிப்பது,அவனை சூழ இருக்கும் சமூக உறவுகளே என்பது செவ்வியல் மார்க்ஸியத்தின் அடிப்படைக் கருதுகோள்களில் ஒன்று. எனில் இந்தத் தற்கொலையை அவர்கள் என்ன சொல்வார்கள். சமூகத் தற்கொலை என்றா? பாவம் கெவின். அவருக்கு மட்டும் ஊழ் சரியாக இருந்து, ஒரு சரியான குரு அமைந்திருந்தால் அவர் இருத்தலின் உச்ச பட்ச சாத்திய கர்மம் எதுவோ அதை நிகழ்த்துபவராக இருந்திருப்பார். இந்தப் புள்ளியில் வைத்தே நான் டேவிட் அட்டன்பரோவை மதிப்பிடுவேன். நண்பர் வசம் டேவிட் குறித்து பேசுகையில் சொன்னேன் அவர் ஒரு ஞானி என்று. ரமணர் தன்னை குறித்துக் கூறுகையில், தன்னை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பவற்றுக்கு ”தான் ஒரு சாட்சி மாத்திரமே” என்று சொல்வார். எந்த ஆவணப் பட இயக்குனருக்கும் புகைப்பட காரருக்கும் அந்தப் பாதை அவரது தன்னரம் எனில், அவர் கைக்கொள்ள வேண்டிய ஒரே விதி இதுவே.

கலைஞன் எனில் அவன் நிலை முற்றிலும் வேறு, இன்னும் ஆழமானது. பட்டினி போடும் ஆண்டையும் அவனே,பட்டினி கிடக்கும் அடிமையும் அவனே, கைவிடும் தாயும், கைவிடப்படும் குழந்தையும், அதை உணவாக்கக் காத்திருக்கும் கழுகும்,அக் கழுகு கொண்ட பசியும்,இந்த அனைத்தயும் இக் கணம் சமைத்தளிக்கும் புடவி நெறி எல்லாம் அவனே. எனவேதான் அவன் கலைஞன். காலமெல்லாம் இத்தகு கலைஞன் வசமும் ஆவணப் பதிவாளன் வசமும் இந்த சராசரிகள் கொண்ட சராசரித் துயரம் கிளர்த்தும் சராசரி அறச் சீற்றக் கேள்விகள் வீசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

கொண்ட கலை வழியே தன்னை அறிந்தவன் இவற்றைக் கடந்து செல்கிறான் . அறியாதவன் ‘படித்துப் பயன்பெறும் ‘வண்ணம் மக்கள் இலக்கியத்தைப் படைக்கப் போக வேண்டியதுதான்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29
அடுத்த கட்டுரைபழைய முகங்கள் -கடிதங்கள்