‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25

தன் மைந்தர்கள் போருக்கு வருவார்கள் என்று சகுனி எண்ணியிருக்கவில்லை. அதன்பொருட்டே அவர்கள் காந்தாரத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்திருந்தும்கூட அவ்வண்ணம் எப்படி எதிர்பார்க்காமலிருந்தோம் என எண்ணி எண்ணி அவர் வியந்துகொண்டார். அவர்களை அவருடைய அகம் இளைஞர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதை பின்னர் கண்டடைந்தார். அவர்களை போர்க்களத்தில் நிறுத்திப்பார்க்க முயன்றும் அவரால் இயலவில்லை. ஆனால் போருக்கு எழுவதற்கு முந்தைய நாட்களில் போருடன் இறப்பும் இணைந்துள்ளது என்பதே அவர் உள்ளத்தில் இருக்கவில்லை. எவருடைய இறப்பையும் அவர் எண்ணவில்லை.

அவருக்கு மட்டுமல்ல அஸ்தினபுரியில் அனைவருக்குமே அன்று போர் நெடுநாட்களாகக் காத்திருந்த ஒரு திருவிழாவாகவே உள்ளத்தில் இருந்தது. தாங்கள் திரும்பாமலாகக்கூடும் என அவ்வப்போது வெவ்வேறு உணர்ச்சிகளுடன் அவர்கள் சொல்லிக்கொண்டாலும்கூட எவரிடமும் துயர் இருக்கவில்லை. ஏனென்றால் எவருமே தாங்கள் மெய்யாகவே களம்படக்கூடும் என நம்பவில்லை. பெண்கள் விழிநீர் சிந்தினர். ஆண்கள் தேற்றினர். சூதர்கள் களப்பலியின் பெருமையைப் பாடினர். மூதாதையரின் நடுகற்களுக்கு குடியுடன் சென்று நீர்மலர் அளித்தனர். ஆயினும் எவரும் தங்கள் இறப்பை கற்பனை செய்யவில்லை. மானுடரை ஏமாற்றி அள்ளிக்கொண்டுசெல்லும் மாயக்காற்று அங்கே நிறைந்திருந்தது.

போருக்கு படைகள் எழுந்தபோது அவர் தொடர்ச்சியாக அமைச்சுநிலைகளிலேயே இருந்தார். ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான ஆணைகளை பிறப்பிக்கவேண்டியிருந்தது. முன்னரே இருந்த அஸ்தினபுரியை பெயர்த்து எடுத்துக்கொண்டுசென்றபின் அங்கே பிறிதொரு அஸ்தினபுரியை நிறுவவேண்டியிருந்தது. புதிய நெறிகளுடன், புதிய அமைப்புடன். அதை கற்பனையிலேயே முழுமையாக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அமைத்தபின் அதை பிழைச்செம்மை செய்ய அங்கே அவர் இருக்கப்போவதில்லை. அப்போதுதான் அவரைப் பார்க்க உலூகனும் இளையவர்களும் அமைச்சுநிலைக்கு வந்தனர். அவர் ஒற்றர்கள் கொண்டு வந்த ஓலைகளை நோக்கிக்கொண்டிருந்தார். பாண்டவப் படையின் கணக்குகள் அவை. அவர் எதிரே கணிகர் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு செய்தியாக நோக்கி தன் எண்ணங்களை அவர் சொல்ல கணிகர் ஏற்றோ மறுத்தோ ஓரிரு சொற்கள் சொன்னார். துணையமைச்சர்கள் அவற்றை எழுதிக்கொண்டனர்.

மைந்தர்கள் வந்திருப்பதாக ஏவலன் சொன்னபோது “வரச்சொல்” என்று அவர் இயல்பாக சொன்னார். அதன் முழுப்பொருளை உள்ளம்கொள்ளவில்லை. பாண்டவப் படைகளில் அசுரர்கள் மிகுந்திருப்பது நன்றா தீதா என்றே உள்ளம் மயங்கிக்கொண்டிருந்தது. உலூகன் உள்ளே வந்து வணங்குகையில் விழிதூக்கி நோக்கியபோதும் அவனை அடையாளம் காணவில்லை. அவன் உடலெங்கும் கவசங்கள் அணிந்திருந்தான். வணங்கி எழுந்தபோது அவன் அசைவுகளைக் கண்டு அவர் அகம் திடுக்கிட்டுவிட்டிருந்தது. பின்னரே அவனை அடையாளம் கண்டார். அறியாமல் அவர் விழிகள் கணிகரை நோக்கின. அவருடைய சிறிய எலிவிழிகள் மின்னிக்கொண்டிருக்கக் கண்டு அவருடைய ஆழம் அச்சம் கொண்டது. மறுகணம் அது சினமாக மாற அவருடைய முகம் சிவந்து கண்களில் நீர்மை படிந்தது. “என்ன?” என்றார்.

உலூகன் “தந்தையே, வாழ்த்துக! எங்கள் முதல் போருக்காக எழுகிறோம்” என்றதும்தான் திகைத்து “யார்?” என்றார். உடனே உளம் அமைந்து “என்ன?” என்றார். “ஆயிரத்தவரின் பொறுப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள், தந்தையே. முதல் அணியுடன் இன்றே கிளம்புகிறோம்” என்று உலூகன் சொன்னான். அவர் “போருக்கா?” என்றார். உலூகன் ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய விழிகள் மீண்டும் கணிகரை நோக்கின. அவர் முகத்தில் புன்னகை இருந்தது. ஆனால் விழிகள் ஒரு சுவடியில் பதிந்திருந்தன. நடுங்கும் கைகளால் அவர் அவனை வாழ்த்தினார். மைந்தர்கள் உள்ளே வந்து வாழ்த்து கொண்டனர். அவர்கள் சென்றபின் கையில் சுவடியுடன் சகுனி திகைத்தவராக அமர்ந்திருந்தார்.

கணிகர் “மைந்தர்களை இருமுறை அவைகளில் கண்டிருக்கிறேன். உங்கள் உருவையே கொண்டிருக்கிறார்கள்” என்றார். சகுனி “ஆம்” என்றார். “தந்தையரின் உருவை மைந்தர்கள் கொள்வது இயல்பே. ஆனால் தந்தையர் இவ்வண்ணம் பல்கிப்பெருகுவது நன்றல்ல என்பார்கள்” என்றார் கணிகர். “யார் சொல்வது அதை?” என சகுனி சீற்றத்துடன் கேட்டார். “அவ்வண்ணம் நூல்நெறி ஏதுமில்லை. எளிய சூதர்கள் சொல்வது. மைந்தர் பெருகக் கண்டால் தெய்வங்கள் பொறுப்பதில்லை என்கிறார்கள்” என்றார் கணிகர். அஞ்சியவர்போல கையை நீட்டி “அச்சொல்லில் எப்பொருளும் இல்லை. அது பழைய கிழவிகளின் கூற்று” என்றார் சகுனி. “மாமன்னர் திருதராஷ்டிரர் மேல் நுண்வஞ்சம் கொள்ளாதவர் இங்கே குறைவு. அரசும் செல்வமும் புகழும்கூட மைந்தர்ப்பெருக்கம்போல் பொறாமையை கிளப்புவதில்லை.”

மேலும் பேச விழையாமல் சகுனி எழுந்துகொண்டார்.  “எஞ்சியவற்றை நீங்களே நோக்கி அனுப்பிவிடுங்கள், கணிகரே” என்றபின் நடந்தார். கணிகர் அவருக்குப் பின்னால் “ஓய்வெடுங்கள், காந்தாரரே. நாளை நீங்களும் கிளம்புகிறீர்கள். மைந்தர் முன்னரே செல்கிறார்கள்” என்றார். பொருள்கொள்வதற்கு முன்னரே அச்சொற்கள் சகுனியின் உடலை பதறச்செய்தன. அவர் திரும்பி நோக்காமலேயே நடந்தார். கணிகர் அவருக்குப் பின்னால் புன்னகைத்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். தேரில் ஏறி அமர்ந்தபின்னர்தான் சீற்றம் எழுந்து உடலை எரியச்செய்தது. இக்கீழ்மகனை என்று நான் என்னுடன் கூட்டிக்கொண்டேன்? ஏன்? இவன் வந்து நிரப்பும் அளவுக்கு என்னிடம் இருந்த இடைவெளிதான் என்ன?

கீழ்மைதான் என சகுனி எண்ணிக்கொண்டிருந்தார். நான் சென்றடையவேண்டிய இருள்வெளியை கண்டுவிட்டேன். அங்கே ஏறிச்செல்ல ஊர்தி ஒன்று தேவைப்பட்டது எனக்கு. நான் இங்கிருந்து அங்கே செல்பவன். அவர் அங்கிருந்து இங்கு வந்தவர். கணிகரை மறக்க விழைந்தார். மறக்க விழைவனவற்றை பெருக்குவதே உள்ளம் என உணர்ந்து மீண்டும் மது அருந்தினார். இரவெல்லாம் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தார். அஸ்தினபுரி எரிபற்றிக்கொண்டதுபோல் ஒளி நிறைந்திருந்தது. பல்லாயிரம் பந்தங்களின் நிரைகளாக கௌரவப் படைப்பிரிவுகள் நகரில் ஒழுகின. ஒற்றைநோக்கில் படர்ந்தெழும் தீ. விழிதுலங்குகையில் படைப்பிரிவுகள் இணைவதையும் பிரிவதையும் காணமுடிந்தது.

அவர் அந்த ஓநாயின் ஓசையை கேட்க விழைந்தார். இத்தனை எரியையும் அது அஞ்சுவதில்லை. இப்போது கிளம்பி காட்டுக்குள் சென்றால்கூட அதை காணமுடியும். மேற்குவாயிலுக்கு அப்பால் குறுங்காட்டில் அது புதர்களுக்குள் விழிமின்ன பிடரிமயிர் சிலிர்க்க நின்றுகொண்டிருக்கும். எங்கோ பாலைநிலத்தில் வயிறொட்டி இறந்தது. உடல் உலர்ந்து சருகாகி மணலில் எஞ்சியது. இங்கே தேவையானபோது பிற ஓநாய்களின் விழிகளில் எழுந்துகொள்கிறது. அவர் பெருமூச்சுவிட்டார். மைந்தர்கள் களம் எழுகையில் ஒரு நற்சொல்லை சொல்லியிருக்கலாம். தந்தை நாவிலிருந்து ஒரு வாழ்த்துகூட அவர்கள் பெறவில்லை. இங்கே அத்தனை தந்தையரும் நீளாயுள் பெறுக என்றே மைந்தரை வாழ்த்துகிறார்கள். உண்மையில் அனைவருக்குள்ளும் அவ்வெண்ணம் ஒரு நடுக்காக குடியேறியிருக்கிறது. அவர் அதை எண்ணியபோது அச்சொற்கள் மிக அயலென ஒலித்தன.

போருக்குக் கிளம்புவதற்கு முன் ஓர் எண்ணம் வந்தது. அந்தச் செவிலியை சந்திக்கவேண்டும். ஆனால் அவள் பெயரை அவர் அறிந்திருக்கவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா? அவள் பரத்தையா அல்லது பேற்றுச்செவிலியா? முன்னாள் பரத்தையரே சிறந்த பேற்றுச்செவிலியர் என்று அவர் அறிந்திருந்தார். ஏன்? அவர்களுள் கனிவது என்ன? பேற்றுச்செவிலியர் நல்லொழுக்க நெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் சொல்வார்கள். இறுக்கிக் கட்டப்பட்ட ஒன்று நெகிழ்ந்துவிட்ட பின்னர் அவ்வாறு ஆகிறார்களா? மானுட உடலை முதலில் கைதொட்டு எடுக்கும் தகுதியை அவ்வண்ணம் பெறுகிறார்களா? அவளைச் சென்று பார்க்கவேண்டும். ஆனால் எவ்வண்ணம் உசாவுவது? ஆயினும் அவர் அறிந்திருந்தார். அவளை சந்திப்போம் என. அவ்வண்ணமே அது முடியக்கூடும் என. அவர் தன் ஏவலனிடம் “ஒரு பரத்தையை நான் சந்திக்கவேண்டும். அவள் உலூகனின் அன்னைக்கு பேறு எடுத்தவள்” என்றார்.

முதிய ஏவலன் தலைவணங்கி “காந்தாரரே, அவள் பெயர் சுகிர்தை. முதியவள். இங்கே தெற்குச்சோலையில் தங்கியிருக்கிறாள்” என்றான். “அவள் இன்னமும் பேறு எடுக்கிறாளா?” என்றார் சகுனி. “இல்லை இளவரசே, அவள் முதுமைகொண்டுவிட்டாள். சென்ற பத்தாண்டுகளாக சொல்லடங்கி தன்னுள் ஒடுங்கிவிட்டாள். தெற்குச்சோலையில் அவளுக்கான தவக்குடிலை அரசர் அமைத்து அளித்தார்” என்றான். “என்னை அவளிடம் அழைத்துச்செல்” என்று சகுனி சொன்னார். முதிய ஏவலன் அதனால் வியப்படையாதவனாகத் தோன்றினான். அவளைப்பற்றி அவர் கேட்கக்கூடும் என காத்திருந்தவன்போல. தலைவணங்கி “ஆணை” என்றான்.

படைகள் கிளம்பிக்கொண்டிருந்த புலர்காலையில் சகுனி ஏவலனுடன் சிறுதேரில் தெற்குச்சோலைக்கு சென்றார். தெற்குக்கோட்டைக்கு வெளியே அந்த வேளையில் நினைவுக்கற்களுக்கு பூசனை மேற்கொள்ளச் செல்பவர்களும் இடுகாட்டுப்பூசைகள் முடித்து திரும்புபவர்களுமாக சாலை நிறைந்திருந்தது. ஆனால் கிளைச்சாலை திரும்பியதும் அமைதியான குறுங்காடு சூழ்ந்துகொண்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த தவச்சோலைகளில் முனிவர்கள் தங்கியிருந்தனர். அப்பால் சென்ற ஒற்றையடிப்பாதை சென்றடைந்த அன்னையர் காட்டில் தவம் மேற்கொண்ட முதுமகள்கள் மட்டுமே இருந்தனர். புராணகங்கையிலிருந்து அஸ்தினபுரியை வளைத்து வந்து கங்கை நோக்கி செல்லும் சிறிய ஓடை அவ்வழியே நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் ஒருவர் மட்டுமே தங்குமளவுக்கு சிறிய புற்குடில்கள் நிரையாக அமைந்திருந்தன. கீழே விழுந்த குருவிக்கூடுகள் போலிருந்தன. அவற்றில் ஒன்றில் சுகிர்தை இருந்தாள்.

தேரை சாலையில் நிறுத்திவிட்டு ஆற்றங்கரையோரமாகச் சென்ற சிறுபாதையில் நடந்து அவர்கள் அக்குடிலை சென்றடைந்தனர். செல்லும் வழியெங்கும் சடை நீண்ட தவத்தன்னையர் சிற்றில் திண்ணைகளில் அமர்ந்திருப்பதை சகுனி கண்டார். ஆற்றங்கரை மரநிழல்களில் சிலர் அமர்ந்திருந்தனர். ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட நிலையில் ஒருவரையும் காண இயலவில்லை. அவர்கள் அனைவரும் அவளே என்று உள்ளம் மயங்கியது. அனைத்து விழிகளிலும் இருந்தது ஒன்றே. சிறுகுடிலின் திண்ணையில் இரு கைகளாலும் விழிதிறந்த மயிற்பீலி ஒன்றைப் பற்றி மடியில் வைத்தபடி விழிமூடி ஊழ்கத்திலிருந்தாள் ஒரு முதுமகள். இசையில், இன்கனவில் இருப்பதுபோல் அவள் முகம் மலர்ந்திருந்தது. அவளைக் கண்டதும் ஏவலன் அருகே சென்று அவர் வருகையை அறிவித்தான். அவள் புன்னகையுடன் விழிதிறந்து அவரைக் கண்டு அருகே வரும்படி கையசைத்தாள்.

அவர் திகைத்து நின்றார். “அவளா?” என்று ஏவலனிடம் கேட்டார். “ஆம், அவரேதான்” என்றான். அவர் விழிகளை ஏற்காமல் நின்றுகொண்டே இருந்தார். அவள் தலைமுடி நரைத்து சடைத்திரிகளாக தொங்கியது. தோல் சுருங்கி வண்ணமிழந்து மரப்பட்டைபோல் ஆகியிருந்தது. மங்கிய மரவுரியை அணிந்திருந்தமையால் அவள் தொன்மையான அடிமரம்போல் தோன்றினாள். சுருக்கங்கள் அடர்ந்த முகத்தில் பற்களற்ற வாய் உள்மடிந்திருந்தது. சாணிமெழுகிய சற்று உயரமான திண்ணையில் விரிக்கப்பட்ட தர்ப்பைப்புல் மேல் கால்களை மடித்து அமர்ந்திருந்தாள். அவள் அவரை மீண்டும் அருகே வரும்படி அழைக்க அவர் திகைத்து பின்னடி வைத்தார். அதைக் கண்டு அவள் புன்னகைத்தபோது அவர் அவளை கண்டுகொண்டார். அவர் அறிந்த அப்புன்னகை. பற்கள் முற்றாக உதிர்ந்த பின்னரும் அது அவ்வண்ணமே மலர்ந்தது. அவர் அறியாமல் மெய்ப்புகொண்டார். கைகளை கூப்பிக்கொண்டு அருகணைந்தார்.

அருகே சென்றபோது அவர் அவள் விழிகளை கண்டார். அவர் நன்கறிந்த அவள் விழிகள் என ஒருகணம் காட்டின. அவர் அறிந்த பல்வேறு விழிகளை நினைவுகூரச் செய்தன. பின்னர் மிக அறிந்த ஒரு விழியாக மாறின. அவர் அவளை அணுகினார். அவளிடம் ஏதும் கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை. அவளும் அவர் பேசவேண்டும் என்பதுபோல் பேசாமல் அமர்ந்திருந்தாள். சொல்லின்மையில் அவள் மூழ்கி நெடுநாட்களாகியிருக்கவேண்டும். சகுனி வணங்கிவிட்டு பின்னடி வைத்தார். உடல்திரும்பிய கணத்தில் அகத்தே ஒன்று உடைய திரும்பி அருகே சென்று முழங்கால் மடித்து நிலத்தமர்ந்து அவள் கால்களில் தன் தலையை வைத்தார். அவள் தன் மெலிந்த கைகளை அவர் தலைமேல் வைத்தாள்.

அனல்பட்டு வெந்து காந்தித்துடிக்கும் மென்தோல்மேல் மிகக் குளிர்ந்த தைலமென அக்கைகள் தொட்டன. அவர் தலைக்குள் கொதித்து நுரைத்து வெம்மை உமிழ்ந்த குருதி அக்கணமே தண்மை கொண்டு அமைந்தது. குளிர் நரம்புகளில் பரவி உடலை மெய்ப்புகொள்ளச் செய்தது. கைவிரல் நுனிகள் குளிர்ந்து உடலில் நடுக்கு எழுந்தது. இமைகள் நனைந்தவைபோல் எடைகொண்டு விழிகளை மூட, மூச்சு உரத்து சீரடைய, தாடை தளர்ந்து வாய் தழைய, உடலெங்கும் இனிய களைப்பு எழ அவர் நுண்துயில்கொண்டார். ஒருகணம்தான் அத்துயில் நீடித்திருக்கவேண்டும். உடனே விழித்தெழுந்தார். மீண்டும் கைகூப்பியபின் பின்னடி எடுத்து வைத்து ஏவலனை அணுகி செல்வோம் என கைகாட்டிவிட்டு நடந்தார்.

தேர் வரைக்கும்கூட அவரால் நடக்க இயலவில்லை. தசைகள் அனைத்தும் நாண்தளர்ந்திருந்தன. பல இடங்களில் தள்ளாடி விழப்போனார். ஏவலன் அவரை நோக்கியபோதும் பற்ற வரவில்லை. காட்சிகளெல்லாம் மெல்லிய எண்ணைப் படலத்தால் மூடப்பட்டிருந்தன. ஒலிகள் நீருள் என ஒலித்தன. உடலுக்குள் மணியொலித்தபின் எழும் ரீங்காரம் என ஓர் மூளல் நிறைந்திருந்தது. தேரிலேறியதுமே பீடத்தில் மல்லாந்து அக்கணமே துயில்கொண்டார். விழித்தெழுந்தபோது தேர் அவருடைய அரண்மனை முகப்பில் நின்றிருந்தது. எச்சில் வழிந்து மடியில் சொட்டியிருந்தது. அவர் இறங்கி தன் மஞ்சம் வரை செல்வதற்குள் பல இடங்களில் சுவர்களையும் தூண்களையும் பற்றிக்கொண்டார். மஞ்சத்தில் படுத்ததுமே புதைந்து அன்னைக்கருவில் குழவியென துயிலில் ஆழ்ந்தார்.

அவர் ஓர் இரவும் இரண்டு பகல்களும் துயின்றார். பல நாட்கள் அவர் துயில்கொள்ளாமலிருந்தமையால் அதை ஏவலர் நன்றென்றே நினைத்தனர். அவருடைய ஆணைகள் அஸ்தினபுரியில் சுழன்றுகொண்டே இருந்தன. அதற்கேற்ப படைகள் அஸ்தினபுரிவிட்டு கிளம்பின. மூன்றாம் நாள் அவரை ஏவலன் எழுப்பியபோதுதான் விழித்தார். ஒவ்வொன்றும் கழுவி வைத்ததுபோல் ஒளிகொண்டிருந்த உலகம் அவரை சூழ்ந்திருந்தது. மலரிதழ் உதிரும் ஒலியும் கேட்கும் அளவுக்கு செவி கூர்கொண்டிருந்தது. நகரில் அத்தனை பறவைகள் இருக்கின்றனவா? அவை ஒவ்வொரு கணமும் அத்தனை ஒலிகளை எழுப்பிக்கொண்டிருக்கின்றனவா? அங்கிருக்கும் முழக்கத்தை சற்றும் பொருட்படுத்தாமல் அவை உரையாடிக்கொண்டிருக்கின்றனவா?

அவர் எழுந்தபோது எங்கோ வெண்கல மணி ஒன்று ஒலித்தது. அதன் இனிமையின் குழைவில் அவர் உளம் நெகிழ்ந்து விழிநீர் மல்கினார். ஏவலன் கொண்டுவந்த குளிர்நீர் உடலை மென்மையாகத் தொட்டு ஆற்றியது. அவன் அளித்த இன்னீர் உடலெங்கும் இனித்தது. பெருகிநிறைந்திருந்த ஒளி, இனிய காற்று, முகிலற்ற நீலவானம், மாளிகைமுகடுகளின் வெண்மொழுக்கு, அவற்றின் உச்சியில் பறந்த கொடிகளின் துடிப்பு ஒவ்வொன்றும் பேரழகு கொண்டிருந்தது. உருண்ட தூண்களின் வளைவில் ஒளிபடிந்து உருவான மெருகைக் கண்டு உளம் மலர்ந்து அவர் நின்றுவிட்டார். ஏவலன் அருகணைந்து  “இளவரசே” என்ற பின்னர்தான் திகைத்து விழித்துக்கொண்டார். அந்த முதிய ஏவலனை அன்றென நோக்கினார். ஒரு தசைகூட மிகையில்லாமல் செதுக்கப்பட்ட சிறிய உடல்கொண்டிருந்தான். பணிவு நிறைந்த கண்களுக்கு அடியில் அவன் தன் நெறிகளில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டவன் எனத் தோன்றினான். “சுபகரே, என் தேர் ஒருங்குக!” என்றார். அவன் முகத்தில் வியப்பு தோன்றவில்லை. ஆனால் அவன் பெயரை முதல்முறையாக சொல்கிறோம் என உணர்ந்து சகுனி வியப்பு கொண்டார். பின்னர் தனக்கே என புன்னகை செய்துகொண்டார்.

அவர் அரண்மனைக்குச் சென்றபோது கனகர் அமைச்சறையில் அமர்ந்து கற்றுச்சொல்லிகளுக்கு ஆணைகளை சொல்லிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் “வணங்குகிறேன், காந்தாரரே. அரசர் பலமுறை தங்களை உசாவினார். ஓய்வெடுக்கிறீர்கள் என்றார்கள்” என்றார். “உங்களுக்கான அனைத்தும் ஒருங்கிவிட்டன. தோல்கூடாரம், படைத்தேர், பயணத்தேர், அணுக்கர், ஏவலர், அகம்படியர் அனைத்தையும் இருமுறை சீர்நோக்கிவிட்டேன். செல்லும் வழியில் ஒற்றர்கள் வந்து தங்களிடம் அறிக்கை கொள்வார்கள்.” சகுனி “நன்று” என்றார். அனைத்தையும் முன்னரே பேசிவிட்டிருந்தாலும் அப்போது ஏதேனும் பேசவேண்டியிருக்கிறது அவருக்கு என தெரிந்தது. கனகர் “நன்றாக ஓய்வெடுத்துவீட்டீர்கள் என்றனர்” என்றார். “நான் படை கிளம்பிய பின்னர்தான் துயில்கொள்ள முடியும்.” சகுனி புன்னகை புரிந்தார்.

“நாளை விடியற்காலையில் அரசர் கிளம்புகிறார். உடன் உடன்பிறந்தாரும் கிளம்புகிறார்கள். தாங்களும் அவர்களுடன் செல்லப்போவதாக திட்டம்” என்று கனகர் சொன்னார். “இன்று முழுக்க ஆலயம் தொழுகைகள். எத்தனை தெய்வங்கள் இந்நகரில்! காவல்தெய்வங்கள், குடித்தெய்வங்கள், நீத்தார், மூத்தார். தவிர நடுகல்லென நின்ற வீரர். போரிலன்றி நினைவுகூரப்படாத தெய்வங்கள் நூற்றுக்கும் மேலே.” குரல் தழைய “கணிகர் மருத்துவநிலையில் இருக்கிறார். கடுமையாக நோயுற்றிருக்கிறார்” என்றார். சகுனி ஒன்றும் சொல்லவில்லை. “நீங்கள் அவரிடம் விடைபெறுவதாக இருப்பின்…” என்று சொல்லிய கனகர் மேற்கொண்டு பேசாமல் அமைதியானார். சகுனி “நான் என் கவசங்களை பிறிதொருமுறை பார்க்கவேண்டும். காந்தாரப் படையினர் குறித்த செய்திகளை எனக்கு தனியாக அனுப்புக!” என எழுந்துகொண்டார். விழிகள் மாறுபட “அவ்வண்ணமே” என்றார் கனகர்.

படைபுறப்பாடு நிகழ்ந்தபின் சகுனி ஒரு சொல்லும் பேசவில்லை. ஒவ்வொருநாளும் ஒற்றர்களை அழைத்து ஓரிரு சொற்களில் ஆணைகளை மட்டும் அளித்தார். புதியன என எதையுமே செய்யவேண்டியிருக்கவில்லை. பெரும்பாலான பொழுதுகளில் தேரில் அமர்ந்து இரு பக்கமும் ஒழுகிச்செல்லும் விரிந்த நிலத்தை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். குறைவாகவே உணவருந்தினார். பெரும்பாலான பொழுதுகளில் தேரிலேயே அரைத்துயில்கொண்டார். துரியோதனனும் கௌரவர்களும் படைபுறப்பாட்டை ஒரு திருவிழாவென ஆக்கிவிட்டிருந்தார்கள். நாள்தோறும் காலையில் மற்போரும் படைக்கலப்போட்டிகளும் நிகழ்ந்தன. அந்திகளில் சூதர்கள் பாடி ஆடினார்கள். பின்னர் நெடும்பொழுது உண்டாட்டு நிகழ்ந்தது. காலையில் படை கிளம்பியபின் கௌரவர்கள் அனைவரும் அரைத்துயிலில்தான் தேரிலும் புரவியிலும் அமர்ந்திருந்தார்கள்.

அஸ்தினபுரியிலிருந்து கிளம்பிய நான்காம் நாள் அவருடைய படைகள் முன்னால் சென்ற படைகளுடன் இணைந்துகொண்டன. மறுநாள் உலூகன் தன்னுடன் இன்னொருவனை அழைத்தபடி அவரை பார்க்க வந்தான். ஓங்கிய உடல்கொண்ட அசுரகுலத்து இளைஞனை ஏற்கெனவே கண்டிருக்கிறோம் என சகுனி எண்ணினார். அவர் தன் பாடிவீட்டின் முன் பீடத்தில் வெறுமனே மரங்களை நோக்கியபடி அமர்ந்திருந்தார். உலூகன் அருகே வந்து வணங்கி “இவர் என் அன்னை வயிற்றில் பிறந்த இளையவர். விருகாசுரர் என இவரை அழைக்கிறார்கள்” என்றான். சகுனி திகைப்புடன் எழுந்துவிட்டார். “உன் அன்னை…” என்றார். விருகன் அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தலையைத் தொட்டு வாழ்த்தினார். “உன் அன்னை எங்கே?” என்றார். “பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்மறைந்துவிட்டார்” என்றான் விருகன். மேலும் அவன் சொல்வான் என அவர் எதிர்பார்த்தார். அவனும் சொல்லின்மை பழகியவனாக இருந்தான்.

சகுனி பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டார். “என் அன்னை உங்களைப்பற்றி என்னிடம் எதுவும் சொன்னதில்லை. அன்னை மறைந்த பின்னர் எங்கள் குடித்தலைவரிடமிருந்தே நான் உங்கள் மைந்தன் என்பதை அறிந்தேன். இப்போர் தொடங்கும் செய்தியை சில நாட்களுக்கு முன்னர்தான் தெரிந்துகொண்டேன். அஸ்தினபுரிக்கு கிளம்பினேன். அங்கிருந்து நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்பதனால் தொடர்ந்து வந்தேன்” என்றான். “இது உன் போர் அல்ல” என்று சகுனி சொன்னார். “உன் அன்னை நீ செய்வதை விரும்பியிருக்கமாட்டாள்.” விருகன் “ஆம்” என்றான். “ஆனால் நான் என் அன்னைக்கு உகந்ததை மட்டுமே செய்யவேண்டியவன் அல்ல. தந்தைக்குப் போர் எனில் மைந்தன் உடன் நின்றாகவேண்டுமென்பது அசுரர்களின் நெறி. என் குடிநெறியே எனக்கு முதன்மையானது.” சகுனி நீள்மூச்செறிந்து “நன்று” என்றார். அவர்கள் தலைவணங்கி திரும்பிச் சென்றனர்.

அவர்களை எண்ணங்களிலிருந்து விலக்க முயன்றார். ஆனால் எண்ணங்களே விசையழிந்து கிடந்தமையால் அவர்களைப்பற்றிய எண்ணங்களும் கூர்கொள்ளவில்லை. கைவிடப்பட்ட பொருள் என அவருக்குள் அவை கிடந்தன. ஒருமுறை அப்பால் சென்றுகொண்டிருந்த அவர்கள் இருவரையும் தன் குடில்வாயிலில் அமர்ந்து அறியாமல் நோக்கியபோது உளத்திடுக்கிடலை அடைந்தார். விருகனின் உடலசைவுகளில் அவர் தன்னை கண்டார். அவனுடைய தோற்றத்தில் அவர் சற்றும் தென்படவில்லை. அவன் தன் அன்னையைப் போலவும் இருக்கவில்லை. அவனுடைய குடியின் பொதுத் தோற்றத்தையே கொண்டிருந்தான். அவர் அவனை மீண்டும் மீண்டும் உற்று நோக்கிக்கொண்டு நின்றார். அது மெய்யா உளமயக்கா? அவன் தன் அன்னையால் எடுத்துச்செல்லப்பட்டபோது விழிதெளியாத மகவு. அவ்வெண்ணம் வந்தபின் தன்னை உலுக்கி உலுக்கி விலக்கியபடி மீண்டும் நோக்கினார். அவன் நடையில் அவர் இருந்தார். உலூகனில் எழுந்த அவரைவிட தெளிவாக.

பதினெட்டாம் நாள் போரின் கரிய காலையில் இருள் விலகத் தொடங்கியபோதே சகுனி மைந்தருக்காகக் காத்து நின்றிருந்தார். படையின் ஏவலர் எவரிடமேனும் செய்தி சொல்லலாமா என விழிகளால் துழாவினார். படைவீரர் எவரையுமே முகமறிய முடியவில்லை எனத் தோன்றியது. இருண்ட உடல்கள் இருளில் அசைந்துகொண்டிருந்தன. அவ்வசைவுகளுக்குள் அவர் அவர்களின் அசைவுகளை பிரித்தறிந்தார். அவர் அகம் படபடக்கத் தொடங்கியது. உவகையா அச்சமா என்று அறியாத அப்படபடப்பை அவர் விந்தையென நோக்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அணுகி வந்தனர். அவர் அவர்கள் தன்னை பார்த்துவிட்டதை அறிந்ததும் நோக்கை விலக்கிக்கொண்டு கவசங்களை அணியத் தொடங்கினார். அவர் கவசத்தை எடுத்ததுமே அணுகிவந்த ஏவலன் அதை வாங்கி அவருக்கு அணிவிக்கலானான்.

உலூகன் புரவியில் இருந்து இறங்கி அவரை அணுகி நின்றான். அவன் வழக்கமாக ஒரு சொல்லும் உரைப்பதில்லை என்றாலும் அன்று அவர் அவனிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்தார். விருகன் அவனுக்குப் பின்னால் வந்து நின்றான். அவர் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு தனக்குத்தானே பேசுவதுபோல “இந்தப் போர் இன்றுடன் முடிவடையும். இது எவ்வண்ணமும் இதற்குமேல் நீள முடியாது… இரு பக்கமும் இன்றைய போரைக் கடந்து எஞ்சுமளவுக்கு படைகள் இல்லை” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய ஒலியின்மையை கேட்க அவர் பழகியிருந்தார். “இது இப்படையின் இறப்பின் தருணம். மானுடர் இறக்கும்போதும் இவ்வண்ணமே உள்ளம் பித்துகொள்கிறது. உடலில் கருமை படர்கிறது” என்றார். அதை ஏன் சொல்கிறோம், எதை சென்றடையவிருக்கிறோம் என்று அவர் உள்ளம் வியந்துகொண்டே உடன்வந்தது. அவர்கள் விழிகளிலும் எதுவுமே வெளிப்படவில்லை.

“உங்களில் ஒருவரேனும் எஞ்சவேண்டும்” என்று சகுனி சொன்னார். உடனே அனைத்தையும் புரிந்துகொண்டார். விழிகளை தாழ்த்தியபடி “எஞ்சியாகவேண்டும். ஏனென்றால் இப்புவியில் என்பொருட்டு ஒருவர்கூட துயருறப்போவதில்லை. ஒருவராலும் விழிநீர் சிந்தப்படாமல் ஒருவன் மண்ணிலிருந்து மறையக்கூடாது…” என்றார். மூச்சுத்திணறலுடன் அவர் பேச்சை நிறுத்திக்கொண்டார். நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவருடைய விரல்கள் நடுக்கத்துடன் பின்னியும் விலகியும் தத்தளித்துக்கொண்டிருந்தன. “நீங்கள் போர்முனைக்குச் செல்லலாகாது என நான் எண்ணியது அதனால்தான்” என்றார். “உங்களில் ஒருவர் என் வடிவில் காந்தாரத்திற்கு மீளவேண்டும். என் நினைவுக்கல் ஒன்று காந்தாரத்தில் அமையவேண்டும்.”

மைந்தரிடமிருந்த அமைதி அவரை அழுத்த சகுனி விழிதூக்கி நோக்கினார். உலூகன் பேசாமல் நின்றான். அவனுடைய அமைதியிலிருந்த மறுப்பு வாள் என வந்து அவரைத் தொட்டது. “சொல்” என்றார். உலூகன் இருமுறை உதடுகளை அசைத்தான். சகுனி அவன் பேசுவதற்காகக் காத்து நின்றார். அவன் சொல் தேடவில்லை எனத் தெரிந்தது. சொல்லுக்கும் உதடுகளுக்குமான தொடர்பைத்தான் திரட்டி உருவாக்கிக்கொள்கின்றான். உலூகன் இருமுறை கனைத்தான். பின்னர் “இல்லை தந்தையே, நான் உங்களுக்காக அனற்கடனும் நீர்க்கடனும் இயற்றப்போவதில்லை. என் உடன்பிறந்தாரும் என் எண்ணம் கொண்டவர்களே” என்றான். சகுனி நடுங்கத் தொடங்கினார்.

“தந்தை என உங்களை எண்ணுவதனால்தான் உங்கள்பொருட்டு இப்போருக்கு வந்திருக்கிறோம். எங்கள் கடன் இது. ஆனால் எரிகடனும் நீர்க்கடனும் ஆற்றுவதென்பது நீங்கள் செய்த அனைத்தையும் நாங்கள் முழுதேற்றுக்கொள்கிறோம் என தெய்வங்களிடம் உரைப்பது. உங்களிடம் எஞ்சிய அனைத்தையும் பெற்றுக்கொள்வது. உங்கள் உடைமைகள் அனைத்தும் எங்களுக்குரியதாக ஆகும். உங்கள் பாவமும் புண்ணியங்களும் எங்களிடம் வந்துசேரும். உங்கள் வஞ்சங்கள், சூளுரைகள், விழைவுகள் ஆகியவற்றையும் நாங்கள் ஏற்றாகவேண்டும். பொறுத்தருள்க! உங்களுக்கு அளிக்கவே விழைகிறோம், உங்களிடமிருந்து எதையுமே பெற்றுக்கொள்ள விழையவில்லை.”

அவன் குரல் சீராக ஒலித்தது. ஒரு சடங்கில் நுண்சொல் ஓதுபவனைப்போல. “அப்பொறுப்பை நாங்கள் துறப்பதற்கு ஒரே வழியே உள்ளது. இக்களத்திலிருந்து உயிருடன் செல்லாமலிருப்பது. உங்களுக்கு முன்னரே வீழ்வது. அதில் நாங்கள் உறுதிகொண்டிருக்கிறோம்.” சகுனியின் உடலில் ஒவ்வொரு தசையாக தளர்ந்தது. இமைகள் துயிலில் என சரிந்தன. விருகன் முன்னால் வந்து “நான் பொறுப்பேற்கிறேன், தந்தையே. நீங்கள் கொண்ட அனைத்துக்கும்” என்றான். சகுனி பாதி மூடிய விழிகளால் அவனை பார்த்தார். அவர் தலை நடுங்கியது. பின்னர் புன்னகை புரிந்தார். “உன் அன்னையை நான் வென்றுவிட்டேன்” என்றார். மேலும் புன்னகை விரிய “அல்லது அவள் என்னை வென்றுவிட்டாள்” என்றார்.

பெருமூச்சுடன் எழுந்துகொண்டு “ஆனால் நீங்கள் எவரும் என்னை பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு கோருவது பெரும்பிழை என இப்போது உணர்கிறேன்” என்றார். விருகன் ஏதோ சொல்ல முற்பட “நீ எனக்கு அளித்துவிட்டாய்… என் நல்வாழ்த்துக்கள் உனக்கு அமைக!” என வாழ்த்தியபின் “நான் பார்பாரிகனை சந்திக்கவேண்டும்” என்றார். “அவனே இங்கு அனைத்துக்கும் விழிச்சான்று” என்றபின் நடந்து தன் புரவி நோக்கி சென்றார். புரவியை அடைவதற்குள்ளாகவே ஒரு சிறு துயில் வந்து அவர்மேல் கவிந்து கடந்து சென்றது. புரவியில் ஏறி அமர்ந்ததும் அடுத்த துயில்கீற்று வந்து அவரை மூடிக்கொண்டது.

முந்தைய கட்டுரைமேல்நிலைக் குரல்
அடுத்த கட்டுரைஜப்பான் – கடிதங்கள்