சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன் மூதாதையின் வில் என்பது நினைவிலெழ திகைப்புற்றார். அக்கணம் அவர் கையிலிருந்து வில் தழைந்தது. அவருடைய நெஞ்சிலும் தோளிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் தைத்தன. அவர் நிலையழிந்து தேர்த்தூணை பற்றிக்கொள்ள அவருடைய பாகன் அவரை மீட்டு அலைகொண்ட படைகளுக்குப் பின்பக்கம் அழைத்துச்சென்றான்.
தான் பின்னடைகிறோம் என்பதை அதன்பின்னரே சல்யர் உணர்ந்தார். “எழுக! முன்னெழுக!” என்று கூவியபடி பாகனை ஓங்கி மிதித்தார். “முன் செல்க! விசைகொள்க!” என்று கூச்சலிட்டார். பாகன் தேரை அதைச் சூழ்ந்து முட்டிமோதிய மானுட உடல்களிலிருந்து மீட்டு உந்தி முன்னால் செலுத்தினான். அதன் புரவிகள் நிலையழிந்தன. ஒரு புரவி உரக்க கனைத்தது. இன்னொரு புரவி தன்மேல் வந்து விழுந்த வெட்டுண்ட உடலை தலையால் உந்தி அப்பாலிட்டது. உடல்களின் மேல் தேர் ஏறி அலைபாய்ந்து கவிழுமோ எனச் சரிந்து பின் மீண்டு முன்னெழுந்தது.
“நில்லுங்கள், கீழ்மக்களே! நில்லுங்கள்!” என்று சல்யர் கூவினார். “இது என் மைந்தனுக்காக. நான் அவையெழுந்து சொல்லாமல் விட்ட ஒற்றைச் சொல்லுக்காக!” அவருடைய அம்புகளின் விசை பலமடங்காக கூடியது. அதன் அடிகள் வந்து தாக்க சகதேவன் தேரில் நின்று தள்ளாடினான். ஓர் அம்பு அவன் கவசத்தை பிளந்தது. இன்னொன்று அவன் தோளில் பாய்ந்தது. நெஞ்சை நாடிவந்த அம்பு தேர் நிலையழிந்தமையால் தோளிலேயே மீண்டும் தாக்க அவன் தேரிலிருந்து தூக்கி வீசப்பட்டான். “இழிமகனே! இழிமகனே!” என வெறுப்புடன் கூவியபடி அவனைக் கொல்ல பிறையம்பு ஒன்றை எடுத்தார் சல்யர்.
அக்கணம் மிக அப்பாலிருந்து சாத்யகி தன் அம்பால் அவர் எடுத்த அம்பை சிதறடித்தான். விலங்குபோலக் கூச்சலிட்டபடி அவன் அவரை நோக்கி தேரில் வந்தான். மறுபக்கம் திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி வந்தான். நகுலன் சகதேவனை அணுகி அவனை தன் தேரில் ஏற்றிக்கொண்டான். சல்யரை வென்றுவிட்டதாக எண்ணி பின்னடைந்த யுதிஷ்டிரன் அவர் விசைகொண்டு மீண்டு வருவதைக் கண்டு திகைப்புடன் நிற்க “விலகுக! விலகுக! இவரை இன்றே வீழ்த்தியாகவேண்டும்” என்று சாத்யகி கூவினான். “இவரை என் கைகளால் கொல்வேன்!” என்று திருஷ்டத்யும்னன் அறைகூவினான். “வருக… வருக… என் அம்புகளின் நஞ்சுக்கு இவ்வுலகே சிறிது” என்று சல்யர் கூவினார்.
அவருடைய அம்புகளின் முனைகள் நீல நிறம் கொண்டிருந்தன. அவை சென்று உரசியபோது தேர்முகடுகள் பொறியெழ பற்றிக்கொண்டன. கவசங்களில் அந்த அம்புகள் பட்டபோது உடலில் மின்னல் பாய்ந்ததுபோல் உணர்ந்தனர் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும். சல்யரின் அம்புகள் அவர்களின் புரவிகளின் உடல்களில் பாய்ந்தபோது அவை அதிர்ந்து உடல்துடித்து வலிப்பெழுந்து சரிந்தன. அந்த வலிப்பசைவு தேரிலும் அங்கிருந்து அவர்களின் உடல்களிலும் பரவியது. திருஷ்டத்யும்னன் கவசங்கள் உடைந்து வில்முறிந்து தேரிலிருந்து சரிந்தான். அவன் உடல் கரிய உடற்குழைவலைகளுக்குள் விழுந்து புதைந்தது.
சாத்யகி சல்யரை எதிர்த்தபடியே பின்னடைந்தான். அவருடைய பெருகும் ஆற்றலை அவனால் மதிப்பிட முடியவில்லை. அவர் அவனுடைய அனைத்து அம்புகளையும் சிதறடித்தார். நோக்காமலேயே அவர் தொடுத்த அம்புகள் தாங்களே விழியும் உள்ளமும் கொண்டவை என அவன் அம்புகளைத் தேடிவந்து வானில் அறைந்து வீழ்த்தின. அவன் மலைத்து வில்தாழ்த்த அவன் வில்லை சல்யர் உடைத்தார். அவன் தேரிலிருந்து இறங்கி பின்னால் பாய்ந்து தப்பி ஓடுவதற்குள் அவர் அவன் கவசங்களை அறைந்தார். அவன் விழுந்து உருண்டதும் அவன் மேல் அவர் அம்புகள் தைத்தன. அவன் உடல் வலிப்பு கொண்டது. பற்கள் வெளித்தெரிய இளித்த அவன் முகம் கரிய சேற்றுக்குள் மறைந்தது.
நகுலன் “மூத்தவரே, பின்னடைக! பின்னடைக!” என்று யுதிஷ்டிரனை நோக்கி கூவினான். “அவர் உங்களை இலக்காக்குகிறார். அவர் உங்களை வீழ்த்திவிடலாகாது!” அந்த எச்சரிக்கையால் அறியாமலேயே யுதிஷ்டிரன் வில்தாழ்த்த அவருடைய பாகன் தேரை மேலும் மேலும் பின்னடையச் செய்தான். அவரை துரத்தியபடி வந்த சல்யரை சுருதகீர்த்தியும் சுருதசேனனும் எதிர்கொண்டார்கள். அவர்களை சல்யர் மிக விரைவாகவே வீழ்த்தினார். சுருதகீர்த்தி முன்னரே புண்பட்டு ஒரு கையும் காலும் தளர்ந்திருந்தான். தேரில் தூண்சாய்ந்து நின்று அவன் போரிட்டான். சல்யரின் அம்பு அவனை அறைந்து வீழ்த்தியது. “மூத்தவரே!” என்று சுருதசேனன் கூவினான். அவனும் சல்யரால் வீழ்த்தப்பட்டான்.
“மைந்தர் வீழ்ந்தனர்! மைந்தர் வீழ்ந்தனர்!” என்று யுதிஷ்டிரன் கண்ணீருடன் கூவினார். “எங்கே அர்ஜுனன்? பீமனை அழையுங்கள். வேறெவரும் அவரை தடுத்து நிறுத்த முடியாது…” சிகண்டி சல்யரை தடுத்தார். சிகண்டியின் அம்புகள் சல்யரை சற்றே நிலைகொள்ளச் செய்தன. ஆனால் அது அவரை மேலும் வெறியேற்றியது. “வீணர்களே! வீணர்களே!” என்று அலறியபடி அவர் மேலும் மேலும் பெரிய அம்புகளை எடுத்து எய்தார். சிகண்டி கைதளர்ந்து நிகழ்வதை நம்பமுடியாதவராக உளம் அசைவிழக்க நின்ற கணத்தில் ஏழு அம்புகள் அவர் கவசங்களை உடைத்து அவரை வீழ்த்தின.
சல்யர் “நில்… யுதிஷ்டிரா, நில்!” என்று கூவியபடி தேரை செலுத்தி விசைமிகுந்தபடியே அணுகினார். “மைந்தர் சென்றபின் நான் அடைவதற்கொன்றுமில்லை, சல்யரே” என்றபடி வில்லை விட்டுவிட்டு கைதூக்கினார் யுதிஷ்டிரன். அவரை நோக்கி சல்யர் குறிவைத்த அம்பை நகுலன் தன் அம்பால் முறித்தான். அவன் தன் உடலில் பாய்ந்த அம்புகளால் மயக்கமுற்று மங்கலடைந்த விழிகளும் எடைகொண்டு தள்ளாடும் உடலுமாக தேரில் நின்றிருந்தான். அவனை சல்யர் தன் எட்டு அம்புகளால் அடித்து வீழ்த்தினார்.
அவர் யுதிஷ்டிரனை அணுகுவதற்குள் சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் துணைக்க பீமன் துரியோதனனை விட்டுவிட்டு வந்து அவரை செறுத்தான். அவர்களின் அம்புகள் சல்யரை சூழ்ந்துகொண்டன. ஆனால் அவர் அனலால் உடல்கொண்டவராக மாறிவிட்டவர் போலிருந்தார். அவர்கள் செலுத்திய அனைத்து அம்புகளும் அவரை புகைப்படலத்தை என கடந்துசென்றதைப்போல் தோன்றியது. கார்த்தவீரியன் என அவருடைய கைகள் பெருகிவிட்டிருந்தன. கண்கள் எழுந்து ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகி அவரைச் சூழ்ந்து தேனீக்கூட்டம் என பறப்பதுபோலத் தோன்றியது.
சர்வதன் அவருடைய அம்புகளால் துடித்து விழுவதை பீமன் கண்டான். சுதசோமனின் புரவிகள் அனல்பட்டவை என பாய்ந்து குளம்புகளை உதறிக் கனைத்து துள்ளிச்சரிந்தன. அவன் தேரிலிருந்து சரிந்து விழ அவனை வண்டுகள்போல் மொய்த்து முட்டிமுட்டி மண்ணுடன் சேர்த்தன சல்யரின் அம்புகள். பீமன் வெறிக்கூச்சலுடன் கதையை தூக்கிக்கொண்டு தேரிலிருந்து பாய்ந்து மேலெழுந்தபோது அவனை தேடிச்சென்று அறைந்தன. விண்ணிலிருந்து என அவன் தரையில் விழுந்தான். அவன்மேல் மேலும் மேலும் உடல்கள் விழ அந்த உடல்களையும் அம்புகளால் வெறியுடன் தாக்கிக்கொண்டே இருந்தார் சல்யர்.
பீமனின் உடல் முற்றாகச் செயலிழந்து அவன் விழிகள் மட்டுமாக கிடந்தான். அவருடைய தேர் தன்னை அணுகி வருவதைக் கண்டும் அவனால் இமைகளைக்கூட அசைக்க முடியவில்லை. உடலுக்குள் குருதி ஈயம்போல் எடைகொண்டுவிட்டதாகத் தோன்றியது. அவனை அவர் காணவில்லை என்றே தோன்றியது. அவருடைய தேரின் புரவிகள் குளம்பறைந்து அவன்மேல் கடந்துசென்றன. அத்தேரின் சகடங்கள் அவன் நெஞ்சின் மேல் ஏறி அப்பால் அகன்றன. அவன் விழிகளில் நீர் வழிய விண்ணை நோக்கியபடி மண்ணில் எழுந்த நீள்மேடு என கிடந்தான்.
யுதிஷ்டிரன் முற்றிலும் அகம் செயலற்று கால்கள் தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தார். பாகன் அவர் தேரை மேலும் பின்னடையச்செய்ய முயன்றபோது அது சேற்றில் என விழுந்த உடல்களில் சிக்கிக்கொண்டிருப்பதை கண்டான். மெல்லிய முனகலுடன் யுதிஷ்டிரன் நினைவழிந்து தேர்த்தட்டிலேயே படுத்தார். பாகன் தன் சங்கை ஒலிக்க அப்பால் அஸ்வத்தாமனுடன் போரிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன் திரும்பி நோக்கி திகைத்து நின்றான். அவனுடைய தேர் உடல்குவைகளுக்கும் உடைந்த தேர்களுக்கும் அப்பால் இருந்தது. அந்தத் தடைகளைக் கடந்து அது அணுகமுடியாதென்று தெரிந்தது.
இளைய யாதவர் ஒரு சொல் உரைத்தபடி தேரிலிருந்து எழுந்து முட்டி மோதிக்கொண்டிருந்தவர்களின் தோள்களிலும் சரிந்த தேர்களின் முகடுகளிலும் கால்வைத்துப் பாய்ந்து சல்யரை நோக்கி சென்றார். அதைத் தொடர்ந்து அவ்வண்ணமே காண்டீபத்துடனும் அம்புத்தூளியுடனும் அர்ஜுனனும் வந்தான். இளைய யாதவர் சென்று பீமனின் தேரில் பாகனின் பீடத்தில் அமர அர்ஜுனன் தொடர்ந்து வந்து தேர்த்தட்டில் நின்றான். அவனுடைய நாணொலி கேட்டு சல்யர் திரும்பி நோக்கினார்.
அவர் முகம் அங்கே செத்துக்கிடந்தவர்களின் முகங்களில் இருந்த அதே வலிப்பெனும் இளிப்பை அடைந்தது. “வருக! உன்னைக் கொல்லவே இன்று களம்புகுந்தேன்” என்றார். “இழிமகனே, நீ அறிந்த அத்தனை நெறியின்மையையும் இங்கு காட்டுக! என்னை உன் கீழ்மை வெல்லமுடியுமா என்று பார்.” வெறிகொண்ட நகைப்புடன் “என் மலைக்குடிகளின் நஞ்சனைத்தும் இதோ என் அம்புத்தூளியில் உள்ளது. பனிமலைமுகடிலிருந்து வழிந்திறங்கி வந்த நஞ்சு. ஆண்டுக்கொருமுறை கொடுநோவென ஆயிரம் காலம் என் குடியை வேட்டையாடிய நஞ்சு. நிகர்நிலத்து மக்களுக்காக நாங்கள் கரந்துவைத்தது” என்றார்.
அர்ஜுனன் தன் அகத்தே அனைத்து எண்ணங்களும் தளர்ந்து கிடப்பதை கண்டான். உணர்ச்சிகளால் அறைந்து அறைந்து எழுப்பியபோதும் அவன் உடல் விசைகொள்ளவில்லை. சல்யரின் அம்புகளை அவன் அம்புகள் விண்ணிலேயே தடுத்தன. அவன் அம்புகள் தொட்டதும் சல்யரின் அம்புகளிலிருந்து நுண்ணிய மின்னல் தெறித்தது. அவை உதிர்ந்த இடத்தில் கிடந்த செத்துறைந்த உடல்கள்கூட ஒரு கணம் உயிர்கொண்டவைபோல் அதிர்ந்து வலிப்படைந்தன. அவர் அம்புகள் வந்து தொட்டபோது அவன் ஊர்ந்த தேர் சுடர்கொண்டு அதிர்ந்தது. தேரிலிருந்து நுண்ணிய அதிர்வு அவன் உடலெங்கும் பாய்ந்தது. அறைபடும் இரும்புக்கம்பியின் மறுஎல்லையை பற்றியிருப்பதுபோல் அவன் உணர்ந்தான்.
சல்யர் “கீழ்மகனே! கீழ்மகனே! கீழ்மகனே!” என கூவிக்கொண்டே அம்புகளை தொடுத்தார். அவை அர்ஜுனனின் நெஞ்சிலும் தோளிலும் கவசங்களை அறைந்து அனல்கொள்ளச் செய்தன. அவன் ஏந்திய காண்டீபத்தின் நாண் அறுந்தது. அவன் ஆவநாழியை நோக்கி நீட்டிய கையைத் தாக்கிய அம்பு கைக்கவசத்தை உடைத்தது. இன்னொரு அம்பு அவன் ஆவநாழியை உடைத்து அம்புகளை பொழியச்செய்தது. தேர்த்தட்டு சுட்டுப்பழுத்துவிட்டதுபோல் அர்ஜுனன் நின்று துள்ளி கால்மாற்றிக்கொண்டிருந்தான்.
இளைய யாதவர் “யுதிஷ்டிரன் எழுக! இப்போர் உங்களுடையது. உங்களால் மட்டுமே இளையோரை மீட்க முடியும்!” என்று கூவினார். யுதிஷ்டிரன் திகைப்புடன் அதைக் கேட்டு எழுந்து நின்றார். “எழுக! எழுக! உங்கள் போர் இது” என இளைய யாதவர் கூவிக்கொண்டிருந்தார். யுதிஷ்டிரன் சல்யரின் அம்புகள் பெற்று தள்ளாடிக்கொண்டிருந்த அர்ஜுனனை நோக்கினார். “இளையோனே” என்று வீறிட்டபடி தயையை எடுத்துக்கொண்டு எழுந்து நின்று பாகனிடம் “செல்க! செல்க!” என்று கூவினார். அவருடைய தேர் அணுகி வர தயையில் இருந்து எழுந்த அம்புகள் சல்யரை சூழ்ந்தன.
அந்த அம்புகளின் விசை சல்யரை தயங்கச்செய்தது. “அரசே, விலகுக! இது உங்கள் போர் அல்ல” என்று அவர் கூவினார். “இது என் உடன்பிறந்தவருக்காக நான் எடுக்கும் போர். அவர்கள் இல்லா உலகில் எனக்கு இடமில்லை” என்று கண்ணீருடன் கூவியபடி யுதிஷ்டிரன் சல்யரை தாக்கினார். சல்யர் அந்த அம்புகளால் விசையழிந்தார். பின்னர் மெல்ல பின்னடைந்தார். இளைய யாதவர் அர்ஜுனன் ஊர்ந்த தேரை பின்னடையச் செய்ய அவன் “முன்செலுத்துக தேரை… யாதவரே, மூத்தவரை அவ்வண்ணம் விட்டுவிட இயலாது” என்றான்.
“இது உன் போர் அல்ல. உன்னால் அவரை எதிர்கொள்ள இயலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அவரை வெல்வேன்… புவி வெல்லும் காண்டீபம் உண்டு என் கையில்” என்றான். இளைய யாதவர் “கூர்கொள்ளும்போது பொருட்கள் பிறிதொரு வண்ணமும் வடிவமும் கொள்கின்றன. கூர்கொள்ளும் மானுடரில் உள்ளே உறையும் பிறிதொருவர் எழுகிறார். அவரில் எழுபவன் அங்கன்… அதை நீ அறிவாய். ஆகவேதான் அவரைக் கண்டதும் உன் கைகள் தளர்கின்றன” என்றார். அர்ஜுனன் உளம் தளர்ந்து “தெய்வங்களே!” என்றான். “அவரை எதிர்கொண்டால் நீ கொல்லப்படுவாய். அங்கனில் கனிந்ததே அவரில் கசந்துள்ளது” என்றார் இளைய யாதவர்.
சல்யர் யுதிஷ்டிரனின் அம்புகளின் வட்டத்தை விட்டு பின்னால் சென்று மீண்டும் விசைதிரட்டிக்கொண்டு முன்னெழுந்து வந்தார். அவருடைய அம்புகள் வந்தறைய யுதிஷ்டிரன் தயங்கி பின்னடையலானார். “மூத்தவரை தனித்து நிற்கவிடமாட்டேன்” என்று அர்ஜுனன் கூவினான். “செல்க! சல்யர் முன் செல்க!” இளைய யாதவர் தேரைச்செலுத்த காண்டீபத்தை மீண்டும் நாண்பூட்டி அம்புகளை பறக்கவிட்டபடி அர்ஜுனன் சல்யரை நோக்கி சென்றான். யுதிஷ்டிரன் கையில் இருந்து தயை துள்ளி திமிறியது. அம்புகள் சீறியெழ அவர் சல்யரை அறைந்து பின்னடையச்செய்தார்.
“அவர் பின்னடையலாகாது… அவருடைய தேர் பின்னடையும் இடத்திலிருக்கும் தேர்களை வீழ்த்துக! அவர் பின்னடையாது தடுத்து நிறுத்துக!” என இளைய யாதவர் ஆணையிட்டார். அர்ஜுனன் சல்யரின் தேருக்குப் பின்னால் நின்றிருந்த யானைகளை அம்புகளால் அறைந்து வீழ்த்த சல்யரின் தேர் அதில் முட்டி நின்றது. அர்ஜுனன் சல்யரின் மூன்று புரவிகளை கழுத்தறுத்தான். அவர் தேர்ப்பாகனை கொன்று வீழ்த்தினான். யுதிஷ்டிரனின் அம்புகள் சல்யரின் கவசங்களை உடைத்தன.
சல்யர் நிலைகுலைவதுபோலத் தோன்றியது. ஒருகணம்தான். வெடித்தெழுவதற்கு முன் தழையும் அனலின் தோற்றம் அதுவென பின்னர் தெளிந்தது. அவர் விலங்குபோல் ஓசையிட்டபடி எழுந்து யுதிஷ்டிரனை நீளம்புகளால் அறைந்தார். அவர் தேரின் புரவிகள் ஒவ்வொன்றாக கழுத்தறுந்தன. தேர்ப்பாகன் நீளம்பால் நுகத்திலேயே அறைந்து நிறுத்தப்பட்டான். தேர் விசையழிந்து நின்றது. யுதிஷ்டிரன் அசைவற்ற தேரில் நின்று தயங்க சல்யர் அம்பு தொடுத்து தன் தேரின் இறந்த புரவிகளை அறுத்து உதிரச்செய்து எஞ்சிய இரு புரவிகளின் கடிவாளங்களை காலால் பற்றியபடி செலுத்தி அப்பால் வந்துகொண்டிருந்த அர்ஜுனனை நோக்கி சென்றார்.
சல்யரும் அர்ஜுனனும் போர்புரிவதை யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கி நின்றார். அவருடைய அம்புகள் எட்டாத தொலைவில் அது நிகழ அவர் செய்வதறியாது உடல்தவித்து பின் தளர்ந்து தேர்த்தட்டிலேயே அமர்ந்தார். உளமழிந்து விழிநீர் வழிய தலையை முழங்கால்களில் சேர்த்துக்கொண்டார். சல்யர் அர்ஜுனனை எதிர்கொண்டபோது மீண்டும் பேருருக்கொண்டு எழுந்தார். அவருடைய அம்புகள் அவன் தலைக்கவசத்தை உடைத்தெறிந்தன. நெஞ்சக்கவசமும் தோள்கவசங்களும் சிதைந்தன. அவன் தொடைச்செறிகள் துண்டுகளாக தெறிப்பதை யுதிஷ்டிரன் கண்டார்.
வெறியுடன் காறி உமிழ்ந்து “பேடி! ஆணிலி! கீழ்பிறப்பு” என வசைபாடியபடி சல்யர் அர்ஜுனனை அம்புகளால் சிதறடித்தார். அவன் உடலில் இருந்து கவசங்களும் அணிகளும் துண்டுகளாக தெறித்தன. இடையில் கட்டிய தோல்கச்சையும் தோலால் ஆன சிற்றாடையும் மட்டுமே எஞ்சின. யுதிஷ்டிரன் திகைப்புடன் எழுந்து நின்று “மாதுலரே!” என்று சல்யரை நோக்கி கூச்சலிட்டார். சல்யர் “நோக்குக, உன் இளையோனை! புவியறிந்தவர்களில் பெருவீரனை!” என்று கூறி ஓங்கித் துப்பியபடி அவன் இடைக்கச்சையை அம்பால் அறைந்தார். அதன் முடிச்சு அவிழ அவன் அள்ளிப்பற்றினான். அவன் தோளில் பட்ட அம்பின் அதிர்வில் கைகள் துடித்து விலகின. ஆடை நழுவி கீழே சரிய அவன் வெற்றுடலுடன் தேர்த்தட்டில் நின்றான்.
“சிறுமதியாளனே” என்று கூச்சலிட்டபடி தயையை ஏந்திக்கொண்டு யுதிஷ்டிரன் பாய்ந்து தேரிலிருந்து இறங்கி பிணங்களையும் உடைசல்களையும் மிதித்துக்கொண்டு ஓடிவந்தார். அவர் செலுத்திய அம்புகளால் சல்யரின் புரவிகள் விழுந்தன. அவருடைய அத்தனை அம்புகளையும் யுதிஷ்டிரன் சிதறடித்தார். சல்யரின் மார்புக்கவசம் உடைந்தது. கைக்காப்புகளும் தலைக்கவசங்களும் உடைந்தன. அவருடைய வில் உடைந்தது. தேர்மகுடமும் தேர்த்தூண்களும் யுதிஷ்டிரனின் அம்புகள் பட்டு அதிர்ந்தன. உடைந்து பொழிந்தன.
தயை சேற்றில் மூழ்கி கரிய புழுபோல ஆகிவிட்டிருந்தது. அவர் கையில் இருந்து அது நெளிந்து வழுக்கியது. நழுவி இறங்கிச் சென்றுவிட விழைவதுபோல. மண்ணுள் நிறைந்த நாகங்களில் ஒன்றென ஆக விழைவதுபோல. அவர் அதை இறுகப்பற்றி நாணை இழுத்து அம்புகளைப் பூட்டினார். அது செலுத்திய அம்பு விண்ணிலெழுந்து சல்யரின் தேரின்மேல் பறந்த சிம்மக்கொடியை உடைத்து மண்ணில் வீசியது. சல்யரின் நெஞ்சிலணிந்திருந்த அருங்கல் மாலையை அறுத்தெறிந்தது. அவருடைய கைகளின் கங்கணங்களை உடைத்து வீசியது. அவருடைய நெற்றியில் பச்சைகுத்தப்பட்டிருந்த குலக்குறியை சீவிச்சென்றது ஒரு பிறையம்பு.
தயை மேலும் மேலும் விசைகொள்வதை யுதிஷ்டிரன் கண்டார். அது தன் போரை முழுதுற நிகழ்த்தத் தொடங்கிவிட்டிருந்தது. தன் ஆவநாழியில் அத்தனை அம்புகள் இருக்கின்றனவா? எப்போதுமே அவருடைய ஆவநாழி எடையென்றே இருப்புணர்த்தும். அதை தொட்டுத் துழாவுகையில் அங்கிருக்கும் அம்புகள் அறியாதவை என துணுக்குறச் செய்யும். ஆனால் எடுக்க எடுக்க அம்புகள் வந்துகொண்டே இருந்தன அன்று. ஏதோ காணாத் தெய்வம் பின்னால் நின்று ஆவநாழியை நிறைத்துக்கொண்டே இருப்பதுபோல.
சல்யர் தேரிலிருந்து பாய்ந்திறங்கி கரிய சேற்றில் விழுந்தெழுந்து விரைய முயல துரத்திச்சென்று அவரை அம்புகளால் தாக்கினார் யுதிஷ்டிரன். சல்யரின் தோளிலும் விலாவிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் பாய்ந்தன. அவர் தரையில் கிடந்த நீண்ட ஈட்டி ஒன்றை எடுத்தபடி திரும்பி யுதிஷ்டிரனை நோக்கி வீசினார். ஈட்டி வருவதைக் கண்டு பின்னடைந்த யுதிஷ்டிரன் பிணங்களில் கால்தடுமாறி பின்னடைந்து அதிலிருந்து தப்பினார். தரையிலிருந்து பிறிதொரு வேலை எடுத்து சல்யர் வீசினார். அதை ஒழிந்த யுதிஷ்டிரன் நிலையழிந்து சேற்றில் விழுந்தார். புரண்டு எழுவதற்குள் கருங்குழம்பால் மூழ்கடிக்கப்பட்டார். விழிகளை மறைத்த கருஞ்சேற்றை வழித்தபடி பற்கள் தெரிய இளித்தபடி இன்னொரு ஈட்டியுடன் தாக்கவந்த சல்யரை நோக்கினார்.
சல்யர் அவர் அருகே வந்து ஓங்கி ஈட்டியை வீச அது குறி தவறி நிலத்தில் பாய்ந்தது. விழுந்த உடலில் இருந்து பிறிதொரு ஈட்டியை உருவி எடுத்து மீண்டும் குறி பார்த்து யுதிஷ்டிரன் மேல் எய்தார். சேற்றில் சறுக்கி விழுந்து புரண்டெழுவதற்குள் கருமையில் மூழ்கி அங்கிருந்த பல நூறு புழு உருவங்களில் ஒன்றாக மாறினார் யுதிஷ்டிரன். அவருடைய கையிலிருந்து தயை நழுவி அப்பால் விழுந்து கிடந்தது. “நீ என் மூதாதை! உன்னையும் கொல்லவேண்டும் என்பது ஊழென்றால் அதுவே ஆகுக!” என்று கூவியபடி சல்யர் ஈட்டியை வீசியபடி அணுகி வந்தார்.
யுதிஷ்டிரன் கைகளை அகலவிரித்து துழாவியபடி எழ முயல அவர் இடதுகையில் தயை தட்டுப்பட்டது. அதை எடுத்தபோது நாண் அறுந்து நீண்ட மூங்கில் கழியென்றே தோன்றியது. பிணங்களில் மிதித்துத் தள்ளாடியபடி அணுகிய சல்யரை நோக்கியபடி எம்பி எம்பி பின்னடைந்தவண்ணம் யுதிஷ்டிரன் தயங்கினார். சல்யரின் ஈட்டி அவர் அருகே விம்மியபடி சுழன்று சென்றது. தயையின் இருமுனைகளும் ஈட்டிக்கூர்போல உலோகக்கூம்பு கொண்டவை என்பதை அவர் கண்டார். “இளையோனே!” என கூவியபடி திரும்பி நோக்கி மறுகணத்தில் வெறிகொண்டு பற்களைக் கடித்து முழு விசையுடன் சல்யரை நோக்கி எறிந்தார்.
கால்கள் தள்ளாடி ஒருகணம் சல்யர் செயலிழந்து நிற்க யுதிஷ்டிரன் வீசிய வில்லின் ஈட்டிமுனை அவர் நெஞ்சில் பாய்ந்து மறு புறம் வந்தது. மல்லாந்து விழுந்து நெஞ்சில் கோத்த ஈட்டியுடன் ஒருக்களித்து தயையை வலக்கையால் பற்றியபடி உடலதிர்ந்து சல்யர் உயிர் துறந்தார். யுதிஷ்டிரன் கையூன்றி எழுந்து திகைப்புடன் சல்யரை நோக்கிக்கொண்டு நின்றார். பிரதிவிந்தியன் அப்பாலிருந்து “சல்யர் விழுந்தார்! கௌரவப் படைத்தலைமை வீழ்ந்தது!” என்று கூவினான். நகுலன் “கௌரவப் படைத்தலைமை வீழ்ந்தது! சல்யர் வீழ்ந்தார்!” என்று உரக்க கூவினான். ஆனால் அங்கு சூழ்ந்திருந்த படைகள் அவர்களை அறியவில்லை. அவர்கள் பிறிதொரு உலகில் பிறிதொரு காலத்தில் போர்புரிந்துகொண்டிருந்தனர்.
இரு படைகளிலும் அங்குமிங்குமாக ஓரிருவரே எஞ்சியிருப்பது தெரிந்தது. அவர்கள் நிகழ்வன எதையும் அறியவில்லை. அவர்களில் எவர் எந்தத் தரப்பு என்றும் தெரியவில்லை. அவர்கள் தாங்களே எந்தத் தரப்பு என்பதையும் மறந்துவிட்டிருந்தார்கள். பிரதிவிந்தியன் தன் தேரின்மீது ஏறி கொடியை அசைத்து “சல்யர் விழுந்தார்! கௌரவப் படைத்தலைவர் வீழ்ந்தார்!” என்று கூவி அறிவித்தான். கௌரவப் படையிலிருந்து எவரும் அதை அறியவில்லை. அங்கே போரிட்டுக்கொண்டிருந்த துரியோதனன், சகுனி, கிருதவர்மனும்கூட அதை கேட்டதாகத் தெரியவில்லை. யுதிஷ்டிரன் திரும்பி நோக்கியபோது தேர்த்தட்டில் விழிகளிலிருந்து நீர்வழிய ஆடையில்லா உடலுடன் வெற்றுக்கைகளுடன் நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தார்.